பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, “வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்ட மசோதா, 2016”-ஐ அறிமுகம் செய்ய தனது ஒப்புதலை வழங்கியது.
இந்த மசோதா, தேசிய அளவில் தேசிய வாடகைத் தாய் வாரியம் மற்றும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளவில், மாநில வாடகைத் தாய் வாரியங்கள் மற்றும் தக்க அமைப்புகளை ஏற்படுத்தி, இந்தியாவில் வாடகைத் தாய் பயன்படுத்துவதை ஒழுங்குப்படுத்தும்.
இதன் மூலம் பண்புநெறி சார்ந்த வாடகைத்தாய் அமர்த்த விரும்பும் திருமணமாகி குழந்தையற்ற அனைத்து தம்பதிகளும் பயனடையாவார்கள். மேலும், வாடகைத் தாய்கள் மற்றும் அதன் மூலம் பிறந்த குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இந்த மசோதா ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர, இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.
நாட்டின் வாடகைத் தாய் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதே இந்த சட்டத்தின் முக்கிய பயனாகும். மனித கருவின் ஆரம்ப நிலை மற்றும் கருப்பைகள் ஆகியவற்றின் விற்பனை மற்றும் வாங்குதல் உள்ளிட்ட வணிகரீதியான வாடகைத் தாய் அமர்த்தப்படுவதை தடுக்கப்படுவதுடன், பண்புநெறி சார்ந்த வாடகைத்தாய் அமர்த்த விரும்பும் திருமணமாகி குழந்தையற்ற தம்பதிகளின் தேவைகள், குறிப்பிட்ட காரணங்களுக்கான சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் அனுமதிக்கப்படும். அதே போன்று, வாடகைத்தாய் அமர்த்துவதில் பின்பற்றப்படும் பண்புநெறியற்ற நடைமுறைகளை கட்டுப்படுத்துவதுடன், வணிகரீதியிலான வாடகைத் தாய் அமர்த்துவதை தடுப்பதையும், வாடகைத் தாய் அம்மாக்கள் மற்றும் வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகள் ஏமாற்றப்படுவதையும் தடுக்கும்.
இந்த வரைவு மசோதாவில் எந்தவித நிரந்தர கட்டடங்கைளை உருவாக்க திட்டமிடப்படவில்லை. தவிரவும் எந்த புதிய பணியிடங்களும் ஏற்படுத்தவும் திட்டமில்லை. இந்த வரைவு சட்டம், உரிய முறையில் வரைமுறைகளை செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும்போதும், தேசிய மற்றும் மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள வரைமுறைகளுக்கு அதிகளவில் எதிராக அமையாது. அதற்கேற்ப, தேசிய மற்றும் மாநில அரசுகளின் வழக்கமான வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மற்றும் மாநில வாடகைத் தாய் வாரியங்கள் மற்றும் தக்க அமைப்புகள் கூட்டம் தவிர வேறு எவ்வித நிதியும் தேவைப்படாது.
பின்னணி:
பல்வேறு நாடுகளை சேர்ந்த தம்பதிகளுக்கு இந்தியா வாடகைத் தாய்களின் இருப்பிடமாக உருவாகி இருப்பதுடன், பண்புநெறியற்ற நடைமுறைகள், வாடகைத் தாய்கள் ஏமாற்றப்படுதல், வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைகளை கைவிடுதல் மற்றும் மனித கருவின் ஆரம்ப நிலை மற்றும் கருப்பைகள் ஆகியவறை ஏற்றுமதி செய்யும் இடைதரகர்களின் மோசடிகள் போன்று பல சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகின்றன. கடந்த சில வருடங்களாக, பல்வேறு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இந்தியாவில் உள்ள வணிகரீதியான வாடகைத் தாய் அமர்த்துவது குறித்து பரவலாக கண்டனம் தெரிவிக்கப்படுவதோடு, வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அமர்த்துவதை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் முக்கியத்துவம் அளித்து தெரிவித்து வருகின்றன. இந்திய சட்ட ஆணையத்தின் 228வது அறிக்கையிலும், வணிகரீதியான வாடகைத் தாய் தடை செய்யப்பட வேண்டும் என்றும் தேவைப்படும் இந்திய தம்பதிகளுக்கு பண்புநெறி சார்ந்த பொதுநல வாடகைத் தாய் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.