Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் ஜெட்சர் என்ற இடத்தில் உள்ள மத்திய அரசுப் பண்ணையில் 200 மெகாவாட் அல்லது அதற்கு மேல் திறனுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைத்தல்


ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டம் ஜெட்சர் என்ற இடத்தில் உள்ள மத்திய அரசுப் பண்ணையில் பயிர் செய்ய இயலாத 400 ஹெக்டேர் நிலத்தை 200 மெகாவாட்டுக்கும் அதிகமான உற்பத்தி திறனுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு ஒதுக்கும் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய வித்துக்கள் கழகத்தின் வசம் இந்த நிலம் தற்போது உள்ளது. இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் மத்திய பொதுத்துறை நிறுனம் ஒன்றினால் அமைக்கப்படும். இந்த நிறுவனம் பேச்சு வார்த்தைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

தேசிய வித்துக்கள் கழகம் தன் வசம் உள்ள 5394 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயி்ர் செய்ய இயலாத 400 ஹெக்டேர் பரப்பினை தேர்ந்தெடுக்கப்படும் மத்தியப் பொதுத்துறை நிறுவனத்திடம் வழங்கும். இந்த பொதுத்துறை நிறுவனம் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான செலவினத்தை ஏற்றுக் கொள்ளும். இந்த திட்டத்திற்கு மின் கட்டண அடிப்படையிலான போட்டி ஏலத்தின் மூலம் இதனை அமைக்கும் மத்திய பொதுத்துறை நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும். இந்த பொதுத்துறை நிறுவனம் ஒதுக்கப்பட்ட நிலத்தை 25 ஆண்டுகால ஒப்பந்தத்தின் மூலம் பயன்படுத்திக் கொள்ளும். இந்த ஒப்பந்த காலம் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளின் படி நீட்டிக்கப்படலாம். ஒப்பந்த காலத்திற்குப் பிறகு இந்த சூரிய சக்தி மின்உற்பத்தி நிலையம் முழுவதையும் அச்சமயம் இருக்கும் நிலையிலேயே தேசிய வித்துக்கள் கழகத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். பயிர் வளர்ப்புக்கு சாத்தியமில்லாத நிலத்தை சூரிய சக்தி மின்உற்பத்திக்கு பயன்படுத்தும் இத்திட்டத்தினால் தேசிய வித்துக்கள் கழகத்திற்கு வருவாய் கிடைப்பதுடன் நாட்டிற்கு மாசு படுத்தாத தூய்மையான மின்சாரம் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.