Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்வாபிமான் அடுக்குமாடிக் குடியிருப்பு பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

ஸ்வாபிமான் அடுக்குமாடிக் குடியிருப்பு பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்


அனைவருக்கும் வீடு என்ற தமது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, தில்லி அசோக் விஹாரில் உள்ள ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசைப்பகுதி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளுடன்  பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறும்  பயனாளிகளுடன் நடைபெற்ற மனதைத் தொடும் உரையாடலின்போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசின் வீட்டுவசதி முன்முயற்சி கொண்டு வந்துள்ள மாற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். முன்பு குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து, தற்போது நிரந்தர வீடுகளைப் பெறும் வாய்ப்பு பெற்றுள்ள குடும்பங்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை இந்தக் கலந்துரையாடல் பிரதிபலித்தது.

இந்த கலந்துரையாடலின் போது, “உங்களுக்கு வீடு கிடைத்துள்ளதா, எப்படி உணர்கிறீர்கள்?” என்று பயனாளிகளிடம் பிரதமர் கேட்டார். அதற்கு ஒரு பயனாளி “ஆம், ஐயா, வீடு கிடைத்துள்ளது. நாங்கள் அதைப் பெற்றுக் கொண்டோம்” என்று பதிலளித்தார். “நீங்கள் எங்களை ஒரு குடிசையிலிருந்து அரண்மனைக்கு மாற்றியதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்”. என்று அந்தப் பயனாளி கூறினார்.

“எனக்கு வீடு இல்லை. ஆனால் உங்கள் அனைவருக்கும் வீடு கிடைத்துள்ளது.” என்று பிரதமர் பணிவுடன் கூறினார்.

உரையாடலின் போது, ஒரு பயனாளி நன்றியைத் தெரிவித்து, “ஆமாம், ஐயா, உங்கள் கொடி எப்போதும் உயரப் பறக்கட்டும், நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார். இதற்குப் பதிலளித்த பிரதமர், மக்களின் பொறுப்பை வலியுறுத்தி, “நமது கொடி உயரமாக இருக்க வேண்டும். அந்தக் கொடியை அதே இடத்தில் வைத்திருப்பது உங்கள் அனைவரின் பொறுப்பு” என்று கூறினார். பயனாளி தொடர்ந்தார். கடினமான வாழ்க்கையிலிருந்து ஒரு வீட்டிற்கு நகர்ந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அவர், “பல ஆண்டுகளாக, நாங்கள் ராமருக்காக காத்திருந்தோம். அதேபோல், நாங்கள் உங்களுக்காக காத்திருந்தோம். உங்கள் முயற்சிகள் மூலம், நாங்கள் சேரிகளில் இருந்து இந்த கட்டடத்திற்கு நகர்ந்துள்ளோம். இதைவிட வேறென்ன சந்தோஷத்தை நாங்கள் எதிர்பார்க்கப் போகிறோம்? நீங்கள் எங்களுக்கு இவ்வளவு நெருக்கமாக இருப்பது எங்கள் அதிர்ஷ்டம்.” என்று கூறினார்.

ஒற்றுமை, முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, “ஒன்றிணைந்து, இந்த நாட்டில் நாம் நிறைய சாதிக்க முடியும். அது ஊக்குவிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.  

இத்தகைய ஏழைக்  குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், எளிமையான குடும்பத்தில் தொடங்கி, பல்வேறு துறைகளில், குறிப்பாக விளையாட்டில் சிறந்து விளங்கி நாட்டை பெருமைப்படுத்தி வருவதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். அவர்கள் தங்களது கனவுகளை தொடர்ந்து நனவாக்கிக் கொள்ள பிரதமர் ஊக்குவித்தார். ஒரு பயனாளி தான் ஒரு சிப்பாய் ஆக  விரும்புவதாகப் பகிர்ந்து கொண்டார். அதற்கு பிரதமர் மகிழ்ச்சியுடன் ஊக்குவித்து பதிலளித்தார்.

மேலும், பயனாளிகளின் புதிய வீடுகளில் உள்ள வசதிகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். கலந்துரையாடலின்போது, ஒரு இளம் பெண் தனது படிப்பில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். அவர் என்ன ஆக விரும்புகிறார் என்று கேட்டபோது, அவர் நம்பிக்கையுடன் “ஒரு ஆசிரியர் ஆக விரும்புகிறேன்” என்று பதிலளித்தார்.

குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இந்த உரையாடல் அமைந்தது. தொழிலாளர்கள் அல்லது ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களாக பணிபுரியும் குடும்பங்கள் தங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு தற்போது உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். வரவிருக்கும் பண்டிகைகளை தங்கள் புதிய வீடுகளில் எவ்வாறு கொண்டாட திட்டமிட்டுள்ளீர்கள் என்றும் பிரதமர் கேட்டார். சமூகத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சியின் உணர்வை உறுதி செய்து, கூட்டாக கொண்டாடுவோம் என்று பயனாளிகள் பகிர்ந்து கொண்டனர். 

கலந்துரையாடலின் முடிவில், பயனாளிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் மீண்டும் இது தொடர்பாக உறுதியளித்த பிரதமர், இன்னும் நிரந்தர வீடுகளைப் பெறாதவர்களுக்கும் அது கிடைக்கும் என்பது தமது  உத்தரவாதம் என்றார். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் பாதுகாப்பான நிரந்தரக் வீடு கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். 

***** 

PLM/KV