மேதகு அதிபர் முசேவேணி அவர்களே, அவரது துணைவியார் திருமதி. ஜேனட் முசேவேணி ஜியாந்த் அவர்களே, இங்கே பெருந்திரளாக வந்துள்ள எனதருமை சகோதர சகோதரிகளே
உங்கள் அனைவருடனும் எனக்கு மிகுந்த அன்பு, பாசத்துடன் கூடிய உறவு உள்ளது. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன். இந்த பெரிய குடும்பத்தில் நான் பங்கு வகிக்கிறேன். எனவே உங்கள் அனைவரையும் சந்திக்கும் போது எனது மகிழ்ச்சி பல மடங்காக பெருகுகிறது. இன்று மேதகு அதிபர் தாமே இங்கு வந்துள்ளார். இதனால் நமது கலந்துரையாடல் கூடுதலாக பெருமை அடைகிறது.
அதிபர் இங்கே வந்திருப்பது அவர் 125 கோடி இந்தியர்களிடமும், உகாண்டாவில் வாழும் இந்திய மக்களிடமும் கொண்டுள்ள அளப்பரிய அன்பை காட்டுகிறது. எனவே மேதகு அதிபருக்கு என் நெஞ்சார்ந்த மரியாதையையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று உங்களிடையே பேசும் வாய்ப்பு கிடைத்துள்ள எனக்கு நாளை உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பாக தில்லியில் நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை முழுவதையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். உகாண்டா மக்கள் அனைவரும் கூட அதனை கேட்டிருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் நான் மிகுந்த நன்றியுடையவனாக உள்ளேன்.
எனதருமை சகோதர, சகோதரிகளே
உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பு இந்தியப் பிரதமர் ஒருவருக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கென 125 கோடி இந்திய மக்கள் சார்பில் உகாண்டா அதிபருக்கும், உகாண்டா மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, உகாண்டாவுக்கு பயணமாக வருவது எந்தவொரு இந்தியனுக்கும் ஆனந்தமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விஷயமாகும். உங்களுடன் சந்தித்து பேசுவதும் மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.
நான் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். உங்களது ஆர்வம், அன்பு, பாசம் இத்தகைய உணர்வுகளை நான் தொடர்ந்து பெற வேண்டும் என்பதுவே அது. உகாண்டா பயணமாக வந்து உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இரண்டாவது முறையாக கிடைத்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன் நான் குஜராத் முதலமைச்சராக இருந்த போது முதல் முறையாக இங்கு வந்தேன். இன்று நாட்டின் பிரதமராக வந்திருக்கிறேன்.
நான் குஜராத் முதலமைச்சராக இங்கு வந்த சமயத்திலும் உங்களில் மிகப் பலரை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்களுடன் சுதந்திரமாக விவாதிக்கும் வாய்ப்பையும் பெற்றேன். நான் இங்கு பழக்கப்பட்ட பல முகங்களை காண்கிறேன். ஒவ்வொருவரையும் அதிபர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வளவு நெருக்கமான உறவுகளை அதிபர் உங்களிடையே கொண்டுள்ளார்? இன்றைய தினம் முழுவதையும் நான் அவருடன் கழித்தேன். அவர் பல குடும்பங்களை பெயரிட்டு குறிப்பிட்டு எவ்வாறு அவர் இந்த குடும்பங்களை தெரிந்து கொண்டார் என்று விவரித்தார். எத்தனை ஆண்டு காலம் அவர்களை தெரியும் என்றும் அதிபர் கூறினார். அனைத்து விஷயங்களையும் அவரே தெரிவித்தார்.
இத்தகைய மரியாதையை நீங்கள் உங்களது கடின உழைப்பு, சிறப்பான நடத்தை, உயரிய குணம் காரணமாக பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் சாதித்துள்ள இந்த நிலைமை சாதாரணமானது அல்ல. இந்தியாவிலிருந்து பல தலைமுறைக்கு முன் வந்துள்ளவர்கள் தங்களை இந்த நாட்டுடன் இணைத்துக் கொண்டு அதன்பால் அன்பு செலுத்தி வருகிறார்கள்.
நண்பர்களே, உகாண்டாவுடன் இந்தியாவின் உறவுகள் புதிது அல்ல. அது பல நூற்றாண்டுகள் பழமையானது. கடின உழைப்பு, சுரண்டலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடையது இந்த உறவு. இன்றைய நிலையில் உகாண்டாவில் கண்டுள்ள வளர்ச்சியில் இந்திய மக்களின் வியர்வை மற்றும் ரத்தம் இரண்டறக் கலந்துள்ளது. உகாண்டா மக்களின் பங்களிப்பைப் போன்றே இந்தியர்களது பங்களிப்பும் அமைந்துள்ளது. 3, 4 தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் குடும்பங்கள் பல உள்ளன. உகாண்டா நாட்டு இளைஞர்களுக்கு நான் நினைவுப்படுத்த விரும்புவது நீங்கள் பயணம் செய்யும் ரயில்கள் இந்தியாவுக்கும், உகாண்டாவுக்கும் இடையே உறவுகளை வளர்க்கும் ரயில்கள் ஆகும். ஒரு காலத்தில் இந்தியாவும், உகாண்டாவும் ஒரே அன்னிய அதிகாரத்திற்கு அடிமைப்பட்டிருந்தன. அந்த சமயத்தில் எனது மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இங்கே ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் அந்த சமயத்தில் உகாண்டா நாட்டின் சகோதர சகோதரிகளுடன் கைகோர்த்து அத்தகைய கஷ்டமான சூழ்நிலையில் போராடியவர்கள். உகாண்டா சுதந்திரம் பெற்ற போது எங்கள் மூதாதையர்களில் பலர் இங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தனர். சர்க்கரை எவ்வாறு பாலில் கலக்கிறதோ அதே போல அவர்கள் இந்த சமுதாயத்துடன் கலந்து ஒன்றாகி விட்டனர்.
இன்று நீங்கள் அனைவரும் அனைத்துத் துறைகளிலும் உங்கள் ஆற்றலை வழங்கி வருகிறீர்கள். உகாண்டாவின் மேம்பாடு, வர்த்தகம், கலைகள், விளையாட்டுக்கள் என சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அர்ப்பணித்து வருகிறீர்கள். மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி இங்கே ஜிஞ்ஜா நதியில் கரைக்கப்பட்டது. இந்த நாட்டின் அரசியலுக்கு இந்தியர்கள் பலர் தீவிரப் பங்காற்றியுள்ளனர். இன்றும் கூட அவர்கள் பங்காற்றி வருகிறார்கள். சுதந்திர உகாண்டா நாடாளுமன்றத்தில் மறைந்த நரேந்திர பாய் பட்டேல் முதலாவது ஐரோப்பியர் அல்லாத அவைத் தலைவராக பணியாற்றினார். அவர் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு காலத்தில் அனைவரும் பிரச்சனைகளை சந்தித்த போது ஒரு சிலர் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. எனினும் உகாண்டா அரசும், மக்களும் அவர்களை தங்கள் இதயங்களிலிருந்து வெளியேற அனுமதிக்கவே இல்லை. இன்று உகாண்டா அதிபருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய சமுதாயத்தினரை அரவணைத்துக் கொண்டமைக்காக அவருடன் உகாண்டா மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களில் பலர் உகாண்டாவில் பிறந்தவர்கள். இவர்களில் பலருக்கு இந்தியாவுக்கு வரும் வாய்ப்பே கிடைத்திருக்காது. மேலும் பலருக்கு தங்களது இந்திய வேர்கள் பற்றி அறிந்திருக்கும் வாய்ப்பே கிடைத்திருக்காது. அவர்கள் எந்த மாகாணத்தின், எந்த நகரின் அல்லது எந்த கிராமத்திலிருந்து வந்தவர்கள் என்று அறிந்திருக்கவில்லை. எனினும் இத்தகைய அனைவரும் உங்கள் இதயங்களில் இந்தியாவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இதயத்தின் ஒரு துடிப்பு உகாண்டாவுக்காக என்றால் மற்றொரு துடிப்பு இந்தியாவுக்காகத்தான். உண்மையில் சொல்லப் போனால் நீங்கள் இந்தியாவின் தூதர்கள், இந்த உலகத்திற்கு நீங்கள் இந்தியாவின் தேசிய தூதர்கள். சற்று முன்பாக நான் அதிபருடன் மேடைக்கு வந்து கொண்டிருந்த போது எவ்வாறு கலை நிகழ்ச்சிகள் இங்கே ஏற்பாடு செய்யப்படுகின்றன என்பதை பார்த்தேன். அவற்றில் இந்தியத்தன்மை அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க அம்சமாகும்.
எனது முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் நான் இதை கூறுகிறேன். எனது இன்றைய அனுபவமும் நீங்கள் அனைவரும் இந்திய மொழிகள், இந்திய உணவு, இந்திய கலைகள், இந்திய கலாச்சாரம் ஆகியவற்றின் உணர்வுடன் இருப்பதை உணர்த்துகிறது. வேற்றுமையில் ஒற்றுமை, குடும்ப நெறிகள், மொத்த உலகமுமே ஒரே குடும்பம் என்ற உணர்வு ஆகியனவும் உங்களிடையே உள்ளன. ஆகையால்தான் உங்களைப் பற்றி ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான். 125 கோடி இந்திய மக்களும் பெருமிதம் அடைகின்றனர். நானும் உங்களை மதிக்கிறேன், உங்களை வணங்குகிறேன்.
நண்பர்களே, உகாண்டாவுடன் இணைந்து ஆப்பிரிக்க நாடுகளில் பல இந்தியாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இதற்கான காரணங்களில் ஒன்று உங்களை போன்ற இந்தியர்கள் பலர் பெரும் எண்ணிக்கையில் இங்கு வாழ்கிறார்கள். இரண்டாவது காரணம் நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து அடிமைத்தனத்திற்கு எதிராக போராடியவர்கள் என்பது. மூன்றாவது காரணம் நாம் அனைவரும் ஒரே மாதிரியான மேம்பாட்டுச் சவால்களை எதிர்கொண்டுள்ளோம் என்பது. நமது மகிழ்ச்சி மற்றும் துயரங்களை பகிர்ந்து கொள்ளும் நீண்ட வரலாற்றை நாம் கொண்டுள்ளோம். நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் ஏதாவது ஒன்றை கற்றுள்ளோம். நமது திறன்களுக்கு ஏற்ப ஒருவரையொருவர் ஆதரித்து உதவி செய்துள்ளோம். இன்றும் கூட அதே உணர்வுடன் நாம் இணைந்து முன்னேறி வருகிறோம். உகாண்டாவுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை நாம் விரும்புகிறேன். உகாண்டா ராணுவத்திற்கு இந்தியாவில் அவர்களது தேவைக்கேற்ப பயிற்சி அளிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இன்றைய நாளில் ஆயிரத்திற்கும் கூடுதலான உகாண்டா மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயின்று வருகிறார்கள்.
நண்பர்களே, உங்களில் பலர் இங்கு வந்த பிறகு இந்தியாவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று ஆப்பிரிக்காவில் உகாண்டா எவ்வாறு விரைவாக வளரும் பொருளாதாரமாக உள்ளதோ அதே போல இந்தியா உலகின் மிக விரைவாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் மொத்த உலகத்தின் மேம்பாட்டுக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. இன்று இந்தியாவில் தயாரிப்போம் என்பது உலகில் இந்தியாவின் அடையாளமாகி விட்டது. இன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள், ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றை எந்த நாடுகளிலிருந்து முன்பு இறக்குமதி செய்தோமோ அந்த நாடுகளுக்கே விற்பனை செய்து வருகிறோம். உகாண்டாவில் நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்க செல்லும் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரை பதிக்கப்பட்ட போன்களை வாங்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.
சமீபத்தில் இந்தியாவில் உலகின் மிகப்பெரிய மொபைல் தொலைபேசி உற்பத்திப் பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தியா உலக உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது. மேலும் இந்தியா டிஜி்ட்டல் தொலைநுட்பத்தை மக்களுக்கு அதிகாரமளிக்கும் கருவியாக மாற்றி உள்ளது. அரசு தொடர்பான பல சேவைகள் தற்போது மொபைல் தொலைபேசிகள் வழியாக கிடைக்கின்றன. குழந்தை பிறப்பதை பதிவு செய்வது முதல் இறப்புகளை பதிவு செய்வது வரை பல சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அவைகள் ஆன்லைனில் தற்போது கிடைக்கின்றன. இன்று நாட்டின் ஒவ்வொரு பெரிய கிராம அமைப்பையும் பிராடுபேண்ட் இன்டர்நெட் வசதியுடன் இணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இன்றைய நிலையில் ஊசி முதல் ரயில் தண்டவாளங்கள், மெட்ரோ ரயில் பெட்டிகள், செயற்கைக் கோள்கள் போன்றவை இந்தியாவிலேயே இந்தியாவின் உருக்கை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்தியா தற்போது உற்பத்தி மையமாக மட்டுமின்றி தொடக்க நிலை நிறுவனங்கள் ஏற்படுவதிலும் விரைவாக முன்னேறி வருகிறது.
உலகில் எந்தப் பகுதிக்கு நாம் சென்றாலும் உங்களைப் போன்ற மக்களிடம் நான் நினைவுப்படுத்துவது இந்தியா பற்றிய கருத்து முன்பு எப்படி இருந்தது என்பது பற்றிதான். ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நாடு முன்பெல்லாம் பாம்பாட்டிகள் நாடாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தியா என்றால் பாம்பாட்டிகள் மற்றும் மாயாஜால வித்தைகள் செய்யும் நாடு என்றே உணரப்பட்டது. இதுதான் அடையாளமா? நமது இளைஞர்கள் இந்த காட்சியையும், சிந்தனையையும் மாற்றியமைத்து இந்தியாவை கணினி நாடாக மாற்றி விட்டனர். அதாவது தகவல் தொழில்நுட்ப மென்பொருள் நாடாக மாற்றி விட்டனர்.
இன்று நாட்டிற்கும், உலகத்திற்கும் இதே இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் தொடக்க நிலை நிறுவனங்களை உருவாக்கி வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 11,000-க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்களை அவர்கள் உருவாக்கி உள்ளனர். இந்தியா மற்றும் உலகத்தின் தேவைகளுக்கேற்ப நமது இளைஞர்கள் புதுமைகளை படைத்து வருகிறார்கள், பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் கண்டுபிடித்து வருகிறார்கள். நண்பர்களே, இன்று இந்தியாவில் 6 லட்சம் கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி செய்துத் தரப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் மின்சார வசதி இல்லாத கிராமமே நாட்டில் இல்லை. இந்தியாவில் மின்சார இணைப்பு பெறுவது எவ்வளவு எளிதானது என்பதை உலக வங்கியின் தரவரிசை பட்டியலிலிருந்து நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். கடந்த 4 ஆண்டுகளில் மின்சார இணைப்பு பெறுவதில் எளிமை தரவரிசைப் பட்டியலில் இந்தியா 82 இடங்களைத் தாண்டி 29-வது இடத்தை பிடித்துள்ளது. மின்சாரம் தற்போது எளிதாக கிடைக்கிறது என்பது மட்டுமல்லாமல் மக்களின் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் பல நூறு கோடி எல்இடி பல்ப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நண்பர்களே, இது போன்ற பல மாற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்து வருகின்றன. ஏனெனில் இந்தியாவில் அமைப்புகள் மற்றும் சமுதாயத்தினரிடையே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று புதிய இந்தியாவை உருவாக்கும் மனப்பூர்வமான உறுதிமொழியுடன் இந்தியா விரைவாக முன்னேறி வருகிறது.
நண்பர்களே, நான் பிரதமராக பதவியேற்றது முதல் இந்த நாட்டுக்கு வருவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். 3 ஆண்டுகளுக்கு முன்னதாக உகாண்டா அதிபர் இந்தியா–ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தபோது நான் உகாண்டாவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். எனினும் அப்போது இந்தப் பயணத் திட்டத்தை இறுதி செய்ய இயலவில்லை. தற்போது எனக்கு உங்களுடன் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவுடன் உறவுகளை உருவாக்க சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இன்றைய நிலையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு முக்கியமான இடம் உள்ளது. 2015-ல் நாங்கள் இந்தியா–ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தபோது ஆப்பிரிக்காவின் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம். இதற்கு முன்னதாக குறிப்பிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் எங்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். 41 நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லி வந்தனர். நாங்கள் எங்கள் நேசக்கரத்தை நீட்டியபோது ஆப்பிரிக்கா அதனை அன்புடன் பற்றிக் கொண்டது. கடந்த 4 ஆண்டுகளில் இந்திய அமைச்சர்கள் நிலைப் பயணம் மேற்கொள்ளப்படாத ஒரு ஆப்பிரிக்க நாடு கூட இல்லை என்றே கூறலாம். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் நிலைகளில் 20-க்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்தியா–ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டிற்கு வந்திருந்த 32 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளனர். 18 நாடுகளில் எமது தூதரகங்களைத் திறக்க முடிவு செய்துள்ளோம். இதனையும் சேர்த்து ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்கிறது. ஆப்பிரிக்காவின் சமூக மேம்பாடு மற்றும் போராட்டங்களில் எங்களது ஒத்துழைப்பு கட்டாயம் இருக்கும். ஆப்பிரிக்க கண்டத்தின் பொருளாதார மேம்பாட்டில் தீவிர பங்கேற்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இந்த காரணத்திற்காக ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கியின் ஆண்டு கூட்டம் சென்ற ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்டது. அப்போது ஆப்பிரிக்காவுக்கான 300 கோடி டாலர் திட்டங்களுக்கான கடன்கள் இறுதி செய்யப்பட்டன. இந்தியா–ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டின் போது 1000 கோடி டாலர் உதவிக்கான உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன. மேலும் 60 கோடி டாலர் மானியம் வழங்கவும் இந்தியாவில் பயிலும் 50 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவும் உறுதி அளித்துள்ளோம். இந்தியாவில் பயணம் மேற்கொள்ள 33 ஆப்பிரிக்க நாடுகளுக்கு மின்னணு வீசா திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆப்பிரிக்கா குறித்த எமது வலுவான ஆர்வமும், அக்கறையும் இப்போது தெளிவாக தெரிய வந்துள்ளது.
சென்ற ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்திய வர்த்தகம் 32 சதவீதம் வளர்ச்சி கண்டது. சர்வதேச சூரிய சக்தி கூட்டணியில் உறுப்பினராகுமாறு அனைத்து ஆப்பிரிக்க நாடுகளையும் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது இந்தக் கூட்டணி உறுப்பினர்கள் பாதி ஆப்பிரிக்க நாடுகளாக ஆகி உள்ளன.
சர்வதேச அரங்குகளில் ஆப்பிரிக்க நாடுகள் ஒரே குரலில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. புதிய உலக அமைவில் ஆசிய–ஆப்பிரிக்க நாடுகளின் பங்கேற்பு நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது. இந்த வகையில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு நல்ல மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நேரம் ஒதுக்கி வந்துள்ள அனைவரின் உற்சாகம் மற்றும் பற்றுதலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என் மீது காட்டிய அன்பு, பாசம், ஆசீர்வாதம் ஆகியவற்றுக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உகாண்டா அதிபர், உகாண்டா அரசு, உகாண்டா மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மரியாதையை உரித்தாக்குகிறேன்.
2019 பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்! நீங்கள் என்ன அறிந்திருக்கிறீர்கள் என்பது பற்றி நான் அறியவில்லை! 2019 பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஜனவரி மாதம் பிரவாசி பாரதீய திவஸ், அதாவது வெளிநாடு வாழ் இந்தியர் தினம் 22,23 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா காசி அதாவது பனாரசில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்னை நாடாளுமன்ற உறுப்பினராக்கி, பிரதமராக்கிய காசி சார்பிலும் என்னை பிரதமராக்கிய நாட்டின் சார்பிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு உங்களை அழைக்கிறேன். மேலும் துடிப்பான குஜராத் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடும் குஜராத்தில் ஜனவரி மாதம் 18,19,20 தேதிகளில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். எனவே ஜனவரி 22, 23-ல் காசி வந்து அந்த நாட்களை கழித்து விட்டு பின்னர் அங்கிருந்து பிரயாக் சென்று கும்பமேளாவில் பங்கேற்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பிரயாக் ராஜில் புனித நீராடி பின்னர் தில்லி வந்து ஜனவரி 26-ந் தேதி குடியரசு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள். இது இந்தியாவில் உங்கள் பயணத்திற்கான ஒரு வார கால திட்டமாகும். வரிசையாக பல நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து அந்த சமயம் நடைபெற உள்ளன.
இன்று உகாண்டாவில் உள்ள எனது சகோதர சகோதரிகளான உங்களை அழைக்க வந்திருக்கிறேன். நீங்கள் காட்டிய அன்பு, பாசத்திற்காக இந்தியாவின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு உங்களது வாழ்க்கை இந்தியாவை பெருமைப்பட வைத்துள்ளது. மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
युगांडा में आप सभी के बीच आने का ये मेरा दूसरा अवसर है। इससे पहले गुजरात के मुख्यमंत्री के तौर पर यहां आया था और आज देश के प्रधानमंत्री के नाते।
— PMO India (@PMOIndia) July 24, 2018
जब मैं गुजरात का मुख्यमंत्री था, तब भी आप में से अनेक लोग वहां मुझसे मिलने आते थे। यहां भी कई ऐसे परिचित सामने मुझे दिख रहे हैं: PM
युगांडा से भारत का रिश्ता आज का नहीं है, बल्कि शताब्दियों का है।
— PMO India (@PMOIndia) July 24, 2018
हमारे बीच श्रम का रिश्ता है, शोषण के खिलाफ संघर्ष का रिश्ता है।
युगांडा विकास के जिस मुकाम पर आज खड़ा है, उसकी बुनियाद मजबूत कर रहे युगांडा वासियों के खून-पसीने में भारतीयों का भी बहुत बड़ा योगदान है: PM
आप में से अनेक लोग ऐसे भी हैं जिनका जन्म यहीं हुआ है।
— PMO India (@PMOIndia) July 24, 2018
शायद कुछ लोगों को तो कभी भारत को देखने का मौका भी मिला होगा।
कुछ तो ऐसे होंगे जिनको वहां अपनी जड़ों के बारे में, किस गांव या शहर से आए थे, इसकी भी कम जानकारी होगी। लेकिन फ़िर भी आपने भारत को अपने दिलों में जिंदा रखा है: PM
युगांडा समेत अफ्रीका के तमाम देश भारत के लिए बहुत महत्वपूर्ण हैं।
— PMO India (@PMOIndia) July 24, 2018
एक कारण तो आप जैसे भारतीयों की यहां बड़ी संख्या में मौजूदगी है,
दूसरा हम सभी ने गुलामी के खिलाफ साझी लड़ाई लड़ी है,
तीसरा हम सभी के सामने विकास की एक समान चुनौतियां हैं: PM
मेक इन इंडिया आज भारत की पहचान बन गया है।
— PMO India (@PMOIndia) July 24, 2018
भारत में बनी कार और स्मार्ट फोन समेत अनेक चीजें आज उन देशों को बेच रहे हैं जहां से कभी हम ये सामान आयात करते थे।
संभव है कि बहुत जल्द यहां युगांडा में जब स्मार्टफोन खरीदने आप जाएंगे तो आपको मेड इन इंडिया का लेवल नज़र आएगा: PM
अफ्रीका के सामाजिक विकास और संघर्ष में तो हमारा सहयोग रहा ही है, यहां की अर्थव्यवस्था के विकास में भी हम सक्रिय भागीदारी सुनिश्चित कर रहे हैं।
— PMO India (@PMOIndia) July 24, 2018
यही कारण है कि पिछले वर्ष African Development Bank की वार्षिक बैठक भी भारत में आयोजित की गई: PM
अफ्रीका के लिए 3 billion dollars से अधिक के lines of credit के projects को मंजूरी दी गई है।
— PMO India (@PMOIndia) July 24, 2018
India Africa Forum Summit के अंतर्गत हमारा 10 billion dollars का commitment है।
600 million dollars की अनुदान सहायता और 50,000 छात्रों के लिए scholarships के लिए भी हम प्रतिबद्ध हैं: PM
International Solar Alliance का सदस्य बनने के लिए मैंने अफ्रीका के सभी देशों को आग्रह किया था।
— PMO India (@PMOIndia) July 24, 2018
और मेरे आव्हान के बाद आज सदस्य देशों में लगभग आधे देश अफ्रीका के हैं।
अंतर्राष्ट्रीय मंच पर भी अफ्रीका के देशों से एक स्वर में भारत का समर्थन किया है: PM
The community programme in Kampala was full of vibrancy and enthusiasm. Spoke about the deep rooted ties between India and Uganda, the accomplishments of the Indian diaspora and the transformative changes taking place in India. https://t.co/sKWuKSdxJ4 pic.twitter.com/UCbcZ0hEfZ
— Narendra Modi (@narendramodi) July 24, 2018