Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


நண்பர்களே,

வணக்கம்

செங்கோட்டையில் இருந்து ஒரு விஷயத்தை நான் எப்போதும் குறிப்பிட்டு வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சியும் முக்கியம் என்று நான் கூறியுள்ளேன். இன்றைய பாரதம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் மூலமே துரித வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும். இந்த கொள்கைக்கு இன்று ஒரு உதாரணம் அமைந்துள்ளது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் இந்த பிரம்மாண்டமான இறுதிப் போட்டிக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் இருக்கும் போதெல்லாம், புதிய நுண்ணறிவுகளைக் கற்றுக்கொள்ளவும், புரிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு 21+ம் நூற்றாண்டு பாரதத்தைப் பார்ப்பதில் ஒரு தனித்துவமான கண்ணோட்டம் உள்ளது. அதனால்தான் உங்கள் தீர்வுகளும் தனித்துவமானவைகளாக இருக்கின்றன.  இப்போது, இந்த ஹேக்கத்தானில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழுக்கள் என்ன பணியாற்றி வருகின்றன என்பதை அறிய நான் ஆர்வமாக உள்ளேன். உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். எனவே, ஆரம்பிக்கலாம்!

 

பிரதமர்: வணக்கம்.

 

பங்கேற்பாளர்: வணக்கம் ஐயா. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானில் பங்கேற்கும் ஒரு குழுவைச் சேர்ந்த சாஹிதா நான். நாங்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வருகிறோம்.

 

பிரதமர்: நீங்கள் அனைவரும் மிகவும் தைரியமானவர்கள். காஷ்மீர் குளிர் உங்களை பாதிக்காது. கவலைப் படாதீங்க.

 

பங்கேற்பாளர்: நன்றி ஐயா. சமூக நீதி – அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கிய பிரச்சனை அறிக்கையின் கீழ் நாங்கள் பங்கேற்கிறோம்.

 

பிரதமர்: அது நல்லது. நீங்கள் செய்து வரும் பணி பாராட்டத்தக்கது. இந்த குழந்தைகளின் சமூக வாழ்க்கையில் இது எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியுமா?

 

பங்கேற்பாளர்: இந்த மெய்நிகர் முறையின் உதவியுடன், சமூக தொடர்புகளில் எது பொருத்தமானது, எது இல்லை என்பதையும், அவர்கள் மக்களை எவ்வாறு அணுகலாம் என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.  இந்த வழியில், வழக்கமான தனிநபர்களின் அன்றாட வாழ்க்கைக்கும் வழக்கமான பணிகளைச் செய்யும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருக்காது.

 

பிரதமர்: உங்கள் குழுவில் தற்போது எத்தனை உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்?

 

பங்கேற்பாளர்: சார், நாங்கள் ஆறு பேரும் வேலை செய்கிறோம். உண்மையில், எனது குழு மிகவும் மாறுபட்டது. எங்களிடம் வெவ்வேறு தொழில்நுட்ப – புவியியல் பின்னணியிலிருந்து உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் இந்தியர் அல்லாத ஒரு உறுப்பினரும் எங்களிடம் உள்ளனர்.

 

பிரதமர்: உங்களில் யாராவது இதுபோன்ற குழந்தைகளுடன் இதற்கு முன் உரையாடிய நிலையில் இருக்கிறீர்களா? அவர்களின் சவால்களைப் புரிந்துகொள்ள முயற்சித்து, பின்னர் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதை நோக்கி நகர்ந்தீர்களா?

 

பங்கேற்பாளர்: ஆமாம் சார். எங்கள் குழு உறுப்பினர்களில் ஒருவரின் குடும்ப உறவினர் ஒருவர் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் உண்மையான சிரமங்களைப் புரிந்துகொள்ள பல்வேறு மையங்களுடனும் பேசினோம். இது அவர்களின் சவால்களை சரியான வழியில் எதிர்கொள்வதில் கவனம் செலுத்த எங்களுக்கு உதவியது.

 

பிரதமர்: ஒவ்வொரு குழந்தையும் சிறப்பு வாய்ந்தது என்ற முக்கியமான கருத்தை புரிந்து கொண்டதற்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் வளரவும் செழிக்கவும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்; சமூகத்தில் யாரும் பின்தங்கிவிடக்கூடாது அல்லது கைவிடப்பட்டதாக உணரக்கூடாது. இதை அடைவதற்கு, நமக்கு தொடர்ந்து புதுமையான தீர்வுகள் தேவைப்படுகின்றன. உங்கள் குழு பணிபுரியும் தீர்வு பல லட்சக் கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை எளிதாக்கும்.  அடுத்தது யார்?

 

பங்கேற்பாளர் (லாவண்யா): நன்றி மாண்புமிகு பிரதமர் அவர்களே! நான் லாவண்யா, ட்ரீமர்ஸ் டீம் லீடர். நாங்கள் எங்கள் மையமான ஐஐடி காரக்பூர், மேற்கு வங்கத்தில் இருக்கிறோம். நாங்கள் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நாங்கள் தேர்ந்தெடுத்த சவால் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தால் (NTRO) வழங்கப்பட்டது. தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எங்கள் பதிவுகளின்படி, இந்தியாவில் 73 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இது உலகின் 3 வது பெரியது. இந்த சூழ்நிலையை சமாளிக்க, நாங்கள் ஒரு புதுமையான, தனித்துவமான, அளவிடக்கூடிய தீர்வைக் கொண்டு வந்துள்ளோம். ஐயா, தீர்வை எனது அணி வீரர் திருமதி கல்ப்ரியா விளக்குவார்.

 

பங்கேற்பாளர் (கல்பிரியா): வணக்கம், மாண்புமிகு பிரதமர் அவர்களே!

 

பிரதமர்: வணக்கம்!

 

பங்கேற்பாளர் (கல்ப்ரியா): வணக்கம்! பாதிக்கப்பட்ட கோப்புகளைக் கண்டறியவும், இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பை வலுப்படுத்தவும், பல வைரஸ் தடுப்பு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். எங்கள் தீர்வில், நாங்கள் மூன்று வைரஸ் தடுப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளோம்.

 

பிரதமர் : எனது மனதின் குரலில், சைபர் மோசடியால் சாதாரண மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை விரிவாக விவாதித்துள்ளேன். சைபர் மோசடிகள் மூலம் மக்கள் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகிறார்கள்? இதைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியுமா?

 

பங்கேற்பாளர் (கல்ப்ரியா): இல்லை ஐயா!

 

பிரதமர்: நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் பணிபுரியும் தீர்வு மிகவும் முக்கியமான பிரச்சினையை நிவர்த்தி செய்வதாகும். இன்று சமூகத்தின் பெரும்பகுதியினர் இத்தகைய நெருக்கடிகளுக்கு பலியாகின்றனர்.

 

பங்கேற்பாளர்: தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால் எங்கள் தீர்வை நாங்கள் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். இந்த மாற்றங்களைத் தொடர நாம் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும்…

 

பிரதமர்: ஆம், நீங்கள் சொல்வது சரிதான். சைபர் தாக்குபவர்கள் மிகவும் புதுமையானவர்கள், இன்று நீங்கள் ஒரு தீர்வைக் கண்டால், சில மணிநேரங்களில் உங்களுக்கு புதிய ஒன்று தேவைப்படும். நீங்கள் எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 

தர்மேந்திர பிரதான்: இப்போது, அகமதாபாத்தில் உள்ள குஜராத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அமர்ந்திருக்கும் ப்ரோகோட் குழுவினருடன் நாங்கள் கலந்துரையாட உள்ளோம். ஓவர் டு அகமதாபாத்.

 

பங்கேற்பாளர்: வணக்கம் பிரதமர் அவர்களே!

 

பிரதமர்: வணக்கம்!

 

பங்கேற்பாளர் (ஹர்ஷித்): ஆமாம் சார். வணக்கம், என் பெயர் ஹர்ஷித், நான் டீம் ப்ரோகோடை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இஸ்ரோ அளித்த பிரச்சனை அறிக்கையை இங்கு பரிசீலித்து வருகிறோம். தென் துருவத்தில் அமைந்துள்ள சோலார் பேனல்கள் – சோலார் செல்களின் இருண்ட படங்களை மேம்படுத்துவதை இது உள்ளடக்கியது. சந்த் வர்தானி என்ற தீர்வை உருவாக்கி வருகிறோம். சந்த் வர்தானி என்பது குறைந்த தரமான, இருண்ட படங்களை உயர்தர படங்களாக மேம்படுத்தும் ஒரு தீர்வாகும். ஆனால் இது ஒரு படத் தர மேம்பாட்டாளர் மட்டுமல்ல; இது முடிவெடுக்கும் திறனையும் மேம்படுத்துகிறது. முடிவெடுப்பதற்காக, நாங்கள் புவியியல் சந்திர ஆய்வைக் கண்டறியப் போகிறோம், மேலும் நிகழ்நேர தளத் தேர்விலும் உதவப் போகிறோம்.

 

பிரதமர்: விண்வெளித் துறையில் பணிபுரிபவர்களுடன் விண்வெளி தொடர்பான சவால்கள் குறித்து விவாதிக்க உங்களுக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைத்ததுண்டா? குறிப்பாக நீங்கள் அகமதாபாத்தில் இருப்பதால், அங்கு ஒரு பெரிய விண்வெளி மையம் உள்ளது? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்லது முடிவுகளின் தரத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நீங்கள் யாரிடமாவது பேசினீர்களா?

 

பங்கேற்பாளர் (ஹர்ஷித்): நான் ஹைதராபாத்தில் உள்ள வழிகாட்டிகளுடனும் விஞ்ஞானிகளுடனும் பேசினேன். ஆனால், நாங்கள் ஆந்திராவிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், எங்கள் குழுவினர் அப்படி எந்த மையங்களுக்கும் செல்ல முடியவில்லை.

 

பிரதமர்: அப்படியா. இந்த திட்டத்தின் காரணமாக, சந்திரனின் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?

 

பங்கேற்பாளர் (ஹர்ஷித்): ஆமாம் ஐயா! நிச்சயமாக, புவியியல் அம்சங்களைக் கண்டறியவும், சந்திர ஆய்வின் மறைக்கப்பட்ட அம்சங்களை வெளிக்கொணரவும் முடியும்.

 

பிரதமர்: உங்கள் குழுவில் இப்போது எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்?

 

பங்கேற்பாளர் (ஹர்ஷித்): குழுவில் ஆறு பேர் பணிபுரிகின்றனர்.

 

பிரதமர் : நண்பர்களே, விண்வெளி தொழில்நுட்பத்தில் பாரத்தின் பயணத்தை உலகம் மிகுந்த நம்பிக்கையுடன் கவனித்து வருகிறது. உங்களைப் போன்ற இளம் திறமைசாலிகள் இதில் ஈடுபடும்போது, அந்த நம்பிக்கை இன்னும் வளரும். உங்களைப் போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களைப் பார்க்கும்போது, உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியா தனது பங்கை விரைவாக விரிவுபடுத்துகிறது என்பது தெளிவாகிறது. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

 

நண்பர்களே,

உங்கள் அனைவருடனும் பேசுவது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் குழுக்களைப் பார்த்தபோது, அது எவ்வளவு நன்றாக உருவாகியிருக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிந்தது. “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற தொலைநோக்குப் பார்வையை இது உண்மையிலேயே பிரதிபலிக்கிறது. வடக்கிலிருந்து வரும் மாணவர்கள் தெற்கிலும், தெற்கிலிருந்து வரும் மாணவர்கள் வடக்கிலும், கிழக்கிலிருந்து வரும் மாணவர்கள் மேற்கிலும், மேற்கிலிருந்து வரும் மாணவர்கள் கிழக்கிலும் உள்ளனர். இது உங்கள் அனைவருக்கும் மிகவும் வளமான அனுபவமாக இருந்தது என்று நான் நம்புகிறேன். மேலும் இது நமது நாட்டின் பரந்த மற்றும் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. உங்கள் ஹேக்கத்தானின் கருப்பொருளைத் தாண்டி நீங்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள்.

 

நண்பர்களே,

எதிர்கால உலகம் அறிவு, புதுமைகளால் இயக்கப்படும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த சூழலில், நீங்கள் பாரதத்தின் நம்பிக்கை, அபிலாஷை. உங்கள் முன்னோக்குகள் தனித்துவமானவை. உங்கள் எண்ணங்கள் வேறுபட்டவை. ஆனால் இறுதி இலக்கு ஒன்றுதான். பாரதம் உலகின் மிகவும் புதுமையான, முற்போக்கான, வளமான நாடாக மாற வேண்டும். இளைஞர் சக்தி, புதுமையான சிந்தனைகள், தொழில்நுட்ப வலிமை ஆகியவற்றில் உள்ள பாரதத்தின் வலிமையை உலகம் இன்று ஒப்புக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானில் பங்கேற்கும் உங்கள் அனைவரிடமும் பாரதத்தின் இந்த சக்தி தெளிவாகக் காணப்படுகிறது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பாரதத்தின் இளைஞர்களை உலக அளவில் போட்டியிட வைக்க ஒரு சிறந்த தளத்தை உருவாக்கியுள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் தொடங்கியதிலிருந்து, சுமார் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாணவர்கள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்து, கிட்டத்தட்ட 3 ஆயிரம் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள். 6400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கிட்டத்தட்ட 6,000 நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. இந்த ஹேக்கத்தான் காரணமாக, நூற்றுக்கணக்கான புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிறந்துள்ளன. நான் வேறு ஒன்றையும் கவனித்தேன்: 2017 ஆம் ஆண்டில், மாணவர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகளை சமர்ப்பித்தனர். இந்த முறை, யோசனைகளின் எண்ணிக்கை 57 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 7 ஆயிரத்திலிருந்து 57 ஆயிரமாக அதிகரித்துள்ளது – நமது நாட்டின் சவால்களை தீர்க்க பாரதத்தின் இளைஞர்கள் எவ்வாறு தயாராகி வருகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

 

நண்பர்களே,

கடந்த 7 ஆண்டுகளில், ஹேக்கத்தான்களின் பல தீர்வுகள் நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஹேக்கத்தான்கள் பல பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளன. உதாரணமாக, 2022 ஹேக்கத்தானில் உங்களைப் போன்ற இளைஞர்கள் குழு புயல்களின் தீவிரத்தை அளவிடுவதற்கான ஒரு அமைப்பில் பணியாற்றியது. ஹேக்கத்தானின் போது உருவாக்கப்பட்ட அமைப்பு இப்போது இஸ்ரோ உருவாக்கிய தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். 4-5 ஆண்டுகளுக்கு முன்பு, ஹேக்கத்தானில் உள்ள மற்றொரு குழு வீடியோ ஜியோடாக்கிங் பயன்பாட்டை உருவாக்கியது. இது தரவு சேகரிப்பை மிகவும் எளிதாக்கியது. இது இப்போது விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. ஹேக்கத்தானில் உள்ள மற்றொரு குழு நிகழ்நேர ரத்த மேலாண்மை அமைப்பில் பணியாற்றியது. இந்த அமைப்பு இயற்கை பேரழிவின் போது இரத்த வங்கிகளின் விவரங்களை வழங்க முடியும், மேலும் இது என்டிஆர்எஃப் போன்ற அமைப்புகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, மற்றொரு குழு மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு தயாரிப்பை உருவாக்கியது. இது அவர்களின் சிரமங்களை எளிதாக்க உதவுகிறது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. ஆனால் ஹேக்கத்தானில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான வெற்றிகரமான  தீர்வுகள் உள்ளன. அவை இன்று பங்கேற்கும் உங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றன.

 

நண்பர்களே,

அடுத்த 25 ஆண்டுகளின் தலைமுறை பாரதத்தின் ‘அமிர்த தலைமுறை’. வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உள்ளது.  புதுமைப் படைப்பாளர்களாகவும், பிரச்னைகளைத் தீர்ப்பவர்களாகவும் உங்கள மீது நாடு நம்பிக்கை கொண்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்!

 

நன்றி…!

—-

(Release ID 2083566)

PLM/DL