Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“விளையாடு இந்தியா” (கேலோ இந்தியா) பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை


பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) போட்டிகளை இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (ஜனவரி 31) தில்லியில் தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இளைஞர்களிடையில் விளையாட்டு மிக முக்கியமான அங்கத்தை வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆளுமைப் பயிற்சிக்கு விளையாட்டு மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

பல்வேறு வேலைகள் இருந்தாலும் விளையாட்டில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். “இங்கே கூடியிருக்கும் பிரபல விளையாட்டு வீரர்கள் கூட பல இடையூறுகளைச் சந்தித்திருப்பார்கள். ஆனால், தங்களது அடையாளத்தை நிலைநாட்டுவதற்காக முயற்சியைக் கைவிடாமல் போராடியிருக்கின்றனர்” என்றார் அவர்.

“இந்தியா விளையாட்டில் எப்போதும் பின் தங்கியதில்லை. நாம் இளைய நாடாகத் திகழ்கிறோம். விளையாட்டில் கூட நம்மால் சிறப்பாகச் செயல்பட முடியும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உலக அரங்கில் இந்தியா குறிப்பிடத் தக்க இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டிய பிரதமர், “இது வலுவான ராணுவத்திலும், வலிமையான பொருளாதாரத்தில் மட்டுமல்ல. இந்திய மக்கள் மதிப்புக்குரிய விஞ்ஞானிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இன்னும் பல்வேறு துறை வித்தகர்கள் ஆகியோரைக் கொண்டதாகவும் சிறப்புடன் திகழ்கிறது. இந்தியா இன்னும் உயரங்களை எட்டும் என்பதில் நம்பிக்கை உள்ளது. அதிலும், இந்திய இளைஞர்கள் மீது நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டார்.

“விளையாடு இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வெல்வதற்காக மட்டுமல்ல. மேலும், விளையாட்டில் சாதனை புரிய மக்கள் இயக்கத்திற்கு வலிமை அளிக்கும் முயற்சியாகும். விளையாட்டுகள் நாடு முழுவதும் பிரபலம் அடைவதற்காக ஒவ்வொரு அம்சத்தின் மீதும் நாம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என்றும் பிரதமர் கூறினார்.

திரு. நரேந்திர மோடி மேலும் பேசுகையில், “இத்தகைய விளையாட்டுகளில், சிறிய நகரங்களிலிருந்தும் கிராமப்புறங்களிலிருந்தும் இளைஞர்கள் வந்து பங்கேற்பது பெருமையளிக்கிறது. அவர்களுக்கு ஊக்கம் தேவைப்படுகிறது. அவ்வாறு ஊக்கமளிக்க அரசு விரும்புகிறது” என்றார்.

விளையாட்டை விரும்புவோர் பேரார்வத்தின் காரணமாகத்தான் விளையாடுகிறார்களே தவிர, பணத்தின் மீதான நாட்டத்தின் காரணமாக அல்ல” என்று கூறிய பிரதமர், “ஓர் இந்திய விளையாட்டு வீரர் வெற்றி பெற்றால், அவர் மூவண்ணக் கொடியை ஏந்தும்போது, ஓர் உன்னதமான உணர்வு ஏற்படுகிறது. ஒட்டு மொத்த நாட்டுக்குமே அது உற்சாகம் அளிக்கிறது” என்றும் கூறினார்.

****