Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் அடங்கிய கையெழுத்து பிரதி வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரை

ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் அடங்கிய கையெழுத்து பிரதி வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரை


ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, தர்மார்த் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கரண் சிங் அவர்களே, இதர பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே!

ஸ்ரீமத் பகவத் கீதை பற்றிய 20 விளக்கங்கள் அடங்கிய 11 பதிப்புகளை இன்று நாம் வெளியிடுகிறோம். இந்த புனிதமான பணியின் பின்னணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அறிஞர்களையும், மற்றவர்களையும் நான் வணங்கி அவர்களை பாராட்டுகிறேன். குறிப்பாக இந்த திட்டத்திற்கு வழிகாட்டிய டாக்டர் கரண் சிங் அவர்களை நான் பாராட்டுகிறேன். இந்திய தத்துவத்தில் டாக்டர் கரண் சிங்கின் படைப்பும், இந்த புனித சேவையில் அவரது அர்ப்பணிப்பும் இந்திய கல்வியை சிறப்பாக பிரதிபலிக்கின்றது. உங்களது முயற்சி ஜம்மு-காஷ்மீரின் அடையாளத்தை புதுப்பித்துள்ளதுடன் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் சிந்தனை பாரம்பரியத்தை வழி நடத்தியுள்ளது.

காஷ்மீரைச் சேர்ந்த பட்டா பாஸ்கர், அபினவகுப்தா, அனந்த் பரதன் போன்ற எண்ணிலடங்காத அறிஞர்கள் கீதையின் புதிர்களை நமக்கு விளக்கியுள்ளனர். அத்தகைய தலைசிறந்த பாரம்பரியம் இன்று நாட்டின் கலாச்சாரத்தை வளமாக்க மீண்டும் தயாராகி வருகிறது. இது காஷ்மீருக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகவும் பெருமை அளிக்கிறது.

நண்பர்களே,

கீதையை ஆழ்ந்து படிக்க ஆயிரக்கணக்கான அறிஞர்கள் தங்களின் முழு வாழ்வையும் அர்ப்பணித்துள்ளதை வேதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் வெவ்வேறு விளக்கங்களின் பகுப்பாய்வு மற்றும் பல விசித்திரமான விஷயங்களின் வெளிப்பாடு ஆகியவற்றில் தெளிவாகக் காணமுடியும். ஒவ்வொரு நபருக்கும் தனது சொந்த கருத்தை வைத்திருக்கத் தூண்டும் வகையில் இந்தியாவின் கருத்து சுதந்திரம் சகிப்புத் தன்மையின் அடையாளமாகவும் விளங்குகிறது.

நண்பர்களே,

கீதையின் அகண்ட வடிவம், மகாபாரதம் முதல் சுதந்திர போராட்டம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது நாட்டிற்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. இந்தியாவை ஒன்றிணைத்த ஆதி சங்கராச்சாரியார் கீதையை ஒரு ஆன்மீக உணர்வாகக் கண்டார். ராமானுஜாச்சாரியார் போன்ற முனிவர்கள் கீதையை ஆன்மீக அறிவின் வெளிப்பாடாக எடுத்துரைத்தனர். சுவாமி விவேகானந்தருக்கு தளராத ஊக்கம் அளிப்பதாகவும், அதிக நம்பிக்கை அளிப்பதாகவும் கீதை இருந்தது. ஸ்ரீ அரவிந்தருக்கு அறிவு மற்றும் மனித குலத்தின் உண்மையான உருவகமாக கீதை விளங்கியது. மகாத்மா காந்தியின் மிக நெருக்கடியான தருணங்களில் கீதை கலங்கரை விளக்கமாக இருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தேசபக்தி மற்றும் வீரத்திற்கு ஊக்கமளிப்பதாக கீதை இருந்தது. பால கங்காதர திலகரால் எடுத்துரைக்கப்பட்ட கீதை, சுதந்திரப் போராட்டத்திற்கு புதிய ஆற்றலையும் சக்தியையும் வழங்கியது. தற்போது தனது 75-வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடவிருக்கும் வேளையில் கீதையின் இந்த அம்சத்தை நாம் நாட்டின் முன் வைக்க வேண்டும்.

 

கீதை நமது சுதந்திரப் போராட்டத்திற்கு எவ்வாறு ஆற்றலை வழங்கியது, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் எவ்வாறு தங்களது உயிரை நாட்டிற்காக தியாகம் செய்தனர் மற்றும் கீதை எவ்வாறு நமது நாட்டை ஆன்மீக ரீதியாக இணைத்தது என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு நமது இளம் தலைமுறையினருக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நண்பர்களே,

புனித நூலான கீதை, அனைத்து இழப்புகள், லாபங்கள் மற்றும் விருப்பங்களில் இருந்து விலகி உள்ள இறைவனும் கர்மா இன்றி இயங்க முடியாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. நடைமுறையில் கர்ம செயல்களில் ஈடுபடாமல் ஒருவராலும் வாழ முடியாது என்பதை கீதை கூறுகிறது. கர்மாவின் சுதந்திரம் மற்றும் எண்ணங்கள் தான் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான தனிச்சிறப்பு. நமது ஜனநாயகம் நமக்கு சிந்தனை சுதந்திரம், பணி சுதந்திரம், வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் சம உரிமை ஆகியவற்றை வழங்குகிறது. நமது அரசியலமைப்பின் பாதுகாவலர்களான ஜனநாயக நிறுவனங்களிடமிருந்து நமக்கு இந்த சுதந்திரம் கிடைக்கிறது. எனவே நமது சுதந்திரத்தை பற்றி நாம் பேசும் போதெல்லாம் நமது ஜனநாயகக் கடமைகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியலமைப்பு மீதான கண்ணியத்தையும் நம்பிக்கையையும் எவ்வாறு சீர்குலைப்பது என்பது பற்றி இன்று ஒரு சிலர் தீவிரமாக எண்ணி வருகின்றனர். அரசியல் நோக்கங்களுக்காக நமது நாடாளுமன்றம், நீதித்துறை மற்றும் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் போக்கு நாட்டிற்கு மிகப் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகிறது. இது போன்றவர்கள் நாட்டில் பெருவாரியானோரின் பிரதிநிதிகள் அல்ல என்பது ஓரளவிற்கு திருப்தி அளிக்கிறது.

இன்று, தனது கடமைகளைத் தீர்வுகளாகக் கருதி நாடு முன்னேறி வருகிறது. கீதையின் தன்னலமற்ற செயலை தாரக மந்திரமாகக் கொண்டு கிராமங்கள், ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்கள், பின்தங்கியோர், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபரின் வாழ்வை மாற்றுவதற்கான முயற்சியில் நாடு தற்போது ஈடுபட்டு வருகிறது.

நண்பர்களே,

கீதையின் வாயிலாக எல்லைகளுக்கு அப்பால் உள்ள அனைத்து மனித சமூகத்திற்கும் இந்தியா சேவையாற்றி வருகிறது. ஒட்டு மொத்த உலகத்திற்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் கீதை உரியது. இது உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான நாடுகள் இதுபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. தன்னலமற்ற சேவை போன்ற இந்தியாவின் கொள்கைகளை கீதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

கொரோனா போன்ற பெருந்தொற்று ஏற்பட்ட போது இதன் பாதிப்பை உலகம் அறியவில்லை; புரியாத எதிரியாக அது இருந்தது. உலகம் தயாராக இல்லை, மனிதர்கள் தயாராக இல்லை, இந்தியாவிலும் இதே நிலைமை. எனினும் இதனை சமாளித்துக் கொண்ட இந்தியா, உலகிற்காக தன்னால் இயன்றவற்றை செயல்படுத்துவதில் பின் தங்கவில்லை. உலக நாடுகளுக்கு மருந்துகளும் தேவையான பொருட்களும் வழங்கப்பட்டன.

தற்போது தடுப்பூசிகளுக்கான வளங்கள் இல்லாமல் ஏராளமான நாடுகள் உள்ளன. இது போன்ற நாடுகளுக்கு எந்தவிதமான நிபந்தனையும் அல்லாமல் இந்தியா தடுப்பூசிகளை விநியோகிக்கிறது.

நண்பர்களே,

அதேபோல் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்தியாவில் சிக்கித் தவிக்க நேர்ந்த ஏராளமான மக்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு பத்திரமாக இந்தியா அனுப்பிவைத்தது. மனிதர்களுக்கு சேவையாற்றுவதை கர்மாவாக எண்ணி இந்தியா தனது கடமையை செய்தது.

பிரதிபலனைப் பற்றி கவலைக் கொள்ளாமல் தன்னலமற்ற மனப்பான்மையுடன் ஒருவர் பணியாற்ற வேண்டும் என்பதை நமக்கு கீதை கற்றுக் கொடுத்துள்ளது.

நண்பர்களே,

கணிதம், ஜவுளி, உலோகம் மற்றும் ஆயுர்வேதம் ஆகியவற்றில் நமது அறிவு மனிதநேய சொத்தாக கருதப்படுகிறது. ஒட்டுமொத்த உலகின் முன்னேற்றம் மற்றும் மனிதநேய சேவைக்கு பங்களிப்பதில் இந்தியா இன்று மீண்டும் தனது ஆற்றலை வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஆயுர்வேதம் பற்றிய அறிவியல் நவீன அறிவியலின் காலங்களுக்கு முன்பே மனித சமூகத்திற்கு சேவையாற்றி வருகிறது. இன்று மூலிகைகள் மற்றும் இயற்கை குறித்து உலகமே பேசுகையில், சிகிச்சையை விட குணப்படுத்துதல் மீது கவனம் செலுத்தப்படும் வேளையில், பல்வேறு நாடுகள் ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சி செய்யும் நிலையில் இந்தியா அவற்றை ஊக்குவித்து உதவி வருகிறது.

நண்பர்களே,

நமது மாண்புகளும், கடந்த காலங்களும் தற்சார்பு இந்தியாவிற்கான தீர்வாக மீண்டும் வளர்ந்து வருகின்றன. ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சிக்கும் மனித சமூகத்திற்கான சேவையை அதிகரிப்பதற்கும் இந்தியா மீண்டும் தன்னை வலுப்படுத்தி வருகிறது. சமீப காலமாக இந்தியாவின் பங்களிப்பை  உலகம் பார்த்து வருகிறது. தற்சார்பு இந்தியாவிற்கான முயற்சிகளில் இந்த பங்களிப்பு உலகத்திற்கு மிகப் பெரிய அளவில் உதவும். கீதையில் குறிப்பிட்டுள்ளவாறு தன்னலமற்ற மக்களின் பங்களிப்பு இந்த இலக்கை அடைவதற்குத் தேவை. 75-வது சுதந்திர ஆண்டு, நாட்டின் புதிய எதிர்காலத்திற்கான துவக்கமாக அமையும்.

நன்றி!

குறிப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*****************