Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

27.3.2016 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம் மனதின் குரல்


எனதருமை நாட்டு மக்களே, உங்களுக்கு என்னுடைய பற்பல வணக்கங்கள். இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். நான் அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகைக்கான நல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

என் இளைய நண்பர்களே, நீங்கள் அனைவரும் ஒரு புறம் தேர்வில் முனைப்பாக இருப்பீர்கள். சிலரது தேர்வுகள் நிறைவடைந்திருக்கலாம். சிலருக்கு இது வேறு ஒரு புறம் சவாலாக அமையலாம், ஏனென்றால் ஒரு பக்கம் தேர்வு நடந்து கொண்டிருக்கும் வேளை, மறு புறத்தில் உலகக் கோப்பைக்கான டி 20 போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றும் கூட நீங்கள் இந்தியா ஆஸ்திரேலியா ஆட்டத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பீர்கள். கடந்த நாட்களில் இந்தியா, பாகிஸ்தான் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. ஒரு அருமையான உத்வேகம் புலப்படுகிறது. இன்று இந்தியா ஆஸ்திரேலியாவுடன் ஆட இருக்கும் வேளையில், நான் இரு அணி வீரர்களுக்கும் என் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

65 சதவீதம் மக்கள் இளைஞர்களாக இருந்தும் விளையாட்டு உலகத்தில் நம்மால் முத்திரை பதிக்க முடியவில்லை என்பது சரியானதாகப் படவில்லை. விளையாட்டுத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. இப்போது கிரிக்கெட்டைப் போலவே இந்தியாவில், கால்பந்தாட்டம், ஹாக்கி, டென்னிஸ், கபடி ஆகிய ஆட்டங்களுக்கு சாதகமான ஒரு மனோநிலை உருவாகி வருகிறது. இளைஞர்களிடம் இன்று நான் ஒரு மகிழ்வான செய்தியைக் கூறும் அதே வேளையில், சில எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்த விழைகிறேன். அடுத்த ஆண்டு 2017இல் இந்தியா FIFA Under-17 உலகக் கோப்பைப் போட்டியை நம் நாட்டில் நடத்தவிருக்கிறது என்பது உங்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம். உலகின் 24 அணிகள் இந்தியாவில் விளையாட வருகின்றன. 1951, 1962 ஆசியப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது; 1956 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த சில பத்தாண்டுகளில் நாம் தரவரிசையில் மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். தொடர் வீழ்ச்சியைக் கண்டு வந்துள்ளோம். இன்றோ FIFA வின் தரவரிசையில் நமது நிலை எந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது என்றால், அதை வாய் விட்டுக் கூறக் கூட சங்கடமாக இருக்கிறது. EPL ஆகட்டும், Spanish League ஆகட்டும், இந்திய சூப்பர் லீக் ஆட்டங்கள் ஆகட்டும், இன்று இந்திய இளைஞர்களுக்கு கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை நான் இன்றைய கால கட்டத்தில் காண்கிறேன். இந்தியாவின் இளைஞர்கள் கால்பந்தாட்டம் பற்றி மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள தொலைக்காட்சிகளைப் பார்க்கிறார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், கால் பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்பதை வலியுறுத்தத் தான். ஆனால் இத்தனை பெரிய வாய்ப்பு இந்தியாவின் கதவங்களைத் தட்டும் போது நாம் புரவலர்களாக மட்டும் இருந்து நம் கடமைகளை ஆற்றுவோமா? இல்லை, நாம் ஆண்டு முழுவதிலும் எங்கும் கால் பந்து எதிலும் கால்பந்து என்றதொரு சூழலை உருவாக்கலாம், பள்ளிகளில், கல்லூரிகளில், இந்தியாவில் மூலை முடுக்கெங்கிலும் இந்திய இளைஞர்கள், நமது பள்ளி மாணவர்கள் என அனைவரும் கால்பந்தாட்டம் ஆடி வியர்வையில் குளிக்கட்டும். நாலாபுறங்களிலும் கால்பந்தாட்டம் விளையாடப்படட்டும். இப்படி நாம் செய்தால், கால்பந்தாட்டப் போட்டிகளில் புரவலர்கள் என்ற சந்தோஷம் ஒரு புறம் நமக்கு ஏற்படும்; அதே சமயம் நாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கால்பந்தாட்டத்தை ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு தெருவுக்கும் கொண்டு செல்லும் முயற்ச்சிகளில் ஈடுபட முடியும்.

2017 FIFA Under – 17 உலகக் கோப்பை என்பது எப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு என்றால், இந்த ஓராண்டில் நாம் நாலாபுறங்களிலும் இளைஞர்களுக்குள்ளே கால்பந்தாட்டம் தொடர்பான புத்துணர்வை, ஒரு புதிய உற்சாகத்தை நரப்ப முயல வேண்டும். இந்த ஆட்டங்களுக்கான புரவலர்களாக நாம் இருப்பதில் ஒரு சாதகமான அம்ஸம் இருக்கிறது, அதாவது கால்பந்தாட்டத்துக்கான கட்டமைப்பு வசதிகள் இதனை ஒட்டி ஏற்படுத்தப்படும். விளையாட்டுக்குத் தேவையான முக்கியமான வசதிகள் மீது கவனம் செலுத்தப்படும். ஒவ்வொரு இளைஞனும் கால்பந்தாட்டத்தோடு இணைக்கப்படும் போது தான் நான் முழுமையாக மகிழ முடியும்.

நண்பர்களே, நான் உங்களிடம் ஒன்று எதிர்பார்க்கிறேன். 2017ஆம் ஆண்டு போட்டிகளின் புரவலர்களான நாம் எப்படி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும், ஆண்டு முழுவதும் நமது கால்பந்தாட்டத் துறையில் உத்வேகத்தை ஏற்படுத்த என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும், இது பற்றிய தகவல்களை எப்படி பரவலாக்குவது, அமைப்புக்களில் மேம்பாட்டை எப்படிச் செய்ய வேண்டும், FIFA Under – 17 உலகக் கோப்பை வாயிலாக இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டின் பால் எப்படி ஆர்வத்தை அதிகரிக்கச் செய்வது, அரசுகளில், கல்வி நிறுவனங்களில், மற்ற சமூக அமைப்புக்களில் விளையாட்டை ஒட்டிய போட்டிகளை எவ்வாறு செயல்படுத்தலாம்? க்ரிக்கெட்டை நாம் அனைவரும் ஆர்வத்தோடு பார்க்கும் அதே வேளையில், இது போன்றதொரு நிலையை மற்ற விளையாட்டுக்களிலும் நாம் கொண்டு வர வேண்டும். கால்பந்தாட்டப் போட்டிகள் ஒரு நல் வாய்ப்பு. நீங்கள் இது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை எனக்கு அளிக்க முடியுமா? உலக அளவில் இந்தியாவை branding செய்ய இது ஒரு வாய்ப்பாக நான் கருதுகிறேன். இந்தியாவின் இளைஞர்கள் சக்தியை அடையாளம் காட்ட அமைந்த ஒரு நல் வாய்ப்பாக நான் இதைக் கருதுகிறேன். ஆட்டங்களில் நாம தோற்றோமா, ஜெயித்தோமா என்ற அர்த்தத்தில் நான் கூற வரவில்லை. இந்தப் பந்தயத்தை நடத்துவதன் வாயிலாக நாம் நமது ஆற்றலை முடுக்கி விட முடியும், சக்தியை வெளிப்படுத்த முடியும், அதே வேளையில் நாம் பாரதத்துக்கு brandingஐயும் செய்ய முடியும். நீங்கள் நரேந்திரமோதிAppஇல் இது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்பி வைப்பீர்கள் இல்லையா? Logo எப்படி இருக்க வேண்டும், விளம்பர கோஷங்கள் / slogans எப்படி இருக்க வேண்டும், இந்தியா இதை விளம்பரப்படுத்த என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், பாடல் எப்படி இருக்க வேண்டும், நினைவுப் பரிசுகள் செய்யப்பட வேண்டும் என்றால் எந்த வகையில் எல்லாம் அவை அமையலாம். உங்கள் எண்ணக் குதிரைகளைத் தட்டி விடுங்கள் தோழர்களே, எனது ஒவ்வொரு இளைஞரும் இந்த 2017 FIFA உலகக் கோப்பைக்கான தூதுவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்களும் இதில் கலந்து கொள்ளுங்கள், இந்தியாவுக்கு ஒரு அடையாளத்தைப் படைக்க இது பொன்னான தருணம்.

எனதருமை மாணவச் செல்வங்களே, விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லலாம் என்று நீங்கள் திட்டமிட்டிருப்பீர்கள். மிகக் குறைவான பேர்களே அயல்நாடுகளுக்குச் செல்கிறார்கள், பெரும்பாலானோர் அவரவர் மாநிலங்களில் 5 நாட்கள், 7 நாட்கள் என சுற்றுலா சென்று விடுகிறார்கள். சிலரோ தங்கள் மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களுக்குச் செல்கிறார்கள். நீங்கள் எங்கு செல்கிறீர்களோ, அந்த இடத்தின் புகைப்படத்தை தரவேற்றம் செய்யுங்கள் என, கடந்த முறை கூட நான் உங்களிடம் வேண்டுகோள் ஒன்று வைத்திருந்தேன். எந்தப் பணியை சுற்றுலாத் துறையால் செய்ய முடியவில்லையோ, எந்தப் பணியை நமது கலாச்சாரத் துறையால் செய்ய முடியவில்லையோ, எந்தப் பணியை மாநில அரசுகள், இந்திய அரசு ஆகியவற்றால் செய்ய முடியவில்லையோ, அந்தப் பணியை நாட்டின் கோடிக்கணக்கான அயல்நாடு வாழ் மக்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் தரவேற்றம் செய்திருக்கும் புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் போது, உண்மையிலேயே ஆனந்தம் மேலிடுகிறது. இந்தப் பணியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், அதே போல இந்த முறையும் செய்யுங்கள், ஆனால் இந்த முறை வேறு ஒன்றையும் சேர்த்துச் செய்யுங்கள். வெறும் புகைப்படம் மட்டும் அனுப்பாமல், அதோடு உங்கள் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துங்கள், புது இடங்களுக்குச் செல்லும் போதும் பார்க்கும் போதும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்த விஷயங்களை நம்மால் வகுப்பறைகளில் கற்க முடிவதில்லையோ, எவற்றைக் குடும்பத்தில் கற்க முடிவதில்லையோ, எவற்றை நமது நண்பர்களிடத்திலும் கூட தெரிந்து கொள்ள முடிவதில்லையோ, அவற்றை எல்லாம் சில வேளைகளில் பயணிக்கும் போது நம்மால் அதிகம் கற்றுக் கொள்ள முடிகிறது, புதிய இடங்கள் ஒரு புதிய அனுபவத்தை நமக்குள் விதைக்கிறன. மக்கள், மொழி, உணவு, செல்லும் இடங்களில் நிலவும் வாழ்க்கை முறை என எத்தனை விஷயங்களைப் பார்க்க முடிகிறது. A traveler without observation is a bird without wings, அதாவது கவனித்தல் இல்லாத ஒரு பயணி சிறகில்லாத பறவைக்கு இணையானவர் என்று யாரோ கூறியது நினைவுக்கு வருகிறது. காட்சிகளைப் பார்க்கும் ஆர்வம் இருக்குமாயின், அதற்கு ஏற்ப கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு. ஒரு முறை காண வேண்டும் என்று பயணிக்கத் தொடங்கி விட்டால், வாழ்க்கை முழுவதும் பயணித்துக் கொண்டே தான் இருப்பீர்கள், பார்த்து ரசித்துக் கொண்டே தான் இருப்பீர்கள். உங்கள் மனம் எப்போதும் நிறையாது, அந்த வகையில் சுற்றுப் பயணம் செய்யும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது நான் செய்த அதிர்ஷ்டம் தான்.

நான் முதல்வராகவோ பிரதமராகவோ இல்லாத காலத்தில், நானும் உங்களை மாதிரியே சிறு வயதுடையவனாக இருந்த போது நிறைய சுற்றிப் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் நான் செல்லாத மாவட்டம் என்ற ஒன்று இருக்குமா என்பது சந்தேகம் தான். நம் வாழ்க்கையை உருவாக்குவதில் சுற்றுலாவுக்கு என மிகப் பெரிய சக்தி இருக்கிறது, இப்போதெல்லாம் இந்திய இளைஞர்கள் சுற்றுலா செல்ல அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், அவர்களின் உற்சாகம் அதிகரித்து வருகிறது. பழைய மாதிரி எல்லோரும் சென்ற, அல்லது அமைத்துக் கொடுத்த பாதையில் அவர்கள் பயணிப்பதில்லை, ஏதோ ஒன்றை புதியதாக செய்ய விரும்புகிறார்கள், ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் காண விரும்புகிறார்கள். நான் இதை ஒரு நல்ல அடையாளமாகக் கருதுகிறேன். நமது இளைஞர்கள் சாகசமானவர்களாக இருக்க வேண்டும், எங்கே யாரும் கால் பதிக்கவில்லையோ, அங்கே கால் பதித்து முன்னேறும் ஆர்வம் மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

நான் coal india நிறுவனத்துக்கு என் சிறப்பான பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். Western coalfields limited, WCL நிறுவனத்துக்கு நாக்பூருக்கு அருகே சாவனேர் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கின்றன. அந்த நிலக்கரிச் சுரங்கங்களை அவர்கள் Eco Friendly Mine Tourism Circuit, அதாவது சூழலுக்கு இசைவான சுற்றுலாச் சுற்றாக மேம்படுத்தி இருக்கிறார்கள். பொதுவாக நிலக்கரிச் சுரங்கங்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். அங்கிருப்போர் பற்றிய படங்களைப் பார்க்கும் போது அங்கு சென்று என்ன ஆகப் போகிறது என எண்ணுவோம்; நிலக்கரியால் கைகளை கருப்பாக்கிக் கொண்டால் தாமாகவே மற்றவர்கள் விலகி ஓடுவார்கள் என்று எங்கள் பகுதியில் ஒரு வழக்கே கூட இருக்கிறது. ஆனால் அதே நிலக்கரியை வைத்தே சுற்றுலாச் சுற்று ஒன்றை ஏற்படுத்தல் என்பது மகிழ்வை அளிக்கிறது. இது ஒரு தொடக்கம் மட்டுமே, இது வரை சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாகபுரிக்கு அருகே உள்ள ஸாவனேர் கிராமத்துக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் சூழலுக்கு இசைவான நிலக்கரிச் சுரங்க சுற்றுலாவை அனுபவித்திருக்கிறார்கள். புதுமையான ஒன்றைக் காணும் வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த விடுமுறைக் காலத்தில் நீங்கள் பிற இடங்களுக்குச் செல்லும் போது, தூய்மை தொடர்பாக உங்கள் பங்களிப்பை அளிக்க முடியுமா? இப்போதெல்லாம் ஒரு விஷயம் கண்டிப்பாக காண முடிகிறது, அளவு குறைவானதாக இருக்கலாம், விமர்சனம் செய்யும் அதே வேளையில், இது வாய்ப்பாகவும் இருக்கிறது, ஆனால் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பது என்னவோ உறுதி. சுற்றுலா இடங்களில் மக்கள் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற முயற்ச்சியில் ஈடுபடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளும் இதை மேற்கொள்கிறார்கள், சுற்றுலா இடங்களில் வசிக்கும் மக்களும் தூய்மை தொடர்பான தங்கள் பங்களிப்பை அளிக்கிறார்கள். இது மிகவும் விஞ்ஞான பூர்வமாக செய்யப்படாமல் இருக்கலாம், ஆனால் நடப்பது என்னவோ உண்மை. நீங்களும் ஒரு சுற்றுலாப் பயணி என்ற முறையில் சுற்றுலா மையத்தில் தூய்மை என்ற கருத்துக்கு வலு கூட்டும் வகையில் செயல்பட முடியுமா? என்னுடைய இளைய நண்பர்கள் இந்தப் பணியில் எனக்கு கண்டிப்பாக உதவியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சுற்றுலா என்பது அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு துறை என்பது உண்மை. சுற்றுலா இடத்துக்கு வந்து விட்டால், பரம ஏழையால் கூட சம்பாதிக்க முடிகிறது. ஏழை சுற்றுலாப் பயணி சென்றாலும் கூட, ஏதோ ஒன்றை வாங்குகிறார். சுற்றுலாப் பயணி சீமானாக இருந்தால், அவர் அதிக செலவு செய்வார். உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவில் சுற்றுலா என்பது மிகவும் பின் தங்கி இருக்கிறது. ஆனால் நமது சுற்றுலாத் துறையை பலப்படுத்த வேண்டும் என்று 125 கோடி மக்களும் ஒரு மனதோடு தீர்மானித்தால், உலகத்தையே நம்மால் கவர்ந்திழுக்க முடியும். உலகின் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பகுதியை நாம் நம்மை நோக்கி ஈர்க்க முடியும், நம் நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அரசாகட்டும், அமைப்புக்களாகட்டும், சமுதாயமாகட்டும், குடிமக்களாகட்டும், நாமனைவரும் இணைந்து இந்தப் பணியில் ஈடுபடுவோம். வாருங்கள் நாம் இந்தத் திசையில் பயணிக்கும் முயற்ச்சியில் ஈடுபடுவோம்.

எனது இளைய நண்பர்களே, விடுமுறை நாட்கள் ஏதோ வந்தன, சென்றன என்ற நிலை எனக்குப் பிடிக்கவில்லை. நீங்களும் இந்தக் கண்ணோட்டத்தில் சிந்தியுங்கள். உங்கள் விடுமுறை நாட்கள், வாழ்க்கையின் மகத்துவமான ஆண்டுகள், அவற்றின் மகத்துவம் பொருந்திய கணங்களை வீணே செல்ல விடலாமா? நான் உங்கள் சிந்தைக்கு ஒரு கருத்தை முன்வைக்கிறேன். நீங்கள் உங்கள் விடுமுறைக் காலத்தில் ஒரு திறனை வளர்த்துக் கொள்ளலாம், உங்கள் ஆளுமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு புதிய விஷயத்தை இணைத்துக் கொள்ளலாம் இல்லையா? உங்களுக்கு நீச்சல் தெரியாது என்றால், விடுமுறைக்காலத்தில் நான் நீச்சல் கற்றுக் கொள்வேன் என்றோ, சைக்கிள் ஓட்டத் தெரியாது என்றால், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வேன் என்றோ தீர்மானிக்கலாம். இன்றும் கூட நான் இரண்டு விரல்களைக் கொண்டு கணிப்பொறியில் டைப் செய்கிறேன் என்றால் நான் தட்டெழுத்துப் பயிற்ச்சியை மேற்கொள்ளலாமே? நம்முடைய ஆளுமையை வளர்த்துக் கொள்ள எத்தனை வகையான திறன்கள் இருக்கின்றன, இல்லையா? நாம் ஏன் அவற்றைக் கற்றுக் கொள்ள முடியாது? நாம் ஏன் நம் குறைபாடுகளை நீக்கிக் கொள்ளக் கூடாது? நாம் ஏன் நமது ஆற்றலை வளர்த்துக் கொள்ளக் கூடாது?

இப்போது சிந்தித்துப் பாருங்கள், இதற்க்கென பெரிய பயிற்ச்சிகள் தேவையில்லை, எந்த பயிற்சியாளரும் அவசியமில்லை, அதிக கட்டணம் தேவையில்லை, பெரிய செலவாகும் என்பதெல்லாம் இல்லை. உங்களுக்கு அருகே இருக்கும் ஒன்றைக் கூட, எடுத்துக்காட்டாக கழிவுப் பொருளிலிருந்து ஆக்கபூர்வமான பொருளை உருவாக்குவேன் என்று கூட நீங்கள் தீர்மானம் செய்து கொள்ளலாம். கவனித்துப் பாருங்கள், பிறகு நீங்களே செய்யத் தொடங்குங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும், மாலை நெருங்கும் வேளையில் நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கும் போதே, குப்பையிலிருந்து நீங்கள் கோபுரத்தை சமைத்திருப்பீர்கள். உங்களுக்கு படம் வரைய விருப்பமா, ஆனால் வரைய வராது என்றால், தொடங்குங்களேன், தானே வரும். விடுமுறைக் காலங்களில் உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ள, உங்களிடம் ஒரு புதிய திறனை மேம்படுத்திக் கொள்ள, உங்கள் திறனை அதிகரித்துக் கொள்ள அவசியம் முயலுங்கள், எண்ணிறந்த துறைகளில் நீங்கள் இப்படிச் செய்ய முடியும், நான் சொல்லும் துறைகளில் மட்டுமே செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் ஆளுமை அதன் மூலம் அடையாளம் காணப்படும், உங்களின் தன்னம்பிக்கை ஏராளமான அளவு அதிகரிக்கும். ஒரு முறை செய்து பாருங்கள், விடுமுறை நாட்களுக்குப் பிறகு நீங்கள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்லும் போது, நான் இந்த விடுமுறை நாட்களில் இதைக் கற்றுக் கொண்டேன் என்று கூறுவீர்கள், அந்த நண்பர் எதையும் கற்றுக் கொண்டிருக்க மாட்டார், அந்த நேரத்தில் நண்பா, என் விடுமுறைக் காலத்தை நான் வீணாக்கி விட்டேன், ஆனால் நீ நன்கு சிறப்பாக செயல்பட்டிருக்கிறாய் என்று கூறுவார். இது போல மற்ற நண்பர்களிடமும் உரையாடல் நிகழும். நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் புதியதாக எதைக் கற்றுக் கொண்டீர்கள் என்று என்னிடம் கூறுங்கள். கூறுவீர்கள் இல்லையா! இந்த முறை மனதின் குரலில், mygov தளத்தில் சில ஆலோசனைகள் வந்திருக்கின்றன.

எனது பெயர் அபி சதுர்வேதி. வணக்கம் பிரதமர் அவர்களே, நீங்கள் கடந்த கோடைக் கால விடுமுறையின் போது, பறவைகளுக்கும் கோடையின் வெப்பம் வாட்டும், ஆகையால் நாம் அவற்றுக்காக பால்கனியிலோ, வீட்டின் மாடியிலோ ஒரு பாத்திரத்தில் நீர் வைக்க வேண்டும், இதன் மூலம் அவற்றுக்கு நீர் கிடைக்கும் என்று கூறி இருந்தீர்கள். நான் இந்த வேலையைச் செய்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இதன் வாயிலாக நிறைய பறவைகளோடு எனக்கு நட்பு மலர்ந்தது. இந்த முறை மீண்டும் இதை உங்கள் மனதின் குரலில் வெளிப்படுத்துங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

எனதருமை நாட்டு மக்களே, நான் அபி சதுர்வேதி அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தச் சிறுவன் நான் மறந்த ஒரு விஷயத்தை எனக்கு நினைவு படுத்தி இருக்கிறார். இதைப் பற்றிக் கூற வேண்டும் என்று என் மனதில் உதிக்கவில்லை, ஆனால் கடந்த ஆண்டு நான் பறவைகளுக்காக வீட்டுக்கு வெளியே மண் கலயத்தை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அபி எனக்கு நினைவுபடுத்தியிருக்கிறார். எனதருமை நாட்டு மக்களே, நான் அபி சதுர்வேதி என்ற சிறுவனுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு நல்ல செயலைப் பற்றி எனக்கு நினைவூட்டி இருக்கிறார். கடந்த முறை நான் கூறியது எனக்கு நினைவில் உள்ளது. வெப்பக் காலங்களில் உங்கள் வீட்டுக்கு வெளியே மண் பாத்திரங்களில் நீர் நிரப்பி வையுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆண்டு முழுக்க அவர் இந்தப் பணியை செய்து வருவதாக அபி எனக்குத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பல பறவைகள் அவருக்கு நேசமாகி இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஹிந்தி இலக்கிய உலகின் மகத்தான கவிஞர்களில் ஒருவரான மகாதேவி வர்மா அவர்கள் பறவைகளின் மீது அளப்பரிய பாசம் கொண்டிருந்தார். அவர் தனது கவிதைகளில், உன்னை தொலைவாகச் செல்ல அனுமதிக்க மாட்டேன், தானியங்களால் முற்றத்தை நிரப்புவேன், எங்கும் குளிர்ந்த இன்சுவை நீரை நிறைத்து வைப்பேன், என்று பாடி இருக்கிறார். நான் அபிக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு என் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், நீங்கள் எனக்கு மிக முக்கியமான விஷயத்தை நினைவு படுத்தி இருக்கிறீர்கள்.

மைசூரைச் சேர்ந்த ஷில்பா கூகே (Kooke) மிகவும் நுட்பமான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். நமது இல்லங்களுக்கு அருகே பால் விற்பனை செய்ய வருகிறார்கள், செய்தித் தாள் விற்பவர்கள் வருகிறார்கள், தபால்காரர் வருகிறார், சில வேளைகளில் பாத்திர விற்பனையாளரோ, துணிமணி விற்பனை செய்பவரோ கடந்து செல்கிறார்கள். கோடையின் வெப்பம் தகிக்கும் வேளையில் அவர்களின் தாகம் தணிக்க நீர் வேண்டுமா என்று எப்போதாவது நாம் கேட்டிருக்கிறோமா? எப்போதாவது நாம் அவர்களுக்கு அருந்த நீர் அளித்திருக்கிறோமா? ஷில்பா, உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், நீங்கள் மிகவும் உணர்வுரீதியான கருத்தை மிகவும் இயல்பான முறையில் முன் வைத்திருக்கிறீர்கள். விஷயம் என்னவோ சிறியது தான் என்றாலும் கோடைக்காலத்தின் போது ஒரு தபால்காரர் வீட்டினருகே வரும் போது, நாம் அவருக்கு அருந்த நீர் அளித்தால் அவருக்கு எத்தனை இதமாக இருக்கும். இந்தியாவில் இந்த மனோபாவம் இயல்பாகவே இருக்கிறது. ஆனால் நீங்கள் இத்தனை நுட்பமான விஷயத்தின் மீது கவனம் செலுத்தியிருப்பதைக் கண்டு நான் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, டிஜிட்டல் இந்தியா பற்றி நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலருக்கு இந்த டிஜிட்டல் இந்தியா என்பது ஏதோ நகரத்து இளைஞர்கள் தொடர்பான விஷயமாகப் படலாம். அது தான் இல்லை, உங்களுக்கு வசதியாக விவசாயிகள் வசதிக்கானApp ஒன்று சேவையில் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவசாயிகள் வசதிக்கானAppஐ நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனில் தரவிறக்கம் செய்து கொண்டால், விவசாயம் தொடர்பான, வானிலை தொடர்பான அனைத்துத் தகவல்களும் உங்கள் கைத்தலத்திலேயே கிடைத்து விடும். சந்தைகளில் நிலைமை என்ன, சந்தைக்கூடங்களில் நிலை என்ன, நல்ல அறுவடையின் போக்கு எப்படி இருக்கிறது, எந்த விதமான பூச்சிகொல்லிகள் உகந்தவையாக இருக்கும் என பல தகவல்களை அதிலிருந்து பெற முடியும். அது மட்டுமல்ல, இதில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால், அது உங்களுக்கு விவசாய விஞ்ஞானிகளோடு அல்லது விவசாய வல்லுனரோடு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அவர்களிடத்தில் நீங்கள் ஏதேனும் கேள்விகளைக் கேட்டால் அதற்கு பதில் தருகிறார்கள் அல்லது உங்களுக்கு விளங்கும் வகையில் புரிய வைக்கிறார்கள். எனது விவசாய சகோதர சகோதரிகள் இந்த விவசாயிகள் வசதிக்கானAppஐ தங்கள் மொபைல் ஃபோனில் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது உங்களுக்கு உதவியாக இருக்கிறதா என்று முயன்று தான் பாருங்களேன். அதில் ஏதேனும் குறைபாடு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் குறைகளை என்னிடம் தெரிவியுங்கள்.

எனது விவசாய சகோதர சகோதரிகளே, மற்றவர்களுக்கு எல்லாம் கோடைக்காலம் விடுமுறைக்கான பருவமாக இருக்கலாம். ஆனால் விவசாயிகளுக்கு என்னமோ அது வியர்வை சிந்தும் வேளையாக மாறி விடுகிறது. அவர்கள் மழை எப்போது வரும் என்று வழி மீது விழி வைத்துக் காத்திருகிறார்கள், அது வரும் முன்னதாக, தங்கள் நிலத்தை தயார் நிலையில் வைக்க இரவு பகலாக தங்கள் உயிரைக் கொடுத்து பாடு படுகிறார்கள்; அப்போது தான் மழைநீரின் ஒரு துளி கூட வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும். விவசாயிகளுக்கு விவசாயம் செய்யும் தொடக்க காலம் மிகவும் மகத்துவம் நிறைந்த ஒன்றாகும். ஆனால் நீரில்லாது போனால் என்னவாகும் என்று நாட்டு மக்களாகிய நாமும் சிந்திக்க வேண்டும். நமது நீர் நிலைகள், நம்மருகில் நீர் பெருக்கெடுத்து ஓடும் வழிகள், ஏரிகளில் நீர் வரத்துக்கான கால்வாய்கள் ஆகியவற்றில் குப்பை கூளங்களோ ஆக்கிரமிப்புக்களோ ஏற்பட்டிருந்தால், நீர் வருவது தடைப்பட்டுப் போகும்; இதன் காரணமாக நீர்த் தேக்கம் மெல்ல மெல்ல குறைந்து போகத் தொடங்கும். மீண்டும் ஒரு முறை நாம் அந்தப் பழைய இடங்களைத் தோண்டி சுத்தம் செய்து, அதிக நீர் சேமிப்புக்கான வழிகளில் ஈடுபட முடியாதா? எத்தனை நீரை நம்மால் சேமிக்க முடியுமோ, அதுவும் முதல் மழையிலேயே கூட நாம் நீரை சேமித்து விட்டால், நீர் நிலைகள் நிறைந்து விட்டால், நமது நதிகளும் குளங்களும் நிறைந்து விட்டால், பின்மழை பொய்த்தாலும் கூட, நமக்கு ஏற்படும் இழப்பு குறைவாகவே இருக்கும். இந்த முறை 5 இலட்சம் ஏரிகள், நீர்ப்பாசனக் குளங்களை ஏற்படுத்தும் முயற்ச்சியை மேற்க்கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மன்ரேகா மூலமாக நீர் சேமிப்புக்காக சொத்துக்களை உருவாக்கும் முயற்ச்சியை எடுத்திருக்கிறோம். கிராமம் தோறும் நீர் சேமிக்க வேண்டும், எதிர் வரும் மழைக்காலத்தில் ஒவ்வொரு சொட்டு நீரையும் எப்படி சேமிப்பது. கிராமத்தின் நீர் கிராமத்திலேயே இருத்தல் வேண்டும் என்ற இயக்கத்தை செயல்படுத்துவோம், நீங்கள் திட்டம் தீட்டுங்கள், அரசின் திட்டங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், நீர் தொடர்பாக ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கலாம், இதன் மூலம் நீரின் மகத்துவம், முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிய வைக்கப் படுவதோடு, நீர் சேமிப்பில் அனைவரும் ஒன்றிணைய முடியும். நாட்டில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய கிராமங்கள் பல இருக்கலாம், முன்னோடி விவசாயிகள் பலர் இருக்கலாம், பல விழிப்புணர்வு கொண்ட குடிமக்கள் இருக்கலாம். ஆனால் இப்போது இதை மேலும் உத்வேகத்தோடு செய்ய வேண்டிய வேளை வந்திருக்கிறது.

எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, நான் மீண்டும் ஒரு முறை இந்த விஷயத்தை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். சில நாட்கள் முன்பாக இந்திய அரசு ஒரு மிகப் பெரிய விவசாயிகள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது, என்னவெல்லாம் நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று அப்போது என்னால் பார்க்க முடிந்தது, என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது விவசாயத் துறையில் என்று உணர முடிந்தது, ஆனாலும் கூட இவை விளைநிலங்கள் வரை கொண்டு சேர்க்கப்பட வேண்டும், உரங்கள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று விவசாயிகளே கூட சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நான் இதை வரவேற்கிறேன். அதிக உரங்களின் தவறான பயன்பாடு நமது பூமித் தாயை நோய்வாய்ப்படச் செய்கிறது, நாம் நமது பூமித் தாயின் மைந்தர்கள், அப்படி இருக்கையில் நாம் எப்படி நமது தாய் நோய்வாய்ப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியும்? நல்ல மசாலாப் பொருட்களைச் சேர்த்தால், உணவு சுவையும் மணமும் கூடியதாக ஆகிறது, ஆனால் அதே மசாலாவை அளவுக்கு அதிகம் சேர்த்தால், உணவு உண்ண வேண்டும் என்று மனதுக்கு தோன்றுமா? அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் விஷம் தானே?

உரங்கள் விஷயமும் இப்படித் தான், உரம் என்ன தான் உன்னதமானதாக இருந்தாலும், சரி, அளவுக்கு அதிகமாக உரத்தைப் பயன்படுத்தினால், அதுவே கூட அழிவுக்கான பாதையில் கொண்டு சேர்த்து விடும். ஒவ்வொரு விஷயத்திலும் நிதானம் தேவை, இதனால் செலவும் குறைவாகும், உங்கள் பணமும் மிச்சமாகும். குறைந்த செலவு நிறைந்த விளைச்சல், குறைந்த முதலீடு, அதிக லாபம் என்பதே நமது இலக்கு, இந்த மந்திரத்தை மனதில் கொண்டு, அறிவியல் முறைகளைக் கையாண்டு நாம் நமது விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நீர் சேமிப்பு விஷயத்தில் நாம் என்னவெல்லாம் முக்கியமான பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ, மழை வர இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் இருக்கையில் நாம் அதிக முனைப்போடு அவற்றில் ஈடுபட வேண்டும். எந்த அளவு நீரை சேமிக்க முடிகிறதோ, அத்தனைக்கத்தனை விவசாயிகளுக்கு பலன் கிட்டும், வாழ்க்கையில் அந்த அளவுக்கு சேமிப்பு அதிகமாகும்.

எனதருமை நாட்டு மக்களே, ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி உலக சுகாதார தினம், இதன் மையக்கருத்தாக Beat Diabetes இருக்கிறது, அதாவது நீரிழிவு நோயை முறியடிப்போம் என்பது பொருள். நீரிழிவு நோய் என்ற ஒரு நோய் மற்ற நோய்களின் வருகைக்கு பட்டுக்கம்பள வரவேற்பு அளிக்கும் கேடாக விளங்குகிறது. ஒரு முறை நீரிழிவு நோய் பீடித்து விட்டால், அதன் பின்னர் ஏகப்பட்ட நோய்கள் நங்கூரமிட்டு உடலைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொள்ளும். 2014ம் ஆண்டு இந்தியாவில் சுமார் 6½ கோடி நீரிழிவு நோயாளிகள் இருந்தார்கள். ¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬ நிகழும் இறப்புக்களில் 3 சதவீதம் நீரிழிவு நோய் காரணமாக நிகழ்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோய் இரு வகைப்படும், ஒன்று type 1, மற்றது type 2. Type 1 என்பது பரம்பரை பரம்பரையாக வருவது, hereditary, தாய் தந்தைக்கு இருப்பதால் பிள்ளைக்கும் ஏற்படுகிறது. Type 2, பழக்கங்கள் காரணமாக, வயது காரணமாக, உடல் பருமன் காரணமாக ஏற்படுகிறது. நம்மால் இதை இருகரம் நீட்டி வரவேற்கிறோம். உலகம் முழுக்க நீரிழிவு நோய் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதால் இதையே 7ஆம் தேதி உலக சுகாதார தினத்தின் மையக்கருவாக இதை அமைத்திருக்கிறார்கள். நமது வாழ்க்கை முறை இதற்குப் பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. உடல் உழைப்பு குறைந்து கொண்டே வருகிறது.

வியர்வையை சுத்தமாக நாம் பெருக்குவதில்லை, நடைப்பழக்கம் ஏதும் கிடையாது. விளையாட்டுக்களைக் கூட கணிப்பொறியில் தான் விளையாடுகிறோம், கணிப்பொறி இல்லாத விளையாட்டுக்கள் விளையாடுவதில்லை. ஏப்ரல் மாதம் 7ஆம் தேதியால் கருத்தூக்கம் பெற்று நாம் நமது வாழ்வுகளில் நீரிழிவு நோயைத் தோற்கடிக்கும் விதமாக செயல்பாடுகளில் இறங்க முடியுமா? உங்களுக்கு யோகாசனங்கள் செய்வதில் நாட்டம் இருந்தால் அதில் ஈடுபடுங்கள், இல்லையென்றால் ஓடியோ நடந்தோ பழகலாம். என் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமாக இருந்தால், எனது பாரதமும் ஆரோக்கியமாக இருக்கும். சில வேளைகளில் சங்கடப் பட்டுக்கொண்டு நாம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதில்லை. நிலைமை மோசமடைந்த பிறகு தான் ஐயோ, ரொம்ப காலமாகவே நீரிழிவு நோய் இருந்திருக்கிறது என்பது தெரிய வரும். பரிசோதனை செய்து கொள்வதால் என்னவாகிப் போய் விடும், இதையாவது செய்யுங்களேன், இப்போது தான் அனைத்து வசதிகளும் இருக்கின்றனவே. இது மிகவும் சுலபமாக நடந்து விடும். கண்டிப்பாக இதைச் செய்யுங்கள்.

மார்ச் மாதம் 24ஆம் தேதி உலக காச நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. என் சிறு வயதில், டிபி என்ற பெயரைக் கேட்டவுடனேயே மக்கள் பயந்து போய் விடுவது என் நினைவில் இன்னும் இருக்கிறது. அவ்வளவு தான், மரணம் நிச்சயம் என்று தீர்மானித்தே விடுவார்கள். ஆனால் இப்போது காச நோயால் அத்தனை பயம் வருவதில்லை, ஏனென்றால் காசநோய்க்கு நிவாரணம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். காசநோயோடு மரணம் தொடர்பு படுத்தப்பட்ட போது நாம் அஞ்சினோம் என்பது ஒரு காலம், ஆனால் இப்போதோ நாம் காச நோய் தொடர்பாக கவனக் குறைவாக இருக்கிறோம். மற்ற நாடுகளில் இருக்கும் காச நோயாளிகள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் நம் நாட்டில் குறைவு தான். காச நோயிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் சரியான சிகிச்சை அவசியம், முழுமையான சிகிச்சை முக்கியம். அரைகுறையாக சிகிச்சையை இடையில் விட்டு விட்டால், நோய் மீண்டும் வந்து விடும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் கூட, காச நோய் வந்திருக்கிறதா இல்லையா என்று சோதனை செய்து பாருங்கள் என்று கூறக் கூடிய அளவுக்கு காச நோய் பற்றி தெரிந்திருக்கிறது. இருமல் வருகிறது, காய்ச்சல் ஏற்படுகிறது, உடல் மெலிந்து கொண்டே வருகிறது என்றால் காச நோய் ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயப்பாடு, அக்கம்பக்கத்தாருக்குக் கூட எழுகிறது. அதாவது, நோய் இருக்கிறதா என்று உடனடியாக தெரிந்து கொண்டு சிகிச்சை பெறக் கூடியதாக இது இருக்கிறது.

எனதருமை நாட்டு மக்களே, இந்தக் கண்ணோட்டத்தில் ஏகப்பட்ட ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 13,500க்கும் அதிகமான microscopy மையங்கள் இருகின்றன. 4 இலட்சத்துக்கும் அதிகமான dot providerகள் இருக்கின்றன. பல மேம்பட்ட பரிசோதனைக் கூடங்கள் இருக்கின்றன, அனைத்து சேவைகளும் இலவசமாகக் கிடைக்கின்றன. ஒரு முறை பரிசோதனையாவது செய்து கொள்ளுங்கள். சரியான சிகிச்சையால் இந்த நோய்க்கு ஒரு முடிவு கட்ட முடியும். காச நோயாகட்டும், நீரிழிவு நோயாகட்டும், நாம் அவற்றை முறியடித்தாக வேண்டும். இந்தியாவை இந்த நோய்களின் பிடியிலிருந்து விடுவித்தாக வேண்டும். ஆனால் உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் வெறும் அரசுகள், மருத்துவர்கள், மருந்துகளால் மட்டும் இவற்றை ஒழிக்க முடியாது. ஆகையால் நாம் நீரிழிவு நோயை முறியடிக்க வேண்டும், காச நோயை ஒழித்து விட வேண்டும் என்று நான் நாட்டு மக்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டு மக்களே, ஏப்ரல் மாதம் பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பீம்ராவ் பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாள். அவரது 125வது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு முழுவதும் நாடெங்கும் கொண்டாடப்பட்டது. Mhow – மோ அவர் பிறந்த இடம், லண்டனில் அவர் கல்வி பயின்றார், நாகபுரியில் அவரது அரசியல் வாழ்வு தொடங்கியது, தில்லியின் 26 அலிபூர் ரோட்டில் அவரது மகாபரிநிர்வாண நிகழ்வு அரங்கேறியது, மும்பையில் அவரது அந்திமக் கிரியைகள் நடைபெற்ற இடத்தில் நினைவிடம் என இந்த ஐந்து புனிதமான இடங்களை மேம்படுத்த நாம் முயற்ச்சிகளை மேற்க்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த இடமான Mhowவுக்கு செல்லக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. ஒரு சிறந்த குடிமகனாக ஆகத் தேவையான அனைத்தையும் பாபா சாஹேப் அவர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். அவர் காட்டிய வழியில் பயணித்து, ஒரு நல்ல குடிமகனாக வாழ்ந்து நாம் அவருக்கு சிறப்பானதொரு அஞ்சலியை காணிக்கையாக்க முடியும்.

இன்னும் சில நாட்களில் விக்ரம் ஆண்டு தொடங்கி விடும். புத்தாண்டு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு ரூபங்களில் கொண்டாடப் படுகிறது. சிலர் இதை புதிய சம்வத்ஸரம் அதாவது புத்தாண்டு என்கிறார்கள், சிலர் இதை Gudi-Padwa என்கிறார்கள், சிலர் இதை வர்ஷ பிரதிபதா என்கிறார்கள், சிலர் இதை உகாதி என்கிறார்கள். ஆனால் இந்தியாவின் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இதற்கென ஒரு மகத்துவம் இருக்கிறது. அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எனது மனதின் குரலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் என்று நான் கடந்த முறையே கூட கூறியிருந்தேன், இதை நீங்கள் அறிவீர்கள். சுமார் 20 மொழிகளில் இதைக் கேட்கலாம். உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் அதைக் கேட்டுக் கொள்ளலாம். உங்கள் மொபைல் ஃபோனில் அதைக் கேட்கலாம். நீங்கள் மிஸ்ட் கால் ஒன்றைக் கொடுத்தால் மட்டும் போதும். இந்தச் சேவை தொடங்கப்பட்டு ஒரு மாத காலம் மட்டுமே ஆகிறது. ஆனால் 35 இலட்சம் பேர்கள் இதனால் பயன் அடைந்திருக்கிறார்கள். நீங்களும் எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள் 81908-81908. நான் எண்ணை மீண்டும் அறிவிக்கிறேன். 81908-81908. நீங்கள் மிஸ்டு கால் கொடுங்கள், எப்போது உங்களுக்கு நேரம் வாய்க்கிறதோ அப்போது பழைய மனதின் குரல் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொள்ளலாம், உங்களின் மொழியிலேயே கேட்டுக் கொள்ளலாம். உங்களோடு இணைந்து கொள்வதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

எனதருமை நாட்டு மக்களே, உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள். மிக்க நன்றி.