Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரேவா மிகப்பெரிய சூரிய மின்சக்தித் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்


ரேவா மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது ஆசியாவின் மிகப்பெரிய மின்சக்தி திட்டமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பரிசுத்தமான மற்றும் தூய்மையான எரிசக்தியின் முக்கிய மையமாக ரேவா திட்டம் ஆக்கும் என்று தெரிவித்தார். ரேவாவின் சுற்றுப்புறத்தில் உள்ள மொத்த பகுதியையும் தவிர, தில்லி மெட்ரோவுக்கும் இந்தத் திட்டம் மின்சாரத்தை வழங்கும் என்பதால் இதற்கான முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.

நீமுச், ஷாஜாபூர், சத்தர்பூர் மற்றும் ஓம்காரேஷ்வர் ஆகிய பகுதிகளில் பெரிய திட்டங்கள் நிறுவப்பட்டுக் கொண்டிருப்பதால், சூரிய மின்சக்தியின் முக்கியக் கேந்திரமாக மத்தியப் பிரதேசம் விரைவில் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பழங்குடியினர், மத்தியப் பிரதேசத்தின் விவசாயிகள் ஆகியோர் இதன் மிகப்பெரிய பயனாளிகளாக இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

வளரத்துடிக்கும் இந்தியாவின் மின்சக்தி தேவைகளை 21-வது நூற்றாண்டில் பூர்த்தி செய்வதில் சூரிய மின்சக்தி பெரும் பங்கு வகிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

சூரிய மின்சக்தி ‘உறுதியானது, சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது’ என்று அவர் வர்ணித்தார். சூரிய ஒளியில் இருந்து மின்சக்தி வருவதால் உறுதியானது, சுற்றுப்புறச் சூழலுக்கு நட்பானது என்பதால் சுத்தமானது, மற்றும் நமது மின்சாரத் தேவைகளுக்கான நம்பத்தகுந்த ஆதாரம் என்பதால் பாதுகாப்பானது.

இப்படிப்பட்ட சூரிய சக்தித் திட்டங்கள் சுயசார்பு இந்தியாவின் உண்மையான பிரதிநிதி என்று பிரதமர் தெரிவித்தார்.

சுய-சார்பு மற்றும் வளர்ச்சியின் முக்கியப் பகுதி பொருளாதாரம் என்று அவர் தெரிவித்தார். பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்துவதா அல்லது சுற்றுப்புறச்சூழல் மீது கவனம் செலுத்துவதா என்ற வழக்கமான குழப்பத்தை சுட்டிக்காட்டிய அவர், சூரிய சக்தித் திட்டங்கள் மற்றும் இதர சுற்றுப்புறச் சூழலுக்கு நட்பான நடவடிக்கைகளின் மூலம் இத்தகைய குழப்பங்களை இந்தியா களைவதாக கூறினார். பொருளாதாரமும், சுற்றுப்புறச் சூழலும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, மாறாக நட்பானவை என்று திரு. மோடி கூறினார்.

அரசின் அனைத்துத் திட்டங்களிலும், சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்புக்கும், எளிதான வாழ்க்கை முறைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தூய்மை இந்தியா, ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிசக்தி உருளைகளை வழங்குதல், அழுத்தப்பட்ட இயற்கை வாயு வலைப்பின்னல்களின் மேம்பாடு ஆகிய திட்டங்கள் எளிதான வாழ்க்கை முறை மீதும், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவதன் மீதும் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு என்பது ஒரு சில திட்டங்களுக்கும் மட்டுமே உரித்தானது அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்று பிரதமர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த பெரியத் திட்டங்களைத் தொடங்கும் போது, தூய்மையான மின்சக்தியைப் பற்றிய உறுதிப்பாடு ஒவ்வொரு விஷயத்திலும் கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும், சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் பலன்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்கிறது. எல் ஈ டி விளக்குகளின் அறிமுகம் மின் கட்டணங்களை எவ்வாறு குறைத்தது என்ற உதாரணத்தின் மூலம் அவர் இதை விளக்கினார். எல் ஈ டி விளக்கின் மூலம், கிட்டத்தட்ட 40 மில்லியன் டன்கள் கரியமில வாயு சுற்றுச்சூழலுக்கு செல்லாமல் தடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மின்சாரப் பயன்பாட்டை 6 பில்லியன் அலகுகள் வரை இது குறைத்ததாகவும், கருவூலத்துக்கு ரூ 24,000 கோடி சேமிப்பை இது வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

நமது சுற்றுப்புறம், நமது காற்று, நமது தண்ணீர் ஆகியவற்றையும் தூய்மையாக வைத்திருக்க அரசு பணியாற்றி வருவதாகவும், சூரிய மின்சக்தியின் கொள்கை மற்றும் உத்தியில் இந்த சிந்தனையும் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.

சூரிய மின்சக்தியில் இந்தியாவின் சிறப்பான வளர்ச்சி உலகத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை ஊட்டும் விஷயமாக இருக்கும் என்று திரு. மோடி தெரிவித்தார். இத்தகைய முக்கிய நடவடிக்கைகளால், தூய்மையான எரிசக்தியின் மிக ஈர்க்கக்கூடிய சந்தையாக இந்தியா கருதப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த உலகத்தையும் சூரிய எரிசக்தியின் மூலம் இணைக்கும் எண்ணத்துடன் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே அமைப்பு என்பதே இதன் பின்னால் உள்ள எண்ணம் என்று அவர் கூறினார்.

அரசின் குசும் திட்டத்தை மத்தியப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும், சூரிய சக்திக் கருவிகளைத் தங்கள் நிலங்களில் வருவாய்க்கான கூடுதல் ஆதாரமாக நிறுவுவார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

மின்சாரத்தின் முக்கிய ஏற்றுமதியாளராக வெகு விரைவில் இந்தியா மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒளிமின்னழுத்த செல்கள், மின்கலங்கள் மற்றும் சேமிப்புப் பகுதிகளுக்குத் தேவையான பல்வேறு வன்பொருள்களுக்காக இறக்குமதிகளை சார்ந்திருப்பதைக் குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்துவதாக பிரதமர் கூறினார்

இந்தத் திசையில் பணிகள் துரிதகதியில் நடப்பதாகவும், இந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என்றும் சூரிய மின்சக்திக்குத் தேவைப்படும் அனைத்து உள்ளீடுகளின் உற்பத்திக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பணிபுரியுமாறும் தொழில்கள், இளைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் புது நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) அரசு ஊக்கப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 பெரும்தொற்றால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் குறித்து பேசிய பிரதமர், இந்தக் கடினமான சவாலை எதிர்கொள்ள, பரிவு மற்றும் விழிப்பு ஆகியவை அரசுக்கும், சமுதாயத்துக்கும் மிகப்பெரிய ஊக்குவிப்பாளர்களாக இருப்பதாகத் தெரிவித்தார். பொது முடக்கத்தின் தொடக்கத்தில் இருந்தே ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் உணவு மற்றும் எரிசக்தி கிடைப்பதை அரசு உறுதி செய்ததாகக் கூறினார். இதே எண்ணத்துடன் தான், பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் காலத்திலும், இலவச உணவு மற்றும் சமையல் எரிவாயு வழங்கப்படுவது இந்த வருடத்தின் நவம்பர் வரை தொடர அரசு முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இது மட்டும் இல்லாமல், பல லட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் முழு பங்களிப்பையும் அரசு வழங்குகிறது. அதே போல், பிரதமர்-சுவநிதி திட்டத்தின் மூலம், அமைப்பை குறைந்தபட்ச அளவில் அணுக முடிந்தவர்களும் பயனடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தை வளர்ச்சியடைய வைக்கத் தங்கள் வீடுகளில் இருந்து மக்கள் வெளியில் வரும் போது, இரண்டு கஜங்கள் இடைவெளி, முகக்கவசம் அணிதல், குறைந்தபட்சம் 20 நொடிகளுக்கு சோப்பைக் கொண்டு கைகளைக் கழுவதல் ஆகிய விதிமுறைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.