மதிப்பிற்குரிய தலைவர்களே,
உங்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளுக்கு நன்றி. இந்தியா – ஆசியான் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நலன், பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.
நேரடித் தொடர்பை மட்டுமின்றி, பொருளாதார, டிஜிட்டல், கலாச்சார, ஆன்மீக உறவுகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுப்போம்.
நண்பர்களே,
இந்த ஆண்டு ஆசியான் உச்சி மாநாட்டின் மையக்கருத்தான “இணைப்பை மேம்படுத்துதல்” என்ற பின்னணியில் நான் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்று பத்தாவது மாதத்தின் பத்தாவது நாள். எனவே பத்து ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலாவதாக, நம்மிடையே சுற்றுலாவை மேம்படுத்த, 2025-ம் ஆண்டை “ஆசியான் – இந்தியா சுற்றுலா ஆண்டாக” அறிவிக்கலாம். இதற்காக இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உள்ளது.
இரண்டாவதாக, இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் பத்தாண்டுகளை நினைவுகூரும் வகையில், இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நாம் ஏற்பாடு செய்யலாம். நமது கலைஞர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள் ஆகியோரை இணைப்பதன் மூலம், இசை விழா, இளைஞர் உச்சி மாநாடு, ஹேக்கத்தான், ஸ்டார்ட்-அப் விழா போன்ற முயற்சிகளை இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்க முடியும்.
மூன்றாவதாக, “இந்தியா-ஆசியான் அறிவியல் – தொழில்நுட்ப நிதியத்தின்” கீழ், நாம் ஆண்டுதோறும் பெண் விஞ்ஞானிகள் மாநாட்டை நடத்தலாம்.
நான்காவதாக, புதிதாக நிறுவப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான முதுநிலை கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு அதிகரிக்கப்படும். கூடுதலாக, இந்தியாவின் வேளாண் பல்கலைக்கழகங்களில் ஆசியான் மாணவர்களுக்கான புதிய உதவித்தொகை திட்டமும் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும்.
ஐந்தாவதாக, “ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தின்” பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். இது நமது பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும். அத்துடன் பாதுகாப்பான, நம்பகமான விநியோகச் சங்கிலியை உருவாக்க உதவும்.
ஆறாவதாக, பேரிடர் தடுப்புக்காக, “ஆசியான்-இந்தியா நிதியத்திலிருந்து” 5 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்படும். இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், ஆசியான் மனிதாபிமான உதவி மையமும் இந்த விஷயத்தில் இணைந்து செயல்பட முடியும்.
ஏழாவதாக, சுகாதாரத் திறனை உறுதி செய்ய, ஆசியான் – இந்தியா சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தை நிறுவனமயமாக்கலாம். மேலும், இந்தியாவின் வருடாந்திர தேசிய புற்றுநோய் தொகுப்பு ‘விஸ்வம் மாநாட்டில்’ கலந்து கொள்ள ஒவ்வொரு ஆசியான் நாட்டிலிருந்தும் இரண்டு நிபுணர்களை நாங்கள் அழைக்கிறோம்.
எட்டாவதாக, டிஜிட்டல் – இணையதள திறனுக்காக, இந்தியா – ஆசியான் இடையே இணைய கொள்கை பேச்சுவார்த்தை நிறுவனமயமாக்கப்படலாம்.
ஒன்பதாவதாக, பசுமை எதிர்காலத்தை ஊக்குவிக்க, இந்தியா – ஆசியான் நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய பசுமை ஹைட்ரஜன் குறித்த பயிலரங்குகளை ஏற்பாடு செய்ய நான் முன்மொழிகிறேன்.
பத்தாவதாக , பருவநிலை மீள்திறனுக்காக, அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் என்ற எங்கள் இயக்கத்தில் சேருமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
எனது பத்து யோசனைகளுக்கு உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அவற்றை செயல்படுத்த எங்கள் குழுக்கள் ஒத்துழைக்கும்.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு – இது பிரதமரின் கருத்துக்களின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.
****
PLM/KV