10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். நிகழ்வின் போது, ஸ்வமித்வா திட்டம் தொடர்பான ஐந்து பயனாளிகளின் அனுபவங்களை அறிய அவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரைச் சேர்ந்த ஸ்வமித்வா பயனாளியான திரு. மனோகர் மேவாடாவுடன் கலந்துரையாடிய பிரதமர், ஸ்வமித்வா திட்டம் தொடர்பான அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சொத்து ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் வாங்கியது உங்களுக்கு எவ்வாறு உதவியது என்றும் அது அவரது வாழ்க்கையில் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்தது என்றும் அவர் திரு மனோகரிடம் கேட்டார். திரு மனோகர் தனது பால் பண்ணைக்கு 10 லட்சம் கடன் வாங்கியதாகவும், அது தொழிலைத் தொடங்க உதவியது என்றும் விளக்கினார். தானும், மனைவி மற்றும் தனது குழந்தைகளும், பால் பண்ணையில் வேலை செய்வதாகவும், அது கூடுதல் வருமானத்தை ஈட்டித் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சொத்து ஆவணங்களை வைத்திருப்பது வங்கியில் கடன் பெறுவதை எளிதாக்கியது என்றும் திரு மனோகர் எடுத்துரைத்தார். மத்திய அரசின் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் உள்ள சிரமங்களைக் குறைத்துள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். ஸ்வமித்வ திட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்திருப்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒவ்வொரு குடிமகனும் பெருமிதத்துடனும், அனுபவத்துடனும் தலை நிமிர்ந்து வாழ்வதை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமை என்று அவர் வலியுறுத்தினார். இந்த தொலைநோக்கின் விரிவாக்கமே ஸ்வமித்வ திட்டம் என்று அவர் எடுத்துரைத்தார்.
பின்னர், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகரைச் சேர்ந்த ஸ்வமித்வா பயனாளியான திருமதி ரச்சனாவுடன் பிரதமர் கலந்துரையாடினார். இந்த திட்டத்தின் அனுபவம் குறித்து பிரதமர் கேட்டபோது, சொத்து ஆவணங்கள் இல்லாமல் 20 ஆண்டுகளாக அவரது சிறிய வீட்டில் வசித்து வருவதாக அவர் கூறினார். ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் ரூ.7.45 லட்சம் கடன் வாங்கி ஒரு கடையைத் தொடங்கியதாகவும், இது கூடுதல் வருமானத்தை ஈட்டித் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தாலும் சொத்து ஆவணங்கள் கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். ஸ்வமித்வா திட்டத்தின் காரணமாக பெறப்பட்ட பிற நன்மைகளை விவரிக்க மேலும் கேட்டபோது, அவர் மேலும் ஸ்வச் பாரத் திட்டத்தின் பயனாளி என்றும், பிரதமர் முத்ரா யோஜனாவின் கீழ் ரூ .8 லட்சம் கடன் பெற்றதாகவும், அஜீவிகா திட்டத்தின் கீழ் பணியாற்றுவதாகவும், ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் பயனடைந்த குடும்பம் என்றும் தெரிவித்தார். மேலும் தனது மகளை மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்தார். அவரது மகளின் கனவுகள் நனவாக பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ஸ்வமித்வ திட்டம் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, குடிமக்களின் விருப்பங்களுக்கு சிறகுகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் உள்ளது என்ற உணர்வை அவர் பாராட்டினார். எந்தவொரு திட்டத்தின் உண்மையான வெற்றியும் மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை வலிமையாக்கும் திறனில்தான் உள்ளது என்பதை பிரதமர் ஒப்புக் கொண்டார். தனது கதையைப் பகிர்ந்து கொண்டதற்காக திருமதி ரச்சனாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அரசு வழங்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி மற்ற கிராமவாசிகளும் பயனடைய வேண்டும் என ஊக்குவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஸ்வமித்வா பயனாளியான திரு. ரோஷன் சம்பா பாட்டீலுடன் திரு மோடி கலந்துரையாடினார். இந்த அட்டை தனக்கு எப்படி கிடைத்தது, அது அவருக்கு எவ்வாறு உதவியது, அதனால் அவர் பெற்ற நன்மைகள் என்ன என்பதை விளக்குமாறு அவர் திரு ரோஷனிடம் கேட்டார். கிராமத்தில் தனக்கு ஒரு பெரிய, பழைய வீடு இருப்பதாகவும், சொத்து அட்டை தனக்கு 9 லட்சம் ரூபாய் கடன் பெற உதவியதாகவும், அதை தனது வீட்டை மீண்டும் கட்டவும், விவசாயத்திற்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தியதாகவும் பிரதமரிடம் திரு ரோஷன் தெரிவித்தார். தனது வருமானம் மற்றும் பயிர் விளைச்சலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறிய அவர், தனது வாழ்க்கையில் சுவமித்வ திட்டத்தின் நேர்மறையான தாக்கத்தை எடுத்துரைத்தார். கடன் பெற வேறு ஆவணங்கள் தேவைப்படாமல் ஸ்வமித்வ அட்டை மட்டும் போதுமானது என்று அவர் மேலும் கூறினார். ஸ்வமித்வா திட்டத்திற்காக திரு. மோடிக்கு நன்றி தெரிவித்த திரு. ரோஷன், தான் காய்கறிகள் மற்றும் மூன்று பயிர்களை விளைவிப்பதாகக் கூறினார். அவை அவருக்கு லாபம் ஈட்டித் தருவதாகவும், கடனை எளிதாக திருப்பிச் செலுத்த முடிகிறது என்றும் கூறினார். மத்திய அரசின் பிற திட்டங்களின் பயன்கள் குறித்து பிரதமர் கேட்டபோது, பிரதமரின் உஜ்வாலா திட்டம், பிரதமர் வெகுமதி திட்டம் மற்றும் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பயனாளி தான் என்று திரு ரோஷன் கூறினார். தனது கிராமத்தைச் சேர்ந்த பலர் சுவமித்வா திட்டத்தின் மூலம் நிறைய பயனடைந்து வருவதாகவும், தங்கள் சொந்த சிறு தொழில்கள் மற்றும் விவசாயம் செய்ய எளிதாக கடன்களைப் பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்வமித்வ திட்டம் மக்களுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் தங்கள் வீடுகளைக் கட்டி, கடன் பணத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்று அவர் எடுத்துரைத்தார். கிராமங்களில் கூரை இருப்பது கிராமங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். மக்கள் இப்போது தங்கள் தனிப்பட்ட, சமூக மற்றும் தேசிய வளத்தில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த கவலைகளிலிருந்து விடுபடுவது நாட்டிற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஒடிசா மாநிலம் ராய்காட்டைச் சேர்ந்த ஸ்வமித்வா பயனாளியான திருமதி கஜேந்திர சங்கீதாவுடன் கலந்துரையாடிய பிரதமர், ஸ்வமித்வா திட்டம் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். கடந்த 60 ஆண்டுகளாக முறையான ஆவணங்கள் இல்லாததால் சிரம்ப்பட்டதாகவும், இப்போது ஸ்வமித்வா அட்டைகள் மூலம், அவர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது மற்றும் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்றும் அவர் கூறினார். கடன் பெற்று தையல் தொழிலை விரிவுபடுத்த விரும்புவதாகவும், பிரதமருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். அவரது பணி மற்றும் வீட்டின் விரிவாக்கத்திற்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த திரு மோடி, சொத்து ஆவணங்களை வழங்குவதன் மூலம் இத்திட்டம் ஒரு பெரிய கவலையை நீக்கியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். அவர் ஒரு சுய உதவிக் குழுவில் (எஸ்.எச்.ஜி) உறுப்பினராக உள்ளதாகவும், பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்வமித்வா திட்டம் ஒட்டுமொத்த கிராமங்களையும் மாற்றியமைக்கும் என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பாவைச் சேர்ந்த ஸ்வமித்வா பயனாளியான திரு. வரிந்தர் குமாருடன் பிரதமர் கலந்துரையாடினார். இந்த திட்டத்தின் அனுபவம் குறித்து பிரதமர் கேட்டபோது, அவர் ஒரு விவசாயி என்றும், அவரும் அவரது குடும்பத்தினரும் சொத்து அட்டையைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். அவர்கள் பல தலைமுறைகளாக தங்கள் நிலத்தில் வசித்து வருவதாகவும், இப்போது ஆவணங்கள் வைத்திருப்பது அவர்களுக்கு பெருமை அளிப்பதாகவும் அவர் கூறினார். பிரதமருக்கு நன்றி தெரிவித்த அவர், 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தில் வசித்த போதிலும், தனது கிராமத்தில் யாரிடமும் எந்த ஆவணங்களும் இல்லை என்று தெரிவித்தார். தனக்கு கிடைத்த சொத்து அட்டை தனது நில தகராறை தீர்க்க உதவியது என்றும், இப்போது அவர் நிலத்தை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெற முடியும் என்றும், இது வீட்டை பழுதுபார்ப்பதற்கும் அவரது குடும்பத்தின் நிதி நிலைமையை வலுப்படுத்துவதற்கும் உதவும் என்றும் அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் நேர்மறையான மாற்றங்கள் குறித்து விசாரித்தபோது, தனது கிராமத்தால் பெறப்பட்ட சொத்து அட்டைகள் அனைவருக்கும் உரிமை உரிமைகளை தெளிவாக வரையறுத்துள்ளதாகவும், நிலம் மற்றும் சொத்து தொடர்பான பல தகராறுகள் பெருமளவில் தீர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார். எனவே, கிராம மக்கள் தங்கள் நிலம் மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறலாம் என்று அவர் மேலும் கூறினார். கிராம மக்கள் சார்பில் பிரதமருக்கு அவர் மனதார நன்றி தெரிவித்தார். அனைவருடனும் உரையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். ஸ்வமித்வ திட்ட அட்டையை வெறும் ஆவணமாக மட்டும் மக்கள் கருதாமல், முன்னேற்றத்திற்கான வழிமுறையாகவும் பயன்படுத்தி வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஸ்வமித்வா முன்முயற்சி அவர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார்.
***
PKV/KV