Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்


ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுச்சேரி கம்பன் கலையரங்கில்  சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் பகுதியாக காணொலிக் காட்சி மூலம்  உரையாற்றினார். ஸ்ரீ அரவிந்தரின் நினைவாக ஒரு  நாணயம் மற்றும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

கூட்டத்தில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா ஆண்டு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டினார். நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு ஸ்ரீ அரவிந்தருக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது என்பதைப்  பிரதமர் எடுத்துரைத்தார். தேசத்தின் இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் தீர்மானங்களுக்கு புதிய ஆற்றலையும் வலிமையையும் தரும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் எண்ணற்ற மிகச்சிறந்த நிகழ்வுகள் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட பிரதமர்,  அத்தகைய நிகழ்வுகளின் போது, ஒன்றுபட்ட ஒருமித்த கூட்டு சக்தியாக (யோக சக்தியாக) உருவெடுக்கும் என்றார். சில தலைசிறந்த தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தது, சுதந்திரத்திற்கு வழிவகுத்து மட்டுமல்லாமல், தேசத்தின் ஆன்மாவிற்கு புத்துயிரூட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார். மகரிஷி அரவிந்தர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ஆகியோரது வாழ்விலும் பல முக்கியமான சம்பவங்கள் ஒரே நோக்கத்தில் நிகழ்ந்திருக்கிறது என்றார். இந்த நிகழ்வுகள் அவர்களது வாழ்வில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நாட்டு மக்களின் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தியதையும் சுட்டிக்காட்டினார். கடந்த 1893ம் ஆண்டு அரவிந்தர் இந்தியா திரும்பிய அதே காலகட்டத்தில், சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று உலகளவில் நடைபெற்ற சமய மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தன்னுடைய உரையை பதிவு செய்ததையும், அதே காலகட்டத்தில், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்கா சென்றதையும், அவரது  இந்தப் பயணம் இந்தியாவின் மாற்றத்திற்கு வழி வகுத்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். விடுதலையின் 75வது அமிர்தப் பெருவிழாவை கொண்டாடும் இந்த வேளையில், அரவிந்தரின் 150- வது பிறந்த தின விழா கொண்டாடப்படுவதையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு வருவதையும் ஒருங்கிணைத்து பார்க்கவேண்டும் என்றார். எண்ணங்களும், செயல்களும் ஒன்றிணையும்போது, கண்ணுக்கு தெரியாத இலக்குகளைக் கூட அடைய முடியும் என்று தெரிவித்த பிரதமர் இதற்கு அமிர்தப் பெருவிழாவின் வெற்றியும், அனைவரும் முயல்வோம் என்ற தீர்மானமுமே உதாரணமாகத் திகழ்வதாகக் கூறினார்.

வங்கத்தில் பிறந்து குஜராத்தி, பெங்காலி, மராத்தி, ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளை அறிந்தவர் என்பதால், ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை ‘ஒரே பாரதம்-உன்னத பாரதம்’ என்பதன் பிரதிபலிப்பாக உள்ளது என்று பிரதமர் கூறினார். அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை குஜராத் மற்றும் புதுச்சேரியில் கழித்தார், எங்கு சென்றாலும் ஆழமான முத்திரையைப் பதித்தார். ஸ்ரீ அரவிந்தரின் போதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நாம் அறிந்து, அதன் மூலம் வாழத் தொடங்கும் போது, நமது பன்முகத்தன்மை நம் வாழ்வின் இயற்கையான கொண்டாட்டமாக மாறும் தருணம் என்றும் குறிப்பிட்டார். “இது சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவுக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கிறது. ஒரே பாரதம்-உன்னத பாரதத்தை விளக்க இதைவிட சிறந்த வழி எதுவுமில்லை”, என்றார் பிரதமர்.

இந்தியா தமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் எந்தளவுக்கு பின்னிப்பிணைந்த நாடு என்பதை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி,  உலகுக்கு எடுத்துரைத்துள்ளதாகவும், அத்தகையை சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற கோட்பாட்டிற்கிணங்க மொழி, கலாச்சாரம் ஆகிய வேறுபாடுகளைக் களைந்து இளைஞர்கள் ஒன்றிணைந்து இருப்பதை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வெளிப்படுத்தியதாக கூறினார். விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துவது  அதன் உன்னதத்தை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

ஆன்மீகம், அரசியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வாழ்க்கையை மகரிஷி அரவிந்தர் வழி நடத்தியதை சுட்டிக்காட்டிய பிரதமர், வங்கப் பிரிவினையின் போது,  கொள்கை, கலாச்சார வலிமை, தேசப்பற்று ஆகியவற்றில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்ற அரவிந்தரின் நிலைப்பாடு, சுதந்திரப் போராட்ட வீர்ர்களுக்கு  உத்வேகம் அளித்ததையும் நினைவு கூர்ந்தார். குறிப்பாக, ஆன்மீக விவகாரங்களில் ஆழமான தத்துவங்களை அரவிந்தர் கொண்டிருந்ததையும், சமூக சேவையின் அம்சங்களில் உபநிடதங்களை அவர் புகுத்தியதையும் பிரதமர் குறிப்பிட்டார். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டின் வளர்ச்சி பயணத்தில் அனைவரது கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த உலகத்தின் முன்பு, இந்தியாவை முதலிடத்திற்கு முன்னேற்றி நம்முடைய கலாச்சாரத்தை பெருமிதத்துடன் வெளிப்படுத்துவதற்காக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார். இந்தியாவை வலிமையானதாக மாற்ற அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு உறுதுணையாக இருக்கும் என்றும், அரவிந்தர் கடைபிடித்த 5 கோட்பாடுகளையும் பிரதமர் பட்டியலிட்டார்.  சிந்தனை சுதந்திரம், மேற்கத்திய கலாச்சாரம் மீது கொண்டிருந்த வெறுப்பு, சிறைவாசத்தின்போது கீதையின் மீது கொண்ட  ஈர்ப்பு, இந்தியக் கலாச்சாரத்திற்காக பலமாகக் குரல் கொடுத்தது என அரவிந்தர் கொண்டிருந்த கோட்பாடுகளையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். ராமாயணம், மகாபாரதம், உபநிடதங்கள் ஆகியவற்றை சித்திரங்கள் மற்றும் மொழி பெயர்ப்புகள் மூலம் அரவிந்தர் கற்றுக் கொண்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அரவிந்தரின் எண்ணங்களில் இந்தியாவை, மக்கள் காண்பதையும், இந்தியாவிடமிருந்து இளைஞர்களைப் பிரிக்க முடியாது என்ற அரவிந்தரின் எண்ணம் தான், இந்தியாவின் உண்மையான வலிமை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் மேம்பட்ட கலாச்சாரத்தை விதையாக உருவகப்படுத்திய பிரதமர், அழியாத விதையான இந்தியா, சூழ்நிலைகளின் காரணமாக தன்னிலிருந்து சிறிய பாகத்தை இழக்குமே தவிர, ஒருபோதும் அழியாது என்றார். மனித குல நாகரீகத்தின் கொள்கைகளை உள்ளடக்கிய இந்தியா, மனிதாபிமானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு எனவும் பெருமிதம் தெரிவித்தார். அரவிந்தர் காலத்தில் அழியா விதையாக இருந்த இந்தியா, விடுதலையின் அமிர்தப்பெருவிழா காலமான தற்போதும் அழியா விதையாக இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உலக நாடுகள் தற்போது எதிர்க்கொள்ளும் சவால்களையும், அந்த சவால்களை எதிர்க்கொள்ளும் பணியில் இந்தியாவின் மிக முக்கிய பங்களிப்பு குறித்தும் பிரதமர், எடுத்துரைத்தார்.  எனவே, அரவிந்தரை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு நம் அனைவரின் முயற்சியால் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற நாம் அனைவரும் தயாராவோம் என கூறி, பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி

தமது தொலைநோக்குப் பார்வையிலான கொள்கைகள் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மகரிஷி அரவிந்தர், 1872 ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி பிறந்தார். விடுதலையின் 75-வது அமிர்தப் பெருவிழா காலத்தில், நாடு முழுவதும் அரவிந்தரின் 150 வது பிறந்த தின விழா நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

**************

AP/SMB/ES/RS/IDS