Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமரின் உரை

90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமரின் உரை


மத்திய அமைச்சரவையில் உள்ள  எனது நண்பர் திரு அமித் ஷா அவர்களே, இன்டர்போல் தலைவர் திரு அகமது நாசர் அல் ரெய்சி அவர்களே, இன்டர்போல் தலைமைச் செயலாளர் திரு ஜுர்கென் ஸ்டாக் அவர்களே, சிபிஐ இயக்குநர் திரு எஸ் கே ஜெய்ஸ்வால் அவர்களே, மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, பங்கேற்பாளர்களே

90-வது இன்டர்போல் பொதுச்சபைக்கு உங்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவிற்கும், இன்டர்போலுக்கும் முக்கியமான தருணத்தில் நீங்கள் இங்கே இருப்பது மகத்தானது. 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை திரும்பிப் பார்ப்பதற்கான தருணம் இது நாம் எங்கே செல்ல விரும்புகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் காலமும் கூட. இன்டர்போலின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லை எட்டவிருக்கிறது. 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளைக் கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது.

நண்பர்களே,

இன்டர்போல் என்ற கோட்பாடு இந்திய தத்துவத்தின் பல்வேறு அம்சங்களின் தொடர்பை கொண்டுள்ளது. இன்டர்போலின் குறிக்கோள் என்பது பாதுகாப்பான உலகத்திற்கு காவல்துறையை இணைப்பதாகும். வேதங்கள் என்பவை உலகின் மிகத் தொன்மையான, நூல்களில் ஒன்று  என்பதை  உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கக் கூடும். மேன்மையான சிந்தனைகள் அனைத்து   திசைகளிலிருந்தும் வரட்டும் என வேதங்களில் ஒரு ஸ்லோகம் கூறுகிறது. உலகம் சிறந்ததாக இருப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பை இது கோருகிறது. இந்தியாவின் ஆன்மாவில் தனித்துவமான உலகளாவிய பார்வை உள்ளது. இதனால்தான், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்கு  தீரமிக்க ஆடவரையும் மகளிரையும் அனுப்பி வைப்பதில் முதன்மையான பங்களிப்பு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.  எங்களின் விடுதலைக்கு முன்பாகவே உலகம் சிறப்பானதாக இருக்க நாங்கள் தியாகங்களை செய்திருக்கிறோம். உலக யுத்தங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போரிட்டு உயிர் நீத்துள்ளனர். பருவநிலை மாற்ற இலக்குகளிலிருந்து கொவிட் தடுப்பூசிகள் வரை எத்தகைய நெருக்கடியையும் சந்திக்கும் மன உறுதியை இந்தியா வெளிப்படுத்தியிருக்கிறது. இப்போது நாடுகளும், சமூகங்களும் சொந்த நலன்களை நோக்கும் நேரத்தில் இந்தியா சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கிறது. உள்ளூர் நலனுக்கு உலகளாவிய ஒத்துழைப்பு – இது தான் எங்கள் அழைப்பாகும்.

நண்பர்களே,

இந்தியாவின்  பண்டைகால தத்துவஞானியான சாணக்கியர் சட்ட அமலாக்கத்தின் தத்துவத்தை சிறப்பாக விவரித்துள்ளார். ஒரு சமூகத்தின் பொருளியல்  மற்றும் ஆன்மீக நலன் என்பது சட்ட அமலாக்கத்தின் மூலம்தான் உறுதி செய்யப்படும்.  சாணக்கியர் கருத்தின்படி சட்ட அமலாக்கம் நாம் எதைப் பெற்றிருக்கவில்லையோ அதைப் பெறுவதற்கும்,  நாம் எதைப் பெற்றிருக்கிறோமோ அதைப் பாதுகாப்பதற்கும், நாம் எதை பாதுகாத்திருக்கிறோமோ அதை அதிகரிப்பதற்கும்  மிகவும் தேவைப்படுவோருக்கு அதை வழங்குவதற்கும் உதவுகிறது. இது  சட்ட அமலாக்கத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய கண்ணோட்டமாகும்.    உலகம் முழுவதும் உள்ள காவல் படைகள் மக்களை மட்டும் பாதுகாக்கவில்லை சமூக நலனையும்  பாதுகாக்கின்றன. எந்த நெருக்கடியிலும், சமூகத்தில் பொறுப்பேற்க முன்னணியில் நிற்கின்றன.  கொவிட் -19, பெருந்தொற்றுக் காலத்தில் இது கண்கூடாக வெளிப்பட்டது. உலகம்  முழுவதும் மக்களுக்கு உதவி செய்வதற்காக காவல் படையினர் தங்களின் சொந்த வாழ்க்கையையும் துச்சமென மதித்து பணியாற்றினர்.  மக்கள் சேவையில், இவர்களில் பலர் உயிர்த்தியாகம் செய்தனர். அவர்களுக்கு  எனது மரியாதையை செலுத்துகிறேன்.  உலகமே ஸ்தம்பித்தாலும், அதன் பாதுகாப்பை நிலைநிறுத்தும் பொறுப்பை கைவிட்டு விடமுடியாது. பெருந்தொற்றுக் காலத்திலும் கூட இன்டர்போல் 24 மணி நேரமும் செயல்பட்டது. 

நண்பர்களே,

இந்தியாவின் பன்முகத்தன்மையும், அளவும், கற்பனை செய்ய கடினமானது. யாரும் அனுபவித்திராதது. இது மிக உயர்ந்த மலைச்சிகரங்களையும், மிக வறண்ட பாலைவனங்களில் ஒன்றையும், அடர்ந்த காடுகள் பலவற்றையும், மக்கள் தொகை அதிகம் உள்ள உலகின் பல  நகரங்களையும், கொண்டதாக  உள்ளது.  கண்டங்களின் சிறப்பு அம்சங்களை இந்தியா  ஒரே நாட்டில் கொண்டிருக்கிறது.  எடுத்துக்காட்டாக இந்தியாவின் அதிக மக்கள் தொகைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை பிரேசில் அளவுக்கு  உள்ளது. நமது தலைநகரமான தில்லியின் மக்கள் தொகை, ஸ்வீடனின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகமாகும்.

நண்பர்களே,

இந்திய காவல் துறை கூட்டமைப்பு நிலையிலும்,  மாநில நிலையிலும் உள்ளது. 900-க்கும் அதிகமான தேசிய சட்டங்களையும், சுமார் 10,000 மாநில சட்டங்களையும், அமலாக்குவதில் ஒத்துழைத்து செயல்படுகிறது. இந்திய சமூகம் பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது. உலகின் அனைத்து பெரிய  சமயங்களைச் சேர்ந்த மக்களும் இங்கே வாழ்கிறார்கள்.  நூற்றுக்கணக்கான  மொழிகளும் பேச்சு வழக்கு மொழிகளும் உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும்வகையில், ஏராளமான விழாக்கள் நடைபெறுகின்றன. உதாராணமாக  கும்பமேளா என்பது உலகிலேயே மிகப் பெரிய நீண்டகாலம் நடைபெறுகிற ஆன்மீக  விழாவாகும். இதில் 240 மில்லியன் யாத்ரீகர்கள் திரள்கிறார்கள்.  இந்த நிலையிலும் நமது காவல்படைகள் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தும்  அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள மக்களின் உரிமைகளை மதித்தும் செயல்படுகின்றன. அவர்கள் மக்களை மட்டும் பாதுகாக்கவில்லை நமது ஜனநாயகத்திற்கும் சேவை செய்கிறார்கள். இந்தியாவின் சுதந்திரமான, நியாயமான, பேரளவிலான தேர்தல்களை எடுத்துக் கொள்ளுங்கள்.  தேர்தல்களில் சுமார் 900 மில்லியன் வாக்காளர்களுக்கான  ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.  இந்த எண்ணிக்கை வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க கண்டங்களின் இணைந்த மக்கள் தொகைக்கு  நிகரானது.  தேர்தலுக்கு உதவி செய்ய 2.3 மில்லியன் காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும் நிலை நிறுத்துவதில்  உலகத்திற்கு இந்தியா ஆய்வுப் பொருளாக விளங்குகிறது.

நண்பர்களே,

கடந்த 99 ஆண்டுகளாக இன்டர்போல், உலக அளவில் 195 நாடுகளைச் சேர்ந்த காவல்துறைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.  சட்ட அமைப்புகள், நடைமுறைகள் மற்றும் மொழிகளின் வேறுபாடுகள் இருந்த போதும் இந்த செயல்பாடு உள்ளது. இதனை அங்கீகரிக்கும் விதமாக நினைவு அஞ்சல் தலையும், நாணயமும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

நண்பர்களே,

கடந்த காலத்தில் வெற்றிகள்  பல இருப்பினும், ஒரு சில விஷயங்களை உலகத்திற்கு  நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். உலகம் எதிர்கொள்கின்ற உலகளாவிய பல அச்சுறுத்தல்கள் உள்ளன. பயங்கரவாதம், ஊழல், போதைப் பொருள் கடத்தல், விலங்குகளை வேட்டையாடுதல், திட்டமிடப்பட்ட  குற்றங்கள், இவற்றில் அடங்கும்.   இந்த அபாயங்களிலிருந்து மாற்றம் ஏற்படுவது முன்பைவிட இப்போது வேகமாகியுள்ளது. அச்சுறுத்தல்கள்  உலகளாவியதாக  இருக்கும் போது அதனை எதிர்கொள்வது உள்நாட்டு விஷயமாக இருக்க முடியாது. இத்தகயை அச்சுறுத்தல்களை முறியடிக்க உலகம் ஒன்று திரண்டு வருகின்ற தருணமாகும் இது.

நண்பர்களே,

பல நாடுகளிலின் பயங்கரவாதத்தை இந்தியா பல  தசாப்தங்களாக முறியடித்து வருகிறது.   இந்த விஷயத்தில் உலகம்  விழித்துக் கொள்வதற்கு முன்பாகவே, பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தின் சிரமத்தை நாங்கள் அறிந்திருந்தோம். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். ஆனால், பயங்கரவாதம் என்பது வெளிப்பகுதிகளில் மட்டுமே போரிடவில்லை. தற்போது இணையம் வழியிலான தீவிரவாதமும் கணினி வழியிலான அச்சுறுத்தல்களும் பரவி வருகின்றன. ஒரு பொத்தானை அமுக்குவதன் மூலம் தாக்குதலை நிறைவேற்ற முடிகிறது. கணினிகளை செயலிழக்கச் செய்யமுடிகிறது. இவற்றுக்கு எதிராக உத்திகளை வகுக்க ஒவ்வொரு நாடும் முயற்சி செய்கிறது. ஆனால், நமது எல்லைகளுக்குள் செய்வது போதுமானதாக இல்லை. கூடுதலாக சர்வதேச அளவில், உத்திகளை உருவாக்கும் அவசியம் உள்ளது. முன்கூட்டியே கண்டறிதல், எச்சரிக்கை செய்தல், ஆகியவற்றை செயல்படுத்துவதோடு போக்குவரத்து சேவைகளை தொடர்பு கட்டமைப்பை, முக்கியமான அடிப்படை கட்டமைப்பை பாதுகாப்பது, தொழில்நுட்ப உதவியை பெறுவது. புலனாய்வு தகவலை பரிமாறிக் கொள்வது ஆகியவையும் தேவைப்படுகிறது.

நண்பர்களே,

ஊழல் அபாயகரமான அச்சுறுத்தல் என நான் ஏன் பேசுகிறேன் என உங்களில் சிலர் நினைக்கக் கூடும்.  ஊழலும், நிதி சார்ந்த குற்றங்களும், பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் நலன்களை பாதிக்கின்றன.  உலகின் பல்வேறு பகுதிகளில் குற்றங்களைத் தொடர ஊழல் நிதி பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பணம்  அந்த நாட்டின் குடிமக்களுக்கு சொந்தமானது. ஆனால், அது தீயவழியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பல நேரங்களில், இது உலகின் மிக ஏழ்மையான மக்களிடமிருந்து எடுக்கப்படுகிறது. மேலும், இத்தகைய பணம் தீய செயல்களுக்கு  பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் மிகப் பெரும் ஆதாரமாக இது உள்ளது.  சட்டவிரோத போதைப் பொருள்களால் இளைஞர்களின் வாழ்வை கெடுப்பது தொடங்கி மனிதர்கள் கடத்தப்படுவது வரை, ஜனநாயகங்களை பலவீனப்படுத்துவதில் தொடங்கி,  சட்டவிரோத ஆயுதங்களை விற்பனை செய்வது வரை என தீயவழியில் திரட்டப்படும் நிதி பல அழிவு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றை கையாள சட்டபூர்வமான நடைமுறை ரீதியான கட்டமைப்புகள் உள்ளன என்பது உண்மைதான்.  இருப்பினும், இத்தகைய  பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பான  விஷயங்களை  ஒழிப்பதற்கு உலகளாவிய சமூகம் இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டிய தேவை உள்ளது.  எனவே, ஊழல் பேர்வழிகள், பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தும் கும்பல், விலங்குகளை வேட்டையாடும் கூட்டங்கள் அல்லது திட்டமிட்டு குற்றம் செய்வோருக்கான புகலிடங்களை இல்லாமல் செய்யவேண்டும்.  இத்தகைய குற்றங்கள், ஒவ்வொருவருக்கும் எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மேலும், நமது நிகழ்காலத்தை மட்டும் இவை சீர்குலைக்காமல், எதிர்கால  தலைமுறைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  காவல்துறையினரும் சட்டஅமலாக்க முகமைகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது அவசியம். நிதி சார்ந்த குற்றங்களை செய்துவிட்டு தப்பிச் செல்வோருக்கான எச்சரிக்கை நோட்டீஸ்களை  விரைவுபடுத்துவதன் மூலம் இன்டர்போல் உதவி செய்ய முடியும்.

நண்பர்களே,

பாதுகாப்பும், பந்தோபஸ்தும் உள்ள உலகம் நம் அனைவருக்கும் பகிரப்பட்ட  பொறுப்பாகும். காவல் படைகள், நல்ல ஒத்தழைப்போது இருக்கும் போது குற்றம் செய்யும் சக்திகள் செயல்பட முடியாது.

நண்பர்களே,

எனது உரையை நிறைவு செய்வதற்கு முன், அனைத்து விருந்தினர்களுக்கும், ஒரு வேண்டுகோளை நான் முன்வைக்கிறேன். புதுதில்லியில் உள்ள தேசிய காவலர்கள் நினைவிடம், மற்றும் தேசிய போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றுக்கு செல்வது பற்றி பரிசீலியுங்கள்.  இந்தியாவை பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு நீங்கள் மரியாதை செலுத்தலாம். உங்களைப் போன்று பலராக இருந்த ஆண்களும், பெண்களும் தங்களின் நாட்டிற்கு  எதையும் செய்ய தயாராக இருந்தனர்.

நண்பர்களே,

தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு ஆகியவை குற்றச்செயலை, ஊழலை, பயங்கரவாதத்தை முறியடிக்கும். இதற்கு 90-வது இன்டர்போல் பொதுச் சபை பயனுள்ள, வெற்றிகரமான மேடை என்பதை நிரூபிக்கும் என நான் நம்புகிறேன். இந்த முக்கியமான நிகழ்வுக்கு  மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

நன்றி!

——

(Release ID: 1868802)

SMB/Gee/Anand/Sha