பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை ரூ. 8754.23 கோடி செலவில் மேற்கொள்ளவும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ரூ.3941.35 கோடி செலவில் மேம்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பயனாளிகள்:
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையையும், கணக்கெடுப்பதுடன், அஸ்ஸாம் தவிர பிற மாநிலங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை பதிவு செய்ய தேசிய மக்கள் தொகை பதிவேடு உதவும்.
விவரம்:
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது உலகிலேயே மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளியியல் ரீதியான நடவடிக்கையாகும். அடுத்த 10 ஆண்டுகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ல் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்:
I. வீடுகளின் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு – 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, மற்றும்
II. மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2021 பிப்ரவரி 9 முதல் 28 வரை
அஸ்ஸாம் தவிர பிற மாநிலங்களில், தேசிய மக்கள் தொகை பதிவேடு மேம்படுத்தப்படுவதுடன், வீடுகளை பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு.
• தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாபெரும் பணியில், 30 லட்சம் களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள், இந்த எண்ணிக்கை 2011-ல் 28 லட்சமாக இருந்தது.
• புள்ளி விவர சேகரிப்புக்கு செல்போன் செயலிகளை பயன்படுத்துவதுடன் கண்காணிப்புப் பணிக்காக மைய தகவு ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம், மேம்பட்ட தரத்திலான மக்கள் தொகை விவரங்களை விரைவில் வெளியிட வழிவகுக்கும்.
• புள்ளி விவரப் பரவல் மேம்பட்டதாக இருப்பதோடு, ஒரு பொத்தானை இயக்கினால், ஒரு கொள்கையை உருவாக்கத் தேவையான அனைத்து விவரங்களும் கிடைக்கச் செய்தல்.
• மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரு சேவையாக (CaaS) மேற்கொள்வதால், அமைச்சகங்களுக்கு தேவைப்படும் புள்ளி விவரங்களை சுத்தமாகவும் எந்திரங்களால் படிக்கக்கூடியவையாகவும், நடவடிக்கைக்கு ஏற்றவாறும் வழங்க முடியும்.
வேலை வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய விளைவுகள்:
• மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் புள்ளி விவர சேகரிப்பு மட்டுமல்ல. இதன் முடிவுகள் பொது மக்கள் பயன்படுத்தத்தக்க வகையில் வெளியிடப்படும்.
• அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், ஆராய்ச்சி அமைப்புகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்துவதற்கேற்ப அனைத்து புள்ளி விவரங்களும் வெளியிடப்படும்.
• அடிமட்ட நிர்வாகப் பிரிவுகளான கிராமம் / வார்டு அளவிலான கீழ்மட்ட நிர்வாக அமைப்புகள் வரை புள்ளி விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.
• நாடாளுமன்ற, சட்டபேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக, மறுவரையறை ஆணையத்திற்கு வட்டார அளவிலான கணக்கெடுப்பு விவரங்கள் வழங்கப்படும்.
• அரசின் கொள்கைகளை வகுக்கவும், பிற நிர்வாக அல்லது ஆய்வுகளின் புள்ளி விவரங்களை திரட்டவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சக்தி வாய்ந்த கருவியாக இருக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒரு சேவையாக மேற்கொள்வதன் மூலம், அமைச்சகங்கள் மாநில அரசுகள் அல்லது பிறதரப்பினருக்கு தேவையான புள்ளி விவரங்கள், இயந்திரங்களால் படிக்கத்தக்க வகையிலும், நடவடிக்கைக்கு ஏற்ற வகையிலும் வழங்கப்படும்.
• இந்த இரு மாபெரும் பணிகளும், தொலைதூரப் பகுதிகள் உட்பட நாடுமுழுவதும் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்காக கூடுதலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு கவுரவ ஊதியமும் வழங்கப்படும். உள்ளூர் அளவில், 2900 நாட்களுக்கு சுமார் 48,000 மனித சக்தி பயன்படுத்தப்படவுள்ளது. இதுதவிர, சுமார் 2.4 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்படும். அத்துடன் மாவட்ட / மாநில அளவிலான தொழில்நுட்ப மனித சக்திகளை வழங்குவதோடு, வேலை என்ற முறையில் திறன் உருவாக்கத்திற்கும் வழிவகுக்கும். இதற்கான புள்ளி விவர சேகரிப்பு, டிஜிட்டல் முறையிலும் ஒருங்கிணைந்த வகையிலும் மேற்கொள்ளப்படும். இந்தப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு கிடைப்பதையும் இது பிரகாசமாக்கும்.
செயல்பாட்டு உத்தி மற்றும் இலக்குகள்:
• மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது, வீடுவீடாகச் சென்று, வீடுகளைப் பட்டியலிடுதல், வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு என தனித்தனி வினாப் பட்டியல்களை அளித்தல்.
• மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் பொதுவாக மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட அரசாங்க ஆசிரியர்களாக இருப்பதோடு, அவர்களது வழக்கமான பணியுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டையும் தயாரிப்பார்கள்.
• உள்-மாவட்ட, மாவட்ட மற்றும் மாநில அளவிலான இதர மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியாளர்களும், மாநில / மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படுவார்கள்.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான புதிய முன்முயற்சிகள் வருமாறு:
• புள்ளி விவர சேகரிப்புக்கு முதன்முறையாக செல்போன் செயலிகளைப் பயன்படுத்துதல்.
• மக்கள் தொகை கணக்கெடுப்பு கண்காணிப்பு மற்றும் மேலாண்மைக்கான தரவு, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகள் / அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை பல்வேறு மொழிகளில் வழங்குவதற்கு ஏற்பாடு.
• மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் போது பொதுமக்கள் ஆன்லைன் மூலம் தாங்களாகவே முன்வந்து கணக்கெடுப்புக்கான விவரங்களை தெரிவித்தல்.
• மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு சார்ந்த கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கான கவுரவ ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
• களப்பணியில் ஈடுபடும் 30 லட்சம் பணியாளர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், தேசிய / மாவட்ட அளவிலான பயிற்சி நிறுவனங்களின் சேவைகளும் பயன்படுத்தப்படும்.
************