வேளாண்மை மற்றும் உலக வர்த்தகத்துக்கான தாவரவியல் தரங்கள் விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடுவதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2008 ஜனவரி மாதம் கையெழுத்திடப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தை மாற்றுவதாக இது இருக்கும். முந்தைய ஒப்பந்தம் ஜனவரி 2018-ல் காலாவதியாகிறது.
உலக வர்த்தகத்துக்கேற்ற வகையில் தாவரவியல் தரங்கள் குறித்த பிரச்சினைகள், வேளாண்மை உற்பத்தி மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல துறைகள் , வேளாண்மை ஆராய்ச்சி, உணவு பதப்படுத்துதல் மற்றும் இருதரப்பிலும் பரஸ்பரம் முடிவு செய்யப்படும் பிற கூடுதல் துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சியில் உள்ள நிலைமைகள் பற்றிய தகவல்கள் பரிமாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றத்தை பலப்படுத்துதல், வேளாண்மையை இயந்திரமயமாக்கல்/ பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் வேளாண்-தொழில் கட்டமைப்புகள் குறித்த தயாரிப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்பத் தடைகளை நீக்குதல், கால்நடை பராமரிப்புத் துறையில் நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
வேளாண்மைத் துறையில் இருதரப்பு பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கு கூட்டுப் பணிக் குழு அமைக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. வேளாண்மை ஒத்துழைப்புக்கு நீண்டகால முயற்சிகளைக் கருத்தில் கொண்டு இது அமைக்கப்படும். ஏற்றுமதி செய்யப்படும் தாவரங்களில் சர்வதேச ஏற்புநிலையில் பிரச்சினைகள் ஏற்படுவதை குறிப்பிட்ட கூட்டு செயல்பாடுகள் என்ற வரையறைகளின்படி குறைப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்தக் குழு அமைக்கப்படும்.
இரு நாடுகளுக்கு இடையிலான அரசு ஏஜென்சிகள், அறிவியல்பூர்வ மற்றும் கல்வி நிலையங்கள் மற்றும் வணிக அமைப்புகளுக்கு இடையே தொடர்புகளை மேம்படுத்து ஊக்குவிக்கவும், இரு நாடுகளின் அந்தந்த ஆராய்ச்சி நிலையங்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் இது உதவியாக இருக்கும்.