Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ சித்தகங்கா மடத்திற்கு சென்ற பிரதமர், ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார் சுவாமிகள் நினைவு அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்


 

கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள ஸ்ரீ சித்த கங்கா மடத்திற்கு சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார் சுவாமிகள் நினைவு அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

 

தும்கூருவில் உள்ள ஸ்ரீ சித்த கங்கா மடத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த புனித பூமியில் இருந்து 2020 ஆம் ஆண்டை தொடங்குவதற்கு தாம் மிகவும் கொடுத்து வைத்தவர் என்றார்.  ஸ்ரீ சித்த கங்கா மடத்தின் புனித சக்தி நாட்டு மக்களின் வாழ்வை வளப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

 

“ஸ்ரீ சிவகுமார் சுவாமிகள் தற்போது நம்முடன் இல்லாததற்காக நாம் அனைவரும் வருந்துகிறோம்.  அவரது கருத்தாழமிக்க பார்வை நம்மீது பட்டாலே வளமும், ஊக்கமும் ஏற்படுத்தும் என்பதை தாமே உணர்ந்திருப்பதாக அவர் கூறினார்.  அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய அவரது தனிப்பண்பு மூலம் இந்த புனித இடம் பல்லாண்டு காலமாக சமுதாயத்திற்கு  வழிகாட்டி வந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். 

“ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார் சுவாமிகள் நினைவாக கட்டப்படும் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பது மிகவும் அரியதானது.  இந்த அருங்காட்சியகம் மக்களை ஈர்ப்பதோடு மட்டுமின்றி, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும்  வழிகாட்டியாகவும் திகழும்” என்றும் அவர் கூறினார். 

 

21 ஆம் நூற்றாண்டின் 3-வது பத்தாண்டில், புதிய சக்தி மற்றும்  புதுப்பிக்கப்பட்ட சுறுசுறுப்புடன் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  கடந்த பத்தாண்டு எவ்வாறு தொடங்கியது என்பதை நினைத்து பார்க்குமாறு, நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.  அதேவேளையில், 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டு, வலுவான எதிர்பார்ப்புகள், விருப்பங்களுடன் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 

“புதிய இந்தியாவை காண வேண்டும் என்பதே விருப்பம். இந்த விருப்பம் இளைஞர்களின் கனவாக உள்ளது.  இதுவே இந்த நாட்டில் உள்ள சகோதரிகள் மற்றும் புதல்விகளின் விருப்பமாகவும் உள்ளது.  ஏழைகள், சமுதாயத்தின் கடைகோடி நிலையில் உள்ளவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அவதிப்படுவோர், பின்தங்கிய மற்றும் பழங்குடி மக்களின் விருப்பமும் இதுவே ஆகும்” என்றும் அவர் தெரிவித்தார். 

 

“வளமான, திறமைமிக்க மற்றும் உலகில் அனைத்து சக்தியையும் பெற்ற நாடாக இந்தியாவை காண வேண்டும் என்பதே இந்த விருப்பத்தின் நோக்கம்.  பல  ஆண்டுகளாக நாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற மனநிலை, தற்போது ஒவ்வொரு இந்தியரிடமும் ஏற்பட்டுள்ளது.  சமுதாயத்திலிருந்து வெளிப்படும் இந்த தகவல் எங்களது அரசை உற்சாகப்படுத்தி, ஊக்குவிக்கிறது”.

 

தங்களது உயிரையும், தங்களது புதல்விகள் உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பாகிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் இந்தியாவுக்கு தப்பி வந்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

 

மக்கள் ஏன் பாகிஸ்தானுக்கு எதிராக பேச மறுக்கின்றனர் என்பதோடு, இந்த மக்களுக்கு எதிராக ஏன் போராட்டங்கள் நடத்தப்படுகிறது என்பதும் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கேள்வியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

 

இந்திய நாடாளுமன்றத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்துபவர்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், “கடந்த 70 ஆண்டுகளாக  பாகிஸ்தான் நடத்தி வரும் அத்துமீறல்களுக்கு எதிராக நீங்கள் போராடுங்கள், குரல் கொடுங்கள்.  பாகிஸ்தானின் இத்தகைய செயலை சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதே தற்போதைய தேவையாகும்.  நீங்கள் முழக்கங்களை எழுப்புவதாக இருந்தால், பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள்  என்பது குறித்து முழக்கங்களை எழுப்புங்கள்.  நீங்கள் பேரணி செல்வதாக இருந்தால், பாகிஸ்தானால் சுரண்டப்பட்ட இந்து-தலித்-பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக பேரணி செல்லுங்கள்” என்றார்.  

 

3 தீர்மானங்களுக்கு சந்த் சமாஜம் முழுஆதரவு வழங்க வேண்டும் என பிரதமர் கோரினார். 

 

முதலாவதாக, ஒவ்வொரு தனிநபரின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை வலுப்படுத்துதல்.

 

இரண்டாவதாக, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்தல்.

மூன்றாவதாக, தண்ணீர் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பது ஆகும்.

துறவிகள், சாதுக்கள் மற்றும் குருமார்களை  சரியான திசையை காட்டும் கலங்கரை விளக்கமாகவே இந்தியா எப்போதும் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.