பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை 2016ல் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாம் பாலின மக்களின் உரிமை பாதுகாப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவின் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்கு அரசு வழிவகை செய்துள்ளது. ஏராளமான மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பயனளிக்கும் வகையில், அவர்களுக்கு எதிராக சமூகத்தில் நிலவும் வெறுப்பு, தயக்கம், கேலி ஆகியவற்றைக் களைந்து பொதுச்சமூகத்தில் அவர்களையும் ஒரு அங்கமாக இணைக்கும் பணியை இந்த மசோதா நிறைவேற்றும். அவர்களும் இந்த சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் சிறப்பானதொரு வாழ்க்கையை வாழ இந்த மசோதா வழிசெய்யும்.
ஆண், பெண் என பொதுவான வரையறையில் அடக்க முடியாததால் சமுதாயத்தின் மிகவும் பின்தங்கிய சமூகங்களில் ஒன்றாக மூன்றாம் பாலின சமூகம் இருக்கிறது. எனவே கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற விஷயங்களில் அவர்களுக்கான உரிமைகள் ஒதுக்கவும், மறுக்கவும் படுகிறது.
இந்த மசோதா அப்படியான பிரச்சினைகளைக் களைந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்யும். மூன்றாம் பாலினத்தவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மத்திய/மாநில அரசுகள் கூடுதல் கவனத்துடன் அணுகவும் இந்த மசோதா வழிசெய்யும்.