மத்திய அரசு நிறுவனமான ரிச்சர்ட்சன் அண்டு குரூட்டாஸ் (1972) லிமிடெட் (R&C) நிறுவனத்தை தொழில் மற்றும் நிதிச் சீரமைப்பு வாரியத்தின் வரம்பிலிருந்து விடுவிக்க மத்திய கனரக தொழில்கள் துறையின் திட்டத்திற்கு பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையொட்டி, மத்திய அரசு அந்த நிறுவனத்துக்கு அளித்த ரூ.101.78 கோடி கடனையும் அதற்கான ரூ.424.81 கோடி வட்டியையும் பங்குகளாக மாற்றுவதற்கும்
அந்நிறுவனத்தின் நாக்பூர், சென்னை ஆகிய கிளைகளின் மூலதனத்தைத் திரும்பப் பெறுவதற்கும் மும்பையிலிருந்து இயங்கிவரும் பணிகளை இதர இடங்களுக்கு மாற்றுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பையில் நிறுவனம் குத்தகை அடிப்படையில் வைத்திருக்கும் நிலம் “தொழில் வர்க்கம்-2” (Occupation Class II) என்ற வகைக்கு மாற்றுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் அந்த நிலத்தை சிறந்த பயன்பாட்டுக்கு வாங்குவதற்கு உரியவரை அரசு வழிகாட்டு நெறிகளுக்கு உட்பட்டு, அடையாளம் காண வழியேற்படும்.