Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறை தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறை தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்


வேளாண் மற்றும் கூட்டுறவுத் துறை தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்டுள்ள முன்முயற்சிகளை திறம்பட  அமல்படுத்துவது தொடர்பாக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அரசு கோரும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 12 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் இன்று இரண்டாவது கருத்தரங்கு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த ஆண்டும் கடந்த 8 – 9 ஆண்டுகளாகவும், மத்திய பட்ஜெட்டுகளில் வேளாண் துறைக்கு வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். 2014-ஆம்  ஆண்டுக்கு முன்பு பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.25,000 கோடிக்கும் குறைவாக இருந்தது என்று கூறிய அவர், தற்போது அது ரூ.1,25,000 கோடிக்கும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு பட்ஜெட்டும், கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான பட்ஜெட் என்று அழைக்கப்படுவதாக திரு நரேந்திர மோடி கூறினார்.

சுதந்திரத்திற்கு பின்பு, நீண்ட காலம் நாட்டின் வேளாண் துறை  பல இன்னல்களை சந்தித்து வந்ததாக அவர் கூறினார்.  உணவுப் பாதுகாப்புக்காக இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருந்ததையும்  அவர் சுட்டிக்காட்டினார். இந்திய விவசாயிகள் இந்தச் சூழ்நிலையை மாற்றியமைத்து, உணவு தானிய உற்பத்தியில், தேசம் தற்சார்பு அடையும் சூழ்நிலையை ஏற்படுத்தியதுடன் ஏற்றுமதி செய்யும் திறனையும் உருவாக்கியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.  இந்தியா பலவகையான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாக அவர் கூறினார். பல்வேறு உள்நாட்டு மற்றும்  சர்வதேச சந்தைகளை விவசாயிகள் எளிதில் அணுகும் வகையில் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். தற்சார்பு அல்லது ஏற்றுமதி என்ற நிலை வரும்போது அரிசி அல்லது கோதுமை என்பதுடன் இந்தியாவின் இலக்கு நின்றுவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இறக்குமதிகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இறக்குமதி செலவுகள் குறித்து எடுத்துரைத்தார். 2021-22-ஆம் நிதியாண்டில், பருப்பு வகைகள் இறக்குமதிக்கான செலவு ரூ.17,000 கோடியாக இருந்தது என்றும், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதி செலவு ரூ.25,000 கோடியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.  அதே போல் 2021-22-ஆம் நிதியாண்டில்  சமையல் எண்ணெய் இறக்குமதிக்காக ரூ.1,50,000 கோடி செலவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். மொத்தமாக  வேளாண் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.2 லட்சம் கோடி என்று அவர் குறிப்பிட்டார். வேளாண் துறையை ஊக்குவிக்க பட்ஜெட்டில் தொடர்ந்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்படுவதன் மூலம் தேசம் தற்சார்பு நிலையை அடைவதுடன் இறக்குமதிக்கு ஆகும் செலவுகள், விவசாயிகளை சென்றடைந்து அவர்களுக்கு பயன் அளிக்கும் என பிரதமர் தெரிவித்தார். குறைந்தபட்ச ஆதாரவிலை உயர்த்தப்படுவது, பருப்பு வகைகள் உற்பத்தியை ஊக்குவிப்பது, உணவுப்பதப்படுத்தும் பூங்காக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சமையல் எண்ணெய் உற்பத்தியில் தற்சார்பு அடைய தீவிரமாக செயலாற்றுவது போன்ற அரசின் நடவடிக்கைகளையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வேளாண்துறை தொடர்பான சவால்கள் களையப்படும் வரை  வளர்ச்சிக்கான  முழுமையான இலக்குகளை எட்டமுடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார். புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் முதலீடுகளில் மற்ற துறைகளை ஒப்பிடும் போது, வேளாண் துறையில் தனியார் துறையினர் சற்று விலகியிருப்பதாக அவர் கூறினார். இது இத்துறையில் இளைஞர்களின் பங்களிப்பைக் குறைப்பதாக அவர் தெரிவித்தார்.  இந்த இடைவெளியைக் குறைக்க  இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். யுபிஐ-யின் சிறந்த தளம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புத் தளம் குறித்தும் எடுத்துரைத்தார். வேளாண் தொழில்நுட்பத் தளங்களில் ஏராளமான முறையீடுகள் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறினார். சரக்குப் போக்குவரத்து வசதிகள் அதிகரிப்பது, பெரிய சந்தைகளை எளிதில் அணுக வகை செய்வது, தொழில்நுட்பத்தின் மூலம் சொட்டுநீர்ப் பாசனத்தை ஊக்குவிப்பது, மண் பரிசோதனை ஆய்வகங்களை நிறுவுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் வாய்ப்புகளையும் பிரதமர் பட்டியலிட்டார். விவசாயிகளின் புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் அரசின் கொள்கை வகுக்கும் நடைமுறை ஆகியவற்றில் அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே, இணைப்புப் பாலமாக இளைஞர்கள் செயல்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். வானிலை மாற்றங்கள் குறித்த உடனடித் தகவல்களை வழங்குவது, ட்ரோன்களின் பயன்பாடு உள்ளிட்டவைகள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.

வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான ஊக்கநிதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்குவதோடு நின்றுவிடாமல் நிதி வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்துவதாக அவர் கூறினார். இத்துறையில், இளைஞர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் தங்களது இலக்குகளை அடைவதை நோக்கி முன்னேற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் துறையில் எந்த ஸ்டார்ட் அப் நிறுவனமும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது 3,000-க்கும் மேற்பட்ட வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

சர்வதேச சிறுதானிய ஆண்டு குறித்து குறிப்பிட்ட அவர், இது இந்திய விவசாயிகளுக்கு சர்வதேச அடையாளத்தை ஏற்படுத்தி சந்தை வாய்ப்புகளைத் திறக்கும்  என்று  கூறினார். சிறு தானியங்களை ‘ஸ்ரீஅன்னா’ என்று பெயரிட்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த ஸ்ரீ அன்னாவை ஊக்குவிப்பதன் மூலம் சிறு விவசாயிகளுக்கு அதிக பலன்கள் ஏற்படுவதோடு இத்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டில் கூட்டுறவுத்துறையில் புதிய புரட்சி ஏற்பட்டு வருவதாக கூறிய பிரதமர், இது நாட்டின் குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் நடைபெறவில்லை என்றும் நாடு முழுவதும் மாற்றங்களை அரசு ஏற்படுத்துவதாகவும்  தெரிவித்தார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் உற்பத்தி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு, வரி தொடர்பான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ரூ.3 கோடி  வரை கூட்டுறவு சங்கங்களிலிருந்து எடுக்கப்படும் தொகைகளுக்கு டிடிஎஸ் வரிப்பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.  2017-ஆம் ஆண்டுக்கு முன்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கவேண்டிய கட்டணங்களுக்கு வரிவிலக்கு அளிக்க  முடிவு செய்திருப்பது மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என்றும் இதனால், அந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,000 கோடி அளவுக்கு பணப்பலன்கள் கிடைக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பால்பண்ணை மற்றும் மீன்வளத்துறையைச் சேர்ந்தவர்கள் தற்போது கூட்டுறவுத்துறையின் மூலம் அதிகப் பயனடைவதாக அவர் தெரிவித்தார். மீன் வளத்துறையில் உள்ளவர்களுக்கான மிகப் பெரிய வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்ட அவர், கடந்த 8-9 ஆண்டுகளில் நாட்டின் மீன் உற்பத்தி 70 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உயர்ந்துள்ளது என்றார். பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின்  துறை அம்சங்களின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்து பேசிய  பிரதமர், ரூ.6,000 கோடி மதிப்பில்  மேற்கொள்ளப்படும் திட்டம் மீன்வளத்துறையின் மதிப்புச்சங்கிலி மற்றும் சந்தை வாய்ப்புகளை வலுப்படுத்தும் என்றார்.

தமது உரையின் நிறைவாக பிரதமரின் பிரணம் திட்டம் மற்றும் கோபர்தன் திட்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், ரசாயன உரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடைமுறைகளைக் குறைக்கவும் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

——-

(Release ID: 1901927)

AP/PLM/KPG/KRS