Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரிபப்ளிக் உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

ரிபப்ளிக் உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை


புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ரிபப்ளிக் உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அவர், அடிமட்ட அளவில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க ஹேக்கத்தான் போட்டியை ஏற்பாடு செய்வதற்கும் புதுமையான அணுகுமுறையை ரிபப்ளிக் டிவி மேற்கொண்டதற்காகப் பாராட்டு தெரிவித்தார். நாட்டின் இளைஞர்கள் தேசிய விவாதத்தில் ஈடுபடும்போது, அது சிந்தனைகளுக்கு புதுமையைக் கொண்டு வருவதுடன், ஒட்டுமொத்த சூழலையும் தங்கள் சக்தியால் நிரப்புகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆற்றல் உச்சிமாநாட்டில் உணரப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் ஈடுபாடு அனைத்துத் தடைகளையும் உடைத்து, எல்லைகளைக் கடந்து செல்ல உதவுகிறது. ஒவ்வொரு இலக்கையும் அடையக்கூடியதாகவும் ஆக்குகிறது என்று அவர் மேலும் கூறினார். இந்த உச்சிமாநாட்டிற்காக ஒரு புதிய கருத்தை உருவாக்கியதற்காக ரிபப்ளிக் டிவிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், அதன் வெற்றிக்கு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். எந்த அரசியல் பின்னணியும் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை இந்திய அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தமது யோசனையை திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக உலகம் தற்போது அங்கீகரித்துள்ளது என்றும் இந்தியாவின் சாதனைகள் மற்றும் வெற்றிகள் உலகளவில் புதிய நம்பிக்கையைத் தூண்டியுள்ளன என்றும் திரு மோடி குறிப்பிட்டார். ஒரு காலத்தில் தன்னையும் மற்றவர்களையும் மூழ்கடிக்கும் தேசமாக கருதப்பட்ட இந்தியா, இப்போது உலகளாவிய வளர்ச்சியை உந்திச் செலுத்துகிறது என்று அவர் கூறினார். இந்தியாவின் எதிர்காலத்தின் திசை இன்றைய பணிகள் மற்றும் சாதனைகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது என்று கூறிய அவர், சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியா உலகின் 11வது பெரிய பொருளாதாரமாகத்தான் இருந்தது என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், கடந்த தசாப்தத்தில், இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்ள்ளது. மேலும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

18 ஆண்டுகளுக்கு முன்பு, 2007-ல் இந்தியாவின் வருடாந்திர ஜிடிபி 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டிய நிலைமையை நினைவு கூர்ந்த பிரதமர், அப்போது இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஓராண்டு முழுவதும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்பதை எடுத்துரைத்தார். இன்று, அதே அளவு பொருளாதார நடவடிக்கைகள் ஒரு காலாண்டில் மட்டுமே நடைபெறுகின்றன என்று கூறிய அவர், இந்தியா எந்த வேகத்தில் முன்னேறி வருகிறது என்பதை இது காட்டுகிறது என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 25 கோடி மக்களை வறுமையி நிலையில் இருந்து வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது என்பதைக் குறிப்பிட்ட அவர், இது பல நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் என்றும் குறிப்பிட்டார்.  ஒரு காலத்தில் அரசு அனுப்பிய ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே ஏழைகளைச் சென்றடைந்ததையும்ஊழலால் 85 பைசா வீணாகிவிட்டதையும் பார்வையாளர்களுக்கு திரு மோடி நினைவுபடுத்தினார். இதற்கு நேர்மாறாக, கடந்த பத்தாண்டுகளில், நேரடி பணப் பரிமாற்றம் (டிபிடி) மூலம் ரூ.42 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. இது முழு தொகையும் பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய மின்சக்தியில் இந்தியா பின்தங்கியிருந்தது, “இன்று, சூரியசக்தி திறனில் உலகில் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதாவது 30 மடங்கு சூரிய மின் சக்தி அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் சூரிய தொகுதி உற்பத்தியும் 30 மடங்கு அதிகரித்துள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஹோலி நீர் பீய்ச்சும் துப்பாக்கிகள் போன்ற குழந்தைகளின் பொம்மைகள்  இறக்குமதி செய்யப்பட்டன என்றும், இன்று, இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா தனது இராணுவத்திற்காகத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்தது. ஆனால் கடந்த தசாப்தத்தில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 20 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராகவும், இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராகவும், மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாகவும் மாறியுள்ளது என்பதைப் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். அதே காலகட்டத்தில், உள்கட்டமைப்புக்கான இந்தியாவின் மூலதன செலவு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்றும், நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும், செயல்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

“இன்றைய இந்தியா பெரிய அளவில் சிந்திக்கிறது, லட்சிய இலக்குகளை நிர்ணயிக்கிறது, குறிப்பிடத்தக்க நல்ல முடிவுகளை அடைகிறது” என்று கூறிய பிரதமர், தேசத்தின் மனநிலை மாறியுள்ளதால் இது நடக்கிறது என்றும், இந்தியா பெரும் அபிலாஷைகளுடன் முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டார். முன்பு, தற்போதைய நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருந்தது, ஆனால் இப்போது, யார் நல்ல முடிவுகளை வழங்க முடியும் என்பது மக்களுக்குத் தெரியும் என்று அவர் கூறினார். வறட்சி நிவாரணம் கோருவது முதல், வந்தே பாரத் இணைப்பு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைப்பது வரை மக்களின் விருப்பங்கள் எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதை அவர் உதாரணங்களாக மேற்கோள்காட்டினார். முந்தைய காலகட்டங்கள் மக்களின் அபிலாஷைகளை நசுக்கி, அவர்களின் எதிர்பார்ப்புகளைக் குறைக்க வழிவகுத்ததாக அவர் கூறினார். இருப்பினும், இன்று, சூழ்நிலையும் மனநிலையும் வேகமாக மாறிவிட்டன. மக்கள் இப்போது வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேற ஊக்கம் அளிக்கப்படுகிறார்கள்.

எந்தவொரு சமூகமூம் அல்லது நாடும் அதன் மக்கள் எதிர்கொள்ளும் தடைகள் அகற்றப்படும்போது,  அவற்றின் வலிமை அதிகரிக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, இது மக்களின் திறன்களை மேம்படுத்துவதுடன், வானமே சிறியது எனக் காட்டும் என்றார். முந்தைய நிர்வாகங்கள் விதித்த தடைகளை அரசு தொடர்ந்து நீக்கி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்,  விண்வெளித் துறையை உதாரணமாக மேற்கோள் காட்டினார்.  முன்னர் விண்வெளித் துறை முற்றிலும் இஸ்ரோ கட்டுப்பாட்டில் இருந்தது. இஸ்ரோ பாராட்டத்தக்க பணிகளைச் செய்தாலும் கூட நாட்டில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. விண்வெளித் துறை தற்போது இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு திறந்துவிடப்பட்டிருப்பதாகவும், இதன் விளைவாக நாட்டில் 250-க்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தற்போது விக்ரம்-எஸ், அக்னிபான் போன்ற ராக்கெட்டுகளை உருவாக்கி வருகின்றன. இந்தியாவில் வரைபடங்களை உருவாக்க முன்பு அரசின் அனுமதி தேவைப்பட்ட நிலவரைபடத் துறை பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இன்று, புவியியல் மேப்பிங் தரவானது புதிய தொடக்கங்களுக்கு வழி வகுக்கிறது. அணுசக்தித் துறை முன்பு பல்வேறு நிபந்தனைகளுடன் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் துறையில் தனியார் ஈடுபடலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்தார். இது 2047 க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை அதிகரிக்க வழி வகுத்துள்ளது என்றார்.

இந்தியாவின் கிராமங்களில் பயன்படுத்தப்படாத பொருளாதார வளம் ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது என்றும், கிராமங்களில் வீடுகள் வடிவில் இந்த சாத்தியக்கூறு உள்ளது என்றும் இவை சட்ட ஆவணங்கள் மற்றும் முறையான வரைபடங்கள் இல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர் இதனால் கிராம மக்கள் வங்கிக் கடன்களைப் பெற முடிவதில்லை என்றார்.  இந்தப் பிரச்சினை இந்தியாவுக்கு மட்டுமேயான தனித்துவ பிரச்சினை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார், ஏனெனில் பல பெரிய நாடுகளிலும் மக்களுக்கு சொத்துரிமை இல்லை. தங்கள் குடிமக்களுக்கு சொத்துரிமை வழங்கும் நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காண்கின்றன என்று சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன என்று அவர் மேலும் கூறினார். “இந்தியாவில் உள்ள கிராம வீடுகளுக்கான சொத்து உரிமைகளை வழங்குவதற்காக சுவாமித்வா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் கணக்கெடுக்கவும் வரைபடமாக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்று குறிப்பிட்ட பிரதமர், நாடு முழுவதும் சொத்து அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன, ஏற்கனவே 2 கோடிக்கும் அதிகமான சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்பு சொத்து அட்டைகள் இல்லாதது கிராமங்களில் பல சர்ச்சைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளுக்கு வழிவகுத்தது, அவை இப்போது தீர்க்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். கிராமவாசிகள் இப்போது இந்த சொத்து அட்டைகளைப் பயன்படுத்தி வங்கிக் கடன்களைப் பெற முடிகிறது, இதனால் அவர்கள் தொழில்களைத் தொடங்கவும் சுயதொழில் செய்யவும் முடிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“கடந்த பத்தாண்டுகளில், தாக்கம் இல்லாத நிர்வாகத்தை தாக்கம் நிறைந்த நிர்வாகமாக மாற்றி, புதிய யுக நிர்வாகத்தை நாடு அனுபவிக்கிறது” என்று பிரதமர் கூறினார். அரசின் திட்டங்கள் மூலம் முதன்முறையாக தாங்கள் பயனடைவதாக மக்கள் அடிக்கடி கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார். 

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், பாதுகாப்பை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க பணிகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். முன்பெல்லாம் தொடர் குண்டு வெடிப்புச் செய்திகளும், ஸ்லீப்பர் செல் நெட்வொர்க்குகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் சர்வசாதாரணமாக இருந்தன.  ஆனால் இன்று அத்தகைய சம்பவங்கள் தொலைக்காட்சித் திரைகளிலும், இந்திய மண்ணிலும் இல்லை என்பதை அவர் நினைவுகூர்ந்தார். நக்சலிசம் இப்போது அதன் இறுதி மூச்சில் உள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேலாக இருந்தது இப்போது இரண்டு டஜனுக்கும் குறைவாகக் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். “தேசத்திற்கு முதலிடம்” என்ற உணர்வுடன் பணியாற்றுவதன் மூலமும் இந்தத் துறைகளில் ஆட்சியை கடைக்கோடி மட்டத்திற்குக் கொண்டு வருவதன் மூலமும் இது அடையப்பட்டது என்று அவர் மேலும் கூறினார். இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் 4 ஜி மொபைல் நெட்வொர்க்குகளின் பரவல் ஆகியவை குறித்து திரு மோடி எடுத்துரைத்தார், இதன் முடிவுகள் அனைவரும் காணும் வகையில் தெளிவாக உள்ளன.

அரசின் உறுதியான நடவடிக்கைகள் நக்சலிசத்தை காடுகளிலிருந்து அகற்றியுள்ளன, ஆனால் அது இப்போது நகர்ப்புற மையங்களுக்கும் பரவி வருகிறது என்று திரு மோடி எடுத்துரைத்தார். ஒரு காலத்தில் தங்களை எதிர்த்த மற்றும் இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றிய காந்திய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட அரசியல் கட்சிகளில் நகர்ப்புற நக்சல்கள் வேகமாக ஊடுருவியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். நகர்ப்புற நக்சல்களின் குரல்களும் மொழியும் இப்போது இந்த அரசியல் கட்சிகளுக்குள் ஒலிக்கின்றன, இது அவர்களின் ஆழமான வேரூன்றிய இருப்பைக எடுத்துக் காட்டுகிறது  என்று கூறிய அவர், நகர்ப்புற நக்சல்கள் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் உறுதியான எதிரிகள் என்று எச்சரித்தார். வளர்ந்த இந்தியாவுக்கு வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தை வலுப்படுத்துதல் ஆகிய இரண்டும் அவசியம் என்று வலியுறுத்தினார். நகர்ப்புற நக்சல்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு இன்றைய இந்தியா புதிய உச்சங்களை எட்டுகிறது” என்று கூறிய திரு மோடி, ரிபப்ளிக் டிவி நெட்வொர்க் “தேசம் முதன்மையானது” என்ற உணர்வுடன் இதழியலைத் தொடர்ந்து உயர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வளர்ந்த இந்தியாவின் அபிலாஷைகளை ரிபப்ளிக் டிவியின் இதழியல் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று கூறி அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

*****

TS/PKV/AG/DL