அண்மையில் மராத்திய மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட உள்ள 98-வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாட்டை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை (21-ம் தேதி) பிற்பகல் நான்கரை மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இரண்டு நாட்கள் நடைபெறும இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்களும் புத்தகக் கண்காட்சியும், கலாச்சார நிகழ்ச்சிகளும் கலந்துரையாடல்களும், நடைபெற உள்ளன. இதில் இலக்கியத்துறையில் பிரபலமானவர்கள், பங்கேற்க உள்ளனர். காலத்தைக் கடந்து நிற்கும் மராத்திய இலக்கியத்தின் சிறப்புகள் குறித்துக் கொண்டாடும் வகையிலும் மொழிப் பாதுகாப்பு, மொழி பெயர்ப்பு மற்றும் இலக்கியப் பணிகளை டிஜிட்டல் மயமாக்குவதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விரிவான விவாதங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
71 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் மராத்திய இலக்கிய மாநாடு நடைபெற உள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், புனேயிலிருந்து தில்லி வரை இலக்கிய ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. மராத்திய இலக்கியத்தின் தனித்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் 1,200 பேர் பயணம் செய்ய உள்ளனர். இந்த மாநாட்டில் 2,600-க்கும் மேற்பட்ட மராத்தியப் பாடல்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. 50 புத்தகங்கள் வெளியிட உள்ளன. 100 புத்தக அரங்குகள் இடம் பெறுகின்றன. இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து இலக்கிய சான்றோர்கள், பாடலாசிரியர்கள், மொழி சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
—-
TS/SV/KPG/DL