Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

1.4.2016 முதல் தேசிய சிறுசேமிப்பு நிதியில் முதலீடு செய்வதிலிருந்து மாநிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


 

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை அருணாச்சலப் பிரதேசம், தில்லி, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், (சட்டமன்றம் உள்ள) துணை நிலை  மாநிலங்கள் தவிர இதர மாநிலங்களுக்கும் (சட்டமன்றம் உள்ள) துணைநிலை மாநிலங்களுக்கு தேசிய சிறுசேமிப்பு நிதியில் முதலீடு செய்வதிலிருந்து 1.4.2016லிருந்து விலக்களிக்க தனது ஒப்புதலை வழங்கியது. தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து ஒரே தடவைக் கடனாக ரூ. 45,000 கோடியை இந்திய உணவுக் கழகத்திற்கு, அதன் உணவு தானிய மானியத் தேவைகளை சமாளிப்பதற்காக, வழங்கவும் அது ஒப்புதல் அளித்தது.

 

இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:

 

அ) அருணாச்சலப் பிரதேசம், தில்லி, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், (சட்டமன்றம் உள்ள) துணை நிலை  மாநிலங்கள் தவிர இதர மாநிலங்களுக்கும் (சட்டமன்றம் உள்ள) துணைநிலை மாநிலங்களுக்கு தேசிய சிறுசேமிப்பு நிதியில் முதலீடு செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு தேசிய சிறுசேமிப்பு நிதி வசூலில் 100 சதவீதம் கடனாக வழங்கப்படும். தில்லி, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகியவற்றுக்கு அவற்றின் வசூலில் 50 சதவீதம் கடனாக வழங்கப்படும்.

 

ஆ) இந்திய உணவுக் கழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள கடன் மற்றும் அதற்கான வட்டி செலுத்துவது ஆகியவை உணவு மற்றும் பொதுவிநியோகத்துறையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெறப்பட்ட கடன்களைப் பொறுத்தவரையில் இந்திய உணவுக் கழகம் அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான பொறுப்பு என்பது இந்திய உணவுக் கழகத்திற்கு வழங்கப்படும் உணவு தானியங்களுக்கான மானியத் தொகையின் மீதான முதல் அடமானமாகக் கருதப்படும். மேலும் அது வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து பெற்றுள்ள ரொக்கத்தொகையின் நடப்புக் கடன் அளவு தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து அது பெற்றுள்ள கடன் தொகை அளவிற்கு ஈடான வகையில் குறைக்கப்படும்.

 

இ) இனிவரும் காலத்தில் தேசிய சிறுசேமிப்பு நிதியானது, மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன், இந்திய அரசு செலவுக்கான  பொறுப்பேற்றுக் கொள்கின்ற பொருட்களின் மீதே முதலீடு செய்ய வேண்டும். இதன் தொடர்பான முதல் மற்றும் வட்டி ஆகியவற்றை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.

 

01.04.2016லிருந்து அருணாச்சலப் பிரதேசம், தில்லி, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகியவற்றைத் தவிர இதர மாநிலங்கள் தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து முதலீடுகளைப் பெறுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. தேசிய சிறுசேமிப்பு நிதியின் சார்பாக முதல் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து சட்டரீதியான பொறுப்பை உருவாக்கும் ஒப்பந்தம் இந்திய உணவுக் கழகம், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, மத்திய நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்திடப்படும். இந்திய உணவுக் கழகத்தின் கடன் 2 முதல் 5 ஆண்டுகளுக்குள் சீரமைக்கப்பட்டுவிடும்.

 

தேசிய சிறுசேமிப்பு நிதி முதலீட்டிலிருந்து மாநிலங்கள் விலக்கி வைக்கப்பட்ட பிறகு, இந்திய அரசிடம் முதலீடு செய்வதற்கான தேசிய சிறுசேமிப்பு நிதி அதிகரிக்கும். தேசிய சிறுசேமிப்பு நிதியின் கடன் அதிகமாகக் கிடைக்கும் வாய்ப்பின் விளைவாக இந்திய அரசு சந்தையிலிருந்து கடன் வாங்கும் அளவும் குறையும். எனினும் மாநிலங்கள் சந்தையிலிருந்து கடன் வாங்குவது அதிகரிக்கும். மத்திய அரசு, மாநிலங்கள் ஆகியவற்றிலிருந்து சந்தையில் கடன் தருவதற்கான நிதிக்கான தேவை அதிகரிப்பதால் உருவாகும் எவ்வித வருமான அதிகரிப்பும் ஓரளவிற்கு மட்டுமே இருக்கும். இந்திய உணவுக் கழகத்தின் கடனுக்கான செலவில் ஏற்படும் குறைவு என்பது வட்டி விகிதத்தில் உள்ள வேறுபாட்டிற்கு  சமமானதாக இருக்கும்.  இது உணவு தானியங்களுக்கான மானியச் செலவில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள சேமிப்பில் இது பிரதிபலிக்கும்.

 

தேசிய சிறுசேமிப்பு நிதியின் முதலீட்டிலிருந்து மாநிலங்களை விலக்கி வைப்பதும், கடன் வசதியை விரிவுபடுத்துவதும் கூடுதல் செலவை ஏற்படுத்துவதாக இருக்காது. அதற்குப் பதிலாக, உணவு தானியங்களுக்கான இந்திய அரசின் மானியச் செலவு குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

அருணாச்சலப் பிரதேசம், தில்லி, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகியவை தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து கடன்களை தொடர்ந்து பெறும் அதே நேரத்தில் சந்தையிலிருந்து கடன் வாங்குவதற்குத் தகுதியான இதர 26 மாநிலங்களும் புதுச்சேரி துணைநிலை மாநிலமும் தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து கடன் பெறுவதை நிறுத்திக் கொள்வது என முடிவு செய்துள்ளன.

 

பின்னணி:

 

தேசிய சிறுசேமிப்பு நிதியின் முதலீட்டு செயல்பாடுகளிலிருந்து மாநிலங்களை விலக்கி வைக்க வேண்டும் என 14வது நிதிக் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. பொதுச் சந்தையிலிருந்து வாங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் குறைவாக உள்ள நிலையில் தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெறப்படும் கடன்கள் மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமையாக உள்ளன. 2015 பிப்ரவரி 22-ல் கூடிய கூட்டத்தில் மத்திய அமைச்சரவை இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டதோடு, கூடிய விரைவில் இது தொடர்பான மாநிலங்களுடன் கலந்தாலோசித்து ஆய்வு செய்வது என்றும் முடிவு செய்திருந்தது. அருணாச்சலப் பிரதேசம், தில்லி, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தவிர இதர மாநிலங்கள் தேசிய சிறுசேமிப்பு நிதியின் முதலீட்டிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள ஆர்வம் தெரிவித்தன. 01.04.2016லிருந்து தேசிய சிறுசேமிப்பு நிதியின் நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட மாநிலங்களைப் பொறுத்தவரை அவற்றின் ஈடுபாடு என்பது (14வது நிதிக் கமிஷனின் பரிந்துரைப்படி) 31.03.2016 வரையிலான தேசிய சிறுசேமிப்பு நிதிக்குத் தரவேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்துவது மட்டுமேயாக இருக்கும். 31.03.2016 வரை மாநிலங்கள் தேசிய சிறுசேமிப்பு நிதியிடமிருந்து பெற்றுள்ள கடன்கள் அனைத்தும் 2038-39 நிதியாண்டிற்குள் முற்றிலுமாகத் திருப்பிச் செலுத்தப்படும்.

 

தேசிய சிறுசேமிப்பு நிதி தனது வசூலில் ஒரு பகுதியை, உணவு தானியக் கழகத்திற்கு, அதன் உணவு தானிய மானியத் தேவைகளை சமாளிப்பதற்காக, வழங்கும்.  இது அதன் வட்டிச் செலவைக் குறைக்க இந்திய உணவுக் கழகத்திற்கு உதவி செய்யும். தற்போது இந்திய உணவுக் கழகம் 10.01 சதவீத வட்டியில் ரொக்கக் கடன் அளவின் மூலமும், மதிப்புக் கூட்டப்பட்ட 9.40 சதவீத சராசரி வட்டியில் குறுகிய கால கடன்களையும்  தனது செயல்பாட்டு மூலதன கடன்களை பெற்று வரும் அதே வேளையில் தேசிய சிறுசேமிப்பு நிதி தனது கடன்களுக்கு 8.8 சதவீதம் மட்டுமே வட்டி விதிக்கிறது. இவ்வாறு வட்டி செலுத்துவதில் ஏற்படும் சேமிப்பு இந்திய அரசின் உணவு தானியங்களுக்கான மானியத்தின் சுமையை குறைப்பதாக அமையும்.

******