Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

27.12.15 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம் – மனதின் குரல்


எனதருமை நாட்டு மக்களே,

உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். ஒரு வகையில் 2015ம் ஆண்டின் என் நிறைவான மனதின் குரல் நிகழ்ச்சி இது. அடுத்த மனதின் குரல் நிகழ்ச்சி 2016ம் ஆண்டில் இருக்கும். இப்போதுதான் நாம் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தோம், இப்போது நாம் புது வருடத்தை வரவேற்க காத்திருக்கிறோம். இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு, இங்கே ஏராளமான பண்டிகைகள் நிரம்பிக் கிடக்கின்றன. ஒன்று கடந்து செல்லும் போதே இன்னொன்று வந்து விடுகிறது. ஒரு வகையில் பார்க்கப் போனால், ஒவ்வொரு பண்டிகையுமே அடுத்த பண்டிகை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை விட்டுச் செல்கிறது என்று சொல்லலாம். சில வேளைகளில் இந்தியா பண்டிகைகளால் முடுக்கி விடப்படும் பொருளாதாரம் என்று கூட சொல்லலாம். சமுதாயத்தின் கீழ்த்தட்டில் இருக்கும் மக்களின் பொருளாதார செயல்பாடுகளுக்கான காரணமாக இவை அமைகின்றன. இந்தத் தருணத்தில் நான் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், வரவிருக்கும் 2016ம் ஆண்டுக்கான நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 2016ம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் ஏராளமான மகிழ்ச்சியையும் சந்தோஷங்களையும் கொண்டு வரட்டும், புதிய உற்சாகம், புதிய பொலிவு, புதிய உறுதிப்பாடு உங்கள் அனைவரையும் புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்லட்டும். உலகம் முழுவதுமே சங்கடங்களிலிருந்து மீட்சி பெறட்டும்; தீவிரவாதமாகட்டும், உலகம் வெப்பமயமாதல் ஆகட்டும், இயற்கைப் பேரிடர்களாகட்டும், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சங்கடமாகட்டும். இவை அனைத்திலுமிருந்து மீட்சி பெற்று மனித சமுதாயம் அமைதி நிறைந்த நல்வாழ்வு வாழ வேண்டும் – இதை விடப் பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்?

நான் தொழில்நுட்பத்தை முழுவதுமாகப் பயன்படுத்துபவன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், இல்லையா? இதன் மூலம் எனக்கு ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்து வருகின்றன. Mygov.in என்ற எனது இணைய தளத்தை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

புனே நகரிலிருந்து கணேஷ் வி. சாவ்லே சவார்க்கர் அவர்கள் இந்தப் பருவம் சுற்றுலாப் பருவமாக இருக்கிறது, மிகப் பெரிய அளவில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள், மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக பலவிடங்களுக்குச் செல்கிறார்கள்; அந்த வகையில் சுற்றுலாத் துறையைப் பொறுத்த மட்டில் கிட்டத்தட்ட அனைத்துக் கோணங்களிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். ஆனால் எங்கெல்லாம் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாகச் செல்கிறார்களோ, அந்த இடங்களில் எல்லாம் நாம் சுத்தம் பற்றிய நம் சிறப்பு கவனத்தைச் செலுத்துவதில்லை, அந்த கவனத்தை நாம் செலுத்த வேண்டும் என்கிறார். நமது சுற்றுலாத் தலங்கள் எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு இந்தியா பற்றிய எண்ணமும் தோற்றமும் மற்றவர்கள் மனங்களில் பொலிவு பெறும் நான் கணேஷ் அவர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். நான் கணேஷ் அவர்களின் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறேன். நாம் அதிதி தேவோ பவ, அதாவது விருந்தினர்களை இறைவனாகக் காண வேண்டும் என்ற மரபில் வந்தவர்கள் எனும் போது, நம் இல்லங்களுக்கு விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால், உடனே வீட்டைத் துடைப்பது, சுத்தம் செய்வது என்றெல்லாம் ஈடுபடுகிறோம், இல்லையா? இதே போலவே நாம் நம் நாட்டின் சுற்றுலாத் தலங்கள், மையங்கள், யாத்திரை இடங்கள் ஆகியவற்றை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும், இதில் நாம் சிறப்பான வலு சேர்க்க வேண்டுவது அவசியம். தூய்மை பற்றி நாடெங்கிலுமிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன என்பது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சியைத் தருகிறது. தொடக்க நாள் முதலாகவே நான் இந்த விஷயம் குறித்து ஊடகத் துறை நண்பர்களுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவித்த வண்ணம் இருந்திருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் சின்னச் சின்ன, நல்ல நல்ல விஷயங்களை தோண்டி எடுத்து மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

மத்திய பிரதேச மாநில சிஹோர் மாவட்டத்தின் போஜ்பூரா கிராமத்தில் திலிப் சி. மாளவீய அவர்கள் எளிய ஒரு கட்டுமானக் கலைஞர்; பத்திரிக்கைகளில் அவரைப் பற்றிய செய்தி வரும் அளவுக்கு அவர் நல்லதொரு செயலை செய்து வந்துள்ளார். கிராமத்தில் யாராவது கட்டுமானப் பொருள்களை அளிப்பார்களேயானால், அவர் கழிப்பறை கட்டத் தேவையான கட்டுமானக் கூலையைப் பெறுவதில்லை என்ற உறுதிப்பாட்டை மேற்கொண்டார். இலவசமாகவே அவர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கழிப்பறையைக் கட்டிக் கொடுத்து வருகிறார். இந்தப் பணி மிகவும் புனிதமான ஒன்று என்று கருதி, போஜ்பூரா கிராமத்தில் இவர் தன்னுடைய உழைப்பினால் மட்டுமே நூறு கழிப்பறைகளை இது வரை கட்டிக் கொடுத்துள்ளார் என்ற செய்தியை இப்போது தான் நான் படிக்க நேர்ந்தது, இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் திலிப் சி. மாளவீயா அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும், மனம் நிறைந்த பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு பற்றி உற்சாகத்தைக் குன்றச் செய்யும் செய்திகள் நம் காதுகளில் சில நேரங்களில் வந்து விழுகின்றன. ஆனால் இந்த நாட்டில் இப்படி கோடிக்கணக்கான திலிப் சீ. மாளவீயாக்கள் இருக்கின்றார்கள்; அவர்கள் தங்களால் இயன்ற வரைக்கும் நல்ல பணிகளை ஆற்றி வருகின்றார்கள். இது தானே நாட்டின் பலம்! இது தானே நாட்டின் எதிர்பார்ப்பு! இந்த விஷயங்கள் தானே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவை!! ஆகையால் நமது மனதின் குரலில் திலீப் சி. மாளவியாவைப் பாராட்டுவது என்பது, பெருமிதம் கொள்வது என்பது இயல்பான ஒன்றாகவே அமையும்.

பலருடைய இடைவிடாத முயற்சிகள் காரணமாக நாடு மிக விரைவான முன்னேற்றம் கண்டு வருகிறது. நாட்டின் 125 கோடி மக்களும் தோளோடு தோள் சேர்த்து முன்னேற்றப் பாதையில் நடை போட்டு வருகிறார்கள், நாட்டையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிறப்பான கல்வி, மேம்பட்ட திறன்கள், அதிகரித்து வரும் வேலை வாய்ப்புக்கள்; குடிமக்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், வங்கி வசதிகள், இடர்கள் இல்லாமல் உலகளாவிய அளவில் வியாபாரம் செய்தல், புதிய தொழில்கள் தொடங்கத் தேவையான அமைப்புகளை நிறுவுதல் போன்றவை ஒரு புறம் நிகழ்ந்து வருகின்றன. வங்கிகளின் அருகே கூட செல்ல முடியாத எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இப்போது முத்ரா திட்டம் வாயிலாக சுலபமாக கடனுதவி பெற முடிகிறது.

இப்போதெல்லாம் உலகம் முழுவதும் யோகக் கலையின் பால் ஈடுபாடு கொள்ளத் தொடங்கி இருக்கிறது என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். உலகம் முழுமையும் சர்வதேச யோக நாளைக் கொண்டாடிய போது, நம் நாடு எத்தனை பெருமை பெற்ற நாடு என்ற உணர்வு நமக்கெல்லாம் ஏற்பட்டது, இல்லையா? நமது எண்ணங்களும் சிந்தனைகளும் விசாலமான அளவில் இருக்கும் போது தான் இந்த உணர்வு நமக்கு ஏற்படும். வெண்ணெய் உண்ட கண்ணனை, அவன் தாய் யசோதை வாயைத் திறந்து காட்டு என்ற போது, அப்படி அவன் திறக்கையில், அங்கே அவள் அண்ட சராசரங்களையும் கண்டதை யாரால் மறக்க முடியும்? அப்போது தான் அவளது பார்வை விசாலப் பட்டது. இதே போலத் தான் யோகா தினமானது இந்தியா பற்றிய மகத்துவத்தை இந்தியர்களான நமக்கு உணர்த்தியது.

இப்போதெல்லாம் தூய்மை பற்றிய பேச்சுக்கள் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்து வருகிறது. இதில் குடிமக்களின் பங்கேற்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மின்சாரம் என்ற வசதியைப் பயன்படுத்தி வரும் நகர வாசிகளுக்கு, நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக மின்சார இணைப்பு பெறும் பல கிராம மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய கற்பனை கூட இருக்க முடியாது. மத்திய மாநில அரசுகளின் மின்வழங்கல் துறை முந்தைய காலகட்டங்களில் கூட பணி புரிந்து வந்திருந்தன; ஆனால் அனைத்து கிராமங்களுக்கும் ஆயிரம் நாட்களுக்கு உள்ளாக மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்டாக வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப் பட்ட நாள் முதல் கொண்டு, மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்ட கிராமங்களின் பெயர்களுடன் கூடவே அந்தந்த கிராம மக்களின் உற்சாகமும் குதூகலமும் பற்றிய செய்திகளும் தினமும் வரத் தொடங்கி இருக்கின்றன. இன்று வரை இவை பற்றிய செய்திகள் பெரிய அளவில் ஊடகங்களில் வெளி வரவில்லை என்றாலும் கூட, ஊடகங்கள் கண்டிப்பாக அந்த கிராமங்களுக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் அந்த கிராமங்களில் மின்சார வருகையால் ஏற்பட்டிருக்கும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் உலகுக்கு எடுத்துரைப்பார்கள். ஒரு விவசாயியாகட்டும், ஏழையாகட்டும், இளைஞனாகட்டும், தாய்க்குலமாகட்டும், அவர்கள் வாழ்வுகளில் புத்துணர்வு ஏற்படுத்தும் ஒரு நல்மாற்றத்துக்குத் தாங்கள் காரணமாக இருந்திருக்கிறோம் என்ற உணர்வு மின்சாரத்தை அந்த கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகளுக்கு மிகப் பெரிய மன நிறைவை ஏற்படுத்தும், இதுவே கூட ஒரு மிகப் பெரிய சாதகமான விஷயம். இது நாள் வரை மின்சாரம் கிடைக்காத இந்த மக்களுக்கெல்லாம் இந்தச் செய்தி கிடைக்க வேண்டுமா இல்லையா? எந்த அரசு எதைச் செய்தது, எதைச் செய்யவில்லை என்ற கருத்தினடிப்படையில் தகவல் சென்று சேர வேண்டும் என்று நான் கூறவில்லை, மக்களுக்குப் இதைப் பெற உரிமை இருந்தால், இதை அவர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. தங்களது உரிமைகளைப் பெறுவதில் கூட அவர்களுக்குத் தகவல்கள் கிடைக்க வேண்டும் இல்லையா? சரியான தகவல்கள், நல்ல விஷயங்கள், சாமான்ய மக்களுக்கு உதவக் கூடிய விஷயங்கள் எத்தனை அதிகப் பேர்களுக்குக் கிடைக்க வேண்டுமோ, அத்தனை பேர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்ய வேண்டும். இது கூட சேவை தானே? நானும் இந்த சேவையில் ஈடுபடும் வகையில் ஒரு சிறிய அளவிலான முயற்சியில் ஈடுபட்டேன். தனியனாய் நான் மட்டுமே அனைத்தையும் செய்து விட முடியாது அல்லவா? ஆனால் நான் இதைப் பற்றிக் கூறும் போது, என் பங்களிப்பை நானும் அளிக்க வேண்டுமல்லவா? ஒரு எளிய குடிமகன் கூட தனது மொபைல் ஃபோனில் நரேந்திர மோதி என்ற ஒரு Appஐ தரவிறக்கம் செய்து என்னோடு இணைந்து கொள்ளலாம். இதில் நான் எளிமையான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறேன். மக்களுமே கூட என்னிடம் ஏராளமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. நீங்களும் உங்கள் தரப்பில் இந்த முயற்சியில் அவசியம் ஈடுபடுங்கள். 125 கோடி மக்களையும் சென்றடைய வேண்டுமென்றால், உங்கள் உதவியில்லாமல் என்னால் எப்படி சென்று சேர முடியும்? வாருங்கள், நாமனைவருமாக இணைந்து சாமான்ய மக்களின் நலன்கள் பற்றிய விஷயங்களில் ஈடுபடுவோம், சாமான்யனுக்குப் புரியும் வகையில் கொண்டு சேர்ப்போம், அவர்களின் உரித்தான விஷயங்களைப் பெற்றுத் தர அவர்களுக்கு கருத்தூக்கம் அளிப்போம்.

எனதருமை இளைய நண்பர்களே,

ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று நான் செங்கோட்டையிலிருந்து Start up India, Stand Up India தொடர்பான ஒரு அடிப்படை கருத்தை முன்வைத்தேன். அதன் பிறகு அரசின் அனைத்துத் துறைகளிலும் இது தொடர்பான சிந்தனை முடுக்கி விடப்பட்டது. இந்தியாவால் Start Up தலைநகராக ஆக முடியுமா? இதற்காக தயாரிப்புத் துறை, சேவைத் துறை, விவசாயத் துறை என ஒவ்வொரு துறையிலும் புதுமை, புதிய வழிமுறைகள், புதிய எண்ணப்பாடு என இளைஞர்களுக்கு புதிய Start upகள், புதுமைகள் படைத்தல்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு நமது மாநிலங்கள் அளவில் ஏற்பட வேண்டும். புதுமைகள் படைக்கப்படவில்லை என்றால் உலகில் முன்னேற்றம் ஏற்படாது. Start up india, Stand up india இளைய சமுதாயத்துக்கு ஒரு மிகப் பெரிய வாய்ப்பை கொண்டு சேர்த்திருக்கிறது. எனதருமை இளைய நண்பர்களே, ஜனவரி மாதம் 16ம் தேதியை இந்திய அரசு start up india, stand up indiaவுக்கான செயல்பாட்டை முழு வீச்சில் தொடக்க இருக்கிறது. இது எப்படி இருக்கும் என்னவாக இருக்கும், என்பது தொடர்பான ஒரு வரைபடம் உங்கள் முன் வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், மத்திய பல்கலைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் என எங்கெல்லாம் இளைய சமுதாயத்தினர் இருக்கின்றார்களோ, அவர்கள் அனைவரும் live connectivity, அதாவது நேரடித் தொடர்பு முறை வாயிலாக இணைக்கப்படுவார்கள். Start up என்பது டிஜிட்டல் உலகம், தகவல் தொழில் நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தான் என்று start up தொடர்பாக நம்மிடத்தில் ஒரு நிலைபெற்ற கருத்து நிலவி வருகிறது, கண்டிப்பாக இல்லை. இந்தியாவின் தேவைகளைக் கருத்தில் கொண்டு நாம் இதில் மாற்றங்களைச் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக ஏழை ஒருவர் உழைப்பில் ஈடுபடும் போது, அவருக்கும் உடல் களைப்பு மேலிடுகிறது. ஆனால் இந்த உடல் களைப்பிலிருந்து தப்பும் வகையில் அவருக்கு உதவியாக ஒரு இளைஞர் புதிய கண்டுபிடிப்பை ஏற்படுத்தினார் என்று சொன்னால், நான் இதையே கூட start upஆக கருதுகிறேன். இத்தகைய இளைஞர்களுக்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வங்கிகளிடம் கேட்டுக் கொள்கிறேன். துணிந்து உதவி செய்யுங்கள், இதற்கு சந்தை இருக்கிறது என்று என்னால் கூற முடியும். நமது இளைய தலைமுறையினரின் அறிவுத் திறன் நாடெங்கிலும் பரவிக் கிடக்கிறது. இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் உள்ள இளைஞர்களிடம் அபாரமான திறன் நிரம்பியிருக்கிறது. அவர்களுக்கெல்லாம் வாய்ப்பொன்று மட்டுமே தேவை. இந்த start up india, stand up india ஏதோ சில நகரங்களில் மட்டுமே இருந்து விடக் கூடாது, இது இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் அங்கிங்கெனாதபடி பரவ வேண்டும். ஆகையால் இந்தத் திட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளிடமும் விண்ணப்பத்துக் கொள்கிறேன். ஜனவரி மாதம் 16ம் தேதியன்று நான் கண்டிப்பாக உங்களோடு இது தொடர்பாக விரிவாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

எனதருமை இளைய தோழர்களே,

ஜனவரி மாதம் 12ம் தேதி ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள். என்னைப் போன்று இந்த நாட்டில் கோடிக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஸ்வாமி விவேகானந்தர் ஆதர்ஸ புருஷராக இருந்து வந்திருக்கிறார். 1995ம் ஆண்டு முதல், ஜனவரி மாதம் 12ம் தேதியன்று வரும் ஸ்வாமி விவேகானந்தர் ஜெயந்தியை நாம் தேசிய இளைஞர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி மாதம் 16ம் தேதி வரை இந்தக் கொண்டாட்டங்கள் சத்தீஸ்கட்டின் ராய்பூரில் நிகழவிருக்கின்றன. இந்த நிகழ்ச்சி ஒரு கருப்பொருளை மையமாக வைத்து கொண்டாடப்படுவது; இந்த ஆண்டின் கருப்பொருள் மிக அற்புதமானது, Indian Youth of Development, Skill and Harmony, அதாவது முன்னேற்றம், திறன் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் இந்திய இளைஞர்களின் பங்கு. இந்தியாவின் மூலை முடுக்கெங்கிலுமிருந்தும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இங்கு குழுமி, ஒரு சிறிய அளவிலான இந்தியாவை ஏற்படுத்துவார்கள். இங்கே இளைய இந்தியாவின் காட்சி விரியும். ஒரு வகையில் இங்கே கனவுகளின் வெள்ளப்பெருக்கும் ஏற்படும், உள்ள உறுதிப் பாடுகளின் வெளிப்பாடு உருவாகும். இந்த இளைஞர் திருவிழா தொடர்பாக உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகள் எனக்கு அளிக்கப்பட இருக்கிறதா? என்னுடைய நரேந்திர மோதி App மூலமாக நீங்கள் நேரடியாக உங்கள் கருத்துக்களை என்னிடம் அனுப்பி வையுங்கள் என்று குறிப்பாக நான் என் இளைய தோழர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நான் உங்கள் மனதில் இருப்பவற்றைப் புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தேசிய இளைஞர்கள் விழாவுக்கு உகந்ததாக இருப்பனவற்றை நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இந்த இளைஞர் விழா பற்றிய உங்கள் கருத்துக்களுக்காக narendra modi appல் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் நண்பர்களே.

குஜராத் மாநிலத்தின் அஹ்மதாபாத்தைச் சேர்ந்த திலீப் சௌஹான் பார்வைத் திறன் அற்ற ஒரு மாற்றுத் திறனாளி. அவர் தனது பள்ளியில் Accessible India நாளைக் கடைபிடித்தார். அவர் தொலைபேசி மூலமாகத் தனது உணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

சார், நாங்கள் எங்கள் பள்ளியில் accessible india இயக்கத்தை அனுசரித்தோம். நான் பார்வைத் திறன் அற்ற ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியர். நான் சுமார் 2000 குழந்தைகளிடம் மாற்றுத் திறன் தொடர்பாக உரையாற்றி, எப்படி அத்தகைய மக்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம், எப்படி உதவலாம் என்று கூறிய போது, மாணவர்கள் இதை மிக நல்ல முறையில் ஏற்றுக் கொண்டார்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்று மாணவர்களுக்கு இதன் கருத்தூக்கம் ஏற்பட்டது. இந்த மகத்தான முனைப்புக்கு நீங்கள் தான் காரணம்.

திலீப் அவர்களே, மிக்க நன்றி. நீங்களே கூட இந்தத் துறையில் பணியாற்றி வருகிறீர்கள், இது பற்றி உங்களுக்கு நன்கு விளக்கமாகத் தெரியும். நீங்களுமே கூட ஏராளமான இடர்ப்பாடுகளை சந்தித்திருப்பீர்கள். சில வேளைகளில் இவரைப் போன்ற மனிதர்களை நமது வாழ்வில் நாம் சந்திக்கும் போது, நம் மனங்களில் ஏகப்பட்ட எண்ணங்கள் ஓடும். இவர் போன்ற மனிதர்கள் பற்றிய கண்ணோட்டம் நம் எண்ணங்களின் அடிப்படையில் வெளிப்படும். ஏதோ ஒரு விபத்து காரணமாக தங்கள் உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் இருக்கிறார்கள்; சிலர் பிறவியிலேயே உடல் ஊனங்களோடே பிறக்கிறார்கள். இவர்களைப் போன்ற மனிதர்களைக் குறிக்கும் விதமாக உலகில் பல வகையான சொற்களின் பயன்பாடு இருந்து வந்துள்ளது. ஆனால் எப்போதுமே இந்தச் சொற்கள் தொடர்பாக சிந்தனை நிலவி வந்தது. சில சொற்கள் நமக்கே கூட சரியானவை அல்ல என்று தோன்றும். ஒரு சமயம் handicapped அதாவது உடல் ஊனமுற்றவர் என்ற சொற்பிரயோகம் நிலவி வந்தது, சில வேளைகளில் disabled என்ற சொல் பயன்படுத்தப்பட்டது, சிலவேளைகளில் specially abled person, சிறப்புத் திறன் பெற்றவர் என்று பயன்படுத்தப்பட்டது. சொற்களுக்கு என ஒரு மகத்துவம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஆண்டு இந்திய அரசு சுகம்ய பாரதம் திட்டத்தைத் தொடக்கிய போது, அதில் நான் பங்கெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில், குறிப்பாக சென்னையில் பயங்கரமான வெள்ளப்பெருக்கு காரணமாக நான் அங்கே செல்ல வேண்டி இருந்ததால், இந்த நிகழ்ச்சியில் என்னால் பங்கெடுக்க முடியாமல் போனது. இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியாமல் போனாலும், என் மனதில் அது தொடர்பான சிந்தனைகள் உதித்துக் கொண்டிருந்தன. இறைவன் சிலரின் உடலில் ஏதோ குறைபாடுகளை அளித்திருக்கிறார், நாம் அவர்களை உடல் ஊனமுற்றவர்கள் என்று கூறுகிறோம். ஆனால் அவர்களோடு நாம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பழகும் போது, அவர்கள் தோற்றத்தில் காணப்படும் குறைபாடு தெரிந்தாலும், இறைவன் அவர்களுக்குக் கூடுதலான, சிறப்பானதொரு திறனை அளித்திருப்பதைப் பார்க்க முடியும். புறக்கண்களுக்கு இந்தத் திறன் தெரியாமல் போனாலும் கூட, அவர்கள் திறன்கள் நமக்கு வியப்பை ஏற்படுத்தும். ஆகையால் நாம் அவர்கள் திவ்யமான திறன்கள், தெய்வீகமான உறுப்புக்கள் கொண்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் என்று ஏன் அழைக்கக் கூடாது என்ற கருத்து என் மனதில் இழையோடியது. சுகம்ய பாரதம் இயக்கத்தின் தொடக்கம் மூலமாக புற ரீதியான மற்றும் virtual ரீதியான கட்டமைப்புக்களில் மாற்றம் ஏற்படுத்தி, அவற்றை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகரமான வகைகளில் அமைப்போம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், எளிதில் அணுகக் கூடிய வாகன நிறுத்துமிடங்கள், லிஃப்டுகள், ப்ரயில் மொழி எழுத்துக்கள் என அனைத்து வகையிலும் எளிமைப்படுத்த புதுமைகள் தேவை, தொழில்நுட்பம் தேவை, அமைப்புகள் தேவை, புரிந்துணர்வு தேவை. இந்த சவாலை மேற்கொண்டிருக்கிறோம். இதில் மக்கள் பங்கெடுப்பும் எங்களுக்குக் கிடைத்து வருகிறது. நீங்களும் உங்கள் வகையில் இந்த முயற்சியில் ஈடுபடலாமே!!

எனதருமை நாட்டு மக்களே!

அரசுத் திட்டங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும், செயல்பட்ட வண்ணம் இருக்கும். ஆனால் திட்டங்கள் உயிரோட்டம் உள்ளவையாக இருத்தல் வேண்டும் என்பது அவசியம். திட்டங்கள் கடைநிலையில் இருப்பவர்கள் வரை உயிர்ப்புடன் செயல்பட வேண்டும். அவை கோப்புகளில் முடங்கி மரித்து விடக் கூடாது. திட்டங்கள் என்பவையே கூட சாமான்யர்களுக்கும் ஏழைகளுக்கும் அல்லவா ஏற்படுத்தப் பட்டவை? பயனாளிக்கு எப்படி எளிமையான முறையில் திட்டத்தின் சாதகங்களைக் கொண்டு செல்வது என்பது குறித்து சில நாட்கள் முன்பாக முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. நம் நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. ஆனால் இதற்கான எந்த கணக்கு வழக்கும் வைக்கப்படவில்லை. மானியம் உண்மையான பயனாளிகளைத் தான் சென்றடைகிறதா இல்லையா, சரியான நேரத்தில் சென்றடைகிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள அரசு மானியம் வழங்கலில் ஒரு சிறிய மாற்றத்தை மேற்கொண்டது. ஜன் தன் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை ஆகியவற்றின் துணை கொண்டு உலகின் மிகப் பெரிய நேரடி மானியத் திட்டத்தின் வாயிலாக நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த மானியங்கள் சென்று சேர்கிறது. அந்த வகையில் வெற்றிகரமாக அமல் படுத்தப்பட்டிருக்கும் உலகின் மிகப் பெரிய நேரடி மானியத் திட்டம் என்பதற்காக இதற்கு கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம் கிடைத்திருக்கிறது. பஹல் என்ற பெயரில் இந்தத் திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாத நிறைவு வாக்கில் சுமார் 15 கோடி பேர்கள் பஹல் எரிவாயு திட்டத்தின் பயனாளிகளாக இருக்கிறார்கள். இந்த 15 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானியத் தொகை சென்று சேர்கிறது. இடைத்தரகர்களோ, சிபாரிசோ, ஊழலுக்கான சாத்தியக்கூறோ ஏதும் இல்லாமல் இது நடக்கிறது. ஒரு புறத்தில் ஆதார் அடையாள அட்டைக்கான இயக்கம், மறுபுறத்தில் ஜன் தன் வங்கிக் கணக்குத் திறப்பு, மற்றொரு புறத்திலோ, மத்திய மாநில அரசுகள் இணைந்து பயனாளிகளின் பட்டியலைத் தயார் செய்து, அதை ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவற்றோடு இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமான MGNREGA கிராமங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. பல இடங்களில் பணம் வேலை செய்த தொழிலாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக போடப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதிலும் இடர்ப்பாடுகள் நிலவி வந்தன. குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இதிலும் கூட உதவித் தொகையை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் திட்டம் அமல் செய்யப்படத் தொடங்கி விட்டது, மெல்ல மெல்ல இதில் மேலும் முன்னேற்றம் இருக்கும். இது வரை சுமார் 35, 40 திட்டங்கள் தொடர்பாக 40000 கோடி ரூபாய் வரை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் போடப்பட்டுள்ளது.

எனதருமை நாட்டு மக்களே,

ஜனவரி மாதம் 26ம் தேதி இந்திய குடியரசைப் பொறுத்த வரை ஒரு பொன்னான கணம். இந்த முறை நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் நிறுவனரான டா. பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் 125வது பிறந்த ஆண்டாக இந்த நாள் இருப்பது மிகவும் மங்களகரமான இணைவு. நாடாளுமன்றத்திலும் கூட 2 நாட்கள் அரசியல் அமைப்புச் சட்டம் மீதான சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. அனைத்துக் கட்சிகளும், அனைத்து உறுப்பினர்களும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் புனிதம், மாட்சிமை, அதை சரியான வகையில் புரிந்து கொள்ளுதல் ஆகியவை தொடர்பாக அருமையான விவாதங்களில் ஈடுபட்டனர். இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். குடியரசுத் திருநாள் உள்ளபடியே மக்களை அமைப்புடன் இணைக்க வழி வகை காண முடியுமா? அதே போல அமைப்புகளை பொது மக்களோடு இணைக்க முடியுமா? நமது அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு ஏகப்பட்ட அதிகாரங்களை வழங்குகிறது. அதிகாரங்கள் பற்றி மக்கள் இயல்பான வகையில் விவாதிப்பார்கள், அப்படி விவாதம் புரிவதும் அவசியம் தான். அதே வேளையில் அரசியல் அமைப்புச் சட்டமானது கடமைகள் பற்றியும் அழுத்திப் பேசும். ஆனால் கடமைகள் பற்றிப் பேசும் போது குரல்கள் தேய்ந்தே ஒலிக்கும். தேர்தல்களின் போது மட்டுமே, ‘வாக்களிப்பது என்பது புனிதமான கடமை’ என்று அதிக விளம்பரங்கள் வெளியாகும், சுவர்களில் எழுதப்படும், தட்டிகள் வைக்கப்படும். தேர்தல் காலங்களில் எல்லாம் கடமை பற்றி நாம் அதிகம் பேசுவோம். ஆனால் அதே கடமை பற்றி ஏன் தினசரி வாழ்கையில் பேசக் கூடாது?

இந்த ஆண்டு நாம் பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் 125வது பிறந்த ஆண்டை விழாவாகக் கொண்டாடும் வேளையில், நாம் ஜனவரி மாதம் 26ம் தேதியை ஒரு காரணமாகக் கொண்டு, பள்ளிகளில், கல்லூரிகளில், நமது கிராமங்கள்-நகரங்களில், பலவகையான சமுதாயங்களில், சங்கங்களில் கடமை என்ற கருத்திலமைந்த கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய முடியும் அல்லவா? 125 கோடி நாட்டு மக்களும் கடமை உணர்வோடு ஒருவர் பின் ஒருவராக அடியெடுத்து வைக்கும் போது, எந்த அளவு பெரியதொரு சரித்திரம் படைக்கப்படும், எண்ணிப் பாருங்கள்!! ஆனால் முதலில் அதைப் பற்றிப் பேசத் தொடங்குவோமே! என் மனதில் ஒரு கருத்து எழுகிறது. நாம் ஜனவரி மாதம் 26ம் தேதிக்கு முன்பாக, Duty, கடமை பற்றி உங்கள் தாய்மொழியிலோ, ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ கட்டுரை அல்லது கவிதை என ஏதோ ஒன்றை எனக்கு எழுதி அனுப்ப முடியுமா? நான் உங்கள் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். mygov என்ற இந்த இணையதளத்தில் அனுப்பி வையுங்கள், கடமை தொடர்பாக என் நாட்டு இளைய தலைமுறை என்ன எண்ணமிடுகிறது என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

சின்னதொரு ஆலோசனை அளிக்க வேண்டும் என்று என் மனம் எண்ணமிடுகிறது. ஜனவரி 26ம் தேதியன்று நாம் குடியரசுத் திருநாளைக் கொண்டாடும் வேளையில், குடிமக்கள் வாயிலாக, பள்ளி-கல்லூரி மாணவர்கள் வாயிலாக, நமது நகரத்தில் இருக்கும் நாட்டுத் தலைவர்களின் திருவுருவச் சிலைகளையும், அதைச் சுற்றியிருக்கும் இடங்களையும் மிகவும் சிறப்பான வகையில் தூய்மைப்படுத்தி, அலங்கரிக்க முடியுமில்லையா? அரசு தரப்பிலிருந்து நான் இதைக் கூறவில்லை; குடிமக்கள் என்ற முறையில் இதைச் செய்யலாமே என்ற கருத்தை முன் வைக்கிறேன். எந்தத் தலைவர்களின் திருவுருவச் சிலைகளை வைப்பதில் நாம் மிகவும் உணர்வு பூர்வமாக ஈடுபடுகிறோமோ, அந்தச் சிலைகளைப் பராமரிப்பதில் நாம் பின்னர் உதாசீனத்தையே வெளிப்படுத்துகிறோம். ஒரு சமுதாயம் என்ற முறையிலும், நாடு என்ற வகையிலும் தூய்மைப்படுத்துவதை நாம் தொடர்ந்து செய்து வர முடியாதா? இந்த ஜனவரி மாதம் 26ம் தேதியன்று நாமனைவருமாக இணைந்து இந்த முயற்சியில் ஈடுபடுவோம். இதன் மூலம் நாட்டுத் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை, தூய்மை, சுற்றி உள்ள இடங்களில் சுத்தம் ஆகியன செய்யப்படும், இவை அனைத்தும் பொது மக்கள் வாயிலாக, குடிமக்கள் வாயிலாக, இயல்பான முறையில் செயலாக்கம் பெறும்.

எனதருமை நாட்டு மக்களே,

மீண்டும் ஒரு முறை 2016க்கான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிகவும் நன்றி.