Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விருந்து நிகழ்ச்சியில் பழங்குடியின விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் குடியரசு தின அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல்

விருந்து நிகழ்ச்சியில் பழங்குடியின விருந்தினர்கள், தேசிய மாணவர் படை வீரர்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் குடியரசு தின அலங்கார ஊர்தி கலைஞர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல்


எனது அமைச்சரவை மூத்த சகாக்களான பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, திரு அர்ஜுன் முண்டா அவர்களே, திரு கிரண் ரிஜிஜு அவர்களே, திருமதி ரேணுகா சிங் ஸருதா அவர்களே, நாடெங்கிலும் இருந்து இங்கு வந்துள்ள எனது இளம் நண்பர்களே. கொரோனா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முகக் கவசங்கள், கொரோனா பரிசோதனைகள், 2 அடி வரையிலான இடைவெளி போன்றவை நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டன. இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். எனினும் உங்களது ஆர்வத்தில் எந்த மாற்றமும் இல்லை.

நண்பர்களே,

ராஜ்பாத்தில் நீங்கள் அணிவகுப்பில் ஈடுபடும்போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உற்சாகம் ஏற்படுகிறது. இந்தியாவின் வளமான கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளை நீங்கள் வெளிப்படுத்தும்போது நாட்டு மக்கள் அனைவரின் சிரங்களும் பெருமையில் உயர்கின்றன. இந்தியாவின் சிறந்த சமூக- கலாச்சார பாரம்பரியத்திற்கும், கேந்திர செயல்திறன்களுக்கும் குடியரசு தின அணிவகுப்பு, மரியாதை செலுத்துகின்றது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு உயிர்தரும் அரசியலமைப்பு சட்டத்தையும் குடியரசு தின அணிவகுப்பு வழங்குகிறது.

நண்பர்களே,

இந்த வருடம் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கிறது. குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாளும் இந்த வருடம்  கொண்டாடப்படவுள்ளது. பராக்கிரம தினமாகக் கடைப்பிடிக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளையும் இந்த வருடம் கொண்டாடுகிறோம். 75 ஆவது சுதந்திர தினம் குரு தேக் பகதூரின் வாழ்க்கை, நேதாஜியின் வல்லமை இவையாவும் நம் அனைவருக்கும் மிகுந்த ஊக்கத்தை வழங்குகின்றன. இந்தியாவிற்கு கூடுதல் வலு சேர்ப்பதற்காக நம்மால் இயன்றவற்றை தொடர்ந்து நாட்டிற்காக நாம் செய்ய வேண்டும்.

நண்பர்களே,

குடியரசு தின அணிவகுப்புக்கான ஏற்பாடுகளின் போது நமது நாடு எவ்வளவு பன்முகத்தன்மை வாய்ந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பல்வேறு மொழிகள், ஏராளமான பேச்சு வழக்கு மொழி வகைகள், வித்தியாசமான உணவு பழக்கங்கள்! இவ்வாறு அனைத்தும் வேறுபட்டிருந்தாலும் இந்தியா என்பது ஒன்றே. பல மாநிலங்கள், ஆனால் ஒரே தேசம்; பல சமூகங்கள், ஆனால் ஒரே எண்ணம்; பல சமய உட்பிரிவுகள், ஆனால் ஒரே நோக்கம்; பல கலாச்சாரங்கள், ஆனால் ஒரே பயன்; பல மொழிகள், ஆனால் ஒரே வெளிப்பாடு; பல நிறங்கள், ஆனால் ஒரே மூவண்ணம் என்பது தான் இந்தியா. இந்தியாவில் பாதைகள் வேறுவேறாக இருந்தபோதும் இலக்கு ஒன்று தான். அது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது தான்.

நண்பர்களே,

இன்று ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற மனஉறுதி, நாட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் சென்றடைந்து மேலும் வலுப்பெறுகிறது. உலக அளவில் இந்தியா பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தலைமுறையை சேர்ந்த நீங்கள் இதனை கட்டாயம் காண வேண்டும். இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள உணவு செய்முறை என்ற பிரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதியின் உணவுகளை பகிர்ந்துள்ளனர். இந்தத் தளத்தை காண நேரம் ஒதுக்கி, உங்கள் குடும்பத்தினருக்கும் குறிப்பாக உங்கள் அன்னையிடமும் இதைப்பற்றித் தெரிவியுங்கள், நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

நண்பர்களே,

பெருந்தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தபோதும், நம் நாட்டின் இளைஞர்கள் டிஜிட்டல் வாயிலாக பிற மாநிலங்களுடன் வலைதள கருத்தரங்குகளை நடத்தியுள்ளனர். பிற மாநிலங்களின் இசை, நடனம், உணவு முறைகள் குறித்து இந்த கருத்தரங்கங்களில் சிறப்பு விவாதங்கள் நடத்தப்பட்டன. நாட்டின் அனைத்து பகுதிகளின் மொழிகள், உணவு மற்றும் கலையை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்தின் வாழ்க்கைமுறை, பண்டிகைகள் குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். குறிப்பாக நமது வளமான பழங்குடி பாரம்பரியங்கள், கலை மற்றும் கைவினை ஆகியவற்றின் வாயிலாக ஏராளமான விஷயங்களை நாடு தெரிந்துகொள்ளலாம். இவற்றை மேம்படுத்துவதில் ஒரே பாரதம் ,உன்னத பாரதம் பிரச்சாரம் உதவிகரமாக இருக்கின்றது.

நண்பர்களே,

அண்மைக் காலமாக உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவித்தல்என்பது நாட்டில் அதிகம் பேசப்படுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நமது வீடுகளுக்கு அருகில் தயாரிக்கப்படும் பொருட்களை ஊக்குவித்து, பெருமை கொள்வதே உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவித்தல் என்பதாகும். எனினும் ஒரே பாரதம் , உன்னத பாரதம் என்ற திட்டத்தின் வாயிலாக அதிகாரமளிக்கப்படும் போதுதான் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்குவித்தல் திட்டம் மேலும் வலுவடையும். ஒரு பகுதியின் பொருட்களை மற்றொரு பகுதி பாராட்டி, பெருமை கொண்டு, ஊக்கப்படுத்தும்போதுதான் உள்ளூர் தயாரிப்புகள் நாடெங்கிலும் சென்றடைந்து சர்வதேச ஆற்றல் பெறும்.

நண்பர்களே,

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் தற்சார்பு இந்தியா போன்ற பிரச்சாரங்கள் வெற்றி அடைவது உங்களைப் போன்ற இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது. தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணி திட்ட இளைஞர்களுக்கு நான் ஓர் சிறிய பணியை தருகிறேன். நீங்கள் அன்றாடம் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் குறித்தும் குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக பற்பசை, சீப்பு, குளிர்சாதனப்பெட்டி, கைபேசி என ஒரு நாளில் நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களில் எவ்வளவு பொருட்கள் நமது நாட்டின் உழைப்பாளர்களால் தயாரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பணியில் ஈடுபடும்போது எவ்வளவு வெளிநாட்டு பொருட்கள் நம்மையும் அறியாமல் நம் வாழ்வில் அங்கம் வகிக்கின்றன என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். இதனைப் பற்றி தெரிந்து கொண்டதும், தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் கடமை நம்மிடம் இருந்துதான் துவங்குகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அதற்காக நீங்கள் பயன்படுத்தும் வெளிநாட்டு பொருட்களை நாளையே தூக்கி எறிந்து விடுங்கள் என்று நான் கூறவில்லை. நமது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் எவ்வாறு மனதளவில் நம்மை அடிமைகளாக மாற்றியிருக்கின்றன என்பது நமக்கு தெரியவில்லை. உங்கள் குடும்பத்தினருடன் இணைந்து இது போன்ற ஒரு பட்டியலை நீங்கள் தயாரிக்க வேண்டும் என்று எனது இளம் நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதன் பிறகு நான் கூறுவது உங்கள் நினைவில் இருக்காது, மாறாக நமது நாட்டிற்கு நாம் எவ்வளவு ஆபத்தை விளைவிக்கிறோம் என்பதை உங்கள் உள்ளுணர்வு கூறும்.

நண்பர்களே,

உபதேசங்களால் மட்டுமே இந்தியா தன்னிறைவு அடைய முடியாது, நான் ஏற்கனவே கூறியதைப் போல நாட்டின் இளம் நண்பர்களால் தான் அது ஏற்படும். போதுமான திறனைப் பெரும்போது அதனை உங்களால் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

நண்பர்களே,

திறனுக்கான முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு அரசு அமைந்தவுடன் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தின் கீழ் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமான இளம் நண்பர்கள் ஏராளமான கலை மற்றும் திறன்களில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி மட்டுமே வழங்கப்படாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு ,சுய வேலை வாய்ப்பு போன்ற உதவிகளைப் பெறுகின்றனர். திறன் மிக்க இளைஞர்களை இந்தியா பெறுவதுடன், திறனை அடிப்படையாகக் கொண்ட புதிய வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதுமே இதன் நோக்கமாகும்.

நண்பர்களே,

நாட்டின் புதிய தேசிய கல்விக் கொள்கையும் தற்சார்பு இந்தியாவுக்கான இளைஞர்களின் திறனில் கவனம் செலுத்துகிறது. பாடத்தையும், செயல்முறையையும் அது வலியுறுத்துகிறது. இளைஞர்கள் தங்களின் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு இந்தக் கொள்கை வழங்க முயற்சிக்கிறது. அவர்கள் எப்பொழுது படிக்க வேண்டும், எப்பொழுது நிறுத்த வேண்டும், பின்பு எப்பொழுது மீண்டும் படிக்கத் துவங்க வேண்டும் போன்ற நெகிழ்வுத்தன்மையும் வழங்கப்படுகிறது. இது, நமது மாணவர்கள் அவர்களின் விருப்பத்தை அவர்களே செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளாகும்.

நண்பர்களே,

தொழிற்கல்வியை பிரதான கல்வியுடன் இணைப்பதற்கு புதிய தேசிய கல்விக் கொள்கையில் முதன்முதலாக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் தங்களது விருப்பங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ற வகையிலான பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அவர்கள் பெறுகின்றனர். இவை பாடம் சம்பந்தமான வகுப்புகளாக மட்டுமல்லாமல் கற்றல், கற்றுவித்தல் வகுப்புகளாகவும் இருக்கும்.‌ உள்ளூரில் திறன்வாய்ந்த கலைஞர்கள் செய்முறை பயிற்சிகளை வழங்குவார்கள். அதன் பிறகு இடை நிலையில் கல்வியையும் தொழிற்கல்வியையும்  ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நண்பர்களே,

தேசிய மாணவர் படை, நாட்டு நலத்திட்ட பணி, இதர அமைப்புகள் என அனைவரும் நாட்டின் ஒவ்வொரு நெருக்கடியான தருணங்களிலும் சவால்களிலும் முக்கிய பங்காற்றுகிறீர்கள். ஆரோக்கிய சேது செயலியை பெருவாரியான மக்களிடையே எடுத்துச் சென்றதையும் தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் நீங்கள் மிகச் சிறப்பான பணியை மேற்கொண்டீர்கள். ஃபிட் இந்தியா பிரச்சாரத்தின் வாயிலாக கொரோனா தொற்று குறித்து நீங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது.

நண்பர்களே,

உங்களது பணியின் அடுத்த கட்டத்தை நிறைவேற்றுவதற்கான தருணம் இது. நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நாட்டிற்கு நீங்கள் உதவிக்கரம் நீட்டுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் ஏழைகளுக்கும், சாமானிய குடிமக்களுக்கும் தடுப்பூசி பற்றிய சரியான தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும். தடுப்பூசியைக் கண்டுபிடித்ததன் வாயிலாக நமது விஞ்ஞானிகள் அவர்களது கடமையை நிறைவேற்றியுள்ளனர், தற்போது நாம் நமது கடமையை நிறைவேற்ற வேண்டும். புரளிகளையும், தவறான தகவல்களையும் பரப்பும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் முறியடிக்க வேண்டும்.

குறிப்பு: இது, பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

**********************