Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் பாசனக் கால்வாய். சிர்ஹிந்த் பாசனக் கால்வாய் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க ரூ.825 கோடி நிதியுதவிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


 

பஞ்சாபில் முக்ட்சார் ஃபரீத்கோட், பெரோஸ்பூர் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க இந்த இரட்டைத் திட்டங்கள் உதவும்

               

    பஞ்சாபில் உள்ள ராஜஸ்தான் பாசனக் கால்வாய் மற்றும் சிர்ஹிந்த் பாசனக் கால்வாய் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க முறையே ரூ.620.42 கோடி, ரூ. 205.758 கோடி மத்திய அரசு நிதியுதவி வழங்க பிரதமர் திரு.  நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்த ஐந்தாண்டுகளாகும் (2018-19 , 2022-23)

பயன்:

  

  1. வடமேற்கு பஞ்சாபில் உள்ள முக்த்சார், ஃபாரித்கோட், பெரோஸ்பூர் மாவட்டங்களில் 84,800 ஹெக்டேர் நிலத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த இரண்டு திட்டங்களின் அமலாக்கம் உதவியாக இருக்கும்.
  2. இந்தத் திட்டங்களை அமல்படுத்துவது  தென்மேற்கு பஞ்சாபில் தண்ணீர் தேங்கும் பிரச்சினையைத் தீர்க்கவும், இந்த கால்வாய்களில் நீரோட்டத்தை / தண்ணீர் இருப்பை அதிகப்படுத்தவும் உதவும்.
  3.  ராஜஸ்தான் பாசனக் கால்வாயை சீரமைப்பதன் மூலம் 98,739 ஹெக்டேர் நிலத்திலும், சிர்ஹிந்த் கால்வாயை சீரமைப்பதன் மூலம் 69,086 ஹெக்டேர் நிலத்திலும் பாசனம் மேம்படுவதாலும், நிலைத்தன்மையை உருவாக்குவதாலும், இந்தப் பகுதி விவசாயிகள் பயனடைவார்கள்.

செலவு:

  • பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டத்திற்கான நிதியுதவி செய்யும் முறையின்கீழ், நபார்டு மூலம் இந்த இரண்டு திட்டங்களுக்கான நிதியுதவி வழங்கப்படும்.
  • தற்போதுள்ள கண்காணிப்பு அமைப்பு முறையான மத்திய நீர்வள ஆணையத்தோடு இந்தத் திட்டங்களின் ஒட்டுமொத்த அமலாக்கத்தைக் கண்காணிப்பதற்காக திட்டங்கள் ஆய்வு செய்யும் நிபுணர் குழு அமைக்கப்படும்.
  • சிர்ஹிந்த் பாசனக் கால்வாய் கரை சீரமைப்புக்கான செலவுக்கு ரூ.671.478 கோடியும், ராஜஸ்தான் பாசனக் கால்வாய் கரை சீரமைப்புக்கு ரூ.1305.267 கோடியும், 2015-ல் செலவினங்களுக்காக ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்த மதிப்பீட்டுச் செலவில் ரூ.826.168 கோடி மத்திய உதவியாக வழங்கப்படும். (ரூ.205.758 கோடி சிர்ஹிந்த் கால்வாய்க்காக மற்றும் ரூ.620.41 கோடி ராஜஸ்தான் பாசனக் கால்வாய்க்காக )
  • சிர்ஹிந்த் பாசனக் கால்வாய், ராஜஸ்தான் பாசனக் கால்வாய் ஆகியவற்றுக்கு திருத்தப்பட்ட செலவின மதிப்புக்கான தொகை முறையே ரூ.671.478 கோடிக்கும், ரூ.1305.267 கோடிக்கும் முதலீட்டு அனுமதி 06.04.2016 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • 2016-ல் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் தலைமையின்கீழ் ஒரு குழுவும், 2017-ல்  மத்திய நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. ஏ.பி. பாண்டியா தலைமையிலான மற்றொருக் குழுவும் இந்தத் திட்டங்களைப்  பார்வையிட்டது. தீர்வுக்கானப் பணிகளை தொடங்குமாறு அவை பரிந்துரை செய்தன. பஞ்சாப் அரசும், தனது நிதி பங்களிப்பு ஒப்புதலை 26.04.2018 அன்று தெரிவித்தது.

பின்னணி:

    சிர்ஹிந்த் மற்றும் ராஜஸ்தான் கால்வாய்கள் தொடங்கும் ஹரிக்   பகுதியிலிருந்து மேல்நோக்கிச் சென்று ராஜஸ்தானுக்குள் செல்வதற்குமுன் பஞ்சாப் வழியாக பாய்ந்துச் செல்கிறது. இந்த இரட்டைக் கால்வாய்கள் பொதுவான நீர்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளன. பஞ்சாபிலும், ராஜஸ்தானிலும் பாசன பகுதிக்குள் தண்ணீர் செல்வதற்கான கால்வாய்களின் கரைகள் 1960-களில் கட்டப்பட்டன.

  சிர்ஹிந்த் மற்றும் ராஜஸ்தான் பாசனக் கால்வாய்களின் கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டதால், கணிசமான தண்ணீர் கசிவால் இழப்பு ஏற்படுவதாக பஞ்சாப் அரசு தெரிவித்தது. இதன் விளைவாக இந்த கால்வாய்களில் நீரோட்டம் குறைக்கப்பட்டதோடு, அதன் அருகேயுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கியதன் காரணமாக பெருமளவு வேளாண் இழப்புகள் ஏற்பட்டன.

  தற்போதைய திட்டத்தால், தண்ணீர் தேங்கும் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதோடு, இந்த இரண்டு கால்வாய்களில் தண்ணீர் இருப்பும், நீரோட்டமும் அதிகரிக்கும்.