Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்வீடன் பிரதமருடன், பிரதமர் சந்திப்பு

ஸ்வீடன் பிரதமருடன், பிரதமர் சந்திப்பு


கோபன்ஹேகனில் நடைபெற்ற 2-வது இந்தியா – நார்டிக் உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன்  பிரதமர் திருமதி மக்தலேனா ஆண்டர்சென்-ஐ சந்தித்துப் பேசினார்.  இருதலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தியாவும், ஸ்வீடனும் பொதுவான பண்புகள் அடிப்படையில் நீண்டகாலமாக நெருங்கிய நட்புறவைக் கொண்டிருப்பதுடன்; வலுவான வர்த்தகம், முதலீடு மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு இணைப்புகள்; மற்றும் உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திலும் ஒரே மாதிரியான அணுகுமுறையை  மேற்கொண்டு வருகின்றன. புதுமைக் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், முதலீடு, மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு ஒத்துழைப்புகள், இந்த நட்புறவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.  1-வது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டுக்காக பிரதமர் மோடி 2018-ல் முதன்முறையாக  ஸ்வீடன் சென்ற போது, இருநாடுகளும், விரிவான கூட்டு நடவடிக்கைத் திட்டம் ஒன்றை ஏற்றுக்  கொண்டதுடன், கூட்டு கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டன.

இன்றைய சந்திப்பின்போது, நமது இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருதலைவர்களும் ஆய்வு செய்தனர். தொழில்துறை மாற்றத்திற்கான தலைவர்கள் குழுவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர்கள் மனநிறைவு தெரிவித்தனர். இந்தியா – ஸ்வீடன் கூட்டு சர்வதேச முன்முயற்சியால் தான், குறைந்த கார்பன் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்காக, உலகின் மிகப்பெரிய பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டும் நோக்கில், 2019 செப்டம்பரில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற செயல்திட்டக் குழுவால், தொழில்துறை மாற்றத்திற்கான தலைவர்கள் குழு அமைக்கப்பட்டது. 16 நாடுகள் மற்றும் 19 நிறுவனங்களுடன்  இந்தக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை  தற்போது 35-ஆக அதிகரித்துள்ளது.

புதுமை கண்டுபிடிப்பு, பருவநிலை தொழில்நுட்பம், பருவநிலை செயல்பாடு, பசுமை ஹைட்ரஜன், விண்வெளி, பாதுகாப்பு, விமானப்போக்குவரத்து, ஆர்டிக், துருவ ஆராய்ச்சி, நீடித்த சுரங்கப்பணிகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் வர்த்தக – பொருளாதார உறவுகள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர்.

பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது.

 ——