Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரூ. 1 லட்சம் கோடி வேளாண் கட்டுமான நிதித் திட்டம்: பிரதமர் தொடக்கம்


வேளாண் கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய நிதி வசதித் திட்டத்தைப் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கி வைத்தார். இத்திட்டம், சமுதாய வேளாண்மையைக் கட்டமைக்கவும் அறுவடைக்குப் பிந்தைய வேளாண் கட்டமைப்புக்கும் உதவும். தொடக்க வேளாண் கடன் சங்கம் (Primary Agricultural Credit Society- PACS), வேளாண் உற்பத்தி அமைப்புகள் (Farmer Producer Organisations – FPOs), வேளாண் தொழில்முனைவோர் (Agri-entrepreneurs) ஆகிய தரப்பினருக்கு உதவி அளிக்கப்படும். இந்த வசதிகளின் மூலம் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்குக் கூடுதலான மதிப்பைப் பெற முடியும். தங்களது உற்பத்திப் பொருள்களை குளிர்சாதன சேமிப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்க இயலும், அதிக விலைக்கு விற்பனை செய்ய இயலும். உணவுப் பண்டங்கள் வீணாவதைக் குறைக்கும். பதனீட்டை அதிகரிக்கும். கூடுதல் மதிப்பும் கிடைக்கும்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 30 நாட்களிலேயே இத்திட்டத்தின் கீழ் 2,280 விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு இன்று மொத்தம் ரூ. 1000 கோடி நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி காணொளிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து லட்சக் கணக்கான விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் (FPOs), தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (PACS), பொது மக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இத்துடன், பிரதம மந்திரி – கிசான் திட்டத்தின் கீழ் எட்டரை கோடி விவசாயிகளுக்கு ஆறாவது தவணையாக அளிப்பதற்காக மொத்தம் ரூ. 17,000 கோடி நிதியை விடுவித்தார். இந்த நிதி விவசாயிகளுக்கு ஆதாருடன் கூடிய வங்கிக் கணக்கில்   நேரடியாகச் சென்றடையும். இதையடுத்து திட்டம் தொடங்கப்பட்ட 2018 டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து இதுவரையில்  நாடு முழுவதும் உள்ள 10 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் 90,000 கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண் கடன் சங்கங்களுடன் உரையாடல்
கர்நாடகம், குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆரம்ப கட்டத்தில் பலன் பெற்ற மூன்று தொடக்க வேளாண் கடன் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் மெய்நிகர் காட்சி வழியாக கலந்துரையாடினார். விவசாய சங்கத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பாரதப் பிரதமர் அவர்களது தற்போதைய நிலைமை செயல்பாடு குறித்தும் பெறும் நிதியை எப்படிப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பன போன்றவை குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, அந்த சங்கத்தினர் தாங்கள் சேமிப்புக் கிடங்குகளை அமைப்பதற்காக தரப்படுத்துவதற்கான அமைவு வகைப்படுத்துவது ஆகியவற்றில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர். இந்த வசதிகள் மூலம் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்.
தொடக்கவேளாண் கடன் சங்கங்களுடன் நடத்திய உரையாடலுக்குப் பிறகு நாட்டு மக்களுக்குப் பிரதமர் உரையாற்றினார். அப்போது, இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளும், வேளாண் துறையும் நல்ல பலனைப் பெறும் என்று உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டார். இத்திட்டம் விவசாயிகளின் நிதி பலத்தை அதிகரிக்கச் செய்யும். சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்த தரத்தைப் பெற்றிருக்கும்.
அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மையில் இ்நதியாவில் மிகப் பெரிய வாய்ப்பு அமைந்துள்ளது என்பதைப் பாரதப் பிரதமர் மீண்டும் உறுதிபடுத்தினார். விளை பொருள்களைப் பாதுகாப்பாக சேமிப்பதற்கான கிடங்குகள் வசதி, உணவுப்பதனீடு, இயற்கை வேளாண்மை, வலுவூட்டப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றில் உலக நிறுவனங்கள் இடம்பெற வாய்ப்புகள் ஏற்படும் என்றார் அவர்.
இத்திட்டம் புதிதாகத் தொழில் தொடங்குவோர் உரிய பலன்களைப் பெறுவதற்கும் தங்களது செயல்பாடுகளை மதிப்பிடவும் பெரிதும் துணைபுரியும். இதன் மூலம் அவர்கள் நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளையும் சென்றடையும் உகந்த சூழலை உருவாக்கும்.
பிரதம மந்திரி – கிசான் (PM-KISAN) திட்டம் செயல்படுத்தப்படும் வேகம் குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். இத்திட்டத்தின் அளவீடு மிகப் பெரியது என்று குறிப்பிட்ட அவர், இன்று விடுவிக்கப்பட்ட நிதி பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான எண்ணிக்கையில் உள்ள விவசாயிகளைச் சென்றடைந்துள்ளது என்றும் கூறினார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகள் தங்களது அரிய பங்களிப்பைச் செலுத்தியதுடன் விவசாயிகள் பதிவு செய்வது முதல் உதவி பெறுவது வரையில் அவர்களுக்குத் துணை புரிந்துள்ளன என்று குறிப்பிட்டுப் பாராட்டினார் பிரதமர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார்.
வேளாண் கட்டமைப்பு நிதி:
வேளாண் கட்டமைப்பு நிதி விவசாயிகளுக்கு பலன்தரும் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான நடுத்தர, நீண்டகால கடன் நிதி வசதித் திட்டமாகும். வட்டியுடன் கூடிய கடன் உத்தரவாதத்தில் (Interest Subvention And Credit Guarantee) அறுவடைக்குப் பிந்தைய மேலாண் கட்டமைப்பு (Post-Harvest Management Infrastructure), சமுதாய வேளாண்மை (Community Farming) ஆகியவற்றை உருவாக்க இது உதவும்.
இத்திட்டம் 2020 நிதியாண்டு முதல் 2029 நிதியாண்டு வரையில் 10 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இதற்காக ரூ. 1 லட்சம் கோடி வரையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் 3 சதவீதம் வட்டிக்கு கடனுதவி அளிக்கப்படும். மேலும், கடன் உத்தரவாத நிதி சிறு, குறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதி (Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises) திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி கடன்களுக்கான உத்தரவாதமும் அளிக்கப்படும்.
இதன் கீழ் விவசாயிகள், தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (PACS), சந்தைக் கூட்டுறவு சங்கங்கள் (Marketing Cooperative Societies),  வேளாண் உற்பத்தி அமைப்புகள் (FPOs), சுய உதவிக் குழுக்கள் (SHGs), தொழில் புதிதாகத் தொடங்குவோர் (Start ups), வேளாண் தொழில்முனைவோர் (Agri-entrepreneurs), மத்திய, மாநில முகமைகள் அல்லது உள்ளாட்சி ஆதரவுடனான தனியார்-அரசு கூட்டுத் திட்டங்கள் ஆகியவை பலன் பெறும்.
பிரதம மந்திரி – கிசான் (PM-KISAN)
பிரதம மந்திரி – கிசான் திட்டம் 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதன் கீழ் (சில விதி விலக்குகள் நீங்கலாக) நிலமுள்ள விவசாயிகள் போதிய நிதி பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வேளாண் உற்பத்திக்கான தேவைகளை ஈடு செய்ய இயலும். தங்களது குடும்பங்களின் தேவைகளையும் கவனித்துக் கொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் ரூ. 6000 நிதி கிடைக்கும்.
வேளாண் துறைக்குப் புதிய விடியல்
பிரதமரின் வழிகாட்டுதலின்படி வேளாண் துறையைச் சீர்திருத்த மத்திய அரசு அண்மைக் காலத்தில் எடுத்து வரும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இவை இடம்பெற்றுள்ளன. இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் வேளாண் துறையின் புதிய விடியலுக்குக் கட்டியம் கூறும். அத்துடன் விவசாயிகளின் நீடித்திருக்கும்  வாழ்வாதாரம் மற்றும் விவசாயிகள் நலன் ஆகியவற்றை உறுதி செய்யும் அரசின் கடப்பாட்டு உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும்.