பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை வங்கி அட்டைகள் மற்றும் மின்னணு முறையில் பணத்தைச் செலுத்துவது, பெறுவது ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த தனது ஒப்புதலை அளித்துள்ளது. இந்த முயற்சி நேரடியான பணப் பரிவர்த்தனையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். அரசின் அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் ஆகியவற்றால் குறுகிய கால அளவில் (ஓராண்டிற்குள் நிறைவேற்றப்பட இருப்பவை), ஓரளவு நடுத்தர கால அளவில் (இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட இருப்பவை) என பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்படுவதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வங்கி அட்டைகள் மூலமாகவும், மின்னணு முறையிலும் பணத்தைச் செலுத்துவதை மேம்படுத்துவது உரிய வரி செலுத்துவதைத் தவிர்ப்பது; அரசிற்கு செலுத்த வேண்டிய தொகை மற்றும் இதர வசூல்கள் ஆகியவற்றை பணமில்லாத வகைக்குக் கொண்டு செல்வது; வங்கி அட்டைகள்/மின்னணு முறைகளின் மூலம் பணப்பரிவர்த்தனைகளை நாட்டு மக்கள் மேற்கொள்வதற்கு உதவும் வகையில் நிதி செலுத்தும் சேவைகளை வழங்குவதன் மூலம் நேரடியாக பணம் செலுத்தும் முறையை தவிர்க்க அவர்களை ஊக்குவிப்பது; பெருமளவில் பணத்தை நேரடியாக கையாளும் முறையிலிருந்து பணமில்லாத/ குறைந்த அளவில் மட்டுமே பணத்தைப் பயன்படுத்தும் வகையிலான பணம் செலுத்தும் முறைக்கு மாறிச் செல்வதன் மூலம் பணம் செலுத்தும் சூழலை மாற்றியமைப்பது ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் ஆகும்.
கடன் அட்டைகள் மூலமாகவும், மின்னணு முறையிலும் பணத்தைச் செலுத்துவதை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளின் முக்கிய அம்சங்களாக, தற்போது பல்வேறு அரசுத் துறைகளும்/ அமைப்புகளும் விதித்து வரும் கூடுதல் வரி/ சேவை வரி/வசதிக்கான கட்டணம் போன்றவற்றை விலக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகள்; அரசுத் துறைகள்/அமைப்புகளில் இதை ஏற்றுக் கொள்வதற்குப் பொருத்தமான கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது; அட்டைகளின் மூலமான பரிவர்த்தனையின்மீது விதிக்கப்படும் வணிக்க் தள்ளுபடி விகிதத்தை ஒழுங்கமைப்பது; ஒரு சில முக்கிய பரிவர்த்தனைக்கான பிரிவுகளுக்கென வித்தியாசமான வணிக தள்ளுபடி விகித கட்டமைப்பை உருவாக்குவது; ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலான தொகையை வங்கி அட்டை அல்லது மின்னணு முறையில் மட்டுமே செலுத்துவது என்ற விதியை ஏற்படுத்துவது; குறிப்பிட்ட சில வங்கி அட்டைகளை வழங்குபவர்கள் குறிப்பிட்ட வகையோடு தொடர்புடைய பணம் செலுத்துதலை ஏற்றுக்கொள்வதற்கான கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது; மின்னணு மூலமான நிதி பரிமாற்றத்திற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விதிக்கும் சேவை வரியை ஒழுங்குபடுத்துவது; கைபேசி மூலமான வங்கிச் செயல்பாட்டை ஊக்குவிப்பது; மோசடியான பரிமாற்றம் குறித்த சச்சரவுகளை உடனடியாகத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான உறுதியளிக்கும் ஏற்பாட்டைச் செய்வது; நாட்டில் தற்போது நிலவும் பணம் செலுத்துவதற்கான அமைப்பு குறித்து பரிசீலனை மேற்கொள்வது ஆகியவையாகும்.
பின்னணி:
வங்கி அட்டை மூலமான, மின்னணு முறையிலான கட்டமைப்பு வளர்ந்து வருகிறது எனினும் ரொக்கமாக செலுத்தும் முறையுடன் ஒப்பிடுகையில் இந்த விகிதம் ஓரளவிற்கே உள்ளது. வங்கி அட்டை/மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறை அதிகரிக்க வேண்டுமெனில், பயன்படுத்துவதற்கு எளிதானதாக, எளிதில் கிடைப்பதாக, சாதாரணமாக ஏற்கப்படுவதாக, இந்தப் பரிமாற்றத்தில் ஈடுபடும் வணிகர்/ வாடிக்கையாளர் ஆகிய இரு பிரிவினருக்குமே தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தாத ஒன்றாக, அந்தந்த அளவிற்கு ஏற்ற முறையிலான பாதுகாப்பை வழங்குவதாக இருக்க வேண்டும்.
இந்தப் பணம் செலுத்தும் முறைக்கென,மின்னணு முறையிலான பணப்பரிமாற்ற சேவைத் திட்டம், தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தத் தொகையை வங்கிகளில் செலுத்தும் திட்டம் போன்ற பல முறைகளில் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை பாராட்டத்தக்கதாக இருந்தபோதிலும் நவீன வங்கி அட்டை/மின்னணு அமைப்புகளின் பயன்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் இன்னமும் சென்றடையவில்லை என்பதோடு நாட்டின் மூலைமுடுக்கெங்கும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் அமையவில்லை. நவீன வங்கி அட்டை/மின்னணு முறையிலான பணம் செலுத்த உதவும் பொருட்கள், சேவைகள் ஆகியவை நாட்டின் முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு நகரப் பகுதிகளில் மட்டுமே பெருமளவிற்கு ஊடுருவியுள்ளன என்பதையும் பெரும்பாலும் வழக்கமான வங்கி சேவைகளைப் பெற்று வருவோர் மட்டுமே இந்த முறையை பயன்படுத்தி வருகின்றனர் என்பதையே தற்போதைய அனுபவமும் அதற்கான சான்றுகளும் நமக்குத் தெரிவிக்கின்றன.
2007ஆம் ஆண்டின் பணம் செலுத்தல் மற்றும் பணப்பரிமாற்ற தீர்வு முறைகளுக்கான சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டில் நவீன வங்கி அட்டை/மின்னணு முறையில் பணம் செலுத்துவதென்பது பெருமளவிற்கு ஊடுருவியுள்ளதோடு, ஏற்றுக்கொள்ளவும் வழியேற்பட்டுள்ளது. தனிநபர் உடற்கூறு அடையாள சோதனையை மேலும் அதிகமான அளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக ஆதார் அட்டை அடிப்படையிலான பணம் செலுத்தும் அமைப்புகள் மற்றும் ரூபே என்ற உள்நாட்டு வங்கி அட்டைக்கான ஏற்பாடு ஆகியவை கொண்டுவரப் பட்டுள்ளன.
சமீபத்தில் பணம் செலுத்துவதற்கென பேமண்ட் வங்கிகளை தொடங்க இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், இதர ஒழுங்கமைக்கப்படாத பிரிவுகளில் உள்ளவர்கள் ஆகிய பிரிவினருக்கு சிறு சேமிப்புக் கணக்குகள், பணம் செலுத்துவது – பெறுவது போன்ற சேவைகளை வழங்குவது ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இந்த பேமண்ட் வங்கிகள் மேலும் அதிகமான அளவில் நிதிவசதியை அளிப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.