சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 துடிப்பான இளம் தலைவர்களுடன் அவர் உரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய இளைஞர்களின் துடிப்பான சக்தி, பாரத் மண்டபத்திற்கு உயிர்ப்பையும் சக்தியையும் கொண்டு வந்திருப்பதை எடுத்துரைத்தார். நாட்டின் இளைஞர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்த சுவாமி விவேகானந்தரை ஒட்டுமொத்த தேசமும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். தமது சீடர்கள் இளைய தலைமுறையிலிருந்து வருவார்கள் என்றும், அவர்கள் சிங்கங்களைப் போல ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பார்கள் என்றும் சுவாமி விவேகானந்தர் நம்பினார் என்றும் அவர் கூறினார். சுவாமிஜி இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்ததைப் போல, சுவாமிஜி மீதும், அவரது நம்பிக்கைகள் மீதும் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் கூறினார். குறிப்பாக இளமை குறித்த அவரது பார்வை குறித்து அவரை முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்தால், 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களின் விழிப்புற்ற சக்தியையும் துடிப்பான முயற்சிகளையும் காணும் போது அவர் புதிய நம்பிக்கையால் மகிழ்வார் என்று பிரதமர் கூறினார்.
பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, உலகத் தலைவர்கள் ஒரே இடத்தில் உலகின் எதிர்காலம் குறித்து விவாதித்ததாகவும், இன்று இந்திய இளைஞர்கள் இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். சில மாதங்களுக்கு முன்பு தமது இல்லத்தில் இளம் விளையாட்டு வீரர்களை சந்தித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்ட அவர், ஒரு தடகள வீரர், “உலகிற்கு, நீங்கள் இந்தியப் பிரதமராக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு, நீங்கள் நல்ல நண்பர் (பரம் மித்ரா)” என்று குறிப்பிட்டார் என பிரதமர் தெரிவித்தார். இந்திய இளைஞர்களுடனான தமது நட்புறவை எடுத்துரைத்த பிரதமர், நட்பின் வலுவான இணைப்பு நம்பிக்கை என்று கூறினார். இளைஞர்கள் மீதான தமது அளப்பரிய நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். அதுவே மை பாரத் தளத்தை உருவாக்கவும், வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர் உரையாடலுக்கு அடித்தளம் அமைக்கவும் உத்வேகம் அளித்தது என அவர் கூறினார். இந்திய இளைஞர்களின் திறன்கள் விரைவில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இலக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், அது சாத்தியமற்றது அல்ல என்றும் அவர் கூறினார். இது எதிர்ப்பாளர்களின் கருத்துக்களை அகற்றி முன்னேற்றச் சக்கரங்களை இயக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களின் கூட்டு முயற்சியால், நாடு அதன் இலக்கை சந்தேகத்திற்கு இடமின்றி எட்டும் என்று அவர் கூறினார்.
வரலாறு நமக்குக் கற்பித்து, நமக்கு உத்வேகம் அளிக்கிறது என்று கூறிய திரு நரேந்திர மோடி, பெரிய கனவுகள், தீர்மானங்களுடன் நாடுகளும் குழுக்களும் தங்கள் இலக்குகளை அடைந்த ஏராளமான உலகளாவிய உதாரணங்களை எடுத்துரைத்தார். அமெரிக்காவில் 1930-களின் பொருளாதார நெருக்கடியை உதாரணம் காட்டிய அவர், அமெரிக்கர்கள் புதிய முறையைத் தேர்ந்தெடுத்து நெருக்கடியை வென்றது மட்டுமல்லாமல் அவர்களின் வளர்ச்சியையும் துரிதப்படுத்தினர் என்று அவர் கூறினார். அடிப்படை வாழ்க்கை நெருக்கடிகளை எதிர்கொண்ட சிங்கப்பூர் ஒழுக்கம், கூட்டு முயற்சியால் உலகளாவிய நிதி – வர்த்தக மையமாக மாறியதையும் அவர் குறிப்பிட்டார். சுதந்திரப் போராட்டம், சுதந்திரத்திற்குப் பிந்தைய உணவு நெருக்கடியை சமாளித்தது போன்ற உதாரணங்கள் இந்தியாவில் உள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை அடைவதும் சாத்தியமற்றது அல்ல என்று அவர் கூறினார். தெளிவான இலக்கு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்று கூறிய அவர், இன்றைய இந்தியா இந்த மனநிலையுடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
கடந்த பத்து ஆண்டுகளில் உறுதிப்பாட்டின் மூலம் இலக்குகளை அடைந்ததற்கான பல்வேறு உதாரணங்களை எடுத்துரைத்த பிரதமர், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியா மாற தீர்மானித்தது என்றும், 60 மாதங்களுக்குள், 60 கோடி மக்கள் இந்த இலக்கை அடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் தற்போது ஒவ்வொரு குடும்பமும் வங்கி சேவைகளை அணுக முடிகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், பெண்களின் சமையலறைகளை புகையிலிருந்து விடுவிக்க 100 மில்லியனுக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். பல்வேறு துறைகளில் இந்தியா தனது இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே அடைந்து வருவதாகக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, கொவிட்-19 தொற்றுநோய்களின் போது, உலகம் தடுப்பூசிகளுக்காக போராடியபோது, இந்திய விஞ்ஞானிகள் ஒரு தடுப்பூசியை முன்கூட்டியே உருவாக்கினர் என்று கூறினார். இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் என்று கணிப்புகள் இருந்தபோதிலும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி பிரச்சாரத்தை நாடு சாதனை நேரத்தில் நடத்தியது என அவர் தெரிவித்தார். பசுமை எரிசக்தி மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர், பாரீஸ் ஒப்பந்த உறுதிமொழிகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவேற்றிய முதல் நாடு இந்தியா என்று அவர் குறிப்பிட்டார். 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கையும் அவர் குறிப்பிட்டார். இது காலக்கெடுவுக்கு முன்பே இந்தியா அடையப்படும் எனவும் அவர் கூறினார். இந்த வெற்றிகள் ஒவ்வொன்றும் உத்வேகம் அளிப்பதாகவும், வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்குக்கு நெருக்கமாக இந்தியாவைக் கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“பெரிய இலக்குகளை அடைவது என்பது அரசு இயந்திரத்தின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் கூட்டு முயற்சியும் தேவை” என்று கூறிய திரு நரேந்திர மோடி, தேசிய நோக்கங்களை அடைவதில் விவாதம், திசை, உரிமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வினாடி வினா, கட்டுரைப் போட்டிகள், செயல் விளக்கக் காட்சிகளில் பங்கேற்ற இளைஞர்களின் தலைமையில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் இந்த நடைமுறைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். வெளியிடப்பட்ட கட்டுரை புத்தகம், 10 செயல் விளக்கக் காட்சிகள் ஆகியவற்றில் பிரதிபலித்தது போல், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் இளைஞர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார். இளைஞர்களின் தீர்வுகள் யதார்த்தம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், நாடு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அவர்களின் பரந்த புரிதலை வெளிப்படுத்துவதாகக் கூறினார். வல்லுநர்கள், அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்களுடனான விவாதங்களில் இளைஞர்களின் விரிவான சிந்தனை, தீவிர பங்கேற்புக்காக அவர் அவர்களைப் பாராட்டினார். இளம் தலைவர்கள் கலந்துரையாடலின் யோசனைகளும் ஆலோசனைகளும் இப்போது நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் தேசிய கொள்கைகளின் ஒரு பகுதியாக மாறும் என்று பிரதமர் கூறினார். இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், ஒரு லட்சம் புதிய இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவது என்ற தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், அவர்களின் ஆலோசனைகளை அமல்படுத்துவதில் தீவிரமாக பங்கேற்குமாறு அவர்களை ஊக்குவித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த தமது தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொண்ட பிரதமர், அதன் பொருளாதார, உத்தி, சமூக, கலாச்சார வலிமையை எடுத்துரைத்த பிரதமர், வளர்ந்த இந்தியாவில் பொருளாதாரம், சுற்றுச்சூழலியல் ஆகிய இரண்டும் செழித்து வளரும் என்றும் நல்ல கல்விக்கும் வருமானத்திற்கும் ஏராளமான வாய்ப்புகள் உருவாகும் என்றும் குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய திறன் பெற்ற இளைஞர் பணியாளர்களை இந்தியா கொண்டிருக்கும் என்றும், இது அவர்களின் கனவுகளுக்கு திறந்த வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கை அடைய ஒவ்வொரு முடிவும், நடவடிக்கையும், கொள்கையும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையுடன் இணைந்திருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். வரவிருக்கும் பல ஆண்டிகளுக்கு நாடு இளைய நாடாக இருக்கும் என்பதால், இது மிகப்பெரிய பாய்ச்சலுக்கான இந்தியாவின் தருணம் என்று அவர் கூறினார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக உயர்த்துவதற்கான இளைஞர்களின் திறனை உலகளாவிய அமைப்புகள் அங்கீகரித்துள்ளன என்று திரு நரேந்திர மோடி கூறினார். இளைஞர்களின் சக்தியில் நம்பிக்கை கொண்ட மகரிஷி அரவிந்தர், குருதேவ் தாகூர், ஹோமி ஜே. பாபா போன்ற சிறந்த சிந்தனையாளர்களை மேற்கோள் காட்டிய திரு நரேந்திர மோடி, இந்திய இளைஞர்கள் உலகின் முக்கிய நிறுவனங்களை வழிநடத்தி, உலக அளவில் தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டார். அடுத்த 25 ஆண்டு ‘அம்ரித் காலம்’ மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்திய பிரதமர், வளர்ந்த இந்தியா என்ற கனவை இளைஞர்கள் நனவாக்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். புத்தொழில் பிரிவில் உலகில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா வந்துள்ளது என அவர் தெரிவித்தார். உற்பத்தியை அதிகரித்தது, டிஜிட்டல் இந்தியாவை உலகளவில் உயர்த்தியது, விளையாட்டில் சிறந்து விளங்கியது ஆகியவற்றில் இளைஞர்களின் சாதனைகளை அவர் எடுத்துரைத்தார். இந்திய இளைஞர்கள் சாத்தியமற்றதை சாத்தியமாக்கும்போது, வளர்ச்சியடைந்த இந்தியாவை சந்தேகத்திற்கு இடமின்றி அடைய முடியும் என்று அவர் கூறினார்.
இன்றைய இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு மூன்றாவது நாளும் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறக்கப்படுவதாகவும், தினமும் இரண்டு புதிய கல்லூரிகள் நிறுவப்படுவதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் தற்போது 23 ஐஐடி-க்கள் உள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த பத்து ஆண்டுகளில் ஐஐஐ-டிக்களின் எண்ணிக்கை 9-லிருந்து 25 ஆகவும், இந்திய மேலாண்மைக் கழகங்களின் எண்ணிக்கை 13-லிருந்து 21 ஆகவும் அதிகரித்துள்ளது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதையும், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மிகச் சிறந்த முடிவுகளை வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், சிறந்த தரவரிசையில் 2014-ல் 9-ஆக இருந்த உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 46 ஆக உயர்ந்துள்ளது என்றார். இந்தியாவின் கல்வி நிறுவனங்களின் வளர்ந்து வரும் வலிமை, வளர்ந்த இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க அடித்தளமாகும் என்று அவர் கூறினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு, தினசரி இலக்குகள், தொடர்ச்சியான முயற்சிகள் தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் 250 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீண்டு இருப்பதாகக் கூறிய திரு நரேந்திர மோடி, விரைவில் நாடு முழுவதும் வறுமையிலிருந்து விடுபடும் என்று நம்புவதாகக் கூறினார். இந்த பத்து ஆண்டுகளின் இறுதிக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்கவும், 2030-க்குள் ரயில்வே நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையவும் இந்தியாவின் இலக்கை அவர் எடுத்துரைத்தார்.
அடுத்த பத்தாண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற லட்சிய இலக்கை எடுத்துரைத்த பிரதமர், அதை அடைவதற்கான தேசத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான திட்டங்களுடன் இந்தியா ஒரு விண்வெளி சக்தியாக வேகமாக முன்னேறி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். சந்திரயான் விண்கலத்தின் வெற்றி குறித்தும், நிலவில் இந்தியரை தரையிறக்க வேண்டும் என்ற இறுதி இலக்குடன் ககன்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்த தற்போது நடைபெற்று வரும் தயாரிப்புகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற இலக்குகளை அடைவதன் மூலம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வழி ஏற்படும் என்று அவர் கூறினார்.
அன்றாட வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் குறித்து உரையாற்றிய பிரதமர், பொருளாதாரம் வளரும்போது, அது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் சாதகமாக மாற்றுகிறது என்று கூறினார். இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் இந்தியா ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறியது என்பதை அவர் நினைவுகூர்ந்தார. ஆனால் சிறிய பொருளாதார அளவுடன், வேளாண் பட்ஜெட் சில ஆயிரம் கோடிகள் மட்டுமே இருந்தது எனவும் உள்கட்டமைப்பு பட்ஜெட் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக இருந்தது என்றும் தெரிவித்தார். அந்த நேரத்தில், பெரும்பாலான கிராமங்களில் சரியான சாலைகள் இல்லை என்றும், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வேக்களின் நிலை மோசமாக இருந்ததாகவும், மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் நாட்டின் பெரும்பகுதிக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். இரண்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறிய பிறகு, இந்தியாவின் உள்கட்டமைப்பு பட்ஜெட் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவு என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இருப்பினும், சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், கால்வாய்கள், ஏழைகளுக்கான வீட்டுவசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டது என்றார். இந்தியா வேகமாக 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறியபோது, விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது எனவும் வந்தே பாரத் போன்ற நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றும் புல்லட் ரயில் கனவு நனவாகத் தொடங்கியது என்றும் அவர் குறிப்பிட்டார். உலக அளவில் 5 ஜி-யின் விரைவான செயல்பாட்டை இந்தியா அடைந்தது என அவர் கூறினார். ஆயிரக்கணக்கான கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் இணையத்தை விரிவுபடுத்தியதுடன் 300,000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இளைஞர்களுக்கு 23 லட்சம் கோடி ரூபாய் பிணையற்ற முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலகின் மிகப்பெரிய இலவச சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் தொடங்கப்பட்டுள்ளது என்றார். கூடுதலாக, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகளை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், ஏழைகளுக்காக நான்கு கோடி உறுதியான வீடுகள் கட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார் . பொருளாதாரம் வளர்ந்த போது, வளர்ச்சி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு, அதிக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் சமூக வகுப்பிலும் செலவிடும் நாட்டின் திறன் அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
இந்தியா தற்போது கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உள்ளது என்றும், இது அதன் திறன்களை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய உள்கட்டமைப்பு பட்ஜெட் 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது என்றும், இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஆறு மடங்கு அதிகம் என்றும் கூறினார். 2014-ம் ஆண்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு பட்ஜெட்டை விட ரயில்வேக்கு மட்டுமே அதிகம் செலவிடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் மாறிவரும் சூழல் இந்த உயர்த்தப்பட்ட பட்ஜெட் மூலம் தெளிவாகத் தெரிகிறது என்றும், பாரத் மண்டபம் ஒரு அழகான உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா வேகமாக நகர்ந்து வருகிறது எனவும் இது வளர்ச்சி மற்றும் வசதிகளை பெரிதும் விரிவுபடுத்தும் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். அடுத்த பத்து ஆண்டுகளின் இறுதிக்குள் இந்தியா 10 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை தாண்டும் என்று நம்பிக்கை அவர் தெரிவித்தார். பொருளாதாரம் வளரும்போது எழும் ஏராளமான வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசினார். இளைஞர்களை ஊக்குவித்த அவர், அவர்களின் தலைமுறையினர் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் மிகப்பெரிய பயனாளிகளாகவும் இருப்பார்கள் என்று கூறினார். இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கேற்றவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல, இளைஞர்கள் பாதுகாப்பான பகுதிகளைத் தவிர்த்து, அபாயங்களையும் எதிர்கொள்ள வேண்டும் எனவும் தங்களுக்கு ஏற்ற சொகுசான பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். வாழ்க்கையின் இந்த மந்திரம் அவர்களை வெற்றியின் புதிய உயரங்களுக்கு உந்திச் செல்லும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் எதிர்காலப் பாதையை வடிவமைப்பதில் வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடலின் குறிப்பிடத்தக்க பங்கை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, இந்தத் தீர்மானத்தை இளைஞர்கள் ஆற்றல், உற்சாகம், அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொண்டதற்குப் பாராட்டுத் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சிந்தனைகள் விலைமதிப்பற்றவை, சிறந்தவை என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிந்தனைகளை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் சென்று, ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமத்திலும் உள்ள மற்ற இளைஞர்களை வளர்ந்த இந்தியா என்ற உணர்வுடன் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் அவர் வலியுறுத்தியதுடன், இந்த தீர்மானத்திற்காக ஒவ்வொருவரும் வாழ்ந்து தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்தார். தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் அனைத்து இளைஞர்களுக்கும் அவர் மீண்டும் ஒருமுறை தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர்கள் திரு ஜெயந்த் சௌத்ரி, திருமதி ரக்ஷா கட்சே உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி:
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (2025 ஜனவரி 12) நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்தியா முழுவதிலும் இருந்து துடிப்புமிக்க 3,000 இளம் தலைவர்களுடன் அவர் உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருந்தோரிடையே அவர் உரையாற்றினார்.
வழக்கமான முறையில் நடத்தப்படும் தேசிய இளைஞர் விழாவின் 25 ஆண்டுகால பாரம்பரியத்தை மாற்றுவதை வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் நோக்கமாகக் கொண்டு இருந்தது. அரசியல் சார்பு இல்லாத 1 லட்சம் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அவர்களின் யோசனைகளை நனவாக்க ஒரு தேசிய தளத்தை வழங்கவும் வேண்டும் என்ற பிரதமரின் சுதந்திர தின அழைப்புடன் இது ஒத்துப்போவதாக அமைந்தது. அதற்கேற்ப, இந்த தேசிய இளைஞர் தினத்தில், நாட்டின் எதிர்காலத் தலைவர்களை ஊக்குவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் வடிவமைக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் பிரதமர் பங்கேற்றார். புதியன கண்டறியும் இளம் தலைவர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான, பத்து கருப்பொருள் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பத்து பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகளை பிரதமர் முன் வைத்தார். இந்தியாவின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ள இளம் தலைவர்களால் முன்மொழியப்பட்ட புதுமையான யோசனைகளையும் தீர்வுகளையும் இந்த விளக்கக்காட்சிகள் பிரதிபலித்தன.
பத்து தலைப்புகளில் பங்கேற்பாளர்கள் எழுதிய சிறந்த கட்டுரைகளின் தொகுப்பையும் பிரதமர் வெளியிட்டார். இந்தக் கருப்பொருள்கள் தொழில்நுட்பம், நிலைத்தன்மை, மகளிருக்கு அதிகாரமளித்தல், தொழில் உற்பத்தி, விவசாயம் போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது.
ஒரு தனித்துவமான சூழலில், இளம் தலைவர்களுடன் மதிய உணவில் பிரதமர் கலந்துகொண்டார். இது அவர்களின் யோசனைகள், அனுபவங்கள், விருப்பங்களை நேரடியாக அவருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. இந்த தனிப்பட்ட கலந்துரையாடல், ஆளுகை, இளைஞர்களின் விருப்பங்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைத்து, பங்கேற்பாளர்களிடையே பொறுப்புணர்வை ஆழமாக வளர்ப்பதாக அமைந்தது.
ஜனவரி 11 அன்று தொடங்கிய இந்த உரையாடலின் போது, போட்டிகள், செயல்பாடுகள், கலாச்சாரம் கருப்பொருள் விளக்கக்காட்சிகளில் இளம் தலைவர்கள் ஈடுபட்டனர். வழிகாட்டிகள், துறை வல்லுநர்கள் தலைமையிலான கருப்பொருள்கள் குறித்த விவாதங்களும் இதில் இடம்பெற்றன. இந்தியாவின் நவீன முன்னேற்றங்களை அடையாளப்படுத்தும் அதே வேளையில் இந்தியாவின் கலை பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் இது கொண்டிருந்தது.
நாடு முழுவதிலுமிருந்து ஆற்றல்மிக்க இளம் குரல்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்துவதற்காக உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட, தகுதி அடிப்படையிலான பல நிலை தேர்வு செயல்முறையான ‘விக்சித் பாரத் சேலஞ்ச்’ மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கேற்க ஆற்றல்மிக்க, ஊக்கமளிக்கும் 3,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 15 – 29 வயதுக்குட்பட்ட பங்கேற்பாளர்களுடன் மூன்று கட்டங்களில் தேர்வுகள் இருந்தன. முதல் கட்டமான வளர்ச்சியடைந்த பாரதம் விநாடி வினா, அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க 12 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர். தகுதிவாய்ந்த விநாடி வினா பங்கேற்பாளர்கள் 2-வது கட்ட, கட்டுரை சுற்றுக்கு முன்னேறினர். அங்கு அவர்கள் “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற பார்வையை நனவாக்குவதற்கு முக்கியமான பத்து முக்கிய கருப்பொருள்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதில் 2 லட்சத்துக்கும் அதிகமான கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநில அளவிலான 3-வது சுற்றில், ஒரு கருப்பொருளுக்கு 25 பேர் பங்கேற்று, கடுமையான நேரடிப் போட்டிகளில் பங்கேற்றனர். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தடத்திலிருந்தும் அதன் முதல் மூன்று பங்கேற்பாளர்களை அடையாளம் கண்டு, தில்லியில் நடைபெறும் தேசிய நிகழ்வுக்கான அணிகளை உருவாக்கின.
‘விக்சித் பாரத் சேலஞ்ச்’ தளத்தில் இருந்து 1,500 பங்கேற்பாளர்கள், மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து முதல் 500 அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் மாநில அளவிலான இளைஞர் விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், அறிவியல், தொழில்நுட்பத்தில் புதுமை குறித்த கண்காட்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 பங்கேற்பாளர்களும் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அழைக்கப்பட்ட 500 முன்னோடிகளும் இந்த உரையாடலில் பங்கேற்கின்றனர்.
***
PLM/DL
India's Yuva Shakti is driving remarkable transformations. The Viksit Bharat Young Leaders Dialogue serves as an inspiring platform, uniting the energy and innovative spirit of our youth to shape a developed India. #VBYLD2025 https://t.co/gjIqBbyuFU
— Narendra Modi (@narendramodi) January 12, 2025
The strength of India's Yuva Shakti will make India a developed nation. pic.twitter.com/GoF0uLZK0g
— PMO India (@PMOIndia) January 12, 2025
India is accomplishing its goals in numerous sectors well ahead of time. pic.twitter.com/idaPkm6u83
— PMO India (@PMOIndia) January 12, 2025
Achieving ambitious goals requires the active participation and collective effort of every citizen of the nation. pic.twitter.com/Edxnx84TSc
— PMO India (@PMOIndia) January 12, 2025
भारत के युवा की सोच का विस्तार आसमान से भी ऊंचा है। pic.twitter.com/uHkgt8ZYEU
— PMO India (@PMOIndia) January 12, 2025
A developed India will be one that is empowered economically, strategically, socially and culturally. pic.twitter.com/ieYuPmauIn
— PMO India (@PMOIndia) January 12, 2025
भारत की युवाशक्ति विकसित भारत का सपना जरूर साकार करेगी। pic.twitter.com/oPHpGh7F6S
— PMO India (@PMOIndia) January 12, 2025