Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வேலைவாய்ப்புத் திருவிழாவில் காணொலிக் காட்சி மூலம் 71,000க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

வேலைவாய்ப்புத் திருவிழாவில் காணொலிக் காட்சி மூலம் 71,000க்கும்  அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை  வழங்கி பிரதமர் நிகழ்த்திய  உரையின் தமிழாக்கம்


வணக்கம்!

எனது அமைச்சரவை சகாக்களே, நாடு முழுவதும் பங்கேற்றுள்ள பிரமுகர்களே, எனது இளம் நண்பர்களே!

நான் நேற்று இரவு குவைத்திலிருந்து திரும்பினேன். அங்கு, நான் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஒரு விரிவான சந்திப்பை நடத்தினேன். அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டேன். இப்போது, நான் நாடு திரும்பி வந்தவுடன், எனது முதல் நிகழ்ச்சி நம் தேசத்தின் இளைஞர்களுடனான நிகழ்ச்சியாக உள்ளது – உண்மையில் இது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைய நிகழ்வு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. உங்களின் பல ஆண்டுகால கனவுகள் பலனளித்துள்ளன. உங்களின் இடைவிடாத முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. கடந்து செல்லும்  2024-ம் ஆண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் புதிய மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்கிறது. இந்த மகத்தான தருணத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்திய இளைஞர்களின் திறனை அதிகரிப்பது  எங்கள் அரசின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. வேலைவாய்ப்பு திருவிழாக்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம் இந்த இலக்கை நோக்கி நாங்கள் உறுதியாக பணியாற்றி வருகிறோம். கடந்த பத்தாண்டுகளாக, பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் அரசு வேலைகளை வழங்குவதற்கு விரிவான இயக்கம் நடந்து வருகிறது. இன்றும் 71,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டுமே எங்கள் அரசு சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளை வழங்கியிருப்பது ஒரு சாதனையாகும். அரசு அமைப்புக்குள் நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குவதற்கான இத்தகைய  அணுகுமுறை இதற்கு முன் எந்த நிர்வாகத்திலும் காணப்படவில்லை.  இந்த வாய்ப்புகள் முற்றிலும் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்படுகின்றன. இந்த வெளிப்படையான பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்ட இளைஞர்கள், மிகுந்த அர்ப்பணிப்புடனும்  நேர்மையுடனும் நாட்டிற்கு சேவை செய்து வருகிறார்கள் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

நண்பர்களே,

எந்தவொரு நாட்டின் முன்னேற்றமும் அதன் இளைஞர்களின் முயற்சிகள், திறன்கள்,  தலைமை ஆகியவற்றுடன்  இணைக்கப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இந்த விருப்பத்தில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒவ்வொரு கொள்கை மற்றும் முடிவின் மையத்திலும் இந்தியாவின்  திறமையான இளைஞர்கள் உள்ளனர் என்பதிலிருந்து எங்கள் நம்பிக்கை உருவாகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், தற்சார்பு இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற முன்முயற்சிகள்  இளைஞர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி போன்ற துறைகளில் இந்தியா கொள்கைகளை சீர்திருத்தியுள்ளது.  இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள  இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இன்று, இந்திய இளைஞர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள். நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளோம். உலக அளவில் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழல்சார் அமைப்பால்  பெருமைகொண்டுள்ளோம் . ஓர் இளைஞர் இன்று ஸ்டார்ட் அப் தொழில் பயணத்தைத் தொடங்கும்போது, ஒரு வலுவான சூழல்சார் அமைப்பு அவருக்கு ஆதரவளிக்கிறது. அதேபோல், ஓர்  இளைஞர் விளையாட்டைத் தொழிலாகக் கொள்வதற்கு விரும்பினால்  தோல்வி பயம் இல்லாமல், அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அதை அவர் மேற்கொள்ள முடியும். வெற்றியை உறுதி செய்ய பயிற்சி முதல் போட்டிகள் வரை நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகளில், குறிப்பிடத்தக்க மாற்றத்தை நாம்   காண்கிறோம். இந்தியா இப்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதல் இயற்கை விவசாயம் வரை, விண்வெளித் துறை முதல் பாதுகாப்பு வரை, சுற்றுலா முதல் ஆரோக்கியம் வரை, நாடு புதிய உச்சங்களை  எட்டி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

நண்பர்களே,

நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்த  நமது இளைஞர்களின் திறமைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.இதற்கான பொறுப்பு பெரும்பாலும் நமது கல்வி முறையிலேயே உள்ளது. பல தசாப்தங்களாக, புதிய இந்தியாவை  உருவாக்க நவீன கல்வி கட்டமைப்பின் அவசியத்தை நாடு உணர்ந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் மூலம், இந்த மாற்றத்திற்கான பயணத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஒரு காலத்தில் மாணவர்களை தனது இறுக்கத்தால் கட்டுப்படுத்திய கல்வி முறை, இப்போது அவர்களுக்கு புதிய வாய்ப்புகளின் களஞ்சியமாக உள்ளது. அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் மற்றும் நவீன பிரதமர்-ஸ்ரீ பள்ளிகள் போன்ற முன்முயற்சிகள் சிறு வயதிலிருந்தே கண்டுபிடிப்பு மனநிலையை வளர்த்து வருகின்றன. முன்பு, கிராமப்புறம், தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு மொழி ஒரு தடையாக இருந்தது. இதை சரிசெய்வதற்காக, மாநில மொழிகளில் கல்வி மற்றும் தேர்வுகள் எழுதுவதை செயல்படுத்தும் கொள்கைகளை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். இன்று, எங்கள் அரசு 13 வெவ்வேறு மொழிகளில் ஆட்சேர்ப்பு தேர்வுகளை நடத்த அனுமதிக்கிறது. மேலும், எல்லையோர மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க, அவர்களின் ஆட்சேர்ப்பு ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். சிறப்பு ஆட்சேர்ப்பு இயக்கங்களைத் தொடங்கியுள்ளோம். இதன் விளைவாக, 50,000 க்கும் அதிகமான இளைஞர்கள் மத்திய ஆயுத காவல்  படைகளில் பதவிகளுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

நண்பர்களே,

இன்று சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்த நாளாகும். இந்த ஆண்டு சவுத்ரி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதில் எங்கள்  அரசு பெருமை கொள்கிறது. அவருக்கு எனது மரியாதை மிகுந்த அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த நாளை நாம் விவசாயிகள் தினம் அல்லது தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடுகிறோம். இந்தத் தருணத்தில் நான் நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும், உணவு வழங்குபவர்களுக்கும் வணக்கம் செலுத்துகிறேன்.

நண்பர்களே,

கிராமப்புறங்கள் செழித்தோங்கினால்தான் இந்தியா முன்னேறும் என்று சவுத்ரி சாகேப் அடிக்கடி குறிப்பிடுவார். இன்று, எங்கள் அரசின் கொள்கைகளும் முடிவுகளும் கிராமப்புற இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளையும் சுய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. கணிசமான எண்ணிக்கையில்  இளைஞர்கள் விவசாயத் துறையில் அர்த்தமுள்ள வேலைவாய்ப்பைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் விருப்பங்களுடன் ஒத்துப்போகும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். கோபர்தன் திட்டத்தின் கீழ், நூற்றுக்கணக்கான உயிரி எரிவாயு ஆலைகள் அமைக்கப்பட்டதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. நூற்றுக்கணக்கான வேளாண் சந்தைகளை இ-நாம்  திட்டத்தில் ஒருங்கிணைத்த செயலானது பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதேபோல், எத்தனால் கலப்பதை 20 சதவீதமாக உயர்த்தும் அரசின் முடிவு விவசாயிகளுக்குப்  பயனளித்தது மட்டுமின்றி , சர்க்கரைத் துறையில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. ஏறத்தாழ 9,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை நிறுவியதன் மூலம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் அதே வேளையில், விவசாயிகள் புதிய சந்தைகளை அணுகுவதற்கும் நாங்கள் உதவிசெய்துள்ளோம். ஆயிரக்கணக்கான தானிய  சேமிப்பு கிடங்குகளை கட்டும் மிகப் பெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருதகிறது. இது குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளையும்  சுய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது. அண்மையில் , நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் காப்பீடு வழங்கும் நோக்கத்துடன் பீமா சகி  திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ட்ரோன் சகோதரிகள் திட்டம், லட்சாதிபதி  சகோதரிகள் திட்டம், வங்கித் தோழி திட்டம்  போன்ற  முயற்சிகள் அனைத்தும் விவசாயத்திலும்  கிராமப்புறங்களிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.

நண்பர்களே,

இன்று ஆயிரக்கணக்கான இளம் பெண்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் வெற்றி  மற்ற பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 26 வார மகப்பேறு விடுப்பு வழங்குவது என்ற எங்கள் முடிவு, லட்சக்கணக்கான பெண்களின் தொழில் வாழ்க்கையை பாதுகாத்து, அவர்களின் விருப்பங்கள் நீடிப்பதை   உறுதி செய்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கற்களாக இருந்தவற்றை தூய்மை இந்தியா இயக்கம் எவ்வாறு படப்படியாக அகற்றியது என்று பிரதமர் விவரித்தார். சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டுகளாக, பள்ளிகளில் தனி கழிப்பறைகள் இல்லாததால் பல பெண்கள் தங்கள் கல்வியை இடையிலேயே கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டோம். செல்வமகள் சேமிப்புத் திட்டமானது  பெண் கல்விக்குத் தேவையான நிதி ஆதரவை உறுதி செய்கிறது. எங்கள் அரசு 30 கோடி பெண்களுக்கு ஜன் தன் கணக்குகளைத் தொடங்கியதால், அரசுத் திட்டங்களின் பலன்களை அவர்கள் நேரடியாகப்  பெற முடிந்தது. முத்ரா திட்டத்தின் கீழ் பெண்கள் பிணை இல்லாத கடன்களைப் பெற்றுள்ளனர். கடந்த காலத்தில், பெண்கள் பெரும்பாலும் முழு குடும்பங்களையும் நிர்வகித்தனர். ஆனால் சொத்துரிமை அவர்களின் பெயர்களில் அரிதாகவே இருந்தது. இன்று, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயர்களிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊட்டச் சத்து திட்டம் ,  ஆயுஷ்மான் பாரத் போன்ற முன்முயற்சிகள் பெண்களுக்கு சுகாதார வசதிகளை அணுகுவதை  கணிசமாக மேம்படுத்தியுள்ளன. நாரி சக்தி வந்தன் அபிநியம்  மூலம், பெண்கள் சட்டமன்றங்களிலும்  மக்களவையிலும்  இடஒதுக்கீடு பெற்றுள்ளனர். நமது சமூகமும் நாடும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றன.

நண்பர்களே,

இன்று நியமனக் கடிதங்களைப் பெறும் இளம் தொழில் வல்லுநர்கள் உருமாற்றம் செய்யப்பட்ட அரசு அமைப்பின் ஒரு பகுதியாக மாறுவார்கள். கடந்த 10 ஆண்டுகளில், அரசு அலுவலகங்களின் காலாவதியான தோற்றமும்  அவற்றின் செயல்பாடுகளும் மாற்றப்பட்டுள்ளன. இன்று, அரசு ஊழியர்களிடையே அதிகரித்த செயல்திறனையும் உற்பத்தித்திறனையும்  நாம் காண்கிறோம். இது அவர்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் பெற்ற வெற்றியாகும். கற்றுக்கொள்வதற்கான உங்கள் ஆர்வத்தாலும்  சிறந்து விளங்குவதற்கான உங்கள் உறுதியாலும்  நீங்கள் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறீர்கள் . உங்கள் வாழ்க்கை முழுவதும் இதே உற்சாகம் தொடர ஐகாட்  கர்மயோகி தளம் உங்கள் தொடர்ச்சியான கற்றல் பயணத்துக்கு உதவும். இது 1,600க்கும் மேற்பட்ட பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இது பல்வேறு பாடங்களில் அறிவை திறம்படவும் குறுகிய காலத்திற்குள் பெறவும் உதவுகிறது. நீங்கள் இளைஞர்களாக  இருக்கிறீர்கள். நமது நாட்டின் வலிமையை பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள். நமது இளைஞர்களால் அடைய முடியாத இலக்கு என்று எதுவுமே இல்லை. இந்தப் புதிய அத்தியாயத்தை புதிய சக்தியுடனும் நோக்கத்துடனும் தொடங்குங்கள். இன்று பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் பிரகாசமான, வெற்றிகரமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துகள்.

மிக்க நன்றி.

***

(Release ID: 2087180)

TS/SMB/RR