Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வங்காள தேசப் பிரதமர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்தியப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

வங்காள தேசப் பிரதமர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்தியப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

வங்காள தேசப் பிரதமர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்தியப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

வங்காள தேசப் பிரதமர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்தியப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை


மேதகு பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனா அவர்களே,

ஊடகத் துறை நண்பர்களே,

மேதகு பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனா அவர்களை இந்தியாவிற்கு வரவேற்பதில் நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேதகு பிரதமர் அவர்களே,

மிகவும் மங்களகரமானதொரு தருணத்தில், அதாவது வங்காளி வருடப் பிறப்பு வரவிருக்கும் தருணத்தில் நீங்கள் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறீர்கள். இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு உங்களுக்கும் வங்கதேசத்து மக்களுக்கும் எனது புது வருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இந்த வருகை நம் இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையேயான நட்புறவில் பொற்கால யுகத்தைக் குறிப்பதாக அமைகிறது. நமது உறவில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றங்கள், நமது கூட்டணியின் சாதனைகள் ஆகியவை உங்களது வலுவான. தீர்மானகரமான தலைமையின் தெள்ளத் தெளிவான அங்கீகாரமாகவே அமைகின்றன. 1971-ம் ஆண்டின் விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்துவது என்ற உங்கள் முடிவு இந்திய மக்களை மிகவும் கவர்வதாக அமைந்தது. பயங்கரவாத ஆட்சியின் பிடியிலிருந்து வங்கதேசத்தை விடுவிக்க இந்திய வீரர்களும் வீரஞ்செறிந்த முக்தி பாகினிகளும் இணைந்து நின்று போராடினர் என்பதை அறிந்து கொள்ளும்போது ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கின்றனர்.

நண்பர்களே,

மேதகு திருமதி. ஷேக் ஹசீனா அவர்களும் நானும் நமது இரு நாடுகளின் கூட்டணி தொடர்பாக விரிவான, பலனளிக்கக் கூடிய விவாதத்தை இன்று நடத்தினோம். நமது ஒத்துழைப்பிற்கான நிகழ்ச்சி நிரல்  குறிக்கோளுடன் கூடிய நடவடிக்கையை தொடர்ந்து கவனத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் இருவரும் ஒப்புக் கொண்டோம். நமது உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, புதிய பாதைகளை வகுப்பது ஆகியவற்றிலும் நாங்கள் குறிப்பாக கவனம் செலுத்தினோம். புதிய பகுதிகளில், குறிப்பாக நம் இரு நாடுகளிலும் உள்ள இளைஞர்களோடு மிக ஆழமாகத் தொடர்பு கொண்டுள்ள ஒரு சில உயர்தொழில்நுட்ப பகுதிகளில் ஒத்துழைப்பை வளர்த்தெடுக்க நாங்கள் விரும்புகிறோம். மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், இணையதளப் பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, பொது நுகர்விற்கான அணுசக்தி, இதர துறைகளில் செயல்படுவதும் இதில் அடங்கும்.

நண்பர்களே,

வங்கதேசம் மற்றும் அதன் மக்கள் ஆகியோரின் வளத்திற்காகவே இந்தியா எப்போதும் ஆதரவாக இருந்து வந்துள்ளது. வங்க தேசத்தின் மிக நீண்ட கால, நம்பிக்கைக்கு உரிய வளர்ச்சிக்கான கூட்டாளியாகவே நாம் இருந்து வருகிறோம். நமது பரஸ்பர ஒத்துழைப்பின் பயன்கள் நமது மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதிலும் இந்தியாவும் வங்கதேசமும் உறுதியாக உள்ளது. இந்தப் பின்னணியில் வங்கதேசத்தின் முன்னுரிமைத் துறைகளில் திட்டங்களை அமலபடுத்துவதற்காக 4.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய கடன் வசதியை இங்கு அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் கடந்த ஆறு வருட காலத்தில் வங்க தேசத்திற்காக நாம் ஒதுக்கியுள்ள நிதியின் அளவும் 8 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. வளர்ச்சிக்கான நமது கூட்டணியில் மின்சக்திக்கான பாதுகாப்பு மிக முக்கியமான அம்சமாக அமைகிறது. மின்சக்திக்கான நமது கூட்டணி தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு ஏற்கனவே சென்று வரும் 600 மெகாவாட் மின்சாரத்தோடு இன்று நாம் கூடுதலாக 60 மெகாவாட் மின்சாரத்தை சேர்த்திருக்கிறோம். தற்போதுள்ள இருநாடுகளுக்கு இடையேயான பரஸ்பர தொடர்பிலிருந்து இன்னும் 500 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவது என்றும் நாம் ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறோம். நுமாலிகர்-லிருந்து பார்வதிபூர் வரையில் டீசல் எண்ணெய்க்கான குழாய் வசதிக்கு நிதியுதவி செய்யவும் நாம் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறோம். வங்கதேசத்திற்கு விரைவு டீசலை வழங்குவதற்கு நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றை நமது எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளவிருக்கின்றன. இந்தக் குழாய் வசதி கட்டி முடிக்கப்படும் வரை முறையாக எண்ணெய் சப்ளையை உறுதி செய்வதற்கான கால அட்டவணைக்கும் நாம் ஒப்புதல் அளித்துள்ளோம். இந்தத் துறையில் நுழைவதற்கு நம் இருநாடுகளிலும் உள்ள தனியார் துறையினரையும் நாம் ஊக்குவிக்கிறோம். வங்க தேசத்தில் மின் உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதற்கான பல்வேறு ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களால் வரும் நாட்களில் கையெழுத்திடப்படவுள்ளன. வங்க தேசத்தின் மின்சாரத் தேவைகளை சமாளிக்கவும், ‘2021-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் மின்வசதி’ என்ற அதன் இலக்கை எட்டுவதற்கும் ஆர்வமுள்ள கூட்டாளியாக இந்தியா தொடர்ந்து இருந்து வரும்.

 

நண்பர்களே,

இரு நாடுகளின் வளர்ச்சி, இந்தப் பகுதிக்கான பொருளாதாரத் திட்டங்கள், இந்தப் பகுதியின் பொருளாதார வளம் ஆகியவற்றுக்கான கூட்டணி  வெற்றி பெறுவதற்கு தொடர்புகள் மிக முக்கியமானவை ஆகும். இன்று மதிப்பிற்குரிய மேற்கு வங்க முதல்வருடன் சேர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நமது தொடர்புகளில் மேலும் பல புதிய இணைப்புகளை நாம் சேர்த்துள்ளோம். கொல்கத்தா- குல்னா, ராதிகாபூர்- ஷிரேல் ஆகியவற்றுக்கு இடையே பேருந்து, ரயில் தொடர்புகள் இன்று மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து வழிகளும் பெருமளவிற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. கரையோர கப்பல் போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரு வழி சரக்குப் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கண்டும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். வங்க தேசம், பூடான், இந்தியா, நேபாளம் மோட்டார் வாகன ஒப்பந்தத்தை  விரைவில் நிறைவேற்றுவதிலும் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். இந்தப் பகுதியின் ஒருங்கிணைப்பில் புதியதொரு யுகத்தைக் கொண்டுவருவதாக அது இருக்கும்.

 

நண்பர்களே,

வணிகரீதியான செயல்பாடுகளை விரிவுபடுத்துவதன் அவசியத்தை பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனாவும் நானும் நன்கு உணர்ந்துள்ளோம். நம் இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் இடையே பல்வேறு வகையான வர்த்தக கூட்டணியை உருவாக்குவது மட்டுமே போதுமானதல்ல. இப்பகுதிக்கும் அதிகமான அளவில் அவை நலன் விளைவிப்பதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக, தொழில் துறையிலிருந்தே இதற்கான முயற்சியின் பெரும்பகுதி வருவதாக இருக்க வேண்டும். பிரதமருடன் இந்தியா வந்துள்ள உயர்மட்ட வர்த்தகக் குழுவினரை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லைப் பகுதிகளில் புதிய சந்தைகளை திறப்பதற்கான எங்கள் ஒப்பந்தம் எல்லைப்பகுதிகளில் உள்ள மக்கள் வர்த்தகத்தின் மூலம் தங்களை வலுப்படுத்திக் கொள்வதாகவும், அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவி புரிவதாகவும் இருக்கும்.

நண்பர்களே,

திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சிக்கான முன்முயற்சிகள் ஆகியவற்றின் வெற்றியையும் பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனாவும் நானும் கண்டறிந்தோம். வங்க தேசத்தின் 1500 அரசு அதிகாரிகளுக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சி கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. அதைப் போன்றே வங்கதேசத்தின் நீதித்துறையைச் சேர்ந்த 1500 பேருக்கு நமது நீதித்துறைக்கல்வி நிலையங்களில் பயிற்சி அளிக்கவும் நாங்கள் முயற்சி மேற்கொள்வோம்.

 

நண்பர்களே,

நமது கூட்டணியானது நமது இரு நாட்டு மக்களுக்கும் வளத்தைக் கொண்டு வந்துள்ள அதே நேரத்தில் அதிதீவிர மதவாதம், தீவிரவாதம் ஆகிய சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும் செய்கிறது. இத்தகைய சக்திகள் விரிவடைவது இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் மட்டுமல்ல; இந்தப் பகுதி முழுவதற்குமே மிக மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும். பயங்கர வாதத்தைக்  கையாள்வதில் பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனாவின் உறுதியான நம்பிக்கையைக் கண்டு நாங்கள் போற்றிப் பாராட்டுகிறோம். அவரது அரசின் பயங்கர வாதத்தை ‘எள்ளளவும் பொறுக்காத’ கொள்கை நம் அனைவருக்குமே உத்வேகம் ஊட்டக் கூடிய ஒன்றாக அமைகிறது. நமது மக்கள், இப்பகுதி ஆகியவற்றின் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவைதான் நமது செயல்பாட்டின் மையக்கருத்தாக தொடர்ந்து நீடிக்கும் என்பதையும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். நம் இரு ராணுவப் பிரிவுகளுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதன் மூலம் நீண்ட காலத்திற்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையையும் நாங்கள் இன்று எடுத்துள்ளோம். வங்கதேசத்தின் ராணுவம் தொடர்பான கொள்முதலுக்கு உதவி செய்யும் வகையில் 500 மில்லியன் டாலர் கடனுதவியை வழங்கவிருப்பதை அறிவிப்பதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கடனுதவியை அமல்படுத்தும்போது வங்கதேசத்தின் தேவைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் செயல்பாடு இருக்கும்.

 

நண்பர்களே,

நம் இரு நாடுகளும் மிக நீளமான நில எல்லையை பங்கு போட்டுக் கொள்வதாக அமைந்துள்ளன. 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நான் டாக்கா நகருக்குச் சென்றிருந்தபோது நில எல்லை குறித்த ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்தோம். அதன் அமலாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. நிலப்பகுதிக்கான எல்லையை நாம் பங்கு போட்டுக் கொள்வதைப் போலவே ஆறுகளையும் நாம் பங்கு போட்டுக் கொள்கிறோம். நமது நாட்டு மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் அவைதான் நிலைத்து நிற்கச் செய்கின்றன. இந்தவகையில் மிகப் பெரும் கவனத்தைப் பெறுவதாக உள்ளது டீஸ்டா ஆகும். இது இந்தியாவிற்கும், வங்கதேசத்திற்கும், இந்திய-வங்கதேச உறவுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். மேற்கு வங்க முதல்வர் இன்று எனது மரியாதைக்குரிய விருந்தினராக இன்று விளங்குவது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் போலவே வங்க தேசம் குறித்த அவரது உணர்வுகளும் கூட மிகவும் பரிவோடு கூடியது என்பதையும் நான் அறிவேன். இது குறித்த எங்களது உறுதிப்பாடு, தொடர்ந்த முயற்சிகள் ஆகியவை குறித்து உங்களுக்கும் வங்கதேசத்து மக்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன். எனது அரசும், மரியாதைக்குரிய திருமதி. ஷேக் ஹசீனா ஆகிய உங்களின் அரசும்தான் இந்த தீஸ்தா நதி நீர் பங்கு குறித்து விரைவில் தீர்வு காணத் தகுதி வாய்ந்தவை என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

 

நண்பர்களே,

வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவின் மிக நெருங்கிய நண்பரும் மகத்தான தலைவரும் ஆவார். வங்கதேசத்தின் தந்தை குறித்த நமது மரியாதையை, ஆழ்ந்த போற்றுதலை வெளிப்படுத்தும் வகையில் நமது நாட்டுத் தலைநகரில் முக்கியமானதொரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்கபந்துவின் வாழ்க்கை மற்றும் அவரது செயல்கள் ஆகியவை குறித்த ஒரு திரைப்படத்தைக் கூட்டாகத் தயாரிப்பது என்றும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். அவரது நூற்றாண்டான 2020-ம் ஆண்டில் அது வெளியிடப்படும். பிரதமர் திருமதி. ஷேக் ஹசீனாவுடன் இணைந்து வங்கபந்துவின் ‘முடிவுறாத நினைவலைகள்’ நூலின் இந்தி மொழியாக்க நூலை வெளியிடுவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன். வங்கதேசத்தை உருவாக்குவதற்கான அவரது போராட்டம், பங்களிப்பு ஆகியவை அடங்கிய அவரது வாழ்க்கை வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகமூட்டுவதாகவே இருக்கும். வங்கதேச விடுதலையின் பொன்விழா ஆண்டைக் குறிக்கும் வகையில் வங்கதேசத்தின் விடுதலைப் போர் குறித்த ஆவணப்படம் ஒன்றை கூட்டாகத் தயாரிப்பது என்றும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.

 

மேதகு பிரதமர் அவர்களே,

வங்கபந்துவின் தொலைநோக்கு, பாரம்பரியம் ஆகியவற்றை நீங்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து வந்துள்ளீர்கள். இன்று உங்கள் தலைமையில் வங்கதேசம் உயர் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பாதையில் வேகமாக நடைபோட்டு வருகிறது. வங்கதேசத்துடனான எமது உறவுகள் குறித்து இந்தியாவில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். தலைமுறை தலைமுறையான சகோதரத்துவ உறவுகள், ரத்த உறவுகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதே நமது உறவாகும். இந்த உறவு நமது நாட்டு மக்களுக்கு சிறந்த, பாதுகாப்பான எதிர்காலத்தையை எதிர்நோக்குகிறது. இந்த வார்த்தைகளுடன் மேதகு பிரதமராகிய உங்களையும், உங்களோடு வருகை தந்துள்ள தூதுக் குழுவினரையும் இந்தியாவிற்கு மீண்டும் வரவேற்கிறேன்.

 

நன்றி.

 

மிக்க நன்றி.

****