Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

103வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை

103வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை

103வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை

103வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை

103வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை

103வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை

103வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் உரை


மைசூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 103வது அறிவியல் மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த ஆண்டு அறிவியல் மாநாட்டின் ஆய்வுப் பொருள் “இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்”.

103வது அறிவியல் மாநாட்டு பேரவைக் கூட்டத்தின் நடவடிக்கைகளையும், 2035ம் ஆண்டுக்கான திட்டம் என்ற ஆவணத்தையும் பிரதமர் வெளியிட்டார். 2015-16 ஆண்டுக்கான இந்திய அறிவியல் மாநாட்டு விருதுகளையும் பிரதமர் வழங்கினார்.
அந்த மாநாட்டில் பிரதமரின் உரை வருமாறு :

கர்நாடக மாநில ஆளுநர் திரு வாஜுபாய் வாலா அவர்களே, கர்நாடக மாநில முதல்வர் திரு சித்தாராமையா அவர்களே, என் அமைச்சரவை சகாக்களான டாக்டர் ஹர்ஷவர்தன் அவர்களே, திரு ஒய்.எஸ்.சவுத்ரி அவர்களே, பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவ் அவர்களே, பேராசிரியர் ஏ.கே. சக்சேனா அவர்களே, பேராசிரியர் கே.எஸ். ரங்கப்பா அவர்களே, நோபல் பரிசு பெற்றவர்களே, விருதுகள் பெற்றவர்களே, விஞ்ஞானிகளே, மற்றும் பிரதிநிதிகளே.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னணி தலைவர்களோடு இந்த ஆண்டை தொடங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தியாவின் எதிர்காலத்துக்கான நம்பிக்கை, உங்களின் மீதான நம்பிக்கையில் இருந்து வருகிறது.

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டில், 103வது அறிவியல் மாநாட்டில் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்தியாவின் மிக முக்கிய தலைவர்கள், இந்த சீர்மிகு நிலையத்தின் வழியே சென்றிருக்கிறார்கள். இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவ் அவர்களுள் அடக்கம். அறிவியல் மாநாடு மற்றும் மைசூர் பல்கலைக்கழகத்தின் வரலாறும் அந்த காலகட்டத்திலேயே தொடங்கியது. அந்த காலகட்டம் இந்தியாவில் ஒரு புதிய விடியலின் காலகட்டம். அது விடுதலையை மட்டும் கேட்கவில்லை. மனிதகுல முன்னேற்றத்தையும் கேட்டது.

அது இந்தியாவின் சுதந்திரத்தை மட்டும் கோரவில்லை. தனது சொந்த மனித வளத்தாலும், அறிவியல் திறனாலும், தொழில் வளர்ச்சியாலும் சொந்தக் காலில் நிற்கும் இந்தியாவை அது கேட்டது. ஒரு சிறந்த தலைமுறை இந்தியர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்த பல்கலைக்கழகம் ஒரு உதாரணம். நாம் தற்போது அதிகாரமளித்தல் மற்றும் வாய்ப்புகளுக்கான புரட்சியை உருவாக்கியுள்ளோம். மனிதகுல மேம்பாட்டுக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை நம்பி உள்ளோம்.

கண்டுபிடிப்பு மற்றும் அறிவுத் தேடல் மற்றும் சவால்களை சந்திப்பது ஆகிய மனிதனின் இயல்பான மனித குணங்களாலேயே உலகம் முன்னேறியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இதற்கு சிறந்த உதாரணம். அவர் வாழ்வு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியது. மனித இனத்துக்கான அளவில்லா கருணையும், அக்கறையும் கொண்டது அவரது மனது. அவரைப் பொறுத்தவரை, அறிவியலின் உச்சபட்ச நோக்கம் பலவீனமானவர்களையும், ஏழைகளையும், இளைஞர்களையும் முன்னேற்றுவது. அவரது வாழ்வின் நோக்கம், சுயசார்புள்ள, தன்னிறைவு பெற்ற, உறுதியான மற்றும் தன் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்தியா. இந்த ஆண்டு மாநாட்டுக்கான உங்களின் கருப்பொருள் அதற்கு ஏற்றவாறு உள்ளது.

பேராசிரியர் ராவ் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் மற்றும் உங்களைப் போன்ற விஞ்ஞானிகள்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் இந்தியாவை முன்னிலையில் வைத்திருக்கிறீர்கள்.

நமது வெற்றி, அணுவின் துகளில் இருந்து, விண்வெளி வரை உள்ளது. நாம் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து, சிறந்த வாழ்வுக்கான உறுதியை உலகில் உள்ள மற்றவர்களுக்கும் அளித்துள்ளோம். நமது மக்களின் லட்சியங்கள் உயர்கையில் நமது முயற்சிகளின் அளவையும் உயர்த்த வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, நல்ல நிர்வாகம் என்பது, வெளிப்படைத்தன்மை, முடிவெடுத்தல் மற்றும் பொறுப்புணர்வோடு முடிந்து விடுவது அல்ல. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நமது விருப்பங்களிலும், தந்திரங்களிலும் இணைப்பதே.

நமது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், பொது சேவைகள் மற்றும் சமூக பலன்கள் ஏழைகளை அடையும் வகையில் விரிவாகி வருகின்றன. தேசிய விண்வெளி மாநாட்டில், நமது மக்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடிய நிர்வாகம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட 170 செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

கண்டுபிடிப்புகளையும், தொழில் முயற்சிகளையும் ஊக்கப்படுத்துவதற்காக புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பக் கூடங்களை உருவாக்கி வருகிறோம். கல்வி நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள அறிவியல் துறைகளுக்கு அறிவியல் தணிக்கையை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன்.

மத்திய மாநில உறவுகளை முடிவுசெய்யும் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி நிலையங்கள் இடையே அதிக ஒத்துழைப்புக்கு ஊக்கம் கொடுக்கப்படுகிறது. அறிவியல் துறையின் வளங்களை அதிகரித்து, அவற்றை நமது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்த முயற்சிப்போம். இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கான தரத்தை உயர்த்தி, இந்தியா ஆராய்ச்சிக்கு ஏற்ற நாடு என்று கூறும் வகையில் அறிவியல் நிர்வாகத்தை தரம் உயர்த்துவோம்.

அதே நேரத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மட்டுமே நமது அறிவியலின் நோக்கமாக இருக்கக் கூடாது. கண்டுபிடிப்புகள் அறிவியலின் தன்மையை உயர்த்த வேண்டும். குறைந்த செலவிலான கண்டுபிடிப்புகள், மக்களிடமிருந்து நிதி திரட்டுதல் ஆகியவை அறிவியல் தொழில்துறையை முன்னேற்றுவதற்கான வழிகளாகும்.

அணுகுமுறையில் புதிய வடிவங்கள் என்பன அரசின் பொறுப்பு மட்டும் கிடையாது. அது தனியார் துறை மற்றும் கல்வியாளர்களின் பொறுப்பாகும். வளங்கள் குறைவாகவும், போட்டிகள் அதிகமாகவும் உள்ள ஒரு உலகில், நமது முன்னுரிமைகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். சுகாதாரம், ஏழ்மை, எரிசக்தி மற்றும் பொருளாதாரம் போன்ற பல்வேறு சவால்கள் உள்ள இந்தியாவில், இது மிக முக்கியமாகும்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும், கடந்த ஆண்டில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு முக்கியமான சவால் குறித்து நான் உங்களிடம் இன்று பேசப்போகிறேன். அது உலகின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வது மற்றும் இந்த கோளத்திற்கான எதிர்காலத்தை நிலைபடுத்துவது.

2015ல் உலகம் இரண்டு வரலாற்றுப் பூர்வமான அடிகளை எடுத்து வைத்தது. கடந்த செப்டம்பரில், 2030க்கான வளர்ச்சித் திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது. சுற்றுச் சூழல் மற்றும் இருக்கும் இடத்துக்கான பாதுகாப்போடு 2030க்குள் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை முக்கிய இலக்காக ஐக்கிய நாடுகள் சபை வைத்தது.

கடந்த நவம்பரில், பாரீசில் பருவநிலை மாற்றம் குறித்த ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட உலகம் ஒன்று கூடியது. நாம் அடைந்தது இதற்கு சமமான வகையில் முக்கியமானதாகும். பருவநிலை மாற்றம் குறித்த விவாதத்தில், புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்பத்தையும் நாம் எடுத்து வந்தோம்.

இலக்கு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிப்பது மட்டும் பயன்தராது. சுத்தமான எரிசக்திக்கு மாறுவதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். புதிய கண்டுபிடிப்புகள் பருவநிலை மாற்றத்திற்கு மட்டும் முக்கியமானது அல்ல. பருவநிலை நீதிக்கும் முக்கியமானது என்பதை நான் பாரீசில் வலியுறுத்தினேன். வளர்ந்த நாடுகள் தங்கள் வசம் உள்ள கார்பன் வெளியை வளரும் நாடுகளுக்கு விட்டுத் தர வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இதன் பொருட்டு, ஆராய்ச்சியும் புதிய கண்டுபிடிப்புகளும் அவசியம். அப்போதுதான் சுத்தமான எரிசக்திக்கான தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைக்கும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

பாரீசில், அதிபர் ஹோலாண்டே, அதிபர் ஒபாமா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாநாடு ஒன்றில் சந்தித்தோம்.

புதிய கண்டுபிடிப்புகளில் முதலீட்டை இரட்டிப்பாக்கி, உலக நாடுகளின் தனியார் மற்றும் அரசுத் துறைகளோடு இணைந்து உலக கூட்டுறவை உருவாக்க உறுதிபூண்டோம்.

நாம் எரிசக்தி உற்பத்தி செய்யும் முறை, பகிர்மானம் செய்யும் முறை, பயன்பெறும் முறை ஆகியவை குறித்து ஆராய உலகின் 30 முதல் 40 பல்கலைக்கழகங்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற திட்டதுக்கான ஆலோசனையை நான் கூறினேன். இத்திட்டங்களை ஜி20 மாநாட்டிலும் விவாதிப்போம்.

மறுசுழற்சி எரிசக்தியை மலிவாக்குவதற்கும், நம்பிக்கையுள்ளதாக்குவதற்கும், இணைப்பு க்ரிட்டுகளோடு எளிதில் தொடர்புபடுத்துவதற்கும், புதிய கண்டுபிடிப்புகள் தேவை. 2022ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் மறு சுழற்சி எரிசக்தி என்ற இந்தியாவின் இலக்கை அடைய இது மிகவும் தேவை.

நிலக்கரி போன்ற படிம எரிபொருட்களை சுத்தமாகவும் திறமையாகவும் கையாள வேண்டும். கடல் அலை முதல் புவிவெப்ப எரிசக்தி வரை புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய வேண்டும்.

தொழில்மயமாக்கலுக்கு அடிப்படையாக இருந்த எரிசக்தி ஆதாரங்கள் நமது கோளத்தையே ஆபத்துக்குள்ளாக்கி உள்ள நிலையில், வளர்ந்த நாடுகள் கோடிக்கணக்கான மக்களுக்கு வளமளிக்க முயலும் நிலையில், உலகம் சூரிய ஒளியை எதிர்காலத்துக்கான எரிசக்தியாக பார்க்க வேண்டும். பாரீசில், உலகில் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளோடு இணைந்து இந்தியா ஒரு சூரிய ஒளி கூட்டணியை உருவாக்கியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சுத்தமான எரிசக்தி நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு உதவ வேண்டும். மேலும் அது பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் உதவ வேண்டும்.

அனைத்து பருவநிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில், நமது விவசாயத்தை உருவாக்க வேண்டும். நமது வானிலை, பல்லுயிர்கள், பனிப்பாறைகள், கடல் போன்றவற்றில் பருவநிலை மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, அதற்கேற்றவாறு நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

அதிகரித்து வரும் நகரமயமாக்கலின் சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். இது ஒரு நிலையான உலகை அமைப்பதற்கான அடிப்படையாகும்.

மனிதகுல வரலாற்றில் முதன் முறையாக நாம் ஒரு நகர்புற நூற்றாண்டில் உள்ளோம். இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்களில் வாழும். மூன்று பில்லியனுக்கு சற்று குறைவான மக்கள், ஏற்கனவே உள்ள 3.5 பில்லியன் மக்களோடு இணைவர். இந்த இணைப்பில் 90 சதவிகிதம் வளரும் நாடுகளில் நிகழும்.

ஆசியாவின் பல்வேறு நகரங்களின் மக்கள் தொகை, நடுத்தர அளவுள்ள நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும். 2050ல், இந்தியாவின் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் நகரங்களில் வசிப்பார்கள். 2025ம் ஆண்டில் உலகின் நகர்ப்புற மக்கள் தொகையில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் நகரங்களில் வசிப்பார்கள். உலக நகர்ப்புற மக்கள் தொகையில் 40க்கும் அதிகமானோர் சேரிகளிலும், ஒழுங்கமைக்கப் படாத இடங்களிலும் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதன் காரணமாக, அவர்கள் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுகாதார சிக்கல்களை சந்திக்கிறார்கள். நகரங்களே பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் வளத்துக்கான உந்துசக்தியாக திகழ்கின்றன.

உலகின் எரிசக்தித் தேவையில், நகரங்கள் மூன்றில் இரண்டு பங்கை பயன்படுத்தி, 80 சதவிகித கரியமில வாயுவை வெளிப்படுத்துகின்றன.

இதன் காரணமாகவே நவீன நகரங்களின் தேவை மீது அழுத்தம் அளித்து வருகிறேன். நவீன நகரங்கள் என்பன திறனுள்ள, பாதுகாப்பான, அனைத்து சேவைகளும் கிடைக்கக் கூடிய, இணைப்புள்ள நகரமாக மட்டும் உருவாக்கப்படுவதில்லை. அவை நமது பொருளாதார முன்னேற்றத்துக்கான வாகனமாகவும், ஆரோக்கியமான வாழ்வுக்கான சொர்க்கபுரியாகவும் உருவாக வேண்டும்.

நமது இலக்குகளை அடைய வலுவான கொள்கைகள் வேண்டும். இதற்கான தீர்வுகளை பெற நாம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை நம்பி உள்ளோம். நகர்ப்புற திட்டமிடலை உள்ளுர் சுற்றுச் சூழல் மற்றும் பாரம்பரியத்தை புரிந்து கொள்ளும் விதத்திலும், போக்குவரத்தக்கான தேவையை குறைக்கும் விதத்திலும், நகர்தலை அதிகப்படுத்தும் விதத்திலும், நெரிசலை குறைக்கும் விதத்திலும் திட்டமிட வேண்டும்.

நமது பெரும்பாலான நகர உட்கட்டமைப்புகள் இனிதான் கட்டப்பட வேண்டும். அறிவியல் முன்னேற்றத்துடன் உள்ளூர் பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்தி, நமது கட்டிடங்களை எரிசக்தி திறனுள்ளதாக அமைக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, கழிவுகளை கட்டுமானத்துக்கு பயன்படுத்துதல், மற்றும் கழிவுநீர் மறுசுழற்சி போன்றவற்றுக்கான வழிமுறைகளை நாம் ஆராய வேண்டும்.

நகர்புற வேளாண்மை, மற்றும் சுற்றுச் சூழலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நமது குழந்தைகள் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளாலும், அறிவியல் அடிப்படையிலுமான தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும்.

இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் விதமாக நமது நகரங்களையும் வீடுகளையும் மாற்றுவதற்கு உங்களின் ஆலோசனைகள் வேண்டும். இந்த சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையிலான வீடுகளை மலிவாக கட்ட அது உதவி செய்யும்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

இந்த கோளத்தின் நிலையான எதிர்காலம் நாம் பூமியில் செய்வது மட்டுமல்ல நாம் நமது கடல்களை எப்படி பராமரிக்கிறோம் என்பதையும் பொறுத்தே. நமது கோளத்தை கடல்கள் 70 சதவிகிதம் ஆக்கிரமித்துள்ளன. 40 சதவிகிதம் மனிதர்கள் ஆக்கிரமித்துள்ளன. உலகின் பெரிய நகரங்களில் 60 சதவிகிதம் 100 கிலோமீட்டர் கடற்கரையில் அமைந்துள்ளது.

நமது பொருளாதாரங்களை வழிநடத்தும் வகையில் கடல்கள் முக்கியமான பங்கை வகிக்கும் காலகட்டத்தில் உள்ளோம். அவற்றின் நிலையான பயன்பாட்டின் மூலமாக, நாம் வளத்தையும், சுத்தமான எரிசக்தியையும், புதிய மருந்துகளையும், மீன் வளத்தையும் தாண்டிய உணவுப் பாதுகாப்பையும் பெற முடியும். இதன் காரணமாகத்தான் நான் சிறிய தீவு நாடுகளை, பெரிய கடல் நாடுகள் என்று குறிப்பிடுகிறேன்.

இந்தியாவின் எதிர்காலத்துக்கு கடடல் முக்கியமானது. 1300 தீவுகள், 7500 கிலோ மீட்டர் கடற்கரை, 2.4 மில்லியன் சதுர கிலோமீட்டர் பிரத்யேக பொருளாதார மண்டலம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் காரணமாகத்தான் நாம் கடந்த வருடத்தில், கடல் பொருளாதாரம் அல்லது நீல பொருளாதாரத்தின் மீது நமது கவனத்தை திருப்பியுள்ளோம்.

கடல் உயிரியல் மற்றும் நுண்ணுயிரியல் தொடர்பான ஆராய்ச்சி மையம் ஒன்றை உருவாக்குவதோடு, கடற்கரை மற்றும் தீவுகளில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு நாடுகளோடு நாம் கடல் அறிவியல் மற்றும் கடல் பொருளாதாரம் தொடர்பாக ஒப்பந்தங்கள் போட்டுள்ளோம். இந்த ஆண்டு புது தில்லியில், “பசிபிக் நாடுகள் மற்றும் கடல் பொருளாதாரம்” என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்த உள்ளோம்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

கடல்களைப் போலவே ஆறுகளும் மனிதகுல வரலாற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளன. நதிகளாலேயே நாகரீகங்கள் உருவாகியுள்ளன. நமது எதிர்காலத்துக்கும் நதிகள் ஒரு முக்கிய அடிப்படையாக விளங்கும். நமது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கும், சுத்தமான எதிர்காலத்துக்கும், பொருளாதார வாய்ப்புகளுக்கும், பாரம்பரிய மீட்புக்கும், நதிகளின் மீட்டெடுப்பு ஒரு முக்கிய அடிப்படையாக உள்ளது. இதை அடைய ஒழுங்குமுறை, முதலீடுகள், மேலாண்மை ஆகியன தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் இதில் தொழில்நுட்பத்தையும், பொறியியலையும், புதிய கண்டுபிடிப்புகளையும் இணைத்தால்தான் நாம் வெற்றிபெற முடியும். நதிகளை சுத்தப்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை எதிர்காலத்திலும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை அடைய அறிவியல் அடிப்படையிலான புரிதலும், நகரமயமாக்கலின் தாக்கத்தின் புரிதலும், விவசாயம், தொழில்மயமாதல் மற்றும் நிலத்தடி நீரை பயன்படுத்துவதால், ஆற்றுநீர் சூழல் மாசுபடுதல் ஆகியவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆறுகள், இயற்கையின் ஆன்மா. அவற்றை மீட்டெடுப்பது இயற்கையை மீட்டெடுப்பதன் ஒரு பகுதி.

இந்தியாவில் நாம் மனிதத்தை இயற்கையின் ஒரு பகுதியாக பார்க்கிறோம். அதற்கு வெளியேயோ, அதை விட மேலானதாகவோ அல்ல. இயற்கையின் பல்வேறு வடிவங்களில் தெய்வத்தன்மையை பார்க்கிறோம்.

இதனால் இயற்கை பாதுகாப்பு நமது புராதான கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளது. இது நமது எதிர்காலத்துக்கும் அவசியமானது.
சுற்றுச்சூழல் அறிவில் இந்தியாவுக்கு ஒரு வளமையான பாரம்பரியம் உண்டு. நமது அறிவியல் முறைகளிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் வேரூன்றியுள்ளன.
மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

இயற்கைக்கும் மனித இனத்துக்கும் இடையே உள்ள பிணைப்பை நாம் மீட்டெடுக்க வேண்டுமானால், நம் பாரம்பரிய அறிவை முழுமையாக பயன்படுத்த வேண்டும். உலகெங்கும் உள்ள சமூகங்கள் காலங்காலமாக சேர்த்து வைக்கப்பட்ட அறிவை பயன்படுத்தி பயனடைந்திருக்கிறார்கள். மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவை நாமும் ஒருங்கிணைக்க வேண்டுமென்றால் நமது பாரம்பரிய ஞானத்தை நாமும் மீட்டெடுக்க வேண்டும். நமது பொருளாதார, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வை அவை வைத்துள்ளன. ஆனால் இன்றைய உலகமயமான சூழலில் நமது பாரம்பரிய ஞானம் அழிந்து வரும் ஆபத்து இருக்கிறது.

நமது பாரம்பரிய ஞானத்தைப் போலவே, அறிவியலும் மனித அனுபவத்தாலும், இயற்கை ஆய்வினாலும் வளர்ந்துள்ளது. ஆகையால், மனித இனத்துக்கான அனைத்துத் தீர்வுகளையும் கொண்டது அறிவியல் மட்டுமே என்று கருத வேண்டியதில்லை.
நமது பாரம்பரிய ஞானத்துக்கும், நவீன அறிவியலுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்கம் வகையில், உள்ளூர் வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும்.

விவசாயத்தில் நமது நிலங்கள் அதிக விளைச்சலை தருவதற்காக முயலும் அதே நேரத்தில், நமது நீர் பயன்பாட்டை குறைக்கும் அதே நேரத்தில், விளைபொருட்களின் சத்துக்களை அதிகரிக்கும் அதே நேரத்தில், நமது பாரம்பரிய நுட்பங்களை பயன்படுத்தி, உள்ளுர் முறைகளை பயன்படுத்தி, உரமில்லா விவசாயத்தில் ஈடுபட்டு, விவசாயம் அதிக எதிர்ப்பு சக்தியோடு உள்ளவாறு உருவாக்க வேண்டும்.

சுகாதாரத் துறையில், நவீன மருத்துவம் சுகாதாரத்தை மாற்றியுள்ளது. அதே நேரத்தில் நாம் அறிவியல் வழிமுறைகளை நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆராய பயன்படுத்த வேண்டும். நமது வாழ்க்கை முறையை மாற்றி, நல்வாழ்வு பெற யோகாசனத்தை பயன்படுத்த வேண்டும். நமது வாழ்க்கை முறை காரணமாக உருவாகும் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக் கொண்டு, மனித உயிர்களை காப்பதற்கும், பொருளாதார செலவினங்களை தவிர்ப்பதற்கும் இதுபெருவகையில் உதவும்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,

ஒரு தேசமாக நாம் பல உலகங்களில் வாழ்கிறோம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளில் நாம்தான் உலகத்தின் எல்லை. அதே நேரத்தில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் பலர், நம்பிக்கை தரக்கூடிய, வாய்ப்புகள் உள்ள, சமத்துவம் உள்ள ஒரு வாழ்வை எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, நாம் வரலாறு காணாத அளவு வேகத்தில் செயல்பட வேண்டும்.

நமது வளமான பாரம்பரியத்திலிருந்து, நமது உலகத்திற்கான நமது உறுதியையும், வயதையும் கணக்கில் கொண்டு, ஒரு நிலையான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும். உலகின் ஆறில் ஒரு பங்கு மனித குலத்தின் வெற்றியானது, உலகின் நிலையான வளர்ச்சி மற்றும் எதிர்காலத்துக்கு அடிப்படையாக இருக்கும். உங்களின் தலைமை மற்றும் ஆதரவோடுதான் நாம் இந்த முன்னேற்றத்தை அடைய முடியும்.

விக்ரம் சாராபாயின் வார்த்தைகளான “விஞ்ஞானிகள் தங்களின் சிறப்பு வாய்ந்த துறைகளுக்கு வெளியே உள்ள பிரச்சினைகளை ஆராய வேண்டும்” என்பதன் மூலம் நாம் உணர முடியும்.

விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும், நான் ஐந்து E என்று அழைப்பதை அவர்களின் ஆராய்ச்சியின் அடிப்படையாக கொண்டால், அறிவியலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

Economy : பொருளாதாரம் : செலவு அதிகமில்லாத தீர்வுகளை கண்டறிய வேண்டும்.

Environment : சுற்றுச் சூழல் : நமது கார்பன் அடிச்சுவடு எளிதாகவும், சுற்றுச்சூழலில் அதன் தாக்கம் குறைவானதாகவும் இருக்க வேண்டும்.

Energy : எரிசக்தி : நமது வளத்துக்கு தேவையான எரிசக்தி நமது வானத்தை நீலமாகவும், நமது பூமியை பசுமையாகவும் வைத்திருக்க வேண்டும்.

Empathy : கருணை : நமது முயற்சிகள் நமது கலாச்சாரத்துக்கும், சூழலுக்கும், சமூக சவால்களுக்கும் ஏற்ற முறையில் இருக்க வேண்டும்.

Equity : அனைவருக்கும் பங்கு : அறிவியல் வளர்கையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பலவீனமானவர்களின் நலனில் அக்கறை

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் “பொது சார்பியலின் அடிப்படைகள்” என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை 1916ல் பதிப்பித்து இந்த ஆண்டோடு நூறாண்டுகள் நிறைவடைவதால், அறிவியலுக்கு இது ஒரு முக்கியமான ஆண்டு. அவரது சிந்தனைகளை மனிதம் எப்படி வடிவமைத்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். “மனிதன் மீதான அக்கறை மற்றும் அவனது எதிர்காலம் ஆகியவையே அனைத்து கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படையாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியதை நாம் நினைவுகூற வேண்டும்.

நாம் பொதுவாழ்வில் இருந்தாலோ, அல்லது தனிப்பட்ட குடிமகனாக இருந்தாலோ, அல்லது தொழில் செய்பவராக இருந்தாலோ, அல்லது அறிவியலை ஆராய்பவராக இருந்தாலோ, இந்த கோளத்தை நமது வருங்காலத்துக்காக பாதுகாப்பாக விட்டுச் செல்வதை விட நமக்கு பெரிய கடமை இருக்க முடியாது.

அறிவியலின் பல்வேறு பிரிவுகள், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவை, இந்த பொது நோக்கத்தின் பின்னே இணையட்டும்.

நன்றி