Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘2022-ல் விவசாயம்: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது’ குறித்த தேசிய மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

‘2022-ல் விவசாயம்: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது’ குறித்த தேசிய மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

‘2022-ல் விவசாயம்: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது’ குறித்த தேசிய மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

‘2022-ல் விவசாயம்: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது’ குறித்த தேசிய மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை


நாடுமுழுவதிலுமிருந்து இங்கு வருகை தந்துள்ள விஞ்ஞானிகளே, விவசாயிகளின் நண்பர்களே, இங்கு கூடியுள்ள பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.

மிகவும் முக்கியமான, தீவிரமான, நீண்ட நெடுநாட்களாக நீடித்து வருகின்றதொரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கவே நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம்.

உங்கள் விளக்கங்களையும் உங்கள் கருத்துக்களையும் பார்த்தேன்; கேட்டேன். மிகவும் சிரமமான இந்த முயற்சிக்காக உங்கள் அனைவரையும் பாராட்டவும் விரும்புகிறேன். கடந்த பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாகரீகத்தை வடிவமைத்து, வலுப்படுத்தி வரும் விஷயமாக விவசாயம் இருந்து வருகிறது என்பதுதான் உண்மை. நமது புராதன நூல்கள் கூறுகின்றன:

“விவசாயமே செல்வத்தை தருகிறது; அறிவை வளர்க்கிறது; விவசாயமே மனித வாழ்வின் அடிப்படை”

இது காலம் காலமாக இருந்து வந்த கருத்தாகும். இந்த வகையில் இந்திய கலாச்சாரமும் இந்திய வழிமுறைகளும் உலகம் முழுவதற்குமே வழிகாட்டியாக இருந்து வந்துள்ளது. விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த எண்ணற்ற தொழில்நுட்பங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது இந்தியா. இதைப் பற்றி நாம் பேசும்போது வரலாற்றையும், அதாவது நிகழ்கால, எதிர்கால வரலாற்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதே போன்ற விளக்கத்தை வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இந்தியாவின் விவசாய செயல்முறைகளை நேரில் கண்டு வியந்து போய் எழுதியிருந்த வரலாற்றிலும் கூட நீங்கள் காணலாம். இத்தகைய முன்னேறிய செயல்முறைகள், நடைமுறைகள் நமது நாட்டின் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை உலகத்திற்கும் கற்றுத் தரப்பட்டன. மகத்தான விவசாய கவிஞர்களான காக், படாரி ஆகியோர் பருவநிலை குறித்தும் விவசாய வேலைகள் குறித்தும் தங்கள் பாடல்கள் மூலமாகவே விவசாயிகளுக்கு வழிகாட்டியிருந்தனர். எனினும் மிக நீண்ட காலனி ஆட்சியின்போது இந்த அனுபவங்கள், விவசாயத் துறையின் கட்டமைப்பு ஆகிய அனைத்துமே முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பிறகு தங்கள் கடுமையான உழைப்பின் மூலம் நமது விவசாயிகள் மீண்டும் அதை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். விடுதலைக்குப் பிறகு உணவு தானியத்தில் இந்தியாவிற்கு தன்னிறைவை தருகின்ற தானியங்களை அவர்கள் விளைவித்தனர். தீவிரமான, கடுமையான வேலையின் மூலம் நமது விவசாயிகள் கடந்த ஆண்டு இதுவரையில் இல்லாத வகையில் உணவு தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்திருந்தனர். விவசாயிகளின் ஆழமான திறமை, வலிமை ஆகியவற்றின் விளைவாக பருப்பு வகைகளின் உற்பத்தி ஒரே ஆண்டில் 17 மில்லியன் டன்களில் இருந்து 23 மில்லியன் டன்களாக உயர்ந்தது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு விவசாயத் துறை விரிவடைந்த போதிலும், விவசாயிகளின் மேம்பாடு என்பது சுருங்கிக்கொண்டே வந்தது. இதர துறைகளை ஒப்பிடும்போது விவசாயத்திலிருந்து பெறப்படும் வருமானம் குறையத் தொடங்கியது. தொடர்ந்து வந்த தலைமுறையினர் விவசாயத்தை கைவிட்டுவிட்டு நகரங்களில் நல்ல வேலை வாய்ப்புகளைத் தேடிச் சென்றதோடு, சின்னச் சின்ன வேலைகளையும் கூட செய்யத் தொடங்கினர். நமக்கு உணவு விஷயத்தில் பாதுகாப்பு அளிக்கின்ற விவசாயிகளின் வருமான பாதுகாப்பு என்பது மெதுவாக கரையத் தொடங்கியது. இந்த சூழ்நிலைகள் எல்லாமே உங்களுக்கும் தெரிந்தவைதான். இன்னும் சொல்லப் போனால் என்னைவிட நன்றாகவே தெரிந்திருக்கும். இருந்தபோதிலும் கடந்தகால சூழ்நிலைகளைப் பற்றி நான் பேசுகிறேன். ஏனென்றால், அவற்றை பற்றி அலசுவதென்பது சில நேரங்களில் அவற்றை அணுகுவதற்கான புதிய பாதைகளுக்கு இட்டுச் செல்லும்; புதிய அணுகுமுறைகளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும். இதற்கு முன்பிருந்த அணுகுமுறைகளில் தவறுகள் இருந்தன; அவையே தோல்விகளுக்கு இட்டுச் சென்றன; எனவே இதை மேம்படுத்துவதற்கான தேவை உள்ளது என்பதை நாம் உணர்கிறோம். இந்த ஆய்வுகள் தான் நாட்டின் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு அடிப்படையாக அமைய வேண்டும். பழைய அணுகுமுறைகளின் மூலம் இந்த இலக்கை அடைய முடியாது. இதற்கு விவசாயத் துறையை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்தச் சிறிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும்போதே, இந்த இலக்கானது முழுமையானதொரு விவசாய இயக்கமாக விரிவடைந்தது.

நண்பர்களே,

வயலில் நீண்ட கயிறைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் காளைமாடு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதை நாம் அனைவருமே பார்த்திருப்போம். முன்னேறிச் செல்வதாக அது எண்ணிக் கொண்டிருக்கவும் கூடும். உண்மை என்னவெனில் அது கட்டுண்டு கிடக்கிறது. அந்த வளையத்திற்குள்ளேயே அது சுற்றிக் கொண்டிருக்கிறது. இதேபோன்று கட்டிப் போடப்பட்டுள்ள சூழலில் இருந்து விவசாயத் துறையை விடுவிக்கும் மகத்தான பொறுப்பு நமக்கு உள்ளது.

விவசாயிகளின் மேம்பாட்டிற்காகவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் விதைகளில் இருந்து சந்தைப்படுத்தல் வரையிலான பல்வேறு வகையான பிரச்சனைகளில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சுயச் சார்பு நிலவும் சூழலில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலான ஒரு சூழலை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான தீர்வுகளை கண்டறிவதற்கென நிதி ஆயோக், உங்களைப் போன்ற பல்வேறு விஞ்ஞானிகள், விவசாயிகள், விவசாயத் துறையில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்றையும் அரசு அமைத்துள்ளது. எனவே ஒரு திசைவழியை நிர்ணயிக்கவும் அந்த வழியில் முன்னேறிச் செல்லவும் அரசு முயன்று வருகிறது. சமீபத்திய பட்ஜெட்டில் அவர்கள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு சரியான விலையை விவசாயிகளுக்கு வழங்குவதென்ற முக்கியமானதொரு முடிவை அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் குறித்து பாஷா பட்டேலும் கூட மிகுந்த உற்சாகத்துடன் இங்கு விவரித்தார். இத்திட்டத்தின் கீழ் அவர்களது பயிர்களின் உற்பத்தி செலவை விட அதிகமாக 50 சதவீத விலையை வழங்குவது என, அதாவது பயிர்களின் உற்பத்தி மதிப்பைப் போல் ஒன்றரை மடங்கு, விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தின் முழுப் பயனையும் விவசாயிகள் பெற முடியும் வகையில்  மத்திய அரசு மாநில அரசுகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கு முன்பிருந்த திட்டங்களில் நிலவி வந்த தடைகளை அகற்றி முழுமையானதொரு ஏற்பாடாக நாம் இதை மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

சகோதர, சகோதரிகளே,

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நான்கு வெவ்வேறு கட்டங்களில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

முதலாவதாக, விவசாய வேலைகளுக்கான செலவைக் குறைப்பதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள்; இரண்டாவதாக, அவர்கள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு நியாயமான விலை வழங்கத் தேவையான நடவடிக்கைகள்; மூன்றாவதாக, உற்பத்திப் பொருட்களை வயலில் இருந்து சந்தைகளுக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் சேதாரத்தை எப்படிக் குறைப்பது;  நான்காவதாக, விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்திற்கு ஏற்பாடு செய்வது. அரசு மேற்கொள்ளும் அனைத்து கொள்கை முடிவுகளும், தொழில்நுட்ப முடிவுகளும், சட்டரீதியான முடிவுகளும் இந்த நான்கு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவைதான். எங்களது முடிவுகளை தொழில்நுட்பத்தோடு மேலும் அதிகமான அளவில் இணைக்கவும் நாங்கள் முயற்சித்து வந்தோம். எனவேதான் இன்று சாதகமான விளைவுகளை நம்மால் பெற முடிந்துள்ளது.

யூரியா உரத்திற்கு வேப்பிலை பூச்சு தருவது என்ற முடிவின் விளைவாக விவசாயிகளின் உரத்திற்கான இடுபொருள் செலவு பெருமளவிற்குக் குறைந்துள்ளது. 100 சதவீத வேப்பிலை பூச்சு அதன் செயல்திறனை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று, விவசாயிகள் அதே அளவு நிலத்திற்கு குறைந்த அளவிற்கே யூரியாவை பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் இடுபொருள் செலவை குறைத்துள்ளதோடு, உற்பத்தித் திறனையும் அதிகரித்துள்ளது. எனவே வருமானத்தில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. யூரியாவிற்கு வேப்பிலை பூச்சை மேற்கொண்டதன் விளைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே,

இன்றுவரையில் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மண்வளத்தைத் தெரிவிக்கும் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மண்வளத்திற்கான அட்டைகளின் விளைவாக உற்பத்தி அதிகரித்துள்ளது. மண்ணின் வளத்திற்கு ஏற்ப எவ்வளவு உரம் தேவைப்படும் என்பதை இப்போது விவசாயிகள் அறிந்துள்ளனர். 19 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, விவசாயத்தில் மண் வளம் குறித்த அட்டைகளின் மூலம், அவர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த வேதியியல் வகைப்பட்ட உரங்களின் அளவில் 8 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது; அதே நேரத்தில் உற்பத்தியில் 5 முதல் 6 சதவீதம் வரை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் நண்பர்களே, மண்வள அட்டை திட்டத்தின் முழுப் பயனையும் ஒவ்வொரு விவசாயியும் இத்திட்டத்தினை பின்பற்றினால் மட்டுமே நம்மால் பெற முடியும். இதற்கான சூழலை முழுமையாக வளர்த்தெடுப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியம் ஆகும். மண் வள சோதனையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யத் தகுந்த பொருட்களின் தொகுப்பை விவசாயிகளுக்கு வழங்குவது என்பதை விவசாய பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் இளம் அறிவியல் பட்டப் படிப்பில் பயிற்சித் திட்டமாக சேர்க்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைக்கிறேன். இந்தப் பயிற்சித் திட்டத்தை திறன் மேம்பாட்டோடும் இணைக்க வேண்டும். 

இந்தப் பயிற்சித் திட்டத்தில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப் பட்டயம் ஒன்றை வழங்கலாம் என்றும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பட்டயங்களின் மூலம் அந்த மாணவர்கள் கிராமங்களுக்கு உள்ளேயே மண்வள சோதனைக்கான பயிற்சிக் கூடங்களை உருவாக்கலாம். முத்ரா திட்டத்தின் கீழ் அவர்கள் கடன் பெறுவதற்கான முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த சோதனைச் சாலைகள் அனைத்தும் ஒரு மையமான புள்ளிவிவர தொகுப்போடு இணைக்கப்பட்டு, மண்வளம் குறித்த அனைத்து புள்ளிவிவரங்களும் ஒரு மத்திய இணைய தளத்தில் கிடைக்குமாறு செய்யும்போது, விஞ்ஞானிகள், விவசாயிகள் ஆகிய இரு பிரிவினருமே பயன்பெறுவர். மண் வளம் குறித்த மைய தகவல் மேடையில் இருந்து பெறப்படும் தகவல்களைப் பயன்படுத்திக் கொண்டு மண்வளம், கிடைக்கக் கூடிய நீர் வளம் ஆகியவை பற்றி விவசாயத் துறையின் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படியான ஒரு ஏற்பாடும் உருவாக்கப்பட வேண்டும்.

நண்பர்களே,

நாட்டின் விவசாயக் கொள்கைக்கு புதியதொரு திசைவழியை வழங்க எமது அரசு முயற்சித்து வருகிறது. இத்திட்டத்தை அமலாக்கம் செய்யும் முறையும் மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, இத்திட்டத்தின்கீழ் பிரதமர் விவசாய மேம்பாட்டு திட்டத்தில் இரண்டு துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. முதலாவது, நாட்டின் சிறு பாசனத்திற்கான வாய்ப்பை அதிகரிப்பது; இரண்டாவது தற்போதுள்ள பாசன வலைப்பின்னலை வலுப்படுத்துவது.

எனவே, கடந்த 20-30 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த 99 பாசன திட்டங்களை முதலில் நிறைவேற்றி முடிப்பதென்று அரசு முடிவு செய்தது. இதற்கென ரூ. 80,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டது. அரசின் தொடர்ந்த முயற்சிகளின் விளைவாக, இவற்றில் 50 திட்டங்கள் இந்த ஆண்டு முடிவிற்குள் நிறைவு பெறும். மீதமுள்ளவை அடுத்த ஆண்டில் நிறைவுறும். அதாவது கடந்த 25-30 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த பாசனத் திட்டங்கள் இந்த 25-30 மாதங்களில் இந்த அரசால் நிறைவேற்றப்பட உள்ளன. இத்தகைய பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது என்பது விவசாய வேலைகளின் செலவை குறைப்பதோடு, விவசாயிகளின் மன அழுத்தத்தையும் பெருமளவிற்குக் குறைக்கும். பிரதமர் விவசாய மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சிறு பாசன திட்டங்களில் 20 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலங்கள் பயன் பெறுகின்றன.

விவசாயத் துறையில் நிலவும் காப்பீடு நிலைமை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  தனது பயிர்களுக்கு காப்பீடு பெற அதிகமான தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டியுள்ளது. காப்பீட்டிற்கான வாய்ப்பும் மிகக் குறைவாகவே உள்ளது. காப்பீட்டு பிரிமியம் தொகையை அரசு குறைத்தது மட்டுமின்றி பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு திட்டத்திற்கான வாய்ப்பையும் அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளால் கோரப்பட்ட தொகை ரூ. 11 ஆயிரம் கோடியும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என என்னிடம் கூறினார்கள். ஒவ்வொரு விவசாயி அல்லது ஒரு ஹெக்டேருக்கு என்ற வகையில் இவ்வாறு கோரப்பட்ட தொகையும் இரண்டு மடங்காகியுள்ளது. இந்த திட்டம் எண்ணற்ற விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாத்துள்ளது. பல குடும்பங்களையும் இது பாதுகாத்து வருகிறது. எனினும் துரதிர்ஷ்டவசமாக, இந்த சாதனை எப்போதுமே தலைப்புச் செய்தியாக வராது; புறக்கணிக்கவே படும். எனவே மேலும் மேலும் அதிகமான விவசாயிகளை இத்திட்டத்துடன் இணைப்பது ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.

2018-19 நிதியாண்டிற்குள் பயிரிடப்பட்ட நிலங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத நிலங்களையாவது இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சகோதர, சகோதரிகளே,

நாட்டின் விவசாயத் துறையில் சந்தைக் கட்டமைப்பை அரசு வளர்த்தெடுத்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை முன்னெடுத்து மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டாக முடிவுகளை எடுத்தால் விவசாயிகள் அதிகமாகவே இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

எனவே, விவசாயிகளின் நலனுக்காக நவீன சட்டங்களை அமலாக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. விவசாய உற்பத்திப் பொருட்கள், கால்நடை சந்தைப்படுத்தல், சேமிப்புக் கிடங்குகளுக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்தல் ஆகியவற்றோடு இணைந்த ஒரு நில குத்தகை சட்டத்தைக் கொண்டுவர அரசு முயற்சித்து வருகிறது. இத்தகைய பல்வேறு முடிவுகளும் விவசாயிகளுக்கு வலுவூட்டுவதாக அமையும்.

2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். அறுவடை செய்யப்பட்ட விவசாய உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்லும்போது ஏற்படும் இழப்புகளை தவிர்க்க பிரதமர் விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயத் துறையை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. உலர் சேமிப்பு கிடங்குகள், குளிர்பதனமூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள், இதர சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றின் உதவியுடன் சப்ளை செய்வதற்கான சங்கிலித் தொடர் முழுவதுமே சீரமைக்கப்படும்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘பசுமைக்கான நடவடிக்கை’ என்பதும் கூட சப்ளை செய்வதற்கான சங்கிலித் தொடருக்கான கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பூ மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அமுல் நிறுவன முன்மாதிரி எப்படி பாலின் உற்பத்தியை, லட்சக்கணக்கான விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்ததோ அதே போன்று இந்த ‘பசுமைக்கான நடவடிக்கை’ என்பதும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பயிரிடும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

நண்பர்களே,

கிராமப்புற அளவில் உள்ள விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை மையங்களின் விதி மற்றும் திரும்பப் பெறும் சந்தையை உலகச் சந்தையுடன் ஒன்றிணைக்க வேண்டியதும் அவசியமாகும்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இதற்கென ஒரு கமிஷன் அமைக்கப்பட்டதாக என்னிடம் கூறினார்கள். அந்தக் கமிஷனும் கூட ஒவ்வொரு 5-6 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள விவசாயிகளுக்கென ஒரு சந்தையை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிடப்பட்ட ஒரு கருத்தாக்கத்தை அமல்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். இதன் விளைவாக கிராமப்புற சில்லறை விவசாய விற்பனைக் கூடம் (க்ராம்) என்ற கருத்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 22,000 கிராமப்புற சந்தைகளின் கட்டமைப்புகள் வளர்த்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்படும்; இறுதியில் இவை விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனை மையத்துடன் ஒருங்கிணைக்கப்படும். அதாவது 5,10,15 கிலோமீட்டர் சுற்றளவில் செயல்படும் ஓர் அமைப்பின் மூலம் நாட்டின் எந்தவொரு சந்தையுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. இந்த கிராமப்புற சந்தையின் மூலம் விவசாயிகள் நேரடியாக நுகர்வோருக்கு தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்க முடியும். வரும் நாட்களில் இந்த விற்பனை மையங்கள் விவசாயிகளின் வருமானம், வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றின் குவிமையங்களாக மாறும். இந்த அமைப்பை வலுப்படுத்துவதற்காக விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புக்கு அரசு ஊக்கம் கொடுத்து வருகிறது. தங்கள் அளவில் இத்தகைய சிறிய அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள கிராமப்புற சந்தைகளையும் பெரிய விற்பனை சந்தைகளையும் விவசாயிகள் இணைக்கலாம். இத்தகைய அமைப்பில் உறுப்பினர் ஆவதன் மூலம் அவர்களால் மொத்தமாக வாங்கவும், மொத்தமாக விற்கவும் முடியும். அதன் மூலம் தங்கள் வருவாயையும் அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

கூட்டுறவு சங்கங்களைப் போலவே விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பும் கூட வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பின் உதவியுடன் வாசனை திரவியங்களுக்கான, மூலிகைகளுக்கான, இயற்கை விவசாயப் பொருட்களுக்கான பெண்கள் சுய உதவிக் குழுக்களை இணைப்பது என்பது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் முக்கியமானதொரு நடவடிக்கையாக அமையும். நண்பர்களே, இன்றைய தேவை என்பது பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி ஆகியவற்றோடு கூடவே நீர்ப் புரட்சி, நீலப் புரட்சி, இனிப்புப் புரட்சி, இயற்கை வேளாண்மைப் புரட்சி ஆகியவற்றையும் ஒன்றிணைப்பதாகும். விவசாயிகளின் கூடுதல் வருமானத்திற்கான ஆதாரங்களாக இந்த துறைகள் அமையக் கூடும். இயற்கை வேளாண்மை, தேனீ வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு, சூரிய ஒளியில் பெறப்பட்ட மின்சாரத்தைக் கொண்டு விவசாயம் செய்தல் போன்ற எண்ணற்ற நவீன மாற்று வழிகளும் விவசாயிகளுக்கு முன்னால் உள்ளன. முடிந்த அளவிற்கு இவற்றை அவர்கள் அறியச் செய்வதே இன்றைய தேவையாக உள்ளது. இவற்றைப் பற்றிய செய்தியை பரப்ப, குறிப்பாக பாரம்பரிய மற்றும் இயற்கைவழி விவசாயம் பற்றிய ஒரு டிஜிட்டல் மேடையை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சந்தையின் தேவைகள், பெரிய வாடிக்கையாளர்கள், சப்ளைக்கான சங்கிலித்தொடர், இயற்கைவழி விவசாயம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு இந்த டிஜிட்டல் மேடையின் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

விவசாயத்தின் இந்த துணை பிரிவுகளில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு எளிதாக கடன் வழங்குவதற்கான வேலைகளிலும்  அரசு செயல்பட்டு வருகிறது. மீன்வளம், கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் தேவைகளையும் கருத்தில் கொண்டு 10,000 கோடி ரூபாயுடன் கட்டமைப்புக்கான நிதியும் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. கடன் தொகையானது கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடியில் இருந்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களில் இருந்தும் வங்கிகளில் இருந்தும் கடன் பெறுவதில் எந்தவித பிரச்சனையையும் விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

விவசாயிகளுக்கு எளிதாக கடன் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்திய பிறகு சரியான நேரத்தில் சரியான தொகையை அவர்கள் பெறுவதை உறுதி செய்யவும் அரசு விரும்பியது. பெரும்பாலான நேரங்களில் சிறுவிவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் இருந்து கடன் பெறுவது கடினமாக இருந்ததும்  கண்டறியப்பட்டது. எனவே நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களையும் கணினி மயமாக்குவது என எமது அரசு முடிவு செய்தது. இதுபோன்ற சுமார் 63,000 கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்ட பிறகு இதுபோன்ற கடன் வழங்கும் ஏற்பாடுகள் மேலும் வெளிப்படையானதாக ஆகிவிடும். மக்களுக்கான நிதி திட்டம், விவசாயிகளுக்கான கடன் அட்டைத் திட்டம் போன்றவையும்கூட விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கான பாதையை மேலும் எளிமையாக்கியுள்ளன.

நண்பர்களே,

கடந்த பல பத்தாண்டுகளாக இருந்து வரும் சட்டத்தின்படி மூங்கில் என்பது ஒரு மரமாக கருதப்பட்டு வந்தது. எனவே உரிய அனுமதியின்றி யாரும் அதை வெட்ட முடியாது. இதைக் கேட்டதும் நான் பெரிதும் வியப்படைந்தேன். கட்டுமானத் துறையில் மூங்கிலின் மதிப்பை எல்லோருமே அறிவார்கள். அறைகலன்கள், கைவினைப் பொருட்கள், ஊதுவத்தி, காற்றாடி மற்றும் தீப்பெட்டிக் குச்சிகள் ஆகியவற்றை தயாரிப்பதிலும் மூங்கில் பயன்படுகிறது. எனினும் மூங்கிலை வெட்டுவதற்கான அனுமதியைப் பெறும் செயல்முறை மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும் நிலையில் விவசாயிகள் தங்கள் வயல்களில் மூங்கிலை வளர்ப்பதை தவிர்த்து விடுகின்றனர். நாங்கள் இப்போது இந்தச் சட்டத்தை மாற்றிவிட்டோம். அரசின் இந்த முடிவு மூங்கில் வளர்க்கும் விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள உதவும்.

விவசாய பயிர்கள் தொடர்பான மற்றொரு மாற்றத்தையும் நாங்கள் செய்துள்ளோம். நண்பர்களே, பலகைக்கான மர உற்பத்தி அதற்கான தேவையை விடக் குறைவாகவே உள்ளது. சப்ளைக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி மிக அதிகமாகவே உள்ளது. எனவே மரங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான மரங்களை வளர்க்கும் தோட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்த விரும்புகிறது. 5, 10 அல்லது 15 ஆண்டுகளுக்குப் பிறகு தேவைக்கேற்ப வெட்டிக் கொள்ளும் வகையில் இதுபோன்ற மரங்களை வளர்ப்பதற்கு விவசாயிகளுக்கு சுதந்திரம் இருக்குமானால் இவற்றின் மூலம் பெறப்போகும் வருமானத்தைப் பொறுத்தவரையில் விவசாயிகள் எவ்வளவு பயன் அடைவார்கள் என்று சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

நில வரப்புகளில் மரங்களை நட்டு வளர்ப்பது என்ற கருத்தோட்டம் விவசாயிகளின் அத்தியாவசியத்தை நிறைவேற்றுவது மட்டுமின்றி நாட்டின் சுற்றுச் சூழலுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நாட்டின் 22 மாநிலங்கள் இந்த மாற்றங்களை செயல்படுத்தியுள்ளன என்பதறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாய செயல்பாடுகளில் அதிகபட்சம் சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்துவதென்பதும் விவசாயிகளின் வருமானத்தை மேலும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு கடந்த 3 வருடங்களில் விவசாயிகளுக்கு என சூரிய ஒளியில் இருந்து பெறப்பட்ட மின்சாரத்தின் மூலம் செயல்படும் 3 லட்சம் பம்ப்புகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கென ரூ. 2500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது டீசல் பயன்பாட்டை கணிசமாக குறைக்கும். மின்கடத்தியோடு இணைக்கப்பட்ட இத்தகைய சோலார் பம்ப்புகளை விவசாயிகளுக்கு வழங்குவதில் தற்போது அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் சூரிய ஒளியின் மூலம் உருவாக்கப்படும் கூடுதல் மின்சாரம் விவசாயிகளுக்கு (அந்த மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம்) கூடுதல் வருவாயை பெற்றுத் தரும்.

நண்பர்களே,

விவசாய நிலங்களில் இருந்து பெறப்படும் துணைப் பொருட்களும் கூட கூடுதல் வருவாய்க்கான சிறந்த ஆதாரமாக இருக்கும். இதற்கு முன்பு இந்த விஷயத்திற்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லை. எனினும் எமது அரசு விவசாய நிலத்தில் பெறப்படும் அனைத்துவித கழிவுகளையும் செல்வமாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இதில் உள்ள சேதாரங்களைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். உதாரணமாக வாழை மரத்தில் இருந்து பெறப்படும் வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் இலைகள், தண்டு ஆகியவை பயன்படுத்தத் தக்கவை என்றபோதிலும் வீணாக்கப்படுகின்றன. இந்த வாழைத் தண்டுகள் விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாகவே மாறிவிடுகின்றன. இந்த தண்டுகளை அகற்றுவதற்காகவே அவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதற்குப் பிறகும் கூட, இந்த தண்டுகள் எங்காவது சாலையோரங்களில் வீசி எறியப்படுகின்றன. எனினும் இந்த தண்டுகளை தொழிற்சாலை காகிதம் அல்லது துணி ஆகியவற்றை உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல வகையான பிரச்சார இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயக் கழிவுகள், தேங்காய் நார் கழிவுகள், தேங்காய் ஓடுகள், மூங்கில் கழிவுகள், அறுவடைக்குப் பின்பு நிலத்தில் விடப்பட்ட கழிவுகள் ஆகியவை குறித்தே இவை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்துமே விவசாயிகள் தங்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள உதவும்.

பட்ஜெட்டில் பசுக்களைக் காப்பதற்கான திட்டத்தையும் அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டமானது கிராமப்புற பகுதிகளின் தூய்மையை அதிகரிக்க உதவும் என்பதோடு, விவசாயிகளின் வருவாயையும் கிராமப்புறத்தில் சாணம் மூலமான எரிவாயுவைப் பயன்படுத்துவதன் மூலம் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கவும் உதவும். துணைப் பொருட்களை மட்டுமே செல்வமாக மாற்ற முடியும் என்பதல்ல; முக்கிய விளைபயிரையும் கூட வித்தியாசமான வகையில் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும். உதாரணமாக, கரும்பில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எமது அரசு எத்தனால் குறித்த கொள்கையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது பெட்ரோலுடன் 10 சதவீதம் எத்தனாலை சேர்ப்பதற்கான ஒப்புதலை அது வழங்கியுள்ளது. அதாவது சர்க்கரை தயாரிப்பதற்கான தேவையை நிறைவேற்றிய பிறகு கூடுதலாக உள்ள கரும்பை எத்தனால் தயாரிப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது கரும்பு விவசாயிகளின் நிலையை பெருமளவிற்கு மேம்படுத்த உதவும்.

நம் நாட்டில் விவசாயத் துறை செயல்படும் முறையை எமது அரசு மாற்றி வருகிறது. விவசாயத் துறையில் புதியதொரு கலாச்சாரம் நிறுவப்பட்டு வருகிறது. இந்தக் கலாச்சாரம்தான் நமது வலிமை, வசதி மற்றும் நமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வழியும் கூட. இந்தக் கலாச்சாரம் 2022க்குள் ‘உறுதிமொழியின் மூலம் வெற்றி பெறுவது’ என்ற பயணத்தை நாம் முடிப்பதற்கு நமக்கு உதவும். நாட்டிலுள்ள கிராமங்கள் உயர்ந்தால் மட்டுமே இந்தியாவும் உயரும். நாடு வலிமை பெறுமானால், இயற்கையாகவே விவசாயிகளும் வலிமை பெறுவார்கள்.

எனவே, இன்று விளக்கப்படங்களின் மூலம் நான் கேட்ட கருத்துக்களை அரசு மிகத் தீவிரமாக ஆய்ந்தறியும். இங்கு பேசுவதற்கு தனக்கு எட்டு நிமிடங்கள் மட்டுமே கொடுத்ததாக பாஷா பட்டேல் இங்கு குறைப்பட்டுக் கொண்டார். மிகக் குறுகிய நேரத்திற்குள்ளேயே உங்கள் கருத்துக்களை இங்கு நீங்கள் வழங்கியிருந்தாலும் தேவையான தகவல்கள் அனைத்தையும் சேகரித்து வந்துள்ள விதம், சிறு சிறு குழுக்களாக அனைத்தையும் அலசி ஆராய்ந்த விதம், நீங்கள் மேற்கொண்ட கடுமையான வேலை ஆகிய அனைத்துமே வீணாகி விடாது. அரசு மட்டத்தில் இவை அனைத்துமே மீண்டும் கவனமாகப் பரிசீலிக்கப்படும். அநேகமாக இந்தக் கருத்துக்களில் ஒரு சில உடனடியாக அமல்படுத்தப்படும். மற்ற கருத்துக்களை அமலாக்க நேரமாகலாம். இருந்தாலும் உண்மையான முயற்சி, கடுமையான உழைப்பும் அதில் இருக்கும். விவசாயிகளின் அடிப்படையான பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள அரசில் தற்போதுள்ள மனப்பாங்கு மாறுவதற்கு இது தேவைப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக விவசாயிகளோடு நாம் நெருக்கமாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு அவர்களின் பிரச்சனைகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். எனவேதான் அனுபவம் மிக்க உங்களோடு இந்தப் பிரச்சனைகளை நாங்கள் விவாதிக்க முயற்சித்தோம்.

முதலில், இதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும் நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, இந்திய அரசினைச் சேர்ந்த அனைத்து தொடர்புள்ள துறைகளும், அவற்றின் அதிகாரிகளும் அமைச்சர்களும் இங்கே கூடியிருக்கிறார்கள். நிதி ஆயோக்கின் தலைமையின் கீழ் வழங்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்தின் அடிப்படையிலும் இந்த அமைச்சகங்களுக்கு இடையே எவ்வாறு நாம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது? விவாதங்களுக்குப் பிறகு செயலை மேற்கொள்ளத்தக்க விஷயங்களை எப்ப்டி வெளிக் கொண்டுவருவது? எப்படி முன்னுரிமைகளை நிர்ணயிப்பது? போதிய ஆதாரம் இல்லாததால் எந்தவேலையும் தடைபட்டு நிற்பதில்லை என்றுதான் நான் நம்புகிறேன்.

இரண்டாவதாக, பழைய பாரம்பரியங்கள் என்ற சுழலில் இருந்து நாம் வெளிவர வேண்டும் என்றுதான் நாம் நம்புகிறோம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அழிவுக்கான தொழில்நுட்பத்தையும் நாம் கைவிட வேண்டும். ஏதாவதொரு தருணத்தில் அது நமக்குத் தேவைப்படுகிறது. எனினும் அது காலங்கடந்து போனதெனில் பிறகு அதையே நாம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதிலிருந்து நாம் வெளியே வர வேண்டியது அவசியம். என்றாலும் அதற்கு கூடுதல் முயற்சிகளை நாம் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. உதாரணமாக, புதிய தொழில்முனைவுகளைப் பற்றி நாம் பேசுவோமானால், விவசாய பல்கலைக்கழகங்கள் பற்றிச் செயல்பட அவர்களால் முடியுமா? அதைப் போலவே, விவசாயக் கல்வி பயிலும் மாணவர்களிடையே கருத்துகள் குறித்த கணினிப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளை நம்மால் ஏற்பாடு செய்ய முடியுமா? சில நாட்களுக்கு முன்னால் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கென கணினிப் போட்டி நடந்தபோது அரசு எதிர்கொண்டு வந்த 400 பிரச்சனைகள் விவாதத்திற்கு வந்தன. கிட்டத்தட்ட 50-60 ஆயிரம் மாணவர்கள் அந்தப் பிரச்சனைகளைப் பற்றி தொடர்ந்து 36 மணிநேரம் விவாதித்தனர். பின்பு அரசுக்கு ஆலோசனைகளையும் வழங்கினர். சில அரசுத் துறைகள் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்த பிரச்சனைகளுக்கு மிகச் சரியான தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை அந்த இளைஞர்கள் வழங்கினர்.

நமது விவசாயப் பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற கணினிப் போட்டியை நடத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஐஐடி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள் போன்றவை இயந்திர மனிதர்கள் அல்லது நானோ தொழில்நுட்ப வாரங்களை கொண்டாடி வருகின்றன. அது நல்லதொரு விஷயம்தான். அதைப் போன்றே இந்த கல்வி நிறுவனங்களும் கூட ஏன் விவசாய தொழில்நுட்ப வாரம் அல்லது விழாவை கொண்டாடக் கூடாது? நாட்டின் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள் அனைவரும் சேர்ந்து இந்தியாவிற்கு பொருத்தமான பிரச்சனைகள் பற்றி ஏன் விவாதிக்கக் கூடாது? அதில் அவர்களுக்கு இடையிலான போட்டிக்கான ஏற்பாடுகளையும் கூடச் செய்யலாம்.

இதை நம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியும். அதைப்போலவே எனது உரையில் நான் குறிப்பிட்ட மண்வளம் குறித்த அட்டை போன்ற பிரச்சனைகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இன்று ரத்தப் பரிசோதனைக்காக நாம் செல்லும் சோதனை நிலையங்கள் இப்போது மிகப்பெரும் வர்த்தகமாக வளர்ந்துள்ளன. இவை அனைத்துமே தனியாருக்கு சொந்தமான பரிசோதனை நிலையங்கள்தான். நாம் ஏன் ஒவ்வொரு கிராமத்திலும் மண்வளப் பரிசோதனைக்கான நிலையங்களை வைத்திருக்கக் கூடாது? அது முடியாதா? இதற்கான சான்றிதழ்களை பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். அவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் கிடைக்க வேண்டும். இதற்குரிய தொழில்நுட்ப கருவிகளும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். இந்த வகையில் விவசாயிகளும் கூட தங்கள் நிலத்தின் மண் வளத்தை பரிசோதித்துக் கொண்டு உரிய வழிகாட்டுதல்களைக் கோரலாம். இதற்கான அமைப்புகளை நம்மால் உருவாக்க முடியும். ஒவ்வொரு கிராமத்திலும் மண் வள சோதனைக்கான பரிசோதனை நிலையங்கள் அமைப்பது குறித்து நாம் வற்புறுத்தினால், பின்பு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுவும் கூட விவசாயம் தொடர்பான செயல்பாடுகளை பல மடங்கு பெருக்கவும், அறிவியல் உணர்வைப் பெறவும் உந்துசக்தியாக இருக்கும்.

மண்வளத்தை சோதிப்பது அவசியம் என்பது போலவே நிலத்தடி நீரையும் அதே பரிசோதனை நிலையத்தில் சோதனை செய்யவேண்டிய அவசியம் உள்ளது. பொதுவாக விவசாயிகளின் சிந்தனை இவ்வாறுதான் இருக்கும். கடந்த முறை விதை வாங்கும்போது துணிப்பையில் வாங்கியிருந்தால் இந்த முறையும் அதே போன்றுதான் அவர் எதிர்பார்ப்பார். பிளாஸ்டிக் பையில் கொடுத்தால் அதில் அவருக்கு நம்பிக்கை இருக்காது. இது போன்ற அணுகுமுறைதான் அவரிடம் இருக்கும்.

அவரது கைபேசியில் எண்ம வழிப்பட்ட அசையும் சித்திர தொகுப்பு முறையைப் பயன்படுத்தி விவசாயிக்கு வழிகாட்ட முடியும். விதையை வாங்கும்போது எந்தெந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பது பற்றி அவருக்கு எடுத்துக் கூற வேண்டும். அவர் அதைப் புரிந்து கொள்வார் என்பதோடு கேள்வி கேட்கவும் தொடங்குவார்.

குஜராத்திலும் ஏன் நாடு முழுவதிலுமே மக்களை விட அதிகமாக நம்மிடம் கைபேசிகள் இருக்கின்றன. எண்ம வழி தொடர்பு வசதியும் இருக்கிறது. அசையும் சித்திரங்களைப் பயன்படுத்தி இந்த விஷயங்களை எப்படி விவசாயிகளிடம் எடுத்துச் செல்வது என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும். இந்த ஆலோசனைகளை எல்லாம் வைத்துக்கொண்டு மகத்தான மாற்றத்தை நம்மால் கொண்டு வர முடியும் என்றுதான் நான் நம்புகிறேன். கால்நடை வளர்ப்பைப் பற்றி நான்  முன்பு பேசியது போன்று சட்டங்கள் எதுவும் இல்லாத பல பகுதிகள் உள்ளன.

சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அதன் மூலம் இந்த விஷயங்களுக்கு ஊக்கம் கிடைக்கும்; குறைகள் களையப்படும்; முறையானதொரு வழிமுறையும் வளர்த்தெடுக்கப்படும். இங்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அனைத்தும் உண்மையிலேயே எனக்கு புதிய பல தகவல்களைத் தந்தன. நான் நிறையவே கற்றுக் கொள்ள முடிந்தது. இந்த விஷயங்களில் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. எனினும் இன்று கூறப்பட்ட பல விஷயங்கள் எனக்கு புதிதாக இருந்தன. இவை உங்களுக்கும் அரசு துறைகளுக்கும் கூட பயனுள்ளதாக இருக்கும். இந்த விவாதம் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என்றுதான் நான் நம்புகிறேன்.

இத்தகைய நிகழ்ச்சிகளை மாநிலங்களிலும் நம்மால் நடத்த முடியும் அல்லவா? அங்கே விளக்கப் படங்களை முன்வைக்கலாம்; களத்தில் செயல்படும் விவசாயிகளும் அதில் கலந்து கொள்ளலாம். அல்லது இந்தத் துறையில் நிபுணத்துவம் உள்ளவர்களும் கூட அதில் கலந்து கொள்ளலாம். இத்தகைய முயற்சி அங்கும் கூட நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் நமது நாடு மிகப் பெரியது. சில நேரங்களில் ஒரு பரிசோதனை முயற்சி ஒரு மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படக் கூடும்; ஆனால் அதே பரிசோதனை மற்றொரு மாநிலத்தில் தோல்வி அடையக் கூடும். ஒரு மாநிலத்தில் ஒரு வகையான நம்பிக்கைகள் இருக்கும். வேறு மாநிலங்களில் வேறு வகையானவையாக அவை இருக்கக் கூடும்.

இதனை மாநில வாரியாக அல்லது விவசாய – பருவநிலை பகுதி வாரியாக முன்னெடுத்துச் சென்றோம் எனில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மூன்றாவதாக, இந்த விஷயங்கள் அனைத்தின் மீதும் பல்கலைக்கழக அளவில் இறுதி ஆண்டில் அல்லது இறுதி ஆண்டுக்கு ஒரு ஆண்டு முன்னதாகவும் விவாதங்களை நடத்த முடியுமா? என்று யோசிக்கலாம்.  ‘ஒத்த மனதுள்ளவர்களின் சந்திப்பு’ மற்றும் விவாதம் என்பது கீழ்மட்டம் வரையில் கொண்டு செல்லும் வரையில் நல்ல விளைவுகளை நம்மால் எதிர்பார்க்க முடியாது.

எனவே, இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் பயணிக்கும் பாதைக்கான திட்டம் வேண்டும். இதில் பல்கலைக்கழகங்கள், மாணவர்கள், நிபுணத்துவம் ஆகிய அனைத்தும் உள்ளடங்கியிருக்க வேண்டும். ஒருவேளை இவை அங்கு பயனற்றதாகவும் கூட இருக்கலாம். இருந்தாலும் அவை தேவைப்படும் இடங்களுக்குப் பயனுள்ளதாக எப்படி ஆக்குவது என்ற கேள்வி நம்மிடம் எழவேண்டும்.

மதிப்புக் கூட்டலை நம்மால் விரிவாகச் செய்ய முடியாது. குஜராத் மாநிலத்தில் 24 மணிநேர மின்சார வசதியை வழங்குவதற்கென கிராமப்புற மின்வசதி திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். நமது நாட்டின் புரட்சிகரமான நிகழ்வுகளில் ஒன்றாக அது கருதப்பட்டது. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 24 மணி நேர மின்வசதி எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்? தொலைக்காட்சியை பார்ப்பதற்காகவா? அல்லது இரவு நேரத்தில் மட்டும் அதைப் பயன்படுத்துவதற்காகவா? அவ்வளவுதானா? தங்கள் வாழ்க்கையை மாற்ற மின்வசதியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர்களுக்கு உணர்த்துவதற்காக நாங்கள் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.

காந்தி நகருக்கு மிக அருகே ஒரு கிராமம் இருந்தது. அங்கு மிளகாய் பயிரிடுவது வழக்கம். நம் நாட்டில் ஒரு பிரச்சனை நிலவுகிறது. ஒரு விவசாயி ஒரு பயிரை தன் நிலத்தில் விளைவித்தால் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் அதே பயிரை விளைவிக்கத் தொடங்கி விடுவார். மிளகாயைப் போல. இதன் விளைவாக விலை சரியத் தொடங்குகிறது. அங்கு விளையும் மிளகாய் அத்தனையையும் விற்றபிறகும் கூட அந்த கிராமத்தின் வருமானம் ரூ. 3 லட்சத்தை தாண்டுவதே இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. எனவே அந்த கிராமத்தினர் ஒரு சங்கத்தை உருவாக்குவது என்று முடிவு செய்தார்கள். தங்களிடம் 24 மணி நேர மின்வசதி இருப்பதால், அவர்கள் மின் இணைப்பை பெற்றார்கள். அதைப் பயன்படுத்தி மிளகாய்ப் பொடியை தயாரிப்பது என்று முடிவு செய்தார்கள். இதற்கான பதனிடும் இயந்திரங்களை வாங்கினார்கள். அதை பொட்டலமாக்கும் வேலையையும் முடித்தார்கள். இதுவரையில் மொத்தம் ரூ. 3 லட்சத்துக்கு மட்டுமே விற்ற அவர்கள் இப்போது 3-4 மாத கால திட்டமிடலுக்குப் பிறகு அதே அளவு மிளகாயில் இருந்து ரூ. 18 லட்சம் வருமானம் ஈட்டினார்கள்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், எளிமையான மொழியில் விவசாயிகளிடம் மதிப்புக் கூட்டலைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஏற்றுமதியும் இறக்குமதியும் இந்த உலகத்தில் மிக வேகமாக நடந்து வருகின்றன. இந்தப் பொருட்கள் எல்லாம் பற்றாக்குறையின் விளைவாகவே வாங்கப்படுகின்றன.

இந்தியா மிகப்பெரியதொரு நாடு. வயலில் இருந்து துறைமுகத்திற்கு மிக நீண்ட தூரத்தைக் கடக்க வேண்டும். இருந்தாலும் கூட உற்பத்தி பொருட்கள் மறுதலிக்கப்படுகின்றன. ஒரு சில விஷயங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். நல்ல தரமுள்ள ஒரு பாயை இந்தியா உற்பத்தி செய்ததெனில் குழந்தைத் தொழிலாளியைக் கொண்டு அது உற்பத்தி செய்யப்பட்டது என்ற அடிப்படையில் அது நிராகரிக்கப்படும். அவ்வளவுதான். அதோடு அந்த வியாபாரம் முடிந்து போய்விடும். எனவே இத்தகைய தடைகளை உடைத்தெறிய எழுத்துபூர்வமான ஆவணங்களின் மூலம் விசாரணையை வலுப்படுத்த வேண்டும். நமது விவசாயிகளிடம் இந்த விஷயத்தைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும். இந்த விவகாரம் குறித்து பல நாடுகளுடன் நான் சண்டையிட்டு வருகிறேன். நமது விவசாயிகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை அவர்களது விதிமுறைகள் தவறாக விளக்கமளிக்கின்றன என்று அவர்களுக்கு புரிய வைக்க நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த விளக்கம் தவறானது. அவர்களின் அடிப்படையும் கூட தவறானது.

ஏனெனில் நமது மாம்பழங்களை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நாம் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.  எனினும் சர்வதேச சந்தையில் மிகவும் வலுவான ஒரு குழு பிரச்சாரம் செய்து வருகிறது; என்றாலும் நமது முறையை தரப்படுத்த வேண்டும்; உலக அளவில் இது குறித்த செயல்முறைகள் இருப்பது குறித்தும் நமது விவசாயிகளுக்கு நாம் விளக்கிக் கூற வேண்டும்.

வாசனைப் பொருட்களுக்கான வர்த்தகம் 40 சதவீத வளர்ச்சி கொண்டதாக இன்று உள்ளது என என்னிடம் கூறினார்கள். இந்த 40 சதவீத வளர்ச்சிக்கான அடித்தளம் முழுவதையுமே விவசாயம்தான் தருகிறது. வாசனைப் பொருட்களுக்கான வியாபாரத்தின் அடிப்படை விவசாயமாக இருக்கும் நிலையில், இந்தியா போன்ற நாட்டில் அது ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். வாசனைப் பொருட்களின் உலகத்துடன் பல விஷயங்களை நம்மால் இணைக்க முடியும். எனவே வாசனை திரவியங்களைப் பொறுத்தவரையில் மிகவும் வித்தியாசமான வாய்ப்புகளை கொண்டதாக  இந்தியா விளங்குகிறது என்றுதான் நான் நம்புகிறேன். வாசனைப் பொருட்கள் துறையில் நம்மால் ஏராளமாக பங்களிக்க முடியும்; இயற்கையான பொருட்களை நம்மால் வழங்க முடியும். எனவே சர்வதேச சந்தையை மனதில் வைத்துக் கொண்டு எவ்வாறு நமது விவசாயிகளுக்கு உதவ முடியும் என்று நாம் சிந்திக்க வேண்டும். ஒருநாள் வளைகுடா நாடுகளில் உள்ள மக்களுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் பெரிதும் விரும்பும்படியான பழங்கள், காய்கறிகள் மற்றும் அதன் திரம் பற்றி கூறும்படி நான் அவர்களை கேட்டுக் கொண்டேன். நமது வியாபாரிகள் அந்த தரத்தை நிலைநிறுத்தும் வகையில் நம்மால் தேவையான தொழில்நுட்பத்தை, செயல் முறையை வழங்க முடியும். அதனால் தயவுசெய்து இந்த விளைப் பொருட்களை அவரது வயலில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதைப் போலவே உங்களுக்கேயான குளிர்பதன கிடங்குகள், சேமிப்புக் கிடங்குகள், போக்குவரத்து ஏற்பாடு போன்றவற்றையும் வளர்த்தெடுக்க முடியும். வளைகுடா பகுதி முழுவதற்கும் இந்த விளைப் பொருட்களை வழங்கும் பொறுப்பு எனது நாட்டைச் சேர்ந்த விவசாயிகளிடம்தான் உள்ளது என்ற நிலை உருவாகும்.

இப்போதெல்லாம் பல்வேறு நாடுகளுடனும் இந்த விஷயங்கள் குறித்து நான் விவாதித்து வருகிறேன். எனினும் உங்கள் கடின உழைப்பு பெருமளவிற்கு பயனளிக்கப் போகிறது என்றும் உங்களிடம் கூற விரும்புகிறேன். இதற்கு முன்பெல்லாம் எப்படி இருந்தது என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் வேறு எவரையும் விட அவர்களுக்கு அதிகமாகவே தெரியும் என்பதால் அதிகாரிகளிடம் நான் கேட்டேன். இதுபோன்ற ஒரு விஷயம் இதற்கு முன் நடந்ததே இல்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். முதன்முறையாக விவசாய பொருளாதாரம், விஞ்ஞானிகள், விவசாய நிபுணர்கள், முற்போக்கு விவசாயிகள், கொள்கை முடிவு எடுப்பவர்கள் போன்ற துறைகளில் இருந்து மக்கள் ஒன்று கூடி விவாதங்களின் மூலமும் கலந்துரையாடல்களின் மூலம் ஏராளமான விஷயங்களை இங்கே முன்வைத்திருக்கின்றனர்.

இந்த முயற்சி சரியான திசைவழியில்தான் செல்கிறது என்றே நான் நம்புகிறேன். ஏதாவது ஒரு விஷயம் அமல்படுத்தப்படவில்லை என்பதற்காக அதிருப்தி அடைந்து விடாதீர்கள். ஒருவேளை அதற்கு சற்று நேரம் எடுக்கலாம். அரசு இயந்திரம் என்பது மிகப் பிரம்மாண்டமானது. ஒரு சின்ன ஸ்கூட்டரை நகர்த்த நிறைய நேரம் பிடிக்காது. அதே பிரம்மாண்டமான ஒரு ரயிலை நகர்த்த வேண்டுமானால் நிச்சயமாக அதற்கு சற்று நேரம் பிடிக்கும். இருந்தாலும் கூட நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நிச்சயமாக நாம் இணைந்து செயல்படுவோம்.

இந்தப் பணியை உங்கள் அனைவருடனும் இணைந்துதான் செய்ய வேண்டும். அதை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்பதை சொல்ல விரும்புகிறேன். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நாம் இணைந்து செயல்படுவோம். 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற நமது உறுதிமொழியை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அது விவசாய விளைபொருட்களாகவோ, கால்நடை வளர்ப்பாகவோ, இனிப்புப் புரட்சியாகவோ அல்லது  நீலப் புரட்சியாகவோ இருக்கலாம். விவசாயிகளின் மேம்பாட்டோடு தொடர்புடைய அனைத்து வழிகளிலும் நாம் நடைபோட வேண்டும். இந்த நம்பிக்கையுடன் உங்கள் அனைவரின் பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

  

 

 

வி.கீ/ கணேசன்