ஸ்வீடன் பிரதமர் லோஃப்வென் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 16-17 ஏப்ரல் 2018 ஆகிய நாட்களில் அரசுமுறைப் பயணமாக ஸ்டாக்ஹோம் சென்றார்.
பிரதமர் மோடியும் ஸ்வீடன் பிரதமர் லோஃப்வென்னும் ஏப்ரல் 17 அன்று சந்தித்து, 2016ம் ஆண்டு மும்பையில் வெளியிட்ட கூட்டறிக்கையை நினைவுகூர்ந்தனர். இந்த அறிக்கையில் இடம் பெற்ற அம்சங்கள் பெரிதும் நிறைவேற்றப்பட்டது குறித்து வரவேற்பு தெரிவித்த இரு நாட்டுத் தலைவர்களும், ஒத்துழைப்புக்கான ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்த மீண்டும் உறுதியேற்றனர்.
ஜனநாயகத்தின் மீதான நன்மதிப்பு, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளை மதித்தல், பன்முகத்தன்மை மற்றும் விதிமுறைகள் சார்ந்த சர்வதேச நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இந்தியாவும் ஸ்வீடனும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டன. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான 2030ம் ஆண்டுச் செயல்திட்டம், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, மனித உரிமைகள், பாலினச் சமத்துவம், மனிதநேயப் பிரச்சனைகள், சர்வதேச வர்த்தகம் உள்ளிட்ட, இருநாட்டு நலன் சார்ந்த முக்கிய சர்வதேசப் பிரச்சனைகள் குறித்துப் பேச்சு நடத்துவது மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்ற உறுதிப்பாட்டை இருநாட்டுப் பிரதமர்களும் மீண்டும் உறுதி செய்தனர். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேச முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர்கள் இருவரும், பாரீஸ் உடன்படிக்கை மீதான பொதுவான உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினர். மேலும், கூட்டறிக்கையின் அடிப்படையில், பாதுகாப்புக் கொள்கை சார்ந்த பேச்சுவார்த்தைகளை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவில் தொடர்ந்து மேற்கொள்ளவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
ஐ நா மற்றும் இதர சர்வதேச அமைப்புகளில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். 2030ம் ஆண்டுக்கான செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுப்பு நாடுகளுக்கு ஐ நா பொதுச்சபை ஆதரவாக இருக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஐ நா பொதுச் செயலாளர் மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர். ஐ நா பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை உறுதி செய்த இருதலைவர்களும், பாதுகாப்புச் சபையில் உறுப்பு நாடுகளுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் அளித்தல், பொறுப்பேற்பு, வலுவான மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் யதார்த்த நிகழ்வுகளுக்குப் பதிலளிக்க வேண்டியது குறித்தும் விவாதித்தனர். ஐ நா பாதுகாப்புச் சபையில் (2021-22) இந்தியா நிரந்தரமல்லாத உறுப்பினர் ஆவதற்கும், சீரமைக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும் ஸ்வீடன் அளித்த ஆதரவுக்காக அந்நாட்டு பிரதமர் லோஃப்வெனுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சர்வதேச ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு முறைகளை வலுப்படுத்தி, அணுஆயுத ஒழிப்புக்கான நோக்கங்களுக்கு ஆதரவளிப்பது போன்றவற்றில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படவும் இருபிரதமர்களும் உறுதியேற்றனர். சர்வதேச ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா அண்மையில் முக்கியப் பொறுப்பெற்றிருப்பதை வரவேற்ற ஸ்வீடன் பிரதமர், ஆஸ்திரேலியா குழு, வாஸனார் ஏற்பாடு, ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் அணுஆயுத ஏவுகணை ஒழிப்பு தொடர்பான தி ஹேக் நடைமுறைகள் போன்றவற்றிலும் இந்தியாவின் பங்களிப்புக்குப் பாராட்டு தெரிவித்தார். மேலும் அணு எரிபொருள் விநியோக அமைப்பில் இந்தியா உறுப்பினர் ஆவதற்கு ஸ்வீடன் ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு, தீவரவாதக் குழுக்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் அவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுப்பது, பயங்கரவாத வன்முறைகளைத் தடுப்பது போன்றவற்றில் மேலும் ஒற்றுமையும், வலுவான சர்வதேச ஒத்துழைப்பும் தேவை என்றும் இரு பிரதமர்களும் குறிப்பிட்டனர். பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சர்வதேசச் சட்ட நடைமுறைகளை அவ்வப்போது மேம்படுத்தி, மாறிவரும் பயங்கரவாத அச்சுறுத்தலை முறியடிப்பது மற்றும் சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
சர்வதேசச் பயங்கரவாதம் தொடர்பான வரைவுக் கொள்கைகளை விரைவில் இறுதி செய்ய வேண்டுமெனவும் இருநாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் அதிகரிக்க, இந்தியாவும் ஸ்வீடனும் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைப்புகள் மூலம், கீழ்க்காணும் இந்தியா-ஸ்வீடன் கூட்டுச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன :
கண்டுபிடிப்பு
வர்த்தகம் மற்றும் முதலீடு
நவீன நகரங்கள் மற்றும் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து
நவீன, நீடித்த மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
மகளிர் திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்
பாதுகாப்பு
விண்வெளி மற்றும் அறிவியல்
சுகாதாரம் மற்றும் வாழ்வியல் அறிவியல்
தொடர் நடவடிக்கை