மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் முனைப்பான நிர்வாக செயல் திறன், திட்டங்களை உரிய காலத்திற்குள் அமல்படுத்துவதற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முக தளமான பிரகதியின் 45-வது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நகர்ப்புற போக்குவரத்துக்கான ஆறு மெட்ரோ திட்டங்கள், சாலை இணைப்பு, அனல் மின்சாரம் தொடர்பான தலா ஒரு திட்டம் உட்பட எட்டு முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டங்களின் ஒட்டுமொத்த செலவு 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாகும்.
திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் கால தாமதங்கள் செலவுகளை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எதிர்பார்க்கும் பலன்களைப் தருவதில்லை என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசு அதிகாரிகள் திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, வங்கி, காப்பீட்டுத் துறை தொடர்பான பொதுமக்கள் குறைகள் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான தரநிலை குறித்தும் வலியுறுத்தினார்.
மெட்ரோ ரயில் திட்டங்களை மக்களின் விருப்பமான பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக பல்வேறு நகரங்களில் செயல்படுத்தி வருவதைக் கருத்தில் கொண்டு, திட்டங்களை விரைவில் நிறைவேற்றுவதற்கான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, திட்டங்களை செயல்படுத்தும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நேரத்தில் மறுவாழ்வு, மறுகுடியமர்வு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். புதிய இடத்தில் தரமான வசதிகளை வழங்குவதன் மூலம் அத்தகைய குடும்பங்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் வீடுகளுக்கான இலவச சூரிய மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் பிரதமர் ஆய்வு செய்தார். தரமான விற்பனையாளர்கள் இதற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள மேற்கூரைகளில் சூரிய சக்திக்கான தகடுகளை நிறுவும் திறன் அதிகரிக்க முடியும் என்று கூறினார். அதிகரித்து வரும் மின்சார தேவைகளை கருத்தில் கொண்டு வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய சக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரத்தை குறைக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
45-வது பிரகதி கூட்டங்கள் வரை, சுமார் 19.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 363 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
***
SV/AG/DL