Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த இந்தியா- வளர்ச்சியடைந்த கோவா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

வளர்ச்சியடைந்த இந்தியா- வளர்ச்சியடைந்த கோவா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின்  தமிழாக்கம்


பாரத் மாதா கி – ஜே!

கோவா ஆளுநர் திரு பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை அவர்களே, முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, இதர பிரமுகர்களே, கோவாவின் எனதருமை சகோதர, சகோதரிகளே. அனைத்து கோவா மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்!

நண்பர்களே,

கோவா அதன் அழகிய கடற்கரைகள் மற்றும் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது. இது உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும்  லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகளின்  விருப்பமான விடுமுறைத் தலமாகும். எந்தப் பருவத்திலும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை ஒருவர் இங்கே அனுபவிக்க முடியும். இந்த ஆண்டு ஒரு முக்கிய நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு, புனித பிரான்சிஸ் சேவியரின் நினைவுச்சின்னங்களின் கண்காட்சி நடைபெறும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கண்காட்சி நமக்கு அமைதி மற்றும் நல்லெண்ணச் செய்தியைத் தருகிறது.

நண்பர்களே,

இன்று, கோவாவுக்கு ரூ.1,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா தொடர்பான இந்த திட்டங்கள் கோவாவின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும். தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தேசிய நீர் விளையாட்டு நிறுவனம் ஆகியவற்றின் வளாகங்கள் தொடக்க விழா இங்கு நடைபெற்றது. இது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இருவருக்கும் வசதியை மேம்படுத்தும். ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை அமைப்பின் தொடக்கம் கோவாவை தூய்மையாக வைத்திருக்க உதவும். இன்று 1900க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த நலத்திட்டங்களுக்காக அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களே,

இன்று கோவா மக்கள், நாட்டின் மகிழ்ச்சியான மக்களாகக் கருதப்படுகிறார்கள்.  இரட்டை என்ஜின் அரசு காரணமாக, கோவாவின் வளர்ச்சி வேகமாக முன்னேறி வருகிறது. 100 சதவீத வீடுகளுக்குக் குழாய் நீர் அணுகல் உள்ள மாநிலம் கோவா. கோவா மாநிலத்தில் 100 சதவீத வீடுகளுக்கு  மின் இணைப்பு  வழங்கப்பட்டு விட்டது. கோவாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பும்  அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல முதன்மைத் திட்டங்களில் கோவா 100 சதவீத இலக்கை அடைந்துள்ளது.

சகோதர சகோதரிகளே,

சில நாட்களுக்கு முன், வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையும் ஏழைகளுக்கு சேவை செய்வதற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. 4 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு உறுதியான வீடுகள் வழங்கும் இலக்கை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது எங்கள் உத்தரவாதம் என்னவென்றால், மேலும் 2 கோடி குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குவோம். ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் திட்டத்தையும் விரிவுபடுத்தியுள்ளோம். இப்போது, ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் இலவச சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நமது மீனவ நண்பர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மத்ஸ்ய சம்படா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகள் மேலும் அதிகரிக்கப்படும். இது மீனவர்களுக்கு அதிக வசதிகளையும் வளங்களையும் வழங்கும். இது கடல் உணவு ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும், மீனவர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். இதுபோன்ற முயற்சிகள், மீன்வளத் துறையில் லட்சக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்க வாய்ப்புள்ளது.

சகோதர சகோதரிகளே,

பா.ஜ.கவின் இரட்டை என்ஜின் அரசு ஏழைகளின் நலனுக்காக முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமின்றி, உள்கட்டமைப்பில் சாதனை முதலீடுகளையும் செய்து வருகிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த நோக்கத்திற்காக 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன், உள்கட்டமைப்புக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே செலவிடப்பட்டது. எங்கெல்லாம்  வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன, இது அனைவருக்கும் வருமானத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.

சகோதர சகோதரிகளே,

கோவாவின் விரைவான வளர்ச்சிக்கு, அனைவரின் முயற்சியும் அவசியம். மோடியின் உத்தரவாதத்தால், கோவாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையும் மேம்படும் என்று நான் நம்புகிறேன். இந்த வளர்ச்சிப் பணிகளுக்காக உங்கள்  அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி!

***

(Release ID: 2003099)
ANU/SMB/BR/RR