Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


வணக்கம்!

பட்ஜெட்டுக்குப் பிறகு, பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் உங்களது பங்கேற்பு மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சியில் இணைந்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டின் பட்ஜெட் எங்கள் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் ஆகும். இந்த நிதிநிலை அறிக்கை எங்களது கொள்கைகளின் தொடர்ச்சியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது. பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நீங்கள் அனைவரும் அளித்த உள்ளீடுகள், ஆலோசனைகள் பட்ஜெட் தயாரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இப்போது இந்த வரவு செலவுத் திட்டத்தை மிகவும் திறம்பட செயல்படுத்துவதிலும், சிறந்த, விரைவான பயன்களைப் பெறுவதிலும், உங்கள் பங்கு மேலும் அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நகர்வதற்கான இந்தியாவின் தீர்மானம் மிகவும் தெளிவாக உள்ளது. விவசாயிகள் வளமாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும் இருக்கும் அத்தகைய இந்தியாவை உருவாக்குவதில் நாம் அனைவரும் இணைந்து ஈடுபட்டுள்ளோம். எந்தவொரு விவசாயியும் பின்தங்கி விடக்கூடாது என்பதை உறுதி செய்வதும், ஒவ்வொரு விவசாயியும் முன்னேற ஊக்குவிக்கப்படுவதும் எங்கள் முயற்சியாகும். விவசாயத்தை வளர்ச்சிக்கான முதல் உந்துசக்தியாக கருதி, நமது விவசாயிகளுக்கு பெருமை சேர்க்கும் இடத்தை நாம் அளித்துள்ளோம். இரண்டு முக்கிய இலக்குகளை நோக்கி நாம் ஒன்றாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். முதலாவது, விவசாயத் துறையின் வளர்ச்சி, இரண்டாவது – நமது கிராமங்களின் வளம்.

நண்பர்களே,

பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டம் 6 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் இதுவரை கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாயைப் பெற்றுள்ளனர். இந்த தொகை கிட்டத்தட்ட 11 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்த நிதி உதவித் திட்டத்தால், கிராமப்புற பொருளாதாரம் வலுப்பெற்று வருகிறது. விவசாயிகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதனால் இந்தத் திட்டத்தின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைச் சென்றடையும். அதாவது, எந்த இடைத்தரகரும் நுழையவோ, கசியவோ வாய்ப்பில்லை. உங்களைப் போன்ற நிபுணர்களும், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களும் ஒத்துழைப்பதன் மூலம், திட்டம் வெற்றி பெற்று, சிறப்பான பலன்களைத் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். உங்கள் பங்களிப்புடன், எந்தவொரு திட்டத்தையும் முழு பலத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த முடியும். இதில் உங்கள் ஒத்துழைப்பையும், எப்போதும் உங்கள் செயலூக்கமான ஒத்துழைப்பையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இந்த ஆண்டு பட்ஜெட்டின் அறிவிப்புகளை அமல்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இதிலும் முன்பு போலவே உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் பெறுவோம்.  ஒவ்வொரு துறையிலும் எங்களுக்கு அதிக ஒத்துழைப்பும், விரிவான ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும்.

நண்பர்களே,

இன்று இந்தியாவின் வேளாண் உற்பத்தி சாதனை அளவில் உள்ளது என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். 10-11 ஆண்டுகளுக்கு முன்பு 265 மில்லியன் டன்னாக இருந்த வேளாண் உற்பத்தி தற்போது 330 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதேபோல், தோட்டக்கலை தொடர்பான உற்பத்தி 350 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது எங்கள் அரசின் விதையிலிருந்து சந்தைக்கு என்ற அணுகுமுறையின் விளைவு. வேளாண் சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், வலுவான மதிப்புச் சங்கிலி ஆகியவை இதை சாத்தியமாக்கியுள்ளன. இப்போது நாட்டின் விவசாயத் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் நாம் இன்னும் பெரிய இலக்குகளை அடைய வேண்டும். இந்த வகையில், பட்ஜெட்டில் பிரதமரின் தன தன்ய திட்டத்தை நாங்கள் அறிவித்துள்ளோம். இது  மிக முக்கியமான திட்டமாகும். இதன் கீழ், நாட்டிலேயே மிகக் குறைந்த வேளாண் உற்பத்தித்திறன் கொண்ட 100 மாவட்டங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும். வளர்ச்சியின் பல அளவுருக்களில் இந்த திட்டத்தின் முடிவுகளை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஒத்துழைப்பு, ஆளுமை, ஆரோக்கியமான போட்டி, ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பலன்களை இந்த மாவட்டங்கள் பெற்று வருகின்றன. நீங்கள் அனைவரும் இந்த மாவட்டங்களில் பெறப்பட்ட முடிவுகளைப் படிக்க வேண்டும். பிரதமரின் தன தன்ய கிரிஷி யோஜனா திட்டத்தை இந்த 100 மாவட்டங்களில் மிக வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது இந்த 100 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்.

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளாக, நமது முயற்சிகள் காரணமாக, நாட்டில் பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதற்காக விவசாயிகளை நான் பாராட்டுகிறேன். ஆனால், இப்போதும் நமது உள்நாட்டு நுகர்வில் 20 சதவீதம் வெளிநாடுகளை, இறக்குமதியை நம்பியே உள்ளது. நமது பருப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கடலை, பாசிப்பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். ஆனால் துவரம் பருப்பு, உளுந்து, மசூர் உற்பத்தியை அதிகரிக்க நாம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். பயறு வகைகளின் உற்பத்தியை விரைவுபடுத்த, மேம்படுத்தப்பட்ட விதைகளின் விநியோகத்தை பராமரிப்பது, கலப்பின வகைகளை ஊக்குவிப்பது அவசியம். இதற்காக, நீங்கள் அனைவரும் காலநிலை மாற்றம், சந்தை நிச்சயமற்ற தன்மை, விலை ஏற்ற இறக்கங்கள் போன்ற சவால்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில், ஐசிஏஆர்  நவீன கருவிகள், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளது. இது 2014 – 2024 க்கு இடையில் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், தீவனம், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் 2900 க்கும் மேற்பட்ட புதிய வகைகளை உருவாக்க வழிவகுத்தது. நமது நாட்டின் விவசாயிகள் இந்த புதிய ரகங்களை மலிவு விலையில் பெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வானிலையின் ஏற்ற இறக்கங்களால் விவசாயிகளின் விளைச்சல் பாதிக்கப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த முறை பட்ஜெட்டில், அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய இயக்கம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த விதைகளை பரவலாக்குவதில் கண்டிப்பான கவனம் செலுத்துங்கள் என்று இந்த நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் தனியார் துறையினரிடம் நான் குறிப்பாக்க் கூற விரும்புகிறேன். இந்த விதைகள் சிறு விவசாயிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய, அவை விதை சங்கிலியின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும். மேலும் எவ்வாறு ஒன்றாக மாறுவது என்பதை முடிவு செய்வது நமது வேலை.

நண்பர்களே,

இன்று மக்கள் ஊட்டச்சத்து குறித்து மிகவும் விழிப்புணர்வு பெற்றிருப்பதை நீங்கள் அனைவரும் காண்கிறீர்கள். எனவே, தோட்டக்கலை, பால் பண்ணை, மீன் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதால், இந்தத் துறைகளில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறிகளின் உற்பத்தியை அதிகரிக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பீகாரில் மக்கானா வாரியம் அமைப்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான ஊட்டச்சத்து உணவுகளை பரப்புவதற்கான புதிய வழிகளைக் கண்டறியுமாறு  உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய ஊட்டச்சத்து உணவுகள் நாட்டின் ஒவ்வொரு மூலையையும், உலக சந்தையையும் சென்றடைய வேண்டும்.

நண்பர்களே,

 நாங்கள் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்தத் துறையின் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கும், உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் இது ஒரு முக்கியமான படியாகும். இது மீன்வளத் துறையில் உற்பத்தி, உற்பத்தித்திறன், உற்பத்திக்குப் பிந்தைய மேலாண்மையை மேம்படுத்த உதவியது. கடந்த சில ஆண்டுகளில், இந்தத் துறையில் முதலீடும் பல திட்டங்கள் மூலம் அதிகரிக்கப்பட்டது. அதன் முடிவுகள் இன்று நம்முன் உள்ளன. இன்று மீன் உற்பத்தி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நமது ஏற்றுமதியும் இரட்டிப்பாகியுள்ளது.  நிலையான மீன்வளத்தை ஊக்குவிப்பதே எங்கள் முயற்சியாகும். இதற்கான செயல் திட்டம் தயாரிக்கப்படும். இந்தத் துறையில் எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கும் யோசனைகள் குறித்து நீங்கள் அனைவரும் விவாதித்து விரைவில் அவற்றுக்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனுடன், நமது பாரம்பரிய மீனவர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

நண்பர்களே,

கிராமப்புற பொருளாதாரத்தை வளமானதாக மாற்ற எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வாமித்வ திட்டம் மூலம் ‘உரிமைகளின் பதிவு’ கிடைத்துள்ளது. சுய உதவிக் குழுக்களின் பொருளாதார வலிமையை அதிகரித்துள்ளோம். அவர்களுக்கான உதவிகளை அதிகரித்துள்ளோம். பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் சிறு விவசாயிகள், வர்த்தகர்கள் பயனடைந்துள்ளனர். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். எங்களது முயற்சிகள் காரணமாக, 1.25 கோடிக்கும் அதிகமான சகோதரிகள் லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். இந்த பட்ஜெட்டில் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கிராம்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் பல புதிய வேலை வாய்ப்புகளுக்கான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளன. திறன், தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை மேலும் சிறப்பானதாக மாற்றுவது எப்படி என்பது குறித்து நீங்கள் அனைவரும் விவாதிப்பீர்கள். இந்த திசையில் உங்கள் ஆலோசனைகளும் பங்களிப்புகளும் நிச்சயமாக நேர்மறையான முடிவுகளை அளிக்கும். நம் அனைவரின் தீவிர பங்களிப்புடன் மட்டுமே, கிராமங்களுக்கு அதிகாரம் கிடைக்கும், கிராமப்புறக் குடும்பங்கள் அதிகாரம் பெறும். இந்த இளைய வழி கருத்தரங்கம் உண்மையிலேயே பட்ஜெட் திட்டங்களை விரைவில், மிகக் குறுகிய நேரத்தில், சிறந்த முறையில் செயல்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன். அதுவும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு, பரிந்துரைகளுடன். இப்போது இந்த இணையவழி கருத்தரங்கில் புதிய பட்ஜெட் தயாரிப்பது பற்றி விவாதம் நடக்கக்கூடாது. இப்போது இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டம் வந்துள்ளது. இனி நமது முழு கவனமும் செயலில் இருக்க வேண்டும். செயலில் உள்ள சிரமங்கள் என்ன, குறைபாடுகள் என்ன, என்ன வகையான மாற்றங்கள் தேவை, என நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்த இணையவழிக் கருத்தரங்கம் பலனளிக்கும். இல்லையெனில், ஓராண்டுக்குப் பிறகு வரவிருக்கும் பட்ஜெட்டை இன்று விவாதித்தால், இப்போது நடந்தவற்றின் பலன் நமக்கு கிடைக்காது. ஆகையால்தான் உங்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இந்த பட்ஜெட் மூலம், நாம் ஓராண்டுக்குள் இந்த இலக்குகளை எட்ட வேண்டும். இதில் அரசு மட்டுமல்ல, இந்தத் துறையின் அனைத்து பங்குதாரர்களும் ஒரே திசையில், ஒரே கருத்துடன், ஒரே இலக்குடன் பயணிக்க வேண்டும். இந்த ஒரு எதிர்பார்ப்புடன், உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*****

PLM/KV