Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வடகிழக்கு மாநிலங்களின் வெள்ள நிலைமை குறித்து குவஹாத்தியில் பல்வேறு உயர்மட்டக் கூட்டங்களைக் கூட்டி பிரதமர் ஆய்வுசெய்தார்; ரூ.2,000 கோடிக்கும் அதிகமான நிவாரண நிதியை அறிவித்தார்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் மீட்பு, நிவாரணம், மறுகட்டுமானம் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடிக்கும் அதிகமான நிவாரணத் தொகுப்பை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று அறிவித்தார். பல்வேறு உயர்மட்டக் கூட்டங்களை நடத்தி, பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வெள்ள நிலைமை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்த பிரதமர், இறுதியில் நிவாரணத் தொகையை அறிவித்தார்.

நாள் முழுவதும் விரிவான ஆய்வுக் கூட்டங்களை மாநில வாரியாக நடத்திய பிரதமர், அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நிலைமையை ஆய்வுசெய்தார். இந்தக் கூட்டங்களில், அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத, மிசோரம் முதலமைச்சர் சார்பில் மனுவை பிரதமர் பெற்றுக் கொண்டார்.

கட்டமைப்புத் துறைக்கு மட்டும் ரூ.1,200 கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசு வழங்க உள்ளது. இந்த நிதி, சாலைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் பிற சேதமடைந்த கட்டமைப்புகளை சரிசெய்யவும், பராமரிக்கவும் வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும்.

பிரம்மபுத்திரா ஆற்றில் நீர் தேக்கிவைக்கும் திறனை மேம்படுத்துவதற்காக ரூ.400 கோடி வழங்கப்படும். இது, வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும்.
நடப்பு நிதியாண்டில், மாநில பேரிடர் மீட்பு நிதியில் மத்திய அரசின் பங்காக ரூ.600 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியில், ரூ.345 கோடி அளவுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியும், மாநில அரசுகள் மேற்கொள்ளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதற்காக உடனடியாக விடுவிக்கப்படும்.

இந்தப் பிராந்தியத்தில் மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், இதற்கு நீண்டகால அடிப்படையில் உரிய தீர்வுகாணும் வகையிலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடியை மத்திய அரசு வழங்கும்.

இந்திய நிலப்பகுதியில் 8 சதவீதத்தைக் கொண்ட வடகிழக்குப் பிராந்தியம், நாட்டின் நீர்வளத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள அதிக அளவிலான நீர் வளத்தை உரிய முறையில் கையாள்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அமைச்சகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைக்கும்.

வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து,.நிவாரண நிதியாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

****