Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வியட்நாம் பயணத்தின்போது பத்திரிக்கைகளுக்கான பிரதமரின் அறிக்கை

வியட்நாம் பயணத்தின்போது பத்திரிக்கைகளுக்கான பிரதமரின் அறிக்கை


மேதகு பிரதமர் நிகுயென் ஸுவான் புக் அவர்களே,  

ஊடக நண்பர்களே,

மேதகு பிரதமர் அவர்களே, உங்கள் கனிவான வரவேற்புரைக்கும், எனக்கும் என்னுடன் வந்துள்ள குழுவினருக்கும் வழங்கிய மிகவும் தாராளமான மரபுசார் வரவேற்பிற்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலையில் மரியாதைக்குரிய ஹோ சி மின் அவர்களின் வீட்டை எனக்குச் சுற்றிக் காண்பித்ததன் மூலம் என் மீதான தனிப்பட்ட அன்பினை தாங்கள் வெளிப்படுத்தினீர்கள். 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர் ஹோ சி மின் அவர்கள். மேதகு பிரதமர் அவர்களே, இந்த வாய்ப்பை எனக்கு அளித்தமைக்காக மிக்க நன்றி. இத்தருணத்தில் நேற்று நீங்கள் கொண்டாடிய தேசிய தினத்தையொட்டி வியட்நாம் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நமது இரண்டு நாட்டு சமூகங்களுக்கு இடையிலான உறவு என்பது 2000 ஆண்டுகளுக்கும் மேலானதாகும். இந்தியாவிலிருந்து வியட்நாமிற்கு புத்த மதம் வந்து சேர்ந்ததும், வியட்நாமின் இந்து சாம் கோவில்களின் சிற்பங்களும் நமது இந்த உறவுக்குச் சாட்சியாக அமைந்துள்ளன. எனது தலைமுறையைச் சேர்ந்த மக்களைப் பொறுத்தவரையில், வியட்நாம் எங்கள் இதயங்களில் முக்கியமான ஓர் இடத்தைப் பிடித்த  நாடாகும். காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற வியட்நாம் மக்களின் துணிவு உண்மையிலேயே ஊக்கமளிக்கும் நிகழ்வாக இருந்தது. பிளவுபட்டிருந்த நாட்டை மீண்டும் இணைத்ததில் நீங்கள் பெற்ற வெற்றியும் தேசத்தை மீண்டும் கட்டமைப்பதில் நீங்கள் கொண்டிருந்த மன உறுதியும் உங்கள் நாட்டு மக்களின் குணத்தின் வலிமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. இந்தியாவிலுள்ள நாங்கள் உங்கள் மன உறுதியை கண்டு வியந்தோம்; உங்கள் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தோம்; உங்கள் நாட்டின் பயணத்திலும் உங்களோடு எப்போதும் நாங்கள் உடன் இருந்தோம்.

நண்பர்களே,

பிரதமர் புக் உடனான எனது பேச்சு வார்த்தை மிக விரிவானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது. எங்கள் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளைப் பற்றியதாகவும், பல்வேறு வகையிலான ஒத்துழைப்பு பற்றியதாகவும் அமைந்திருந்தன.  நம் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனையின் அளவை அதிகரிப்பது; மேலும் வலுப்படுத்துவது எனவும் நாங்கள் ஒப்புக் கொண்டோம். இந்தப் பகுதியின் மிக முக்கியமான இரு நாடுகள் என்ற வகையில், நம் இரு நாடுகளுக்கும் பொதுவான பிரதேச மற்றும் சர்வதேச விஷயங்களில் நமது உறவை மேலும் விரிவுபடுத்துவது அவசியம் என்றும் நாங்கள் கருதினோம். இந்தப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் பொருளாதார வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது என்றும் நாங்கள் ஒப்புக் கொண்டோம். இப்பிரதேசத்தில் உருவாகி வரும் சவால்களை உரிய முறையில் எதிர்கொள்வதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தையும் நாங்கள் அங்கீகரித்தோம். நமது தொலைநோக்குடனான பங்கேற்பை முழுமையான தொலைநோக்குடனான பங்கேற்பாக மேம்படுத்துவது என்ற எங்களின் முடிவே எமது எதிர்கால ஒத்துழைப்பின் நோக்கத்தையும் பாதையையும்  சுட்டிக் காட்டுவதாக அமைகிறது. நம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான வேகம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு அது புதிய திசைவழியை சுட்டிக் காட்டுவதாக அமைகிறது.

நண்பர்களே,

நமது நாட்டு மக்களுக்குப் பொருளாதார வளத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளோடு கூடவே அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன என்பதையும் நாங்கள் உணர்ந்திருந்தோம். எனவே மேதகு பிரதமரும் நானும் நமது இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நமது ராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறோம். இன்று கையெழுத்தான கடலோரக் காவலுக்கான படகு முகாம்களை உருவாக்குவது குறித்த ஒப்பந்தமானது நமது ராணுவ ரீதியான செயல்பாட்டிற்கு உறுதியான வடிவத்தை வழங்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமைகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த உதவும் வகையில் வியட்நாமிற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்குவது என்ற முடிவை உங்களிடையே அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சற்று நேரத்திற்கு முன் கையெழுத்தான பல்வேறு வகையான ஒப்பந்தங்களும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் பரந்து விரிந்த தன்மையையும் ஆழத்தையும் சுட்டிக் காட்டுவதாக அமைகின்றன.

நண்பர்களே,

வியட்நாம் நாடு மிக வேகமான வளர்ச்சியையும் வலுவான பொருளாதார வளர்ச்சியையும் நோக்கி நடைபோட்டு வருகிறது.

இவ்வகையில் வியட்நாமில் முனைப்பான:

  • தனது நாட்டு மக்களைச் செழிப்புறச் செய்யவும், தனித் திறன் பெறவும்
  • தனது நாட்டின் விவசாயத் துறையை நவீனப்படுத்தவும்
  • தொழில் முனைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பது
  • அதன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடித்தளத்தை வலுப்படுத்துவது
  • துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கான புதிய நிறுவன ரீதியான திறன்களை உருவாக்குவது மற்றும்
  • நவீன நாட்டினை வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது

ஆகிய வியட்நாமின் பயணத்தில் இந்தியாவும் அதன் 125 கோடி மக்களும் அதன் பங்குதாரர்களாக, நண்பர்களாக இருக்கத் தயாராக இருக்கின்றனர். நமது கூட்டணி பற்றிய உறுதியை மேலெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு முடிவுகளையும் எடுக்க நானும் மேதகு பிரதமரும் ஒப்புக் கொண்டுள்ளோம். நா ட்ராங்-இல் உள்ள தொலைத் தொடர்பு பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பூங்கா ஒன்றை உருவாக்குவதற்கென இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கும். அதன் தேசிய வளர்ச்சிக் குறிக்கோள்களை நிறைவேற்ற விண்வெளி ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தமானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் வியட்நாம் கைகோர்க்க வழிவகுக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக ரீதியான தொடர்புகளை மேம்படுத்துவது என்பதும் எங்களது தொலைநோக்கான குறிக்கோளில் அடங்கும். இதற்கென, வரும் 2020ஆம் ஆண்டிற்குள் 15 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கை அடைவதற்கான புதிய வர்த்தக, வியாபார வாய்ப்புகள் அனைத்தும் பயன்படுத்திக் கொள்ளப்படும். வியட்நாமில் தற்போது செயல்பட்டு வரும் இந்திய திட்டங்கள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தரவும் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதைப் போன்றே எனது அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்னோடியான திட்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு வியட்நாமிய நிறுவனங்களுக்கும் நான் அழைப்பு விடுத்திருக்கிறேன்.

நண்பர்களே,

நம் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான கலாச்சார ரீதியான தொடர்பு என்பது பல நூற்றாண்டுகள் கடந்தவை ஆகும். ஹனோய் நகரில் இந்திய கலாச்சார மையம் ஒன்றை மிக விரைவில் உருவாக்கி, திறப்போம் என்றும் நாங்கள் நம்புகிறோம். மை சன் – இல் உள்ள சாம் சிற்பங்களை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்குப் புத்துயிர் அளிப்பது ஆகிய பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் விரைவில் துவங்கும். இந்த ஆண்டு துவக்கத்தில் நாளந்தா மகாவீராவின் கல்வெட்டை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்க உதவி செய்த வியட்நாம் நாட்டு தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

வரலாற்று ரீதியாகவும், பூகோள ரீதியான நெருக்கத்தினாலும், கலாச்சார உறவுகளாலும் நம் இரு நாடுகளும் பங்கேற்றுள்ள தொலைநோக்குப் பார்வையாலும் ஏஷியன் அமைப்பு என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான ஒன்றாகும். எங்களது ‘கிழக்கை நோக்கிய நடவடிக்கை’யின் மையமாகவும் அது விளங்குகிறது. ஏஷியன் அமைப்பில் இந்தியாவிற்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் வியட்நாம் நாட்டின் தலைமையின் கீழ் அனைத்துத் துறைகளிலும் இந்திய- ஏஷியன் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான பணிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.

மேதகு பிரதமர் அவர்களே,

விருந்தினரைப் போற்றுவதில் மிகுந்த தாராளமான, கனிவான மனதுடையவராக நீங்கள் இருக்கிறீர்கள். வியட்நாமிய மக்கள் என்னிடம் காட்டிய அன்பும் என் இதயத்தைத் தொடுவதாக அமைந்திருந்தது. நமது கூட்டணியின் தன்மை மற்றும் திசைவழி ஆகியவற்றிலிருந்து நாம் திருப்தி கொள்ள முடியும். அதே நேரத்தில் நமது உறவுகளில் மேலும் வேகத்தை அதிகரிப்பதிலும் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. உங்களையும் வியட்நாம் நாட்டுத் தலைமையையும் இந்தியாவில் உபசரிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். இந்தியாவில் உங்கள் அனைவரையும் வரவேற்கும் நாளை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

மிக்க நன்றி. வணக்கம்.