பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, வீட்டு மனை விற்பனை (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2015க்கு, நாடாளுமன்ற மாநிலங்களவை நிலைக் குழு ஏற்றுக் கொண்டபடி ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, விவாதத்துக்காக நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்படும்.
வீட்டு மனை விற்பனை (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், நுகர்வோரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு சட்டமாகும். வீட்டு மனை விற்பனைகளில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தி, திட்டங்களை உரிய நேரத்தில் முடிப்பதற்கென இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம் ஒழுங்குமுறை சூழலை ஏற்படுத்தி, சிக்கல்களை உடனடியாக தீர்க்க வகை செய்து, நில விற்பனை துறை வளர வகை செய்துள்ளது. வீட்டு மனை விற்பனைத் துறையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்து, மத்திய அரசின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற இச்சட்டம் உதவும்.
நில விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்திடம், நில விற்பனை தொழில் செய்பவர்கள், மற்றும் நில விற்பனை முகவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்கியுள்ளது இச்சட்டம். நில விற்பனைத் துறையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து, அதன் மூலமாக நுகர்வோரின் நம்பிக்கையை மீட்டெடுத்து, வீடு விற்பனை போன்ற விஷயங்களில் ஒழுங்குமுறையை ஏற்படுத்துவதன் மூலம், முதலீட்டுச் சந்தைகளை இத்துறை பயன்படுத்த முடியும். இத்துறையில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தி, திட்டங்களை உரிய காலத்தில் முடித்து, இத்துறையில் நேர்த்தியை உருவாக்க இச்சட்டம் உதவும்.
இச்சட்டத்தின் முக்கிய கூறுகள் பின்வருமாறு :
1) இச்சட்டம், வணிக மனைகள் மற்றும் வீட்டு மனைகளுக்கும் பொருந்தும்.
2) வீட்டு மனை விற்பனையை ஒழுங்குபடுத்த, மாநில அரசுகள் அளவில், மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்படும்.
3) ஒழுங்குமுறை ஆணையத்திடம், மனைத் திட்டங்கள் மற்றும் முகவர்கள் கட்டாயப் பதிவு
4) ஒரு திட்டத்தில் உள்ள விபரங்களான, தொழில் செய்பவரின் பெயர், திட்டத்தின் மொத்த மதிப்பு, ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடத்தின் விபரம், ஒப்புதல்கள், ஒப்பந்தங்கள், முகவர்களின் விபரங்கள், ஒப்பந்ததாரர்களின் விபரங்கள், வடிவமைப்பாளரின் விபரங்கள், கட்டிட பொறியாளரின் விபரங்கள் போன்றவை வெளியிடப்படுவது கட்டாயமாக்கப்படுகிறது.
5) திட்டத்தை உரிய நேரத்தில் முடிப்பதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கியில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை.
6) சிக்கல்களை தீர்த்துக் கொள்வதற்காக சிக்கல் தீர்க்கும் மையங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் அமைத்தல்.
7) நுகர்வோர் நீதிமன்றங்களை தவிர, இதர சிவில் நீதிமன்றங்கள், நில விற்பனை தொடர்பான வழக்குகளை ஏற்றுக் கொள்ள தடை
8) நுகர்வோரின் ஒப்புதல் இன்றி, கட்டுமானம் செய்பவர், வரைபடத்திலோ, திட்டத்திலோ மாறுதல் செய்ய தடை.
9) சம்பந்தப்பட்ட அரசு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம், விதிகளில் திருத்தம் செய்து கொள்ள அனுமதி.