தில்லி – மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியான 246 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தில்லி – தௌசா – லால்சோட் பகுதிச் சாலையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் ரூ. 5940 கோடி செலவில் 247 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். புதிய இந்தியாவில் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் போக்குவரத்து இணைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் சிறந்த சாலைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் பிரதமரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு, நாடு முழுவதும் நடைபெற்று வரும் உலகத் தரம் வாய்ந்த பல விரைவுச் சாலைகள் மூலம் உணரப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தில்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார். இது உலகின் மிக முன்னேறிய விரைவுச் சாலைகளில் ஒன்றாகும் என அவர் கூறினார். இது வளரும் இந்தியாவைப் பற்றிய பிரமாண்டமான தன்மையை விளக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற நவீன சாலைகள், ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், மெட்ரோ மற்றும் விமான நிலையங்கள் அமைக்கப்படும்போது, நாட்டின் வளர்ச்சி வேகமடைகிறது என்று பிரதமர் கூறினார். உள்கட்டமைப்பு முதலீடுகளின் சிறந்த விளைவுகளையும் அவர் எடுத்துரைத்தார். கடந்த 9 ஆண்டுகளாக, மத்திய அரசு தொடர்ந்து உள்கட்டமைப்பில் பெரிய முதலீடுகளைச் செய்து வருகிறது என அவர் குறிப்பிட்டார். ராஜஸ்தானில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைப் பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில், உள்கட்டமைப்புக்கு 2014-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட 5 மடங்கு அதிகமாக 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்த முதலீடுகளால் ராஜஸ்தான் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று அவர் கூறினார். உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறிய பிரதமர், இது வேலைவாய்ப்பையும் போக்குவரத்து இணைப்பையும் அதிகரிக்கிறது என்றார்.
நெடுஞ்சாலைகள், ரயில்வே கட்டமைப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், கண்ணாடி இழை கேபிள்கள், டிஜிட்டல் இணைப்புகள், பாதுகாப்பான வீடுகள் மற்றும் கல்லூரிகள் கட்டுதல் போன்றவற்றில் முதலீடுகள் செய்யப்படும்போது, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அதிகாரம் பெறுகிறார்கள் என்று பிரதமர் கூறினார்.
உள்கட்டமைப்புத் திட்டங்களின் நன்மைகளை விளக்கிய பிரதமர், இதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கமடைவதாகக் கூறினார். தில்லி-தௌசா-லால்சோட் நெடுஞ்சாலை மூலம் தில்லி – ஜெய்ப்பூர் இடையேயான பயண நேரம் குறையும் என்றார். உள்ளூர் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களுக்கு உதவும் வகையில் விரைவுப் பாதையில் கிராமீன் ஹாட்ஸ் எனப்படும் கிராமப் பொருட்களுக்கான சந்தைகள் நிறுவப்பட்டு வருவதாகப் பிரதமர் கூறினார். தில்லி-மும்பை விரைவுச் சாலை தில்லி, ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளோடு ராஜஸ்தானுக்கும் பெரிய பயனளிக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார். சரிஸ்கா, கியோலாடியோ தேசிய பூங்கா, ரந்தம்பூர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற சுற்றுலாத் தலங்கள் இந்த நெடுஞ்சாலை மூலமாகப் பெரிய நன்மைகளைப் பெறும் என்று அவர் கூறினார்.
மற்ற மூன்று திட்டங்களைப் பற்றிப் பேசிய பிரதமர், இதில் ஒன்று ஜெய்ப்பூருக்கு விரைவுச் சாலையுடன் நேரடி இணைப்பைக் கொடுக்கும் என்று கூறினார். இரண்டாவது திட்டம் அதிவேக நெடுஞ்சாலையை அல்வார் அருகே உள்ள அம்பாலா-கோட்புட்லி வழித்தடத்துடன் இணைக்கும் என்று அவர் தெரிவித்தார். இது ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வரும் வாகனங்கள் பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவுக்குச் செல்ல உதவும் என அவர் தெரிவித்தார். லால்சோட் – கரோலி சாலையும் இப்பகுதியை விரைவுச் சாலையுடன் இணைக்கும் என அவர் தெரிவித்தார்.
தில்லி-மும்பை விரைவுச் சாலை மற்றும் மேற்குப் பகுதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடம் ஆகியவை ராஜஸ்தான் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்தின் இரு வலுவான தூண்களாக மாறப் போகின்றன என்றார். மேலும் வரும் காலங்களில் ராஜஸ்தான் உட்பட இந்த பகுதிகள் அனைத்தையும் பொருளாதார வளத்துடன் இது மாற்றும் என்று பிரதமர் கூறினார். இந்த இரண்டு திட்டங்களும் மும்பை-தில்லி பொருளாதார வழித்தடத்தை வலுப்படுத்தும் என்றும், சாலை மற்றும் சரக்கு வழித்தடம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளை துறைமுகங்களுடன் இணைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது சரக்குப் போக்குவரத்து, கிடங்குகள், போக்குவரத்து இணைப்பு மற்றும் பிற தொழில்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
தில்லி – மும்பை விரைவுச் சாலை பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், கண்ணாடி இழை கேபிள்கள், மின் இணைப்புகள் மற்றும் எரிவாயு குழாய்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிலம் சூரிய ஆற்றல் மற்றும் கிடங்கு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த முயற்சிகள் எதிர்காலத்தில் தேசத்திற்கு நிறையப் பணத்தை மிச்சப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.
ராஜஸ்தான் மற்றும் ஒட்டு மொத்த நாட்டிற்கும் அனைவரின் முயற்சி அனைவரின் வளர்ச்சி அனைவரின் நம்பிக்கை என்ற தாரக மந்திரத்தை அவர் எடுத்துரைத்தார். திறமையான, சக்தி வாய்ந்த மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதே அரசின் உறுதிப்பாடு என்று கூறி பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் செளத்ரி, ராஜஸ்தான் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு பஜன்லால் ஜாதவ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பின்னணி
புதுதில்லி – மும்பை விரைவுச் சாலையின் ஒரு பகுதியான 246 கிலோமீட்டர் அளவிலான பாதை புதுதில்லி – தௌசா – லால்சோட் பகுதி, ரூ.12,150 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதால் புதுதில்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு பயண நேரம் 5 மணி நேரத்திலிருந்து சுமார் 3.5 மணி நேரமாகக் குறைந்து, முழுப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
புதுதில்லி – மும்பை விரைவுச்சாலை 1,386 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலை ஆகும். இது புதுதில்லி மற்றும் மும்பை இடையேயான பயண தூரத்தை 1,424 கிலோமீட்டர் முதல் 1,242 கிலோமீட்டர் வரை அதாவது 12 சதவீதம் வரை குறைக்கும். மேலும் பயண நேரம் 24 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதாவது 50 சதவீதமாக குறைக்கப்படும். இது புதுதில்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களில் கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும். இந்த விரைவுச் சாலையானது பிரதமரின் விரைவு சக்தித் திட்டத்தின் கீழ் வரும் 93 பொருளாதார முனையங்கள், 13 துறைமுகங்கள், 8 முக்கிய விமான நிலையங்கள், 8 பல்நோக்கு மாதிரி சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள், புதிதாக வரவிருக்கும் பசுமை விமான நிலையங்களான ஜேவர், நவி மும்பை மற்றும் ஜேஎன்பிடி துறைமுகம் ஆகியவற்றிற்கு முக்கிய இணைப்புச் சாலையாகப் பயன்படும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது அனைத்து அண்டை மண்டலங்களின் வளர்ச்சிப் பாதையில் மிகச் சிறந்த பொருளாதார மேம்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் இது மிக முக்கியப் பங்களிப்பை வழங்கும்.
நிகழ்ச்சியின் போது, ரூ 5,940 கோடிக்கும் அதிகமான திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட 247 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதில், பண்டிகுய் முதல் ஜெய்ப்பூர் வரையிலான 67 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலை, ரூ 2,000 கோடி செலவிலும், கோட்புட்லி முதல் பரோடானியோ வரையிலான ஆறு வழிச்சாலை, சுமார் ரூ 3,775 கோடி மதிப்பீட்டிலும் உருவாக்கப்படுகிறது. மேலும் லால்சோட் – கரோலி பகுதியில் இருவழி அவசர நிறுத்தப்பாதைப் பணிகள் சுமார் ரூ 150 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
***
AP / PLM / DL
Delighted to be in Dausa, Rajasthan where key connectivity projects are being launched. These will greatly benefit citizens by reducing travel time. https://t.co/6noM2NH0oX
— Narendra Modi (@narendramodi) February 12, 2023
बीते 9 वर्षों से केंद्र सरकार भी निरंतर इंफ्रास्ट्रक्चर पर बहुत बड़ा निवेश कर रही है। pic.twitter.com/Xt5rIdzhbC
— PMO India (@PMOIndia) February 12, 2023
दिल्ली-मुंबई एक्सप्रेसवे और Western Dedicated Freight Corridor, ये राजस्थान की, देश की प्रगति के दो मजबूत स्तंभ बनने वाले हैं।
— PMO India (@PMOIndia) February 12, 2023
ये प्रोजेक्ट्स, आने वाले समय में राजस्थान सहित इस पूरे क्षेत्र की तस्वीर बदलने वाले हैं। pic.twitter.com/21pCRW2Utr