Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024- இன் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024- இன் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதலமைச்சர் திரு பஜன்லால் ஜி சர்மா அவர்களே, ராஜஸ்தான் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொழில்துறை நண்பர்களே, பல்வேறு நாடுகளின் தூதர்களே, தூதரகப் பிரதிநிதிகளே, பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே

ராஜஸ்தானின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று மற்றொரு குறிப்பிடத்தக்க நாளாகும். நாடு மற்றும் உலகெங்கிலும் இருந்து ஏராளமான பிரதிநிதிகளும்  முதலீட்டாளர்களும் ஊதா வண்ண நகரில்  கூடியுள்ளனர். தொழில்துறையைச் சேர்ந்த பலரும்  கலந்து கொண்டுள்ளனர். எழுச்சி பெறும் ராஜஸ்தான் உச்சிமாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ராஜஸ்தான் பிஜேபி அரசை நான் பாராட்ட விரும்புகிறேன்.

நண்பர்களே,

இன்று, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நிபுணரும் முதலீட்டாளரும் பாரதத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். சீர்திருத்தம்-செயல்திறன்-மாற்றம் என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி, அனைத்து துறைகளிலும் கண்கூடாகத் தெரிகிற குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பாரதம் அடைந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய எழுபது ஆண்டுகளில், இந்தியா உலகின் 11 வது பெரிய பொருளாதாரமாகத்தான்  மாற முடிந்திருந்தது. இதற்கு நேர்மாறாக, கடந்த பத்து ஆண்டுகளில், பாரதம்  10 வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 5 வது பெரிய பொருளாதாரத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில், பாரதம் அதன் பொருளாதாரத்தை ஏறத்தாழ  இரட்டிப்பாக்கியுள்ளது. கடந்த தசாப்தத்தில் ஏற்றுமதியும் ஏறத்தாழ இரட்டிப்பாகியுள்ளது. 2014-க்கு முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த பத்தாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு இரு மடங்கிற்கும் கூடுதலாக  அதிகரித்துள்ளது. மேலும், இந்தக் காலகட்டத்தில்  பாரதம்  தனது உள்கட்டமைப்பு செலவினங்களை சுமார் 2 டிரில்லியன் ரூபாயிலிருந்து 11 டிரில்லியன் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

நண்பர்களே,

ஜனநாயகம், மக்கள்தொகை, டிஜிட்டல் தரவு, விநியோகம் ஆகியவற்றின் அளப்பரிய ஆற்றல் பாரதத்தின் வெற்றியில் தெளிவாகத் தெரிகிறது. பாரதம் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், ஜனநாயகம் தழைத்தோங்குவது மட்டுமின்றி, மேலும்  வலுவடைந்து வருகிறது.இது  குறிப்பிடத்தக்க சாதனையாகும்.  பாரதத்தின் தத்துவம் மனிதகுலத்தின் நலனை மையமாகக் கொண்டுள்ளது. பாரத மக்கள், தங்கள் ஜனநாயக உரிமைகள் மூலம், ஒரு நிலையான அரசுக்காக வாக்களித்து வருகின்றனர்.

நண்பர்களே,

பாரதத்தின் இந்த பண்டைய மாண்புகள் அதன் மக்கள்தொகை வலிமையால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன அதன் இளைஞர் சக்தியால் வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு, பாரதம் உலகின் இளைய நாடுகளில் ஒன்றாக இருக்கும். மிகப்பெரிய அளவிலான இளைஞர்களைக் கொண்டிருப்பதுடன், பாரதம் மிகவும் திறமையான இளைஞர்களையும் கொண்டிருக்கும். இந்த ஆற்றலைப் பயன்படுத்த, அரசு  தொடர்ச்சியாக  உத்திசார் முடிவுகளை எடுத்து வருகிறது.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில், பாரதத்தின் இளைஞர்கள் தங்கள் ஆற்றலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளனர். இந்த புதிய பரிமாணம் இந்தியாவின் தொழில்நுட்ப சக்தியும்  தரவு சக்தியுமாகும். இன்று ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பமும், தரவும் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இது தொழில்நுட்பம் சார்ந்த, தரவு சார்ந்த நூற்றாண்டு. கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் இணைய பயனர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் புதிய சாதனைகளை படைக்கின்றன, இது ஒரு தொடக்கம் மட்டுமே. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கல் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை பாரதம்  எடுத்துக்காட்டியுள்ளது. இந்த டிஜிட்டல் மாற்றம் ராஜஸ்தானிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வளர்ச்சியில் புதிய உச்சத்தை ராஜஸ்தான் எட்டும்போது, அது ஒட்டுமொத்த நாட்டையும் உயர்த்துவதற்கு பங்களிக்கும்.

நண்பர்களே,

இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு சுற்றுலா மகத்தான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இயற்கை, கலாச்சாரம், சாகசம், மாநாடு, பாரம்பரிய சுற்றுலா ஆகியவற்றில் பாரதம்  எல்லையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. பாரதத்தின் சுற்றுலா வரைபடத்தில் ராஜஸ்தான் ஒரு முக்கிய மைய புள்ளியாக உள்ளது. வளமான வரலாறு, அற்புதமான பாரம்பரியம், பரந்த பாலைவனங்கள் மற்றும் அழகான ஏரிகளின் தாயகமாக இது உள்ளது. அதன் இசை, உணவு மற்றும் மரபுகள் ஒப்பிட முடியாதவை. சுற்றுலா, மற்றும் விருந்தோம்பல் துறைக்கு தேவையான அனைத்தையும் ராஜஸ்தானில் காணலாம். திருமணங்கள் போன்ற வாழ்க்கை நிகழ்வுகளை உண்மையிலேயே மறக்கமுடியாததாக மாற்றுவதற்கு ராஜஸ்தான் உலகின் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாகும். ராஜஸ்தான் அரசு தனது சுற்றுலாத் தலங்கள் மற்றும் பாரம்பரிய மையங்களுக்கான இணைப்பை மேம்படுத்தியிருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். 2004 முதல் 2014 வரை சுமார் 5 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். 2014 முதல் 2024 வரை, கொரோனா தொற்றுநோய் ஏறத்தாழ மூன்று முதல் நான்கு ஆண்டுகள் பாதித்த போதிலும், ஏழு கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கொரோனா காலத்தில் சுற்றுலாத்துறை தேக்கமடைந்தது. அதையும் மீறி, இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வந்துள்ளது. பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு பாரதம் வழங்கிய இ-விசா வசதிகள் சர்வதேச வருகையாளர்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளன. இது அவர்களின் பயண அனுபவத்தை மிகவும் வசதியானதாகவும் இடையூறு இல்லாததாகவும் ஆக்கியுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாவும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உடான், வந்தே பாரத் ரயில்கள், பிரசாத் (யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீக விரிவாக்க இயக்கம்) திட்டம் போன்றவை  ராஜஸ்தானுக்கு பெரிதும் பயனளிக்கின்றன. துடிப்பான கிராமங்கள் போன்ற திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவுகின்றன. “இந்தியாவில் திருமணம்” என்பதை ஏற்றுக்கொள்ளுமாறு குடிமக்களுக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன், இந்த முயற்சியின் மூலம் ராஜஸ்தான் மாநிலம் குறிப்பிடத்தக்க அளவில் பயனடைய உள்ளது. ராஜஸ்தானில் பாரம்பரிய சுற்றுலா, திரைப்பட சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கிராமப்புற சுற்றுலா மற்றும் எல்லைப்பகுதி சுற்றுலா ஆகியவற்றை விரிவுபடுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்தத் துறைகளில் நீங்கள் செய்யும் முதலீடு, ராஜஸ்தானின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் வர்த்தகத்தின் வலுவான வளர்ச்சியையும் உறுதி செய்யும்.

நண்பர்களே,

இந்தியாவில் உற்பத்திதிட்டத்தின் கீழ், குறைந்த செலவில் உற்பத்தியை பாரதம் வலியுறுத்தி வருகிறது. நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள், மருந்துகள், தடுப்பூசிகள், மின்னணு பொருட்கள் ஆகியவை உலகிற்கு பயனளிக்கும் உற்பத்தி முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டுகள். ராஜஸ்தான் இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 84,000 கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் பொறியியல் பொருட்கள், மணிக்கற்கள் ஆபரணங்கள் , ஜவுளி, கைவினைப் பொருட்கள், வேளாண்-உணவுப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

நண்பர்களே,

இந்த உச்சி மாநாடு நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகளை வரவேற்றுள்ளது. உங்களில் பலருக்கு, பாரதம் அல்லது ராஜஸ்தானுக்கு முதல் பயணமாக இருக்கலாம். நீங்கள் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன், ராஜஸ்தான் மற்றும் பாரதத்தை சுற்றிப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வண்ணமயமான சந்தைகள், மக்களின் கலகலப்பான உணர்வு மற்றும் இந்த நிலத்தின் ஒப்பிடமுடியாத வசீகரத்தை அனுபவியுங்கள்.  இது நீங்கள் என்றென்றும் போற்றும் ஓர் அனுபவமாக இருக்கும். அனைத்து முதலீட்டாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சியுறும் ராஜஸ்தானின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன்.

நன்றி!

*

(Release ID: 2082290)

 

 

 

***