Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்வாகத் முன்முயற்சியின் 20 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் ஏப்ரல் 27 அன்று பிரதமர் பங்கேற்கவுள்ளார்


ஸ்வாகத் முன்முயற்சியின் 20 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் நிகழ்ச்சியில்  ஏப்ரல் 27 அன்று பிற்பகல் 4 மணிக்கு  பிரதமர் திரு  நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளார்.  இந்த நிகழ்வின் போது திட்டப்பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடுவார். இந்த முன்முயற்சியின் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்நது குஜராத் அரசு ஸ்வாகத் திட்டத்தை கொண்டாடுகிறது.

ஸ்வாகத் (தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாநில அளவில் குறைதீர்ப்பில் கவனம் செலுத்துவது) என்பது குஜராத் முதலமைச்சராக இருந்த போது பிரதமரால் 2003 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. தமது மாநில மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, முதலமைச்சரின் முக்கியமான பொறுப்பு என்பதில்  நம்பிக்கை கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தொழில்நுட்ப ஆற்றலை, முதலமைச்சராக இருந்தபோதே மோடி உணர்ந்தது இதில் பிரதிபலித்தது. தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த  குறைதீர்ப்பு திட்டத்தை நாட்டிலேயே  முதலாவதாக அப்போதைய முதலமைச்சர் மோடி தொடங்கிவைத்தார்.

இதன் முக்கியமான நோக்கம், அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையே பாலமாக செயல்படுவதாகும். மேலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  அன்றாடப் பிரச்சனைகளுக்கு விரைவாக, திறமையுடன், காலவரம்புக்குள் குறைதீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. காகிதங்கள் இல்லாமல் வெளிப்படைத்தன்மையோடு எந்தவித குறுக்கீடும் இல்லாமல் பிரச்சனைக்கு தீர்வு காண சிறந்த கருவியாக இந்தத் திட்டம் திகழ்கிறது. ஸ்வாகத்தின் தனித்துவம்  என்பது சாமானிய மனிதர் தனது குறைகளை நேரடியாக முதலமைச்சரிடம் தெரிவிப்பதாகும்.

ஸ்வாகத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 4-வது வியாழக்கிழமை குறைதீர்ப்புக்காக மக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடுவார். இந்தத் திட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர் ஒவ்வொருவருக்கும் தீர்வு பற்றிய தகவல் தெரிவிப்பது உறுதிசெய்யப்படுகிறது. விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளத்தில் கிடைக்கின்றன. இதுநாள் வரை 99% குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

பொது மக்கள் சேவையில் வெளிப்படைத்தன்மை, மக்களுக்கு பதில் சொல்லும் கடமை, பொறுப்புணர்வு ஆகியவற்றை  மேம்படுத்தியதற்காக 2010-ம் ஆண்டில் ஐநா சபையின் பொது மக்கள் சேவை உட்பட கடந்த பல ஆண்டுகளில் இணையவழியிலான ஸ்வாகத் திட்டம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

***

(Release ID: 1919513)

SM/SMB/AG/KRS