2022-23 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற இரண்டாம் கட்ட விளையாட்டு பெருவிழாவை பஸ்தி மாவட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோதி ஜனவரி 18 ஆம் தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் திரு ஹரிஷ் திவேதி சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சான்சத் கேல் மஹாகும்ப் எனப்படும் நாடாளுமன்ற விளையாட்டு பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
2022-23 ஆம் ஆண்டில் இந்த விழா இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதற்கட்ட விளையாட்டு விழா கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட விளையாட்டு விழா 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.
இந்த விளையாட்டு விழாவில் மல்யுத்தம், கபடி, கோ-கோ, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, செஸ், கேரம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். இதைத்தவிர கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டுதல், ரங்கோலி போட்டிகளும் இதில் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக பஸ்தி மாவட்டம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் கூட்டு உழைப்பு, ஒழுக்கத்தின் உன்னதம், ஆரோக்கியமான போட்டி, தன்னம்பிக்கை, தேசப்பற்று ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களுக்கு எடுத்துரைப்பதும் இந்த பெருவிழாவின் முக்கிய அம்சமாக உள்ளது.
***
PKV/ES/PK/KRS