Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

11-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே சீன அதிபர் திரு ஸீ ஜின்பிங்குடன் பிரதமர் சந்திப்பு


பிரேசிலியாவில் நடைபெறும் 11-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி சீன அதிபர் திரு ஸீ ஜின்பிங்கை நவம்பர் 13 ஆம் தேதி சந்தித்தார்.

சென்னையில் இரண்டாவது முறைசாரா உச்சிமாநாட்டில் தம்மை விருந்தினராக வரவேற்றதற்காக அதிபர் திரு ஸீ ஜின்பிங், பிரதமருக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார். பிரதமர் மோடியும், இந்திய மக்களும் தமக்கு அளித்த வரவேற்பை தம்மால் மறக்க முடியாது என்று அவர் கூறினார். சீனாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாதாரண முறையிலான 3-வது உச்சிமாநாட்டிற்கு வருகை தருமாறு பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த உச்சிமாநாட்டிற்கான தேதி மற்றும் இடம் பின்னர் இருநாடுகளின் வெளியுறவுத்துறை அலுவலகங்களால் தீர்மானிக்கப்படும்.

வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான விசயங்களில் நெருங்கிய பேச்சுவார்த்தையைப் பராமரிப்பது அவசியம் என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டன. ஷாங்காயில் அண்மையில் முடிவடைந்த சீனா இறக்குமதி, ஏற்றுமதி கண்காட்சியில் இந்தியா பெருமளவில் பங்கேற்றதற்காக அதிபர் திரு ஸீ பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்த புதிய உயர்மட்ட நடைமுறையை மேற்கொள்வதற்கான கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இருநாடுகளுக்கு இடையிலான ராஜீய உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 70 ஆவது ஆண்டை அடுத்த ஆண்டு கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து இருதலைவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். இது மக்களுக்கு இடையிலான உறவுகளை அதிகரிக்கும் என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

எல்லை தொடர்பான விசயங்களில் சிறப்பு பிரதிநிதிகளின் மேலும் ஒரு சந்திப்பு அவசியம் என்று இருதலைவர்களும் குறிப்பிட்டனர். எல்லைப் பகுதிகளில் அமைதியையும், பாதுகாப்பையும் பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

உலக வர்த்தக அமைப்பு, பிரிக்ஸ், ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார கூட்டுறவு உள்ளிட்ட பலதரப்பட்ட விசயங்கள் குறித்து இருதலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.