வணக்கம்!!
வணக்கத்திற்குரிய பசவேஸ்வராவின் பிறந்த தினத்தை ஒட்டி உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதையுமே நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ள நிலையில் இந்தப் பெருந்தொற்றை இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தோற்கடிக்கும் வகையில் நமது வணக்கத்திற்குரிய பசவேஸ்வரா நம் அனைவரின் மீது இரக்கம் கொண்டவராகவே இருப்பார் என்றே நான் விழைகிறேன். இதன் மூலம் இந்தியா மட்டுமின்றி மனித குலம் முழுவதற்குமான நலனில் ஓரளவிற்கு நம்மால் முடிந்த பங்களிப்பை செய்ய முடியும் என்றும் நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
வணக்கத்திற்குரிய பசவேஸ்வராவின் அறிவுரைகள், செய்திகள் ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு இருந்து வந்துள்ளது. அவரது அருள் உரைகள் நாட்டின் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தருணமாக இருந்தாலும் சரி, லண்டன் மாநகரில் அவரது திருவுருவச் சிலையை திறந்து வைப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்த தருணத்திலும் சரி, ஒவ்வொரு முறையுமே நான் புதியதொரு உந்துதலைப் பெற்று வந்திருக்கிறேன்.
நண்பர்களே,
பசவண்ணாவின் அருள் உரைகளை டிஜிட்டல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்று 2017ஆம் ஆண்டில் நான் தெரிவித்த கருத்தை ஒட்டி, மிக விரிவான பணிகளை நீங்கள் மேற்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. இன்னும் சொல்வதெனில், இந்த நிகழ்ச்சியும் கூட இப்போது உலகம் முழுவதிலும் டிஜிட்டல் முறையில் நடைபெற்று வருகிறது.
ஒரு வகையில் பார்க்கும்போது ஊரடங்கின் விதிமுறைகளைப் பின்பற்றி இணையவழி மாநாடுகளை நடத்துவதற்கான மிகச்சிறந்ததொரு முன் உதாரணத்தையும் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தகையதொரு முயற்சியின் மூலம் உலகத்திலுள்ள மேலும் மேலும் அதிகமானோர் பசவண்ணாவின் பாதையுடன், அவரது குறிக்கோள்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
நண்பர்களே,
உலகத்தில் பல்வேறு வகையான மக்கள் இருக்கின்றனர். ஒரு சிலர் நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி வருவதையும் நாம் பார்த்திருக்கிறோம். எனினும் அந்த நல்ல விஷயங்களை அவர்கள் பின்பற்றி நடப்பதில்லை. ஒரு சிலருக்கு நல்லது என்று தெரிந்திருக்கும்; ஆனால் எது நல்லது என்பதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு பயந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது என்ற பாதையை பசவண்ணா தேர்ந்தெடுத்தது மட்டுமின்றி, சமூகத்திலும் மக்களிடையேயும் இருக்கவேண்டும் என்று அவர் விரும்பிய சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் அவரும் பின்பற்றி நடந்தார். அந்த மாற்றங்களை நாம் மேற்கொள்ளும் போது நாமும் கூட மற்றவர்களுக்கு முன் உதாரணமாக மாறிவிடுகிறோம். அப்போது தான் நம்மிடையே ஒரு சில அர்த்தமுள்ள மாற்றங்களை நம்மால் கொண்டு வர முடியும். பசவண்ணாவின் தெய்வீகத் தன்மைகளிலிருந்து மட்டுமே நீங்கள் கற்றுக் கொள்வதில்லை; நல்லதொரு நிர்வாகி, மிகச்சிறந்த சீர்திருத்தவாதி என்ற வகையிலும் கூட அவரிடமிருந்து உங்களால் உத்வேகம் பெற முடிகிறது.
வணக்கத்திற்குரிய பசவேஸ்வரரின் அருளுரைகளும், அவரது போதனைகளும் ஒரு சிறந்த அறிவிற்கான ஆதார வளமாகவும் விளங்குகின்றன. அவை ஒரு ஆன்மீக வழிகாட்டியாக மட்டுமின்றி, நடைமுறைக்கு வழிகாட்டும் பாதையை நமக்குக் காண்பிக்கும் ஓர் ஊடகமாகவும் திகழ்கின்றன. ஒரு சிறந்த மனிதனாக இருக்கவும், நமது சமுதாயத்தை மேலும் தாராளமான, கனிவான, மனிதாபிமானம் மிக்க ஒன்றாகவும் மாற்றவும் அவரது போதனைகள் நமக்கு உதவுகின்றன.
நண்பர்களே, வணக்கத்திற்குரிய பசவேஸ்வராவின் வார்த்தைகளும் கூட அவர் எவ்வளவு தொலைநோக்குடையவர் என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றன! பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, வணக்கத்திற்குரிய பசவேஸ்வர் சமூக மற்றும் பாலின சமத்துவம் போன்ற விஷயங்களில் சமூகத்திற்கு வழிகாட்டியிருந்தார். சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு சம உரிமைகளும் மரியாதையும் கிடைக்கும் வரை நமது முன்னேற்றம் முழுமையான ஒன்றாக இருக்க முடியாது. அந்தக் காலத்தில் அவர் சமூகத்திற்கு முக்கியமான இந்த விஷயத்தை கற்பித்தார்.
சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள அந்த நபருக்கு முன்னுரிமை வழங்கும் அத்தகையதொரு சமூக ஜனநாயகத்திற்கு பசவண்ணா அடித்தளம் அமைத்திருந்தார். பசவண்ணா மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொட்டு, அதை மேம்படுத்த்துவதற்கான தீர்வுகளையும் பரிந்துரைத்திருந்தார். பசவண்ணா எப்போதுமே கடின உழைப்பை மதித்து வந்துள்ளார். உழைப்புக்கும், கடின உழைப்புக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். சமுதாயத்தில் பெரியவராயினும், சிறியவராயினும் ஒவ்வொரு நபரும் தேசத்திற்கான சேவையில் ஒரு ஊழியரே என்று அவர் கூறுவதுண்டு.
அவரது உலகநோக்கு என்பது கருணையும் அன்பும் நிரம்பியதாக இருந்தது. அகிம்சையையும், அன்பையும் அவர் எப்போதுமே இந்திய கலாச்சாரத்தின் மையத்தில் வைத்திருந்தார். எனவே இந்தியா என்ற நமது நாடு பல்வேறு வகையான சவால்களை எதிர்கொள்வதற்காக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் பசவண்ணாவின் கருத்துக்கள் மேலும் பொருத்தமுடையனவாகத் திகழ்கின்றன.
அவரது தெய்வீக வார்த்தைகளாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு ஜனநாயக அமைப்பு குறித்த அவரது கருத்துக்களாக இருந்தாலும் சரி அல்லது சுயசார்புக்கான முயற்சிகளாக இருந்தாலும் சரி, சமூக உருவாக்கத்தின் மிக முக்கியமான பகுதியாகவே அவற்றை பசவண்ணா எப்போதுமே கருதி வந்திருக்கிறார். சமூகம் மற்றும் இயற்கையின் ஒருமித்த தன்மையையும், இயற்கை மற்றும் சமூகத்தின் ஆதார வளங்களை விவேகமான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர் எப்போதும் நம்பி வந்துள்ளார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் கூட அவரது உணர்வுகள் மிகவும் முக்கியமானவையாக நீடிக்கின்றன.
நண்பர்களே,
21ஆம் நூற்றாண்டில் நின்று கொண்டிருக்கும் இந்தியாவில் இன்றும் கூட, எனது நாட்டு மக்களிடையே, சக குடிமக்களிடையே ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வலுவான விருப்பத்தையும் உறுதியையும் என்னால் காணமுடிகிறது. பசவண்ணா நம்மை ஊக்கப்படுத்திய அதே உறுதியைத் தான் நம்மால் அதில் காண முடிகிறது.
இன்று, மாற்றம் என்பது உண்மையில் தம்மிடமிருந்தே தொடங்குகிறது என்று இந்தியர்கள் கருதுகிறார்கள். இந்த வகையான நம்பிக்கையும், பற்றுறுதியும் நமது நாடு எதிர்கொள்ளும் கடினமான சவால்களிலிருந்து வெளிவருவதற்கு பெருமளவிற்கு உதவுகின்றன.
நண்பர்களே,
இந்த நம்பிக்கை மற்றும் பற்றுறுதி பற்றிய செய்தியை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதோடு, அதை வலுப்படுத்தவும் வேண்டும். இது மேலும் அதிகமான பணியை, சேவையைச் செய்வதற்கு நமக்கு ஊக்கமளிக்கும். அது இந்த தசாப்தத்தில் நமது நாட்டினை புதியதொரு உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
வணக்கத்திற்குரிய பசவண்ணாவின் அருளுரைகளையும், நோக்கங்களையும் நீங்கள் அனைவரும் உலகம் முழுவதிலும் தொடர்ந்து பரப்புரை செய்து, வாழ்வதற்கான மேலும் சிறந்த இடமாக இந்த உலகத்தை மாற்றியுள்ளீர்கள். இந்த வாழ்த்துக்களுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.
ஆம். இந்தக் கடமைகளோடு கூடவே, இரண்டு கஜ தூர இடைவெளி என்ற விதிமுறையைப் பின்பற்றி உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் பசவ ஜெயந்தியை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!!!
Shared my thoughts about the rich and noble ideals of Lord Basavanna in the video conference - Global Basava Jayanthi – 2020. https://t.co/RMDe2bTiMD
— Narendra Modi (@narendramodi) April 26, 2020