Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வேளாண்மை கட்டமைப்பு நிதியத்தின் கீழ் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்து ஆற்றிய உரை



இன்றைக்கு பகவான் பலராமரின் பிறந்த நாள். நாட்டு மக்களுக்கு, குறிப்பாக விவசாய நண்பர்களுக்கு மிகவும் மகிழ்வான ஹல் ச்சாத் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்த மங்களகரமான நாளில், நாட்டில் வேளாண்மை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒரு லட்சம் கோடி ரூபாயில் சிறப்பு நிதியம் உருவாக்கப்படுகிறது. கிராமங்களில் நல்ல சேமிப்புக் கிடங்கு மற்றும் நவீன குளிர்பதனக் கிடங்கு வசதிகளை உருவாக்க இது உதவிகரமாக இருக்கும். இதனால் கிராமங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் பெருகும்.

அத்துடன், சுமார் 8.5 கோடி விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளிப்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டத்தின் இலக்கு எட்டப்பட்டிருப்பது திருப்தி தருவதாக அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும், உதவி தேவைப்படும் காலகட்டத்தில் நேரடி உதவிகள் சென்றடைவதை இத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயக் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா முடக்கநிலை அமல் காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

பல தசாப்த காலங்களாக, கிராமங்களில் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்ற தேவை இருந்து வந்தது. அவ்வாறு ஏன் தொழிற்சாலைகள் அமையவில்லை என்பது குறித்து நீண்ட காலமாக விவாதங்கள் நடந்து வந்தன. தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்கான விற்பனை விலையை அவற்றின் முதலாளிகள் நிர்ணயிக்கும் சுதந்திரம் உள்ளதைப் போல, விவசாயிகளுக்கு ஏன் அந்த வசதி இல்லை என்பதும் கேள்வியாக இருந்து வந்தது.

ஒரு நகரில் சோப்பு தயாரிக்கும் ஒரு கம்பெனி தொடங்கப்பட்டால், அந்த சோப்புகள் அந்த நகரத்தில் மட்டும் விற்கப்படுவதில்லை. ஆனால் விவசாயத் துறையைப் பொருத்த வரையில் இப்படித்தான் நிலைமை இருந்து வந்தது. உள்ளூர் சந்தைகள், மற்றும் தங்கள் பகுதிகளில் தான் விளைபொருட்களை விவசாயிகள் விற்க முடிந்தது. அதேபோல, மற்ற தொழில்களில் இடைத்தரகர்கள் இல்லாத நிலையில், வேளாண்மைத் துறையில் மட்டும் எதற்காக இடைத்தரகர்கள் இருக்கிறார்கள் என்பதும் கேள்வியாக இருந்தது. தொழிற்சாலைகள் தொடங்க கட்டமைப்பு வசதிகள் உடனடியாகக் கிடைக்கும் நிலையில், அதே அளவிற்கான நவீன கட்டமைப்பு வசதிகள் வேளாண்மைத் துறைக்கும் கிடைக்க வேண்டும்.

நண்பர்களே,

விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக் கூடிய முயற்சிகள் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. `ஒரே தேசம், ஒரே சந்தை’ என்ற லட்சிய நோக்குத் திட்டம் கடந்த 7 ஆண்டுகளாக முயற்சிக்கப்பட்டு, தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. முதலில், e-NAM என்ற இணையவழி சந்தையின் மூலம் தொழில்நுட்ப அடிப்படையிலான நடைமுறை உருவாக்கப்பட்டது. இப்போது, உரிய சட்டங்களை உருவாக்கியதன் மூலம், மார்க்கெட் மற்றும் மார்க்கெட் வரி என்ற வரம்பில் இருந்து விவசாயிகள் விடுவிக்கப் பட்டுள்ளனர். இப்போது விவசாயிகளுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர் விரும்பினால், தன்னுடைய விளை நிலத்திலேயே தன் உற்பத்திப் பொருளுக்கு விலை பேசலாம். அல்லது சேமிப்புக் கிடங்குகளில் அவற்றை வைத்துவிட்டு, இணையவழி சந்தை தொடர்பில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களில், தனக்கு அதிக விலை தரக்கூடியவருக்கு நேரடியாக அவர் விற்கலாம்.

அதேபோல, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு சட்டத்தின்படி, தொழிற்சாலைகளுடன் விவசாயிகள் நேரடி பங்குதாரர்களாக சேர முடியும். உதாரணமாக, சிப்ஸ் மற்றும் பழச்சாறு தயாரிக்கும் உற்பத்தியாளர்களுடன் விவசாயிகள் நேரடியாக கூட்டு முயற்சியில் ஈடுபடலாம். எனவே விதைக்கும் போதே, தன்னுடைய விளைபொருளுக்கான விலை உத்தரவாதத்தை விவசாயி பெற்றிட முடியும். விளையும் காலத்தில் விலை சரிவு ஏற்பட்டால் விவசாயிக்குப் பாதிப்பு ஏற்படாது.

நண்பர்களே,

நம்முடைய உற்பத்தியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. விளைச்சலுக்குப் பிறகு வீணாகும் பொருளின் அளவுதான் கவலை தருவதாக இருக்கிறது. இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையை சமாளிக்க, சட்ட சிக்கல்கள் நீக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நேரடி உதவிகள் வழங்கப்படுகின்றன. நாட்டில் உணவு தானியங்களுக்குக் கடுமையான பற்றாக்குறை இருந்த சமயத்தில் நாம் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை உருவாக்கினோம். ஆனால், உலகில் உணவு உற்பத்தியில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிட்ட இந்த காலகட்டத்திலும், அதே சட்டம் இன்னும் அமலில் இருக்கிறது.

இதனால் தான் கிராமங்களில் நல்ல சேமிப்புக் கிடங்குகள் உருவாக்க முடியாமலும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்க முடியாமலும் உள்ளது. இந்தச் சட்டத்தை பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். நாட்டில் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தொந்தரவு தருவதற்காக இந்தச் சட்டம் அதிக  அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இப்போது பயப்பட வேண்டிய சூழலில் இருந்து வேளாண்மை வணிகம் விடுவிக்கப்பட்டுள்ளது. இப்போது வியாபாரிகளும், வணிகர்களும் சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுவதுடன், கிராமங்களில் மற்ற வசதிகளையும் ஏற்படுத்திட முடியும்.

நண்பர்களே,

இன்றைக்குத் தொடங்கப்படும் வேளாண்மைக் கட்டமைப்பு நிதியம், கிராமங்களில் உணவுப் பொருட்களை சேமிக்க நவீன வசதிகளை விவசாயிகள் உருவாக்கிக் கொள்ள வகை செய்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், கிராமத்தில் உள்ள விவசாயிகள் குழுக்கள், விவசாயிகள் கமிட்டிகள், எப்.பி.ஓ.-க்கள் மூலம் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள் உருவாக்குவதற்கும் உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்றுவதற்காக அளிக்கப்படும் இந்த நிதியுதவிக்கு 3 சதவீத வட்டி சலுகை உண்டு. சிறிது நேரத்திற்கு முன்பு சில விவசாயிகள் சங்கங்களுடன் நான் கலந்தாய்வு செய்தேன். நாடு முழுக்க பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உதவிகள் செய்து வரும் விவசாய அமைப்புகளுக்கு இந்த புதிய நிதியம் பேருதவியாக இருக்கும்.

நண்பர்களே,

விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இந்த நவீனக் கட்டமைப்பு பேருதவியாக இருக்கும். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலமாக இருக்கும் பொருட்களை தேசிய மற்றும் உலகளாவிய சந்தைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். இதன் மூலம், பல்வேறு மாவட்டங்களில், கிராமங்களுக்கு அருகில் வேளாண்மைத் தொழிற்சாலைகளின் தொகுப்பு உருவாக்கப்படும்.

நண்பர்களே,

கிராமங்களில் வேளாண்மை தொழற்சாலைகளில் உருவாக்கப்படும் விவசாயம் சார்ந்த பொருட்கள் நகரங்களுக்குச் செல்லக் கூடிய, நகரங்களில் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் கிராமங்களுக்குச் செல்லக் கூடிய ஒரு சூழ்நிலையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் தற்சார்பு இந்தியா திட்டத்தின் இலக்காக உள்ளது. அந்த வகையில் தான் நாம் செயலாற்ற வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை யார் நடத்துவார்கள் என்ற கேள்வி இப்போது எழும். இதிலும்கூட, சிறு விவசாயிகளின் குழுக்கள் பெரிய பங்கு வகிக்க முடியும். இதை நாம் எப்.பி.ஓ. அல்லது வேளாண்மை உற்பத்தியாளர் அமைப்பு என்று குறிப்பிடுகிறோம்.

எனவே, எப்.பி.ஓ.க்களின் பரந்த நெட்வொர்க் அமைப்பை உருவாக்க கடந்த 7 ஆண்டுகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. வரக்கூடிய ஆண்டுகளில் நாட்டில் 10 ஆயிரம் எப்.பி.ஓ.க்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

எப்.பி.ஓ.க்களின் நெட்வொர்க் ஏற்படுத்தும் பணி நடைபெறும் அதே சமயத்தில், வேளாண்மை சார்ந்த ஸ்டார்ட் அப் முயற்சிகளுக்கும் ஊக்கம் தரப்படுகிறது. சுமார் 350 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவி அளிக்கப்பட்டுள்ளது. இவை உணவு பதப்படுத்துதல், செயற்கைப் புலனறிதல், வேளாண்மைக்கான சிறு கருவிகள் தயாரித்தல், புதுப்பிக்க ஆதாரங்களைக் கொண்ட மின் உற்பத்தி வசதி ஆகியவை தொடர்பானதாக உள்ளன.

நண்பர்களே,

இந்த அனைத்துத் திட்டங்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பான சீர்திருத்தங்களிலும் சிறு விவசாயிகள் தான் முக்கிய இடம் பெறுகின்றனர். சிறு விவசாயிகள் தான் அதிக பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவர்களால் தான் அரசு அளிக்கும் திட்டங்களின் பயன்களை முழுமையாகப் பெற முடியவில்லை. கடந்த 6 – 7 ஆண்டுகளாக, சிறு விவசாயிகளின் இந்த நிலைமையை மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. நாட்டில் வேளாண்மை மேம்பாட்டுத் திட்டங்களில் சிறு விவசாயிகளுக்குத் தொடர்பு ஏற்படுத்தப் படுகிறது. அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.

நண்பர்களே,

நாட்டின் சிறு விவசாயிகளை ஈடுபடுத்தும் வகையிலான ஒரு பெரிய திட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. வரக்கூடிய நாட்களில் ஒட்டுமொத்த தேசத்துக்கும் இதனால் பயன் கிடைக்கப் போகிறது. நாட்டின் முதலாவது விவசாயிகள் ரயில் சேவை மகாராஷ்டிரா மற்றும் பிகாருக்கு இடையில் தொடங்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த ரயில் ஆரஞ்சு, திராட்சை, வெங்காயம் போன்ற காய்கறிகள் பழங்களுடன் மகாராஷ்டிராவில் இருந்து செல்லும். பிகாரில் இருந்து திரும்பி வரும்போது, தாமரை விதைகள், சீனப் பழம், பான், காய்கறிகள், மீன் போன்ற உணவுப் பொருட்களைக் கொண்டு வரும். பிகாரைச் சேர்ந்த சிறு விவசாயிகள் மும்பை மற்றும் புனே போன்ற பெரிய நகரங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். இந்த ரயில்  உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலங்கள் வழியாகச் செல்வதால், அந்த மாநிலங்களின் விவசாயிகளும் இதன் மூலம் பயன் பெறுவர். இந்த ரயில் முழுவதுமே ஏர்-கண்டிஷன் செய்யப்பட்டது என்பது விசேஷமான அம்சமாகும். அதாவது, நடமாடும் குளிர்பதனக் கிடங்கு வசதியாக இது இருக்கிறது. பால், பழங்கள், காய்கறிகள், மீன் கொண்டு செல்லும் விவசாயிகளுக்கும், நகரங்களில் இவற்றைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் பயன்தருவதாக இது இருக்கும்.

தங்கள் பகுதியில் உள்ள சந்தையில் குறைந்த விலைக்கு இவற்றை விற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இனி கிடையாது என்பதால், இதன் மூலம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். உணவுப் பொருட்களை லாரிகளில் கொண்டு செல்லும் போது அவை வீணாவதைக் குறைப்பதாக இந்த வசதி இருக்கும். லாரிகளில் கொண்டு செல்வதைவிட, ரயிலில் கொண்டு செல்வதற்கான செலவு மிகவும் குறைவாக இருக்கும். வானிலை மற்றும் இதர பிரச்சினைகளால், புதுமலர்ச்சியுடன் கூடிய காய்கறிகள், பழங்கள் கிடைக்காமல் இருந்த நகரத்து மக்கள், இதன் மூலம் பயன் பெறுவார்கள். விலைகளும் குறைவாக இருக்கும்.

சொல்லப்போனால், கிராமங்களில் உள்ள சிறு விவசாயிகளின் வாழ்க்கை நிலையை இது மேம்படுத்துவதாக இருக்கும். சிறு விவசாயிகள், இப்போது பெருநகரங்களுக்குச் செல்ல முடியும் என்பதால், புதிய காய்கறிகள் வளர்ப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த தொழில்களில் ஈடுபடவும் அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும். குறைவான நிலத்தில், அதிகமான வருவாய் ஈட்டுவதற்கு இது வழி வகுக்கும். சுயவேலை வாய்ப்பு முறையில் நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவியாக இருக்கும்.

நண்பர்களே,

இந்த அனைத்து நடவடிக்கைகளும், 21வது நூற்றாண்டில் கிராமப்புற பொருளாதாரத்தின் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாக இருப்பதுடன், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் பல மடங்கு உயர உதவிகரமாக இருக்கும். சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து முடிவுகளும், கூடிய விரைவில் கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

நெருக்கடியான காலகட்டத்திலும் கூட நாட்டிற்கு எந்த அளவுக்கு விவசாயிகள் ஆதரவாக இருக்க முடியும் என்பதை கடந்த 6 மாதங்களாக நாம் பார்த்து வருகிறோம். முடக்கநிலை காலத்தில் உணவுப் பற்றாக்குறை வராமல் நமது விவசாயிகள் பார்த்துக் கொண்டார்கள். நாட்டில் முடக்கநிலை அமலில் இருந்த போது, நமது விவசாயிகள் வயல்களில் அறுவடைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். விதைப்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான நிலப்பரப்பில் வேளாண் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். முடக்கநிலை தொடங்கிய நாளில் இருந்து தீபாவளி மற்றும் சாத் கொண்டாட்டம் வரையிலான 8 மாதங்கள் வரை 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு நம்மால் இலவசமாக உணவு தானியங்களை வழங்க முடிந்தது. விவசாயிகளின் பங்களிப்பின் மூலமாகத்தான் இது சாத்தியமானது.

நண்பர்களே,

வேளாண் உற்பத்திப் பொருட்கள் கொள்முதலில் சாதனை அளவு எட்டப்படுவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இதனால் முந்தைய காலத்தைவிட இப்போது 27 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான தொகை விவசாயிகளின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. விதைகள் அல்லது உரமாக இருந்தாலும், இந்த முறை சிரமமான சூழ்நிலையிலும் உற்பத்தியில் சாதனை எட்டப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப இவை பகிர்ந்தளிக்கப்பட்டன. இதனால் தான் நெருக்கடியான சூழ்நிலையிலும் நமது கிராமப்புற பொருளாதாரம் வலுவாக உள்ளது. கிராமங்களில் பிரச்சினைகளின் தீவிரம் குறைவாக இருப்பதற்கும் இதுதான் காரணம்.

நமது கிராமங்களின் இந்த பலம், நாட்டின் வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்துவதில் முன்னோடியாக இருக்கட்டும்! இந்த நம்பிக்கையுடன், அனைத்து விவசாய நண்பர்களுக்கும் நிறைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

நீங்கள் ஆற்றி வரும் பாராட்டுக்கு உரிய பணிகளைத் தொடர்ந்து செய்து, கிராமங்களில் கொரோனா பரவாமல் தடுத்திடுங்கள்.

இரண்டு கெஜ இடைவெளி அல்லது சமூக இடைவெளி என்ற மந்திரத்தையும் மற்றும் முகக்கவச உறை அணிவதையும் தொடர்ந்து பின்பற்றுங்கள்.

விழிப்புடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

மிக்க நன்றி!!

******