ராணுவக் கல்வியில் போர்த்திறன் சார்ந்த மற்றும் செயல்பாடுகள் துறை படிப்புகள் தொடர்பாக ஒத்துழைப்புக்காக வெலிங்டன் பாதுகாப்பு படை அலுவலர் கல்லூரிக்கும், டாக்கா, மிர்பூர் பாதுகாப்புப் படை கமாண்ட் மற்றும் அலுவலர் கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. செயல்பாட்டுக்குப் பிந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தமாக இந்த ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
ராணுவக் கல்வியில் போர்த்திறன் சார்ந்த மற்றும் செயல்பாடுகள் துறை படிப்புகளில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கான வரையறைகளை உருவாக்கவும், இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
இரு நாடுகளின் பூகோள மற்றும் கலாச்சார நெருக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது போன்ற பல பொதுவான சவால்களுக்கு கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது. எனவே, ஆயுதப்படைகள் அளவில் நல்ல ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது. ஆயுதப்படைகளின் ஒத்த நிலைமையை உருவாக்கவும், பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சமாளிப்பதில் பங்களிப்பை இன்னும் சிறந்ததாக ஆக்கவும் கூட்டுப் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் உதவிகரமாக இருக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தகவல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலமாக பொது பொறுப்புநிலையையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேம்படுத்தும்.
****