Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வியட்நாம் பிரதமருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு


1. பாங்காக்கில் நடந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு 2019 -ன் போது 2019 நவம்பர் 4 ஆம் தேதி வியட்நாம் பிரதமர் மாண்புமிகு திரு. நிகுயென் ஸ்சுவான் பூக் -ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

2. இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுப்பூர்வமான மற்றும் பாரம்பரியமான நட்புறவுகளை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். கலாச்சார மற்றும் நாகரிகத் தொடர்புகளின் அடிப்படையில் இந்தியா – வியட்நாம் உறவுகள் கட்டமைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் பலமான ஒத்துழைப்பு இருப்பதையும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதல் இருப்பதையும் இருவரும் வலியுறுத்தினர்.

3. இரு நாடுகளுக்கும் இடையில் சமீபத்தில் உயர்நிலையில் நடந்த பரிமாற்றங்கள் மூலமாக பல்வேறு துறைகளில் துடிப்பான ஒத்துழைப்பு ஏற்பட்டிருப்பதை இரு தலைவர்களும் கோடிட்டுக் காட்டினர். பாதுகாப்பு உறவுகள் விரிவாக்கம் பெற்றிருப்பதாகவும், பொருளாதார மற்றும் வணிகத் தொடர்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், மக்களுக்கு இடையில் ஆழமான ஈடுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

4. பாதுகாப்பு விஷயங்களில் ஈடுபாடு மேம்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட தலைவர்கள், கடல்சார் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலின் ஆபத்து குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட நெருக்கமாக இணைந்து பணியாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

5. இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளமையை மேம்படுத்துவதற்கான விருப்பத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர். கடல் வளம் குறித்த ஐ.நா. சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டத்தை மதிப்பதை அடிப்படையாகக் கொண்டு, விதிகளின்படியான செயல்பாடுகளைப் பேணுவது என்று இரு தலைவர்களும் உறுதி தெரிவித்தனர். இதன் மூலம் தெற்கு சீன கடலில் விதிகள் அடிப்படையிலான வர்த்தகம் , கடல் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து ஆகியவற்றுக்கான சுதந்திரம் உறுதி செய்யப்படும்.

6. 2020 ஆம் ஆண்டுக்கு ஆசியான் தலைமையை ஏற்கும் நிலையில் வியட்நாமுடன் நெருக்கமாக சேர்ந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் திரு. மோடி தெரிவித்துக் கொண்டார். ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக இருக்கும் 2020-21 காலகட்டத்திலும் இவ்வாறு பணியாற்ற ஆயத்தமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

***