Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2017-18-ம் நிதிஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை


அற்புதமான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லி அவர்களை நான் பாராட்டுகிறேன். இது ஏழைகளை மேம்படுத்தும். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும். இது கட்டமைப்புக்கு உத்வேகத்தையும், நிதி அமைப்புக்கு பலத்தையும், வளர்ச்சிக்கு பெரிய ஊக்குவிப்பையும் அளிக்கும். இந்த நிதிநிலை அறிக்கையில், நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு முதல் ஐ-வே-க்களை விரிவாக்கம் செய்வது வரை, தானியங்களின் செலவு முதல் டேட்டா வேகம் வரை, ரயில்வே துறையை நவீனமாக்குவது முதல் எளிதான பொருளாதார கட்டமைப்புகள் வரை, கல்வி முதல் சுகாதாரம் வரை, தொழில் முனைவோர் முதல் தொழில் நிறுவனங்கள் வரை, ஜவுளி உற்பத்தியாளர்கள் முதல் வரிப் பிடித்தம் வரை அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரலாற்றுப்பூர்வமான பட்ஜெட்டுக்காக நிதியமைச்சர் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவும் பாராட்டுக்கு உரியவர்கள்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அதனை அந்தப் பாதையிலேயே முன்னெடுத்துச் செல்லும் இலக்கு ஆகியவற்றின் வெளிப்பாடு தான் இந்த நிதிநிலை அறிக்கை. ரயில்வே நிதிநிலை அறிக்கையை, பொது நிதிநிலை அறிக்கையுடன் இணைத்தது மாபெரும் நடவடிக்கை. இது போக்குவரத்துத் துறையில் ஒருங்கிணைந்து திட்டமிடுவதற்கு உதவும். நாட்டின் போக்குவரத்துத் தேவையை நிறைவுசெய்ய தற்போது ரயில்வே துறையால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும்.

இந்த நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் கட்டமைப்புக்கு கவனம் செலுத்தப்பட்டதன்மூலம், முதலீட்டை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அரசின் உறுதி வெளிப்படுகிறது. இந்தப் பிரிவுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரிப்பதே அரசின் இலக்கு. இதனை மனதில் கொண்டே அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இந்த நிதிநிலை அறிக்கையில், விவசாயிகள், கிராமங்கள், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தில் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஊரக இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், நீர்வழிப் பாதை மேம்பாடு, தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றில் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த துறைகளே கிராமப்பகுதிகளின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின்னணு உற்பத்தி, ஜவுளி போன்ற புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் மக்களை அமைப்புசார்ந்த துறைகளுக்கு கொண்டுவருவதற்கான வழிவகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் இளைஞர்களை மனதில் கொண்டு, போதுமான அளவில் திறன் மேம்பாட்டுக்கு நிதிஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் பணியாற்றும் மக்களைக் கொண்டிருப்பதன் பலனை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு இதுவரை இல்லாத வகையில், சாதனை அளவாக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் நலனுக்கு நமது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நிதிநிலை அறிக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் உயர்கல்விக்கும் நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறை மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. கிராமப்பகுதிகளிலும், நகர்ப்பகுதிகளிலும் வீட்டுவசதித் துறைக்கு இந்த நிதிநிலை அறிக்கை, ஊக்கம் அளிக்கிறது.

ரயில்வே நிதிநிலை அறிக்கையில், ரயில் பாதுகாப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. இது, ரயில்வே பாதுகாப்புக்காக போதுமான அளவில் செலவு செய்வதை உறுதிப்படுத்த உதவும். நிதிநிலை அறிக்கையில், ரயில்வே மற்றும் சாலை கட்டமைப்பில் மூலதன செலவு போதுமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான விரிவான திட்டங்கள் மூலம் வரிஏய்ப்பு தடுக்கப்படும். மேலும், கறுப்புப்பண புழக்கத்தை கட்டுப்படுத்தும். டிஜிட்டல் பொருளாதாரம் என்ற திட்டத்தை இலக்கு அடிப்படையில் நாங்கள் தொடங்கியுள்ளோம். 2017-18-ம் ஆண்டில் 2,500 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்ற இலக்கை எட்ட நீண்டதூரம் பயணிக்க வேண்டி உள்ளது.

வரி சீர்திருத்தங்களையும், சட்டத் திருத்தங்களையும் நிதியமைச்சர் கொண்டுவந்துள்ளார். இது நடுத்தர வகுப்பினருக்கு நிவாரணம் அளிக்கும். இதன்மூலம், தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாகும். பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டுவரும். தனியார் முதலீடுகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும். தனிநபர் வருமானவரியை குறைக்கும் நடவடிக்கைகள் முக்கியத்துவமானது. இது, நடுத்தர வகுப்பினரை அதிக அளவில் கவர்ந்துள்ளது. வருமானவரியை 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது தைரியமான நடவடிக்கை. இந்த முடிவால், இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான வரிசெலுத்துவோர் பலனடைவார்கள். கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அரசியல் கட்சிகளுக்கான நிதி என்பது எப்போதுமே விவாதத்துக்குரியது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எப்போதுமே கண்காணிப்பில் உள்ளன. தேர்தல் நிதி தொடர்பாக நிதியமைச்சர் கொண்டுவந்துள்ள புதிய திட்டம், கறுப்புப் பணத்துக்கு எதிரான நமது போராட்டத்தில் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுடன் இணைந்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. சர்வதேச அளவில் போட்டியிடுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. வரி அளவை குறைத்தால், நமது சிறு தொழில் நிறுவனங்களில் சுமார் 90 சதவீத அளவுக்கு பயனடையும். எனவே, சிறு தொழில் நிறுவனங்களின் வரையறையை அரசு மாற்றியமைத்துள்ளது. அவர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளோம். மேலும், வரிவிகிதத்தை 30%-லிருந்து 25%-ஆக குறைத்துள்ளோம். இதன்மூலம், 90%-க்கும் அதிகமான நமது சிறு தொழில் நிறுவனங்கள் பயனடையும். இந்த முடிவு, நமது சிறு தொழில் நிறுவனங்கள், சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு பெரிய அளவில் உதவும் என்று நான் நம்புகிறேன்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமான படியாக இந்த நிதிநிலை அறிக்கை திகழ்கிறது. இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவும். குடிமக்களுக்கு தரமான வாழ்க்கை கிடைப்பதை உறுதிப்படுத்த, முடிந்தவரை சிறந்த கல்வி வாய்ப்புகள், சுகாதாரம் மற்றும் வீட்டுவசதியை அளிக்க முடியும். இது நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்காமலேயே, நடுத்தர மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் முயற்சி.

இது நமது முயற்சிகளின் வெளிப்பாடு தான். இது நமது நாடு மாறிவரும் வேகத்துக்கு ஏற்ப உத்வேகத்துடன் இருக்கும். இந்த நிதிநிலை அறிக்கை, நமது எதிர்பார்ப்புகள், நமது கனவுகள் மற்றும் நமது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பவற்றுடன் தொடர்புடையது. இதுவே நமது புதிய சந்ததியினரின் எதிர்காலம். நமது விவசாயிகளின் எதிர்காலம். எதிர்காலம் (future) என்று நான் கூறும்போது, அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பொருள் உண்டு. Future என்ற வார்த்தையில் F என்பது விவசாயிகள் (farmer), u என்பது தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டவர்கள், பெண்கள் உள்ளிட்டோரைக் கொண்ட வறிய நிலையில் இருப்பவர்களை (Underprivileged) குறிப்பிடுகிறது. T என்பது நவீன இந்தியாவின் கனவான வெளிப்படைத்தன்மை (Transparency), தொழில்நுட்ப மேம்பாடு (Technology Upgradation) ஆகியவற்றை குறிப்பிடுகிறது. U என்பது நகர்ப்புற புத்துயிரூட்டல் – நகர்ப்புற மேம்பாட்டை (Urban Rejuvenation –the urban development) குறிக்கிறது. R என்பது ஊரக வளர்ச்சி (Rural Development), e என்பது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு (Employment for youth), தொழில்முனைவோர் திறன் (Entrepreneurship), புதிய வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கவும், இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் வலுப்படுத்துதல் (Enhancement) ஆகியவற்றை குறிப்பிடுகிறது. நிதிநிலை அறிக்கையில் இந்த எதிர்காலத்தை (FUTURE) அளித்த நிதியமைச்சருக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிதிநிலை அறிக்கை, அரசின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செல்லும், நம்பிக்கைக்கான புதிய சூழலை உருவாக்கும் மற்றும் இந்த நாடு புதிய உச்சத்தை எட்டுவதற்கு உதவும் என்பதே எனது நம்பிக்கை. மீண்டும் ஒரு முறை, இந்த நிதிநிலை அறிக்கைக்காக நிதியமைச்சருக்கும், அவரது குழுவினருக்கும் எனது மனமுவந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.